Published:Updated:

இனிப் பேரிடர்க்காலங்களில் நம்மைக் கரப்பான் பூச்சிகள் காப்பாற்றலாம்! #WOWexperiments

ஆன்ட்-மேன் போன்ற சூப்பர்ஹீரோ படங்களில் பார்ப்பது போல் இருக்கும் இந்த தொழில்நூட்பம் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லையாம்.

இனிப் பேரிடர்க்காலங்களில் நம்மைக் கரப்பான் பூச்சிகள் காப்பாற்றலாம்! #WOWexperiments
இனிப் பேரிடர்க்காலங்களில் நம்மைக் கரப்பான் பூச்சிகள் காப்பாற்றலாம்! #WOWexperiments

ரப்பான் பூச்சி என்றாலே ஒரு சிலருக்கு பயங்கர அலர்ஜி. வீட்ல எங்கேயாது பார்த்துட்டா போதும் ரணகளமாக்கிருவாங்க. ஆனால், அந்தக் கரப்பான்பூச்சிதான் வருங்காலத்துல பெரிய இடர்பாடுகள் ஏற்பட்டா நம்மள காப்பாத்த வரப் போகுது. 

ஆமாம், அமெரிக்காவில் நடந்து வரும் ஒரு புதிய ஆராய்ச்சியில் ஒரு சிறிய சிப் மூலம் கரப்பான்பூச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர். கனெக்ட்டிகட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அபிஷேக் தத்தா என்ற துணைப் பேராசிரியரும் அவரது மாணவரான எவன் ஃபால்க்னரும் சேர்ந்து இதைச் செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய இந்தச் சிப்பை நரம்பியல் கட்டுப்பாட்டு சிப் (நியூரோ-கன்ட்ரோலர்) என்று அழைக்கின்றனர். ஆன்ட்-மேன் போன்ற சூப்பர்ஹீரோ படங்களில் பார்ப்பது போல் இருக்கும் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லையாம்.

இந்த ஆராய்ச்சிக்கு மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு வகை கரப்பான்பூச்சியைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மேல் இந்த சிப்பை எளிதாகப் பொருத்த முடியும். அதன்பின் கரப்பான் பூச்சியின் ஆன்டெனாவில் வயர்கள் இணைக்கப்படும். பின் எலக்ட்ரிக் சிக்னல்கள் மூலம் அதை நாம் எங்கு நினைக்கிறோமோ அந்தத் திசையில் நகரவைக்க முடியும். சுருக்கமாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்த எலக்ட்ரிக் சிக்னல்களை பாதையில் இருக்கும் தடைகளாக கரப்பான் பூச்சி நினைக்கும். இதன் மூலம் அந்தத் திசையில் கரப்பான் பூச்சி செல்லாமல் தடுக்க முடியும். சரியான சிக்னல்களைச் சரியான பக்கம் கொடுப்பதன் மூலம் நமக்குத் தேவையான திசையில் அதைச் செல்லவைக்க முடியும். இந்த முறையில் இதை வெற்றிகரமாக அபிஷேக் தத்தாவும், எவன் ஃபால்க்னரும் செயல்படுத்திக் காட்டியுள்ளனர்.

``சிறிய ரோபோட்களுக்கு பதிலாக இதைப் போன்ற பூச்சிகளைப் பயன்படுத்துவது தேடுதல் மற்றும் காப்பாற்றுதல் போன்ற முயற்சிகளில் பல நன்மைகளைத் தரவல்லது" என்று தெரிவித்தார் அபிஷேக் தத்தா. ஆராச்சியாளர்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த செய்யும் முயற்சிகளில் இது முதல் முயற்சி இல்லை. ஆனாலும் இவர்கள் தற்போது செய்துள்ள சிறிய மாற்றங்களின் மூலம் கிடைத்துள்ள முடிவுகளை இதுவரை எவரும் பெற்றதில்லை. இவர்கள் வெப்பநிலையைக் கண்காணிக்கும் சென்சார் ஒன்றையும் இந்த சிப்பில் பொருத்தியுள்ளனர். பூச்சிகள் கொஞ்சம் வெப்பமான இடங்களில் நடந்து செல்ல விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயோ-ரோபோடிக்ஸ் என்ற அறிவியல் பிரிவின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கியுள்ளது இவர்களின் முயற்சி. இதன் மூலம் மேலும் பல முன்னேற்றங்கள் இந்தப் பிரிவில் வருமென எதிர்பார்க்கலாம். அது எப்படி அந்தப் பூச்சியை சித்திரவதைக்கு உள்ளாக்கி இதைச் செய்யலாம் என விலங்கு ஆர்வலர்களும் வெகுண்டு எழ வேண்டாம். இந்த சிப்பானது இறகை விட மெல்லிய எடைகொண்டது, இந்த சிக்னல்களும் சாதாரணமாகப் பூச்சிகளுக்கு வெளியே சுற்றும்போது கிடைப்பதுதான். புதிதாக எலக்ட்ரிக் ஷாக் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் சீர்ப்படுத்தப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சியில் ப்ளூடூத் மூலம்தான் தற்போதைக்கு சிக்னல்கள் சிப்புக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் வெள்ளம், பூகம்பம் போன்றவற்றில் ஏற்படும் இடிபாடுகளில் சிக்கியவர்களை இந்தக் கரப்பான் பூச்சிகள் கண்டுபிடித்து காப்பாற்றலாம் என்பதே இந்த ஆராய்ச்சியாளர்களின் பெரும் நம்பிக்கை. அதனால கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படாதீங்க. காவல்துறை நம் நண்பன்னு சொல்றத போல இனி கரப்பான் பூச்சியும் நம் நண்பன்.