Published:Updated:

"இது நடந்தால் இனி மீம்களே இருக்காது!"- மீம் கிரியேட்டர்களுக்கு புதுசிக்கல் #CopyrightDirective

"இது நடந்தால் இனி மீம்களே இருக்காது!"- மீம் கிரியேட்டர்களுக்கு புதுசிக்கல் #CopyrightDirective
"இது நடந்தால் இனி மீம்களே இருக்காது!"- மீம் கிரியேட்டர்களுக்கு புதுசிக்கல் #CopyrightDirective

அரசாங்கங்களின் கொள்கைகள் எப்படி இன்டர்நெட்டைச் சிதைக்கின்றன என்பதைச் சமீபத்தில் பார்த்தோம். தற்போது அதற்கு மற்றுமொரு உதாரணமாக வந்திருக்கிறது ஐரோப்பிய யூனியனின் புதிய முடிவு ஒன்று.

'Distracted Boyfriend' மீமின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால், இந்த மீம் டெம்ப்ளேட்டை நிச்சயம் எங்கேனும் பார்த்திருப்பீர்கள். இதுதான் அந்த டெம்ப்ளேட். ( இந்த மீம்தான் இந்தக் கட்டுரையின் மொத்த சாராம்சமும் கூட!)

ஸ்பெயினைச் சேர்ந்த அன்டோனியோ கில்லம் என்ற புகைப்படக்கலைஞர் 2015-ல் எடுத்த போட்டோதான் இது. இரண்டு வருடங்களுக்கு முன் திடீரென சோஷியல் மீடியாக்களில் வைரலான டெம்ப்ளேட்களில் ஒன்று. உலகம் முழுவதும் வைரலான புகைப்படம் என்றால், இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்? ஆனால், கில்லம்க்கு அந்தளவு மகிழ்ச்சியெல்லாம் இல்லை. அதற்குக் காரணம், இது காப்புரிமை பெற்ற போட்டோ. இதை ஒருவர் பயன்படுத்த வேண்டுமென்றால் முறையாக, பணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும். கில்லம், ஏற்கெனவே நிறைய இணையதளங்களுக்கு இப்படி புகைப்படங்களை விற்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் கில்லமின் புகைப்படங்களில் அதிகம் விற்பனையாகும் புகைப்படம் ஒன்றின் சராசரி விற்பனை எண்ணிக்கை 5,000-6,000. ஆனால், இந்த Distracted Boyfriend புகைப்படம் ஒரு வருடத்தில் எவ்வளவு விற்றுள்ளது தெரியுமா? 700. உலகளவில் எல்லா சோஷியல் மீடியாக்களிலும் நின்று விளையாடிய இந்தப் புகைப்படத்தால், கில்லம்க்கு பெரிய வருமானம் ஒன்றும் வந்துவிடவில்லை. சொல்லப்போனால் மற்ற சாதாரண புகைப்படங்களை விடவும் குறைவான வருமானம்தான் வந்திருக்கிறது. 

கில்லம் சோகமாக இருக்கக்காரணம் இதுதான். இன்று உலகெங்கும் இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலும், அது அவருக்குப் பொருளாதார ரீதியில் பெரிய லாபம் ஒன்றையும் தந்துவிடவில்லை. வேண்டுமெனில், இப்படி ஒரு வைரலான புகைப்படத்தை எடுத்தது தான்தான் என மகிழ்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதையும் மறுக்கிறார் கில்லம். "அது என்னுடைய படம் என்பதால் மட்டுமே அது வைரலாகவில்லை; அதனை முதன்முதலில் பயன்படுத்திய நபர் அதை அழகிய குறியீடாக மாற்றுகிறார். அது அனைவருக்கும் பிடித்துப்போகவே வைரலாகியிருக்கிறது. அவ்வளவுதான்" என்கிறார் அவர். இந்தக் கதையில் நாம் கவனிக்கவேண்டியது இரண்டு விஷயத்தை. முதலாவது, அந்தப் புகைப்படத்தை மீமாக மாற்றியவர் யாருமே கில்லம்க்கு பணம் கொடுக்கவில்லை; யாருமே அதனை வணிகரீதியாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அதற்கான தேவையும் வரவில்லை. இரண்டாவது, எல்லோருமே கில்லமின் புகைப்படத்தையே பயன்படுத்தினாலும் அதனால் அவருக்கு எவ்வித லாபமும் இல்லை. காரணம், அனைவருமே அதை ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோதான் பயன்படுத்துகின்றனர். இதில் யார் பக்கம் நியாயம்? இரண்டுபேர் பக்கமும்தானே? ஆனால், "கில்லம் சொல்வதுதான் சரி; அவருக்கான பணத்தை அனைவரும் கொடுங்கள்" என்றால் அது சரியா? அதைத்தான் தற்போது செய்திருக்கிறது ஐரோப்பிய யூனியன்.

