Published:Updated:

"சச்சின் வாட்ஸ்அப் க்ரூப்பில் கிடைத்த ஐடியாதான் ஷேர்சாட்! " - CBO சுனில் காமத்

ஆங்கிலமே துளியும் இன்றி, பிராந்திய மொழிகளில் மட்டுமே முழுமையாக ஒரு சோஷியல் மீடியாவால் செயல்பட முடியுமா? முடியும் எனக் காட்டியிருக்கிறது ஷேர்சாட்.

"சச்சின் வாட்ஸ்அப் க்ரூப்பில் கிடைத்த ஐடியாதான் ஷேர்சாட்! " - CBO சுனில் காமத்
"சச்சின் வாட்ஸ்அப் க்ரூப்பில் கிடைத்த ஐடியாதான் ஷேர்சாட்! " - CBO சுனில் காமத்

ஷேர்சாட், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சமூக வலைதளங்களில் ஒன்று. இதைப் பயன்படுத்தியவர்களை விடவும், பார்த்தவர்கள்தான் அதிகம்பேர் இருப்பார்கள். வாட்ஸ்அப்பில் வரும் பாதி ஸ்டேட்டஸ் மற்றும் ஃபார்வேர்டுகள் இந்தத் தளத்தில் ஷேர் செய்யப்படுபவையே. ஆங்கிலமே இல்லாமல் 14 இந்திய மொழிகளில் மட்டும் இயங்கும் இதற்கு நகரங்களை விடக் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மூன்று IIT கான்பூர் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இதன் மொத்த பயன்பாட்டாளர்கள் தற்போது இரண்டரை கோடிக்கும் மேல். இந்தியாவில் சத்தமின்றி தொடங்கப்பட்ட ஒரு சோஷியல் மீடியா, இந்தளவுக்கு வேகமாக வளர்ந்துவருவது ஃபேஸ்புக் யுகத்தில் கொஞ்சம் கடினம்தான். இதன் வெற்றி குறித்து சென்னை வந்திருந்த ஷேர்சாட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான (CBO) சுனில் காமத்தை சந்தித்துப் பேசினோம். ஒரு சமூகவலைதளம் எப்படி இயங்குகிறது, ஷேர்சாட்டின் தனித்துவம் என்ன எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"ஷேர்சாட் எப்படி உருவானது?"

"இந்த ஐடியா உதயமானது ஒரு சாதாரண நிகழ்வில்தான். சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களை ஒன்றிணைப்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றைத் தொடங்கினோம். தெரியாத நபர்கள் என்றாலும் சச்சின் மீது ஆர்வம் கொண்ட பலபேரை அது இணைத்தது. சச்சின் பற்றிய வீடியோ, போட்டோக்கள் என அனைத்தும் எப்போதும் குரூப்பில் வந்துகொண்டே இருக்கும். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்றாலும்கூட, ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆர்வம் இருந்தால் அந்தத் தலைப்பில் மக்களிடம் இருந்தே நிறைய படைப்புகளைப் பெற முடியும் என அந்த சம்பவம் புரியவைத்தது. இப்படி ஆங்காங்கே குவியும் தகவல்களைச் சரியான மக்களிடம் கொண்டுசேர்க்கலாமே என்று தோன்றியது. இதுதான் ஷேர்சாட்டிற்கான ஆரம்பப்புள்ளி."

"மூன்று வருடத்தில் எப்படி இத்தனை பேரிடம் ஷேர்சாட்டால் சென்றடைய முடிந்தது?

90% சதவிகித பயன்பாட்டாளர்கள் தாங்களாகவேதான் ஷேர்சாட்டில் இணைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக நாங்கள் பார்ப்பது எங்களின் வாட்ஸ்அப் ஷேரிங் வசதியைத்தான். ஷேர் செய்யும் போது எங்கள் தளத்துக்கான லிங்க் மற்றும் லோகோவை இணைத்துக் கொள்வதால் மக்கள் அதை வைத்துக்கொண்டே ஷேர்சாட்டுக்கு வந்துவிடுகின்றனர். மேலும் எங்கள் செயலியை பதிவிறக்க வேண்டும் என நாங்கள் வற்புறுத்துவதில்லை. இதை பிரௌசரிலேயே எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எளிமைதான் பாமரமக்களிடம் இருக்கும் இந்த வீச்சுக்கு முக்கிய காரணம்."

