பொதுவாக நமது மொபைல் போன்களில் விளம்பரங்கள் காட்டப்படுபவது சாதாரண விஷயம்தான். ஆனால், இது பெரும்பாலும் நாம் பதிவிறக்கும் செயலிகளில்தான் வரும். ஆனால் ஷியோமியைப் பொறுத்தவரை அப்படியில்லை. ஷியோமியில் இருக்கும் நேட்டிவ் செயலிகளிலும் விளம்பரங்கள் வரும். இதுதான் அவர்களது முக்கிய வியாபார யுக்தி. இதனால்தான் குறைந்த விலைக்குப் போன்களை அவர்களால் விற்க முடிகிறது. ஆனால், சமீபத்தில் இதில் ஒரு கட்டம் மேலேறித் UI தொடங்கி செட்டிங்ஸ், ஃபைல் மேனேஜர் போன்ற முக்கிய செயலிகள் வரையிலும் விளம்பரங்களைக் காட்ட தொடங்கியுள்ளது ஷியோமி நிறுவனம். இது ஷியோமியின் வாடிக்கையாளர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த விளம்பரங்கள் முதன்முதலில் Mi மேக்ஸ் 2 மற்றும் Mi நோட் LTE ஆகிய மாடல்களில் தான் காட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இதைப் பற்றி ஷியோமியிடம் புகார் செய்தனர். ஆண்ட்ராய்டு ஒன் போன்களிலும் இப்படி விளம்பரங்களை எப்படி வரலாம் என்பதுதான் அவர்களின் முக்கிய புகார். ஏனென்றால் ஆண்ட்ராய்டு ஒன்னில் ஓடும் போன்கள் எந்த ஒரு தேவையில்லாத விஷயங்களும் ஓடாமல் முழுத் திறனையும் பயன்பாட்டாளருக்குத் தரும் என அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஷியோமி ``இந்த விளம்பரங்கள், உங்கள் செயலிகள் செயல்படுவதில் எந்த ஒரு பிரச்னையும் வராதவாறே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உங்கள் புகார்களை எடுத்துக்கொள்கிறோம். எங்களால் முடிந்த வரை உங்களுக்கு நல்ல சேவையை வழங்கக் கண்டிப்பாக முயல்வோம்" என்றது. ஆனாலும் ஷியோமி விளம்பரங்களைத் திரும்பப் பெறுமா? என்பது பெரிய கேள்விக்குறி தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``விளம்பரங்கள் தான் இன்றும், இனி வரும் காலங்களிலும் எங்கள் ஷியோமியின் சேவைகளில் பெரும் பங்காற்றும். இது எங்கள் வியாபார யுக்தியின் முக்கிய அங்கம் இதை விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தவே முற்படுகிறோம். விளம்பரங்களை ஆஃப் செய்ய வசதிகளைத் தருகிறோம். எங்கு விளம்பரங்கள் வர வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எங்களது கொள்கை என்பது விளம்பரங்கள் பெரிய அளவில் கவனச்சிதறலாக இல்லாமல் சிறியதாகவே இருக்க வேண்டும் என்பது தான்" என்று முன்பே ஒரு முறை ஷியோமி தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இவர்கள் கூறுவதைப்போல் உண்மையில் இந்த விளம்பரங்களை நம்மால் தடுக்க முடியுமா?
ஓரளவுக்குத்தான் தடுக்க முடியும் என்பதே இதற்கு விடை. அது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் செட்டிங்ஸிற்குச் செல்லவும். அதில் கூடுதல் செட்டிங்ஸை (Additional Settings) செலக்ட் செய்யவும். பின் அதில் ப்ரைவசி (Privacy) பகுதிக்குள் செல்லவும். அதில் Ad Servicesக்கு சென்று Personalised Ad recommendations என்றிருப்பதை ஆஃப் செய்யவும். இப்படிச் செய்த பின்னும் விளம்பரங்கள் வரத் தான் செய்யும் ஆனால் உங்கள் விருப்பு வெறுப்புகளைக் கண்காணித்து அதன் மூலம் விளம்பரங்களைப் போடாமல், பொதுவான விளம்பரங்கள் மட்டுமே வரும். ஃபைல் மேனேஜர் போன்ற முக்கிய செயலிகளிலும் இதைத் தடுக்கலாம். செயலியை ஓபன் செய்து அதன் தனிப்பட்ட செட்டிங்ஸ் சென்று About பகுதியில் Recommendations என்றிருப்பதை ஆஃப் செய்யவும்.
இப்படி விளம்பரங்கள் இருந்தாலும் பரவாயில்லை விலை குறைவாக உள்ளது என இவர்களுக்கு ஓகே சொல்லுவீங்களா? இல்லை விளம்பரங்கள் வேண்டாம் அதிக விலை கூட பரவாயில்லைனு நோ சொல்லுவீங்களா? உங்கள் கருத்து என்ன?