இணையம் முதல் கருத்து சுதந்திரம் வரை

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம். அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பாவில் ஏற்கெனவே சில சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே காலத்திற்கு ஏற்றார்போல இல்லை. குறிப்பாக இணைய யுகத்தில் காப்புரிமை தொடர்பான பிரச்னைகள் அதிகளவில் எழுந்துவரும் இந்தச் சமயத்தில் அதற்கான சட்டங்கள் இல்லை என்பது, ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ஊடகங்களுக்குப் பலவீனமாக இருந்தது. இதைச் சரிசெய்யும் வகையில் 2016-ம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றிற்கான வரைவைத் தயார் செய்தது ஐரோப்பா. அதுதான் தற்போது உலகெங்கும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் Copyright Directive. இதற்குக் கடந்த 12-ம் தேதி ஒப்புதலும் கிடைத்துவிட்டது. இந்த முடிவுக்கு எதிராக உலகெங்கும் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுகின்றன. இந்தப் புதிய விதிமுறைகளில் இரண்டே இரண்டு அம்சங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அவைதான் இணையத்தில் இருப்பவர்களின் கருத்துரிமைக்கு சவால் விடுக்கின்றன. ஒன்று, பிரிவு 11. மற்றொன்று, பிரிவு 13. இந்த இரண்டின் கதையையும் தெரிந்துகொண்டால்தான், இதன் அபாயத்தையும் உணரமுடியும்.

பிரிவு 11:

செய்தி நிறுவனங்கள்தான் இந்தப் பிரிவின் மையம். 20 ஆண்டுகள் முன்புவரைக்கும் ஊடக உலகம் எப்படி இருந்தது என யோசித்துப்பாருங்கள்; செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள். இவை மூன்று தளங்களில் மட்டும்தான் அவை இயங்கும். அதன்பின்பு இணையதளங்கள் வேகமாகப் புகழ்பெறத் தொடங்கின. தொடர்ந்து மொபைல் போன்களின் வரவு அதிகரித்ததால் ஆப்ஸ் தற்போது அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன. இதற்கேற்ப ஊடகங்களும் தங்களை எல்லா தளங்களிலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. ஒன்று செய்திகளைத் தெரிந்துகொள்ள செய்தித்தாளோ, தொலைக்காட்சியோதான் வேண்டுமென்பதில்லை. ஃபேஸ்புக்கோ, கூகுளோ, யூ-டியூபோ மட்டும் போதும். இவை அனைத்திலும் நமக்கான செய்திகள் கிடைக்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே வருமானம் கிடைக்கிறதா? இல்லை. 

கடந்த பத்து ஆண்டுகளில் கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாதிப்பு செய்தி நிறுவனங்களில் அதிகளவில் இருக்கிறது. பெரும்பாலான செய்தி இணையதளங்களின் டிராஃபிக் இங்கிருந்துதான் வருகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களலாயே செய்திகளை, நேரடியாக இணையதளங்களுக்குள் வந்து படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இதேபோல இந்தப் பிரச்னைக்கு வேறொரு பரிணாமமும் இருக்கிறது. சிரியாவில் ராணுவ தாக்குதல்கள் நடக்கும் இடத்தில் இருந்துகொண்டு ஒரு செய்தியாளர் ஒரு வீடியோவை எடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி வைரலாகிறது. இதன்மூலம் ஃபேஸ்புக்கில் பயனாளர்களின் ஷேர்ஸ், லைக்ஸ் எல்லாம் அதிகரிக்கும்; ஆனால், அந்த செய்தி நிறுவனத்திற்குப் பெரியளவில் எந்தப் பயனும் இருக்காது. இப்படி செய்தியாளர்கள் உலகெங்கும் இருந்துகொண்டு சேகரிக்கும் தகவல்களை வைத்து, ஃபேஸ்புக், கூகுள் மட்டும் கல்லாகட்டுவது சரியா எனக் கேட்கின்றன ஐரோப்பிய ஊடங்கங்கள். இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரிவு 11.

