Published:Updated:

சர்வைவா - 6

சர்வைவா - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 6

அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சர்வைவா - 6

`மாலதி, இந்த மெஷின் கதை,  கவிதை எழுதுவதற்காக மட்டும் இல்லை. இது பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் செய்யப்போகிறது. செஸ் ஆடப்போகிறது. புதிய புதிய இசைகள் அமைக்கப்போகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாகத்தான் இந்தக் கதை, கட்டுரைத் திறமையை அமைத்திருக் கிறேன்.’’

- சுஜாதா எழுதிய  `கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ சிறுகதையிலிருந்து...

44 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.  Artificial intelligence, Machine learning, Deep learning, பற்றியெல்லாம் யாரும் சிந்திக்கக்கூட தொடங்காத காலத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார் சுஜாதா.

பரலோகத்திலிருக்கும் எங்கள் பரம வாத்தியாரே... உங்களுடைய  `டாக்டர். ராகவானந்தத்தின் கனவு’ பலித்துவிட்டதய்யா!  Yes, `Creative machines’ are Ready, and fellow writers are in danger.

சர்வைவா - 6

எதிர்காலத்தின் எந்திரங்கள் காதலிகளுக்கு ஏற்ற நல்ல ரசனையான கவிதைகளை உடனுக்குடன் எழுதித்தரக்கூடியவையாக இருக்கப் போகின்றன. வாசலில் உட்கார்ந்து வெத்தலைப்பாட்டிபோல குட்டீஸ்க்கு க்யூட் கதைகள் சொல்லப்போகின்றன. சூப்பர்ஹிட் ஆகும் திரைக்கதைகளைத் திட்டமிட்டு எழுதித்தள்ளப்போகின்றன. தமிழன் பெருமைசொல்லும் ஓப்பனிங் சாங்கையும்கூட அவை எழுதித் தரக்கூடும்.  `வம்பு நடிகர் ஷூட்டிங்கில் செய்த காரியம் தெரியுமா’ எனப் பத்திரிகைகளுக்குக் கிசுகிசுக்களைக்கூட அள்ளித்தரப்போகின்றன!

 `படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்றெல்லாம் இனியும் படைப்பாளிகள் சீன் போட முடியாது.  `Godly level’ படைப்பாற்றல் பூச்சாண்டிகளை எந்திரங்கள் உடைக்கப்போகின்றன.

கவிதை

 The crow crooked on more beautiful and free,
He journeyed off into the quarter sea.
his radiant ribs girdled empty and very -
least beautiful as dignified to see.

கவிதை போலவே இருக்கிறது இல்லையா? சுமார்தான் என்றாலும் உலக வரலாற்றில் மிகமுக்கியமான கவிதை. காரணம் இதை எழுதியது ஒரு மெஷின்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜாக் ஹாப்கின்ஸ் என்கிற இளைஞர் இந்த எந்திரக்கவிஞனை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார். ரைமிங்கான கவிதைகளை எழுதுவது மட்டும்தான் இந்த எந்தரக்கவியின் வேலை.

20ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஏராளமான கவிதைகளையும், அவை எழுதப்பட்ட பாணிகளையும், அந்தக் கவிதைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட 7 மில்லியன் சொற்களையும் இந்த எந்திர சுந்தரனின் நியூரல் நெட்வொர்க் மண்டைக்குள் ஏற்றிவைத்திருக்கிறார் ஹாப்கின்ஸ். எந்திரருக்கு எந்நேரமும் ரொமான்டிக் மூடுதான். ஆனால் யாரையும் காதலிக்கமாட்டார்... தபூசங்கர்போல காதல் கவிதைகள் எழுதுவார்.
இந்த எந்திரக்கவிஞரிடம் எதைப்பற்றியும் கவிதை எழுதச் சொல்லலாம். எந்த பாணியிலும் எழுதச்சொல்லலாம். கிரேக்கக் கவிதைகள் பாணியில் ‘பந்துசுரண்டல்’ பற்றியும், எமினெம் பாடல்களைப் போல `சுதந்திர உணர்வுகளும் அம்மாவின் அடிமைகளும்’ என்கிற தலைப்பிலும்கூடக் கவிதை எழுதுவார்!

இந்த எந்திரக்கவிகள்மீது செம கடுப்பிலிருக்கிறார்கள் மனிதக் கவிஞர்கள்.  `இந்த எந்திரங்கள் வெறும் வார்த்தைகளைக் கோத்து ஏமாற்றுகின்றன. அவை கவிதைகளைப்போன்ற ஒன்றைத்தான் உருவாக்குகின்றன. இந்தக் கவிதைகள் தட்டையானவை. இதில் எந்தவித ஆழமோ உள்ளார்ந்த உயிர்ப்போ இல்லை... இது ஏமாற்றுவேலை’ என்று கோபமடைகிறார்கள்.

சென்ற ஆண்டு இந்த எந்திரக் கவிதைகளையும் மனிதர்கள் எழுதிய அசல் கவிதைகளையும் கலந்துகட்டி ஒரு போட்டி வைத்தார்கள்.  `இதில் எந்திரம் எழுதியது எது’ என்பதைக் கண்டுபிடியுங்கள் என்பது போட்டி. இதில் 46 சதவிகிதம் பேர் எந்திரங்கள் எழுதிய கவிதைகளை மனிதர்கள் எழுதியது என்று ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

கூகுளும் தன்பங்குக்கு ஒரு கவிதை எந்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. கூகுளின் கவிதை எந்திரத்தின