Published:Updated:

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle

'நானும் 90ஸ் கிட்தான் டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது கூகுள்.

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle
20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle

'ஈட்... கூகுள்... ஸ்லீப்...' - இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் மாறிப்போயிருக்கிறது. அந்த அளவுக்குக் கூகுள் நம் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்டது. எந்த மொழியில், எந்தக் கேள்வி கேட்டாலும் அடுத்த நொடி அதை நமக்கு கற்றுத தரும் கூகுள், இன்று, 'நானும் 90ஸ் கிட்தான்டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 1998, செப்டம்பர் 4-ம் தேதி இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர்  27-ம் தேதியைத்தான் பிறந்தநாளாக கொண்டாடுகிறது கூகுள். கூகுளின் சிறப்பான விஷயங்களில் முதலிடம் பிடிப்பது டூடுல்கள்தாம். பிரபலங்களின் பிறந்தநாள், வரலாற்றின் முக்கிய தினங்கள், பிரபல விளையாட்டுப் போட்டிகள் என அனைத்திற்கும் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் டூடுல் ஒன்றை வைத்துக் கௌரவிப்பது வழக்கம். இது எப்போது இருந்து தொடங்கியது?

முதன்முதலில், 1998-ம் ஆண்டு கூகுள் ஹோம் பேஜ்ஜில் 'பர்னிங் மேன்' டூடுல் வைக்கப்பட்டது. கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் நொவாடா பாலைவனத்தில் நடைபெறும் 'பர்னிங் மேன் பெஸ்டிவல்' என்ற திருவிழாவில் கலந்து கொள்ள  விரும்பினார்கள். அந்த நேரத்தில் கூகுளின் சர்வர் கிராஷ் ஆகிவிட்டால், தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைக்  கூகுள் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தனர். அந்த யோசனையின் பலனாக வந்ததுதான் இந்த 'பர்னிங் மேன்' டூடுல். பர்னிங் மேன் லோகோவை  கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது 'O' விற்குப் பின்னால் குறியீடாக வைத்து முதல் டூடுலை வடிவமைத்தனர். வாடிக்கையாளர்களும் இந்தக் குறியீட்டை புரிந்துகொண்டனர்.  அதன்பிறகு பல்வேறு டூடுல்களை உருவாக்கியது கூகுள் நிறுவனம், அவற்றுள் சிறப்பான சிலவற்றை இங்கே காணலாம்...

பேக்மேன், 2010


இன்று பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருக்கும் 90-ஸ் கிட்ஸ்க்கு விதை போட்ட வீடியோ கேம்களில் முக்கியமான ஒன்று பேக்மேன் கேம். மே 21, 2010ம் ஆண்டு பேக்மேன்  கேமின் 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த டூடுல் அமைக்கப்பட்டது.  'க்ளிக் டு ப்ளே' என்ற வாசகத்தோடு இடம்பெற்ற இந்த டூடுலுக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் வெளிப்படுத்தினர். இது ஏரோ கீ-க்களைக் கொண்டு விளையாடுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பல நாள்கள் கழித்து பேக்மேன் விளையாட வைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு அதை நாஸ்டாலஜிக் மொமென்ட்டாக மாற்றியமைத்தது கூகுள். இதேபோல் ஸ்னேக் (Snake) கேம் டூடுலையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

சார்லி சாப்ளின், 2011

ஏப்ரல் 16, 2011ம் ஆண்டு 'நகைச்சுவை உலகின் பிதாமகன்' சார்லி சாப்ளினின் 122-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். அதுதான் கூகுளின் முதல் லைவ் டூடுல்.      

கையில் கூகுள் என்ற செய்தித்தாளுடன் சாப்ளின் இருக்கும் டூடுலில் ப்ளே பட்டன் ஒன்று இருந்தது. அந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் 2 நிமிட ப்ளாக் & ஒயிட் படம் ஒன்று ஓடும். நகைச்சுவை உலகில் புரட்சி செய்த சார்லி சாப்ளினுக்கு கூகுள் குறும்படம் வெளியிட்டு கௌரவித்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. லைவ் கூகுள் டூடுல்களுக்கு ஆரம்பமாக இருந்ததும் இந்த டூடுல்தான்.