இதன்படி கூகுளோ, ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ ஒரு செய்தி நிறுவனத்தின் லிங்க்கை அல்லது செய்தியைப் பயன்படுத்துகிறது எனில், அதற்கு அந்த நிறுவனத்திற்குப் பணம் செலுத்தவேண்டும். உதாரணம், கூகுள் நியூஸ். இது அக்ரிகேட்டர் சர்வீஸ். இதில் வெவ்வேறு இணையதளங்களின் செய்திகளை ஒரே இடத்தில் சுருக்கமாகப் பார்க்கமுடியும். இப்போது இது இலவசம்தான். ஆனால், வருங்காலத்தில் இதற்காக கூகுள், செய்தி நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும். ஆனால், இதற்கு கூகுள் சம்மதிக்காது. அதற்கு கூகுள் சொல்லும் காரணம், "எங்களுடைய சேவை மூலமாக செய்தி நிறுவனங்கள்தான் பயனடைகின்றன. அவர்களுக்கு நாங்கள் இனியும் உதவத் தயாராக இருக்கிறோம். பிறகு எதற்குப் பணம் கொடுக்கவேண்டும்?" என்கிறது. இதற்கு முன்பே இப்படிப்பட்ட சட்டங்கள், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டு தோல்வியையே தழுவியது. கூகுள் நியூஸ் மூலம் அந்நிறுவனங்களுக்கு வந்த டிராஃபிக் குறைந்ததுதான் காரணம். ஆனால், அதேபோல தற்போது நடக்காது என்கின்றன ஐரோப்பிய ஊடகங்கள். இதன்மூலம் செய்தி நிறுவனங்களுக்கு நன்மைதான் என்றாலும், மக்களுக்கு சில தீமைகளும் இருக்கின்றன. செய்திகளுக்குப் பணம் செலுத்தவேண்டும் என்பதால் கூகுள், ஃபேஸ்புக் போன்றவை இவற்றைத் தவிர்த்துவிடலாம். பிற அக்ரிகேட்டர்களும் இதேபோல தங்கள் சேவையை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படலாம். இதன்மூலம் போலிச் செய்திகள் அதிகளவில் பரவவே வாய்ப்பு அதிகம். மேலும், இந்த முடிவு செய்தி நிறுவனங்களுக்கே பின்விளைவுகளையும் ஏற்படுத்தலாம். சரி, இனி அடுத்து பிரிவு 13.

மீம்களுக்கு பூட்டு!

இதற்கு முன்புவரைக்கும் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை அல்லது புகைப்படத்தை பதிவேற்றுகிறோம் என்றால் அதன் காப்புரிமைக்கு நாம்தான் பொறுப்பு. ஃபேஸ்புக் பொறுப்பாகாது. ஒருவேளை நாம் ஏதேனும் நிறுவனத்தின் காப்புரிமையை மீறியிருந்தால் மட்டும் ஃபேஸ்புக் தலையிட்டு, நம் போட்டோவை அக்கவுன்ட்டில் இருந்து நீக்கும். ஆனால், இந்தப் புதிய விதிமுறையின்படி (ஐரோப்பிய யூனியனில் மட்டும்) நாம் வேறொரு நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற போட்டோவை உரிய அனுமதியின்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டால், அதற்கு ஃபேஸ்புக்தான் பொறுப்பு. இது ஃபேஸ்புக்கிற்கு மட்டுமல்ல; எல்லா இணையதளங்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து தப்பிக்க ஐரோப்பிய யூனியன் சொல்லும் வழி, ஃபில்டர். அதாவது, ஒருவர் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றும்போதே அதைக் கண்டறிந்து தடுக்கவேண்டும். அதற்கான தொழில்நுட்பத்தை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தவேண்டும். 

இதனை Upload Filter எனக் குறிப்பிடுகின்றனர் விமர்சகர்கள். சென்சார் செய்வதை விடவும் மோசமான ஒரு முடிவு என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். இதனைச் சின்ன உதாரணம் மூலம் பார்ப்போம். வீடியோ மீம்ஸ் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சமீபத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் படத்தின் ட்ரெயிலரை எடுத்துக்கொண்டு, அதைக் கொஞ்சம் Text சேர்த்து எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றுகிறோம் என வைத்துக்கொள்வோம். அது வெறும் Spoof, வீடியோ மீம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், யூடியூபின் ஃபில்டருக்குத் தெரியாது. ஏற்கெனவே வந்த ட்ரெய்லரோடு முழுமையாக ஒத்துப்போகிறது எனச்சொல்லி வீடியோவை மொத்தமாக நிறுத்திவிடும். இதேபோல, அந்த ட்ரெய்லரை வைத்து ஒரு மீம் போட்டு அதை ட்விட்டரில் அப்லோடு செய்தால், ட்விட்டரின் ஃபில்டர் இது ட்ரெய்லரில் இருக்கும் ஒரு ஃபிரேம் என நினைத்து அதைத் தடுத்துவிடும். பின்னர், அது வெறும் மீம்தான் என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லி வேண்டுமானால் அதை ஷேர் செய்யமுடியும். இதேபோல பரோடி வீடியோக்கள், GiF, Spoof என எல்லாமே இந்த ஃபில்டரால் அடிபட்டுப் போய்விடும். இது இதோடு நிற்கவில்லை. இன்னும் இருக்கிறது.