"தமிழகத்தில் ஷேர்சாட்டின் பயன்பாடு எந்தளவு உள்ளது?"

"உண்மையைச் சொல்லப்போனால் தென் மாநிலங்களில்தான் ஷேர்சாட்டுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் செயல்படும் பயன்பாட்டாளர்கள் தமிழ் மொழியில் மட்டும் தற்போது உள்ளனர். காதல் தொடர்பான கவிதைகள், படங்கள், வீடியோக்கள்தான் பெரும்பாலும் எங்கள் தளத்தில் ஷேர் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சினிமா, தமிழகத்தில் சினிமாவிற்கென இருக்கும் மவுசு நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. மேலும் நகைச்சுவை, செய்திகள் எனப் பல பிரிவுகளில் கன்டென்ட்கள் எங்கள் தளத்தில் ஷேர் ஆகின்றன."

"இப்படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஷேர் செய்யலாம் என்றிருக்கும்போது எப்படி தவறான பதிவுகளை நீக்குகிறீர்கள்... மேலும் ஃபேஸ்புக் போலவே ஷேர்சாட்டிலும் ஃபேக் நியூஸ் பிரச்னையெல்லாம் இருக்கிறதே?"

"மற்ற வலைதளங்களில் பயன்படுத்தப்படும் அதே முறையைத்தான் நாங்களும் பயன்படுத்துகிறோம். ஷேர் சாட்டில் பதியப்படும் அனைத்து தகவல்களும், செயற்கை நுண்ணறிவு மூலம் சோதனை செய்யப்பட்டு அதற்கு ஒரு மதிப்பெண் தரப்படும். ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்குக் கீழ் அது பெற்றால் அந்த பதிவு பதிவேற்றப்படாது. இதைவிட நல்ல வழிமுறையாக நாங்கள் பார்ப்பது பயன்பாட்டாளர்களாலேயே ஒரு பதிவு தவறென்று தெரிந்தால் அதன் மீது புகார் தெரிவிக்க முடியும். சிறிய நேரத்தில் அதிக புகார்கள் வந்தால் அது என்னவென்று பார்த்து உடனுக்குடன் முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு மொழியிலும் குறைந்தபட்சம் இருவராவது எங்களிடம் உள்ளதால் இதை எங்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. மேலும் காப்புரிமை பெறப்பட்ட வீடியோக்கள், போட்டோக்கள் ஷேர் ஆவதையும் தடுக்க முடிந்தளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

"உங்களது போட்டியாளராக யாரைப் பார்க்கிறீர்கள்?"

"நாங்கள் ஆரம்பித்த பொழுதில் இருந்தே பலரும் இதே போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சொல்லப்போனால் வாட்ஸ்அப்பில் நேராக ஷேர் செய்யும் வசதியையே நாங்கள்தான் முதலில் அறிமுகப்படுத்தினோம். இப்போது அனைவரும் அதைக் கொண்டு வந்து விட்டனர். ஆனால் நாங்கள் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் இருப்பதைப் போன்ற ஒரு இடத்திற்கு வரவேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதை நோக்கியே வேலை செய்து கொண்டிருக்கிறோம்."

"வருங்கால திட்டங்கள் என்ன?

பெங்களூருவை மையமாகக் கொண்டுள்ள எங்கள் டீமில் மொத்தமே 75 பேர்தான். வருங்கால திட்டங்களுக்காக இன்னும் சில பேரை எங்கள் அணியில் சேர்க்கவுள்ளோம். கிராமப்புற மக்களின் திறமைகளை வெளிகொண்டு வருவதற்கு எங்கள் தளம் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம். பகுதிகள் சரியாக பிரிக்கப்பட்டு மக்கள் சரியாக அதில் பதிவுகளை பதிவேற்றும் வண்ணம் பல மேம்பாடுகளை சில மாதங்களாகவே செய்து வருகிறோம். மேலும் சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படைப்புகளைச் சரியான மக்களிடம் சென்று சேர்க்க ஏற்கெனவே எங்களுடன் கைகோர்க்கத் தொடங்கிவிட்டனர். "