பீத்தோவன், 2015 

டிசம்பர் 17, 2015-ம் ஆண்டு இசையுலகின் மகாக் கலைஞன் பீத்தோவனின் 245-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். பீத்தோவன், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் இசையின் அற்புதங்கள் ஆகியவற்றை சுமார் 5 நிமிடத்திற்கு இசையுடன் கூடிய இன்ட்ராக்டிவ் வீடியோவாக செதுக்கியிருந்தது கூகுள். ஆகஸ்ட் 22, 2013-ம் ஆண்டு Claude Debussy என்ற பிரெஞ்ச் இசைக் கலைஞனின் 151-வது பிறந்தநாளன்றும் இதேபோல ஒரு டூடுலை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

மை ஆஃப்ரோசென்ட்ரிக் லைஃப், 2016 (My afrocentric Life)

2009-ம் ஆண்டு முதல், 'டூடுல் 4 (ஃபார்) கூகுள்' என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு போட்டியை நடத்தி வருகிறது கூகுள். இதில் நன்றாக வரையப்பட்டுள்ள படங்களை கூகுள் நிறுவனம் டூடுல்களாக மாற்றிவருகிறது. ஆரம்பத்தில் அமெரிக்க பள்ளிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட இந்தப் போட்டி, பின்னர் உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியின் மூலம், 2016-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த 'மை ஆஃப்ரோ சென்ட்ரிக் லைஃப்' டூடுல். 'ப்ளாக் லிவ் மேட்டர்ஸ் மூவ்மென்ட்' என்று சொல்லப்படும் கறுப்பின மக்கள் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி வரையப்பட்டது இது. அமெரிக்காவைச் சேர்ந்த அகிலா ஜான்சன் என்ற பள்ளி மாணவி, பென்சில், க்ரேயான்ஸ் மற்றும் மார்க்கர்கள் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் வரைந்ததுதான் இந்த டூடுல் புகைப்படம். இந்த டூடுலின் மூலம், சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியது மக்கள் மத்தியில் கூகுளுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப், 2016 (Enjoy Every Moment Of Your Life)


இந்தியாவில், நடத்தப்பட்ட 'டூடுல் 4 கூகுள்' போட்டியில் தேர்வானதுதான் இந்த 'என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப்' டூடுல். புனேவைச் சேர்ந்த 11 வயது மாணவி அன்விதா பிரசாந்த் (Anvita Prashant) என்பவர் இந்த டூடுலை வரைந்திருந்தார்.
இந்த டூடுலில் கூகுளின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு குழந்தை, வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது போன்று வரைந்திருந்தார். மரத்தில் படுத்திருப்பது போலவும், நீச்சல் அடிப்பது போலவும், பலூன் வைத்து விளையாடுவது போலவும் வரையப்பட்டிருந்த இந்த டூடுல், 'குழந்தைகள் தினமான' நவம்பர் 14, 2016 அன்று கூகுளின் ஹோம் பேஜ்ஜை அலங்கரித்தது.

சுதந்திர தினம், 2018


இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தைக் கௌரவிக்கும் வகையில் வண்ணமயமான ஒரு டூடுலை வடிவமைத்திருந்தது கூகுள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த டூடுல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் வைக்கப்பட்டது. இதில், இந்தியாவின் தேசிய பறவையான மயில், தேசிய விலங்கான புலி, தேசிய பழமான மாம்பழம், தேசிய மலரான தாமரை மற்றும் யானை ஒன்றும் இடம்பெற்றிருந்தன. டூடுலின் நடுவில் இரண்டு மயில்கள் இருக்க, இடதுபுறம் யானையும் வலதுபுறம் புலியும் நின்று டூடுலை அழகுபடுத்தின. டூடுலின் நடுவில் தாமரைகளும், மேல் பக்கம் வரிசையாக மாம்பழங்களும் இருந்தன. இந்த வண்ணங்கள் நிறைந்த டூடுல் இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.  

கடந்த 20 வருடங்களில் 2000 டூடுல்களுக்கு மேல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் உங்களுக்குப் பிடித்த டூடுலையும், கூகுளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்.