ஏதேனும் ஒரு இடத்தில் சாலை மறியல் நடக்கிறது; அதை ஒருவர் புகைப்படம் எடுக்கையில், அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒருவரின் டிசைன் தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. அது காப்புரிமை பெற்ற டிசைன். அப்படியெனில், அந்தப் போட்டோவை இணையத்தில் போட ஃபேஸ்புக் ஃபில்டர் அனுமதிக்காது. மொபைலில் பனோரமா மோடில் போட்டோ எடுக்கும்போது, காப்புரிமை பெற்ற ஏதேனும் சுற்றுலாத்தலங்களின் கட்டடங்கள் அதில் வந்துவிட்டால் அதையும் நாம் எங்கேயும் பயன்படுத்தமுடியாது. இப்படி பிரிவு 11 மற்றும் 13-ல் நிறைய அம்சங்கள், காப்பிரைட் என்ற பெயரால் தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்தையே மொத்தமாகச் சிதைக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் டெக்கீஸ். 

தொடர்ச்சியான எதிர்ப்புகள்

கடந்த இரண்டு வருடங்களாகவே டெக் நிறுவனங்கள் இதனை எதிர்த்து வருகின்றன. இது மட்டும் சட்டமானால் சின்ன சின்ன நிறுவனங்கள் நிச்சயம் பாதிக்கப்படும் என்கின்றன அவை. தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அனுமதி மட்டுமே பெற்றுள்ள இந்த விதிமுறைகள், 2019, ஜனவரியில்தான் சட்டமாகும் வாய்ப்புண்டு. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்துதான் அமலுக்கு வரும். அதற்குள்ளாகவே இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. ஒருபக்கம் இதன்மூலம் தனி இசையமைப்பாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் போன்றவர்களுக்கு நன்மைதான். அதை வரவேற்கலாம்; ஆனால், மறுபக்கம் மீம், வீடியோ, GiF என இணையத்தின் மொத்த கிரியேட்டிவிட்டியையும் கெடுப்பது சரியல்ல. குறிப்பாக விக்கிப்பீடியா, Github போன்ற தளங்கள் பயனாளர்களின் படைப்புகளை வைத்து இயங்கும் தளங்கள். இவை இதனால் அதிகளவில் பாதிக்கப்படலாம். பிரிவு 11-ன் படி விக்கிபீடியாவில் எந்த செய்தி நிறுவனங்களின் குறிப்புகளையும் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்றால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள். இதை விரிவாக விளக்கி விக்கிப்பீடியாவின் தலைவர் ஜிம்மி வேல்ஸ், இன்டர்நெட்டின் தந்தை எனப்படும் டிம் பெர்னர்ஸ் லீ போன்ற நிபுணர்கள் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஜூலை மாதம் 3 மற்றும் 4-ம் தேதிகளில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டனின் விக்கிபீடியா பக்கங்கள் நிறுத்தப்பட்டன. பிற தன்னார்வலர்கள் #SaveTheInternet, #SaveTheMeme போன்ற ஹேஷ்டேக்குகளில் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். தற்போது இதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இன்னும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர். மேலே நீங்கள் பார்த்த மீமும் இதற்குத்தான். சரி... இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏன் ஐரோப்பிய யூனியன் இதைச் செய்கிறது? இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர் விமர்சகர்கள். முதலாவது, சில பெருநிறுவனங்கள் அரசியல்வாதிகள் பின்னிருந்து அவர்களை இயக்குகின்றன. இரண்டாவது, இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு இணையம் எப்படி இயங்குகிறது, இதனால் என்ன தீமைகள் ஏற்படும் போன்றவை தெரிவதில்லை. எனவேதான் சில மாதங்களுக்கு முன்னர் GDPR விதிகளுக்காகப் பாராட்டு வாங்கிய ஐரோப்பிய யூனியன், தற்போது இதற்காகக் குட்டு வாங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவர்கள். எனவே இதில் திருத்தங்கள் மேற்கொள்வதுதான் ஒரேவழி.

இல்லையெனில், எல்லா நடைமுறைகளையும் தாண்டி, இது முழு சட்டமாக அமலுக்கு வர எப்படியும் மூன்று ஆண்டுகளாவது ஆகும். ஐரோப்பிய மீம் கிரியேட்டர்களின் வசந்தகாலம் அதுவரை மட்டும்தான்!
 

அடுத்த கட்டுரைக்கு