பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சர்வைவா - 2

சர்வைவா - 2
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 2

அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

“இஸ் துனியா மேன்... அகர் ஜன்னத் ஹை, தோ பஸ் யஹி ஹை... யஹி ஹை...’’ இப்படி இந்தியில்

சர்வைவா - 2

எழுதப்பட்ட கவிதை ஒன்று உண்டு. அனானிமஸ் கவிஞர் எழுதிய பண்டைய ஃபார்வர்ட் இது.  ``இந்த உலகத்தில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இங்குதான் இருக்கிறது... இங்குதான்!’’

இது உண்மையா பொய்யா என்பது அவரவர் வாங்குகிற சம்பளங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் `மூர்-இன் சொர்க்கம்’ இருப்பது இங்குதான்! நாம் வாழ்வதே மூர்-இன் சொர்க்கத்தில்தான்!
மூர்-இன் விதி (Moore’s law) உருவாக்கப்பட்டு இது  ஐம்பதாவது  ஆண்டு.  இந்த ஐம்பதாண்டுகளில் இந்த மூரானந்தா நம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறார். நாம் உண்ணுகிற உணவில் தொடங்கி விண்ணைத் தொட்ட காதல்வரை எல்லாமே மூரால் மாறியிருக்கின்றன. மூர் என்றால் ‘நாட் நாட் செவன் ரோஜர் மூர்’ அன்று... கவர்ச்சி நடிகை டெமி மூரும் அன்று... இவர் வேற மூர்... கோர்டன் மூர். இன்டல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர். அமெரிக்கர்.

`The number of transistors per unit of area on a semiconductor doubles every eighteen months’  என்று மூர் எழுதிவைத்த இந்த இரண்டு வரிக் குறள்தான் இன்றுவரை தொழில்நுட்பத் தொண்டர்கள் அத்தனை பேருக்குமான திருவந்தாதி!

அவர் சொன்னபடியே ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை இல்லையென்றாலும் கிட்டத்தட்ட செமிகண்டக்டரில் இருக்கிற டிரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டேதான் வந்திருக்கிறது.

இப்படி அதிகரித்ததால்தான் மைக்ரோப்ராசசர்கள் என்கிற `எந்திர மூளைகளின்’ அளவும் குறைந்து, குறைந்து...  முன்பொரு காலத்தில் டபுள் பெட்ரூம் சைஸில் இருந்த கணினிகளின் சைஸ் எல்லாம் இன்று நேனோவில் வந்து நிற்கிறது.

சர்வைவா - 2

முதன்முதலில் கணினிகள் உருவாக்கப்பட்டபோது  மைக்ரோ ப்ராசசரில் 8,000 ட்ரான்ஸிஸ்டர்கள் இருந்தன. இன்று... வீட்டில் லேப்டாப் இருக்கிறதா? அதில் இருக்கிற மிகச்சிறிய மைக்ரோ ப்ராசசரில் இருக்கிற ட்ரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை 73 கோடி!  இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாசா பயன்படுத்திய சூப்பர் கணினிகளைவிடவும் அதிசக்திவாய்ந்த கணினிகளை இன்று நாமெல்லாம் மொபைல்களாகக் கைகளில் வைத்திருக்கிறோம். காரணம் மூர்-இன் விதி!

மனிதகுல வரலாற்றையே புரட்டிப்போட்ட கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை என்றால் நெருப்பு, சக்கரம், நீராவி இன்ஜின் என வரிசையாகப் பட்டியலிடலாம். அதில் மிகமுக்கியக் கண்டுபிடிப்பாக இருக்கவேண்டிய ஒன்று மூர்-இன் விதி.

இப்போது மூர்-இன் விதி அதன் எல்லைக்கு வந்துவிட்டதாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தொழில்நுட்பர்கள். காரணம் வேகம்!

டெக்னாலஜி பழையகாலம் போல ஜெட் வேகத்தில் எல்லாம் பாயந்துகொண்டிருக்கவில்லை. ஒளியைவிட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். முன்பு போல ட்ரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கையை வைத்தெல்லாம் இன்னமும் தொழில்நுட்ப வளர்ச்சியை இன்ச்டேப் வைத்து அளந்துகொண்டிருக்க முடியாது.

இது டேட்டாக்களின் காலம்! `முப்பாட்டர் மூர் அவர்களே, நீங்க அப்பால நகருங்க...’ என்கிறது அறிவியல். இதுவரை தகவல்களை ஜீரோ, ஒன்று என பைனரியில் பதிவு செய்துகொண்டிருந்த நாம் இப்போது அதை க்வான்டம் பிட்ஸ் (Qubit)என அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறோம்! அதனால்தான் மூர்ஸ்விதிக்கு மாற்றாக ஒன்றை முன்வைக்கிறது அறிவியல்.

‘ஒவ்வொரு விநாடிக்கும் இணையத்தில் கடத்தப்படுகிற பிட்ஸ்’தான் இனி  தொழில்நுட்ப வளர்ச்சியை அளக்கும் புதிய ஸ்கேல் என்கிறார் எதிர்காலத்தை நிறையவே ஆராய்ந்துகொண்டிருக்கும் அறிவியல் அறிஞர் ரே குர்ஸ்வய்ல் (Ray Kurzweil).

``இணையத்தில் கடத்தப்படுகிற தகவல்களின் அளவானது ஒவ்வொரு 15 மாதத்திற்கும் ஒருமுறை இரண்டுமடங்காகப் பெருகும்’’ எனக் கணிக்கிறார் அவர். இந்தக்கடத்தல் அதிகம் ஆக ஆக... கணினிகளின் செயல்திறன் அதிகமாகும். அது அதிகமானால் கணினிக்கு மூளை வளரும். இந்த வேகத்தில் மூளையை வளர்த்தால் 2023-ல் இந்த மைக்ரோப்ராசசர்களுக்கு நம் மூளைகளைவிட அதிக செயல்திறன் வந்துவிடும்! பிறகு கணினிகள் நிறைய காதலிக்கும், நடிக்கும், கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கும்,  ‘ஆண்ட பரம்பரை’ என்று மீசை முறுக்கி சாதி பார்க்கும், ஆசிரமம் ஆரம்பிக்கும்.

வரலாற்றில், தொழில்புரட்சியின் தாக்கம் முழுமையாக மக்களைச் சென்றடைய நூறாண்டுகளுக்கு மேல் பிடித்தது. பர்சனல் கம்ப்யூட்டர்களின் தாக்கம் மக்களை வந்தடைய 45 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் அப்படியில்லை; வெறும் பத்தே ஆண்டுகளில் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்துவிட்டன. இனி வரப்போகிற தொழில்நுட்பங்கள் அந்த அளவுகூடக் காலமெடுக்காது என்கிறார்கள்... அதிலும் குறிப்பாக ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ என்கிற எந்திர மூளைகளின் தாக்கம் மிகவிரைவில் நம்மை வந்தடைந்துவிடும்! இத்தனை வேகம் எப்படி சாத்தியம்?

மலிவான விலையில் கிடைக்கிற அதிவேகமான மைக்ரோப்ராசசர்கள்தான். இவை அறிவியல் ஆய்வுகளின் தரத்தைப் பலமடங்கு மேம்படுத்தி யிருக்கின்றன. மருத்துவம், கல்வி, விவசாயம், வானியல், நிர்வாகம் என எல்லாத் துறைகளின் போக்கையும் இவை மாற்றி அமைத்திருக்கின்றன. 

மனிதர்களைவிடக் கணினிகளே வேகவேகமாகத் தீர்வுகளைத் தரத்தொடங்கிவிட்டன. கணினிகள் ஏராளமாகத் தகவல்களை நினைவு வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன. மில்லினியத்திற்குப் பிறகு கடந்த பதினைந்து ஆண்டுகளில் அந்த வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கணினிகளின் நினைவாற்றல் ஜிபிகளைக் கடந்து டிபிகளைக்கடந்து... ­ஜீட்டா பைட்டுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறது. அதிக நினைவாற்றல்... அதிக பலம்!

கூடவே சிலிக்கான் சில்லுப்புரட்சி முடிந்து ப்ராசசர்களை காலியம் ஆர்சனைட், கார்பன் நேனோ ட்யூப்கள், கிராஃபின் எனப் புது ஐட்டங்களைப் போட்டுத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறோம். More power to Machines! 

தொழில்நுட்பத்தின் இந்த அதிவேக மாரத்தானால் இன்னும் சில ஆண்டுகளில் சாலைகளில் எலெக்ட்ரிக் வண்டிகள் மட்டும்தான் இருக்கப்போகின்றன. ட்ரோன்கள்தான் இனி டெலிவரி பாய்களின் வேலைகளைச் செய்யும். பிட்காய்ன் மாதிரியான டிஜிட்டல் பணங்கள் நம் பொருளாதாரத்தின் முகத்தையே மாற்றிவிடும். குழந்தை பிறப்பதற்கு முன்பே டி.என்.ஏ எடிட்டிங்கில் விராட் கோலியாகவோ விஸ்வநாதன் ஆனந்தாகவோ ப்ரோகிராம் பண்ணிக்கொள்ள முடியும். எந்திரங்கள் மருத்துவம் பார்க்கும்; காருக்கு ட்ரைவர் அவசியமில்லாமல் போவார்; மாற்று கிட்னியோ பாட்டி சுட்ட இட்லியோ 3டி பிரின்டரில் உருவாக்கிக்கொள்ள முடியும். சரக்கு முதல் சைட்-டிஷ் வரை, கல்யாணம் முதல் காதல்வரை எல்லாமே மாறும்!

கூடவே, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் நம் வேலைவாய்ப்புகளைப் பறித்துக்கொள்ளுமா எனப் பாட்டாளிவர்க்கம் அச்சத்தில் இருக்கிறது. பிட்காய்ன் மாதிரியான டிஜிட்டல் பணம் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்? கொள்ளைகள் டிஜிட்டல் வடிவெடுக்குமா? டி.என்.ஏ எடிட்டிங்கில், பிறப்பதற்கு முன்பே சாதனைக்குழந்தைகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றால், அதைச் செய்ய வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நம்முடைய நினைவாற்றல் குறைந்துபோய் வடிகட்டிய முட்டாள்கள் ஆவோமா? தொழில்நுட்பம் எல்லோருக்குமே சாத்தியமாகுமா, அல்லது இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு ஏற்றத்தாழ்வுகள் பெருகுமா? - இப்படிப் பல கேள்விகள்.

ஒரு விஷயம் நிச்சயம். எந்திரங்கள் காரியங்கள் செய்ய கட்டிங் கேட்காது. எந்திரங்கள் சாதிக்காரன், உறவுக்காரன் என்றெல்லாம் பாகுபாடுகள் பார்க்காது. இலவச மென்பொருள்கள்(ஃபேஸ்புக், வாட்ஸ்அப்) எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கும். அவை கடைநிலை மனிதனுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித்தரும். இப்படி பாசிட்டிவ் பக்கங்களும் இருக்கவே செய்கின்றன.

முதன்முதலாக ரப்பர் சக்கரத்தில் காற்றை நிரப்பிப் பலமைல் தூரம் பயணித்தபோது இதைவிடவும் விதவிதமாக அஞ்சியவர்கள்தாம் நாம். பஞ்சர் கடைகள்கூட இல்லாத காலம். ஆனால், மாற்றம் நிகழ்ந்தது. மக்கள் ரப்பர் டயர்களை ஏற்றுக்கொண்டார்கள். அது அவர்களுடைய வாழ்வை மாற்றக்கூடியதாக இருந்தது. ரப்பர் டயர்களின் வரவும் இன்ஜின்களின் வரவும் குதிரையோட்டிகளை,  குதிரை வாகனங்களை முற்றிலுமாக இல்லாமலாக்கியது. பல ஆயிரம் ஆண்டுகள் மனிதகுலத்தின் முக்கியமான போக்குவரத்துச் சாதனத்தைச் சில நூறாண்டுகளில் காணாமல் ஆக்கியது ரப்பர் சக்கரமும் இன்ஜினும்!

புதியதொழில்நுட்ப வளர்ச்சியும் ரப்பர் டயர்களைப்போலத்தான் இருக்கப்போகிறது. அது நிச்சயமாக அச்சம் தரக்கூடியதாகத்தான் இருக்கும். அது குதிரையோட்டிகளின் வாழ்வாதாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும். ஆனால், எந்திரக்குதிரைகளின் வருகையைத் தடுக்கவே முடியாது.

இந்த நேரத்தில் மூன்று கேள்விகள் முக்கியமானவை.

1. எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போகிற தொழில்நுட்பங்கள் எல்லோருக்கும் பாகுபாடுகள் இல்லாமல் சமமான பயன்களை அளிக்குமா?

2. என்னமாதிரியான ரிஸ்க்குகளை நாம் எதிர்கொள்ளப்போகிறோம்

3. தொழில்நுட்பத்திற்கு அடிமையாக இருக்கிற சமூகமாக மாறிவிடுவோமா, அல்லது தொழில்நுட்பத்தை அடிமையாக்கும் சமூகமாக மாறுவோமா?


இந்த மூன்று கேள்விகளுக்கான விடையில் இருக்கிறது நமக்கான வருங்காலம்... விடைதேடுவோம்!

- காலம் கடப்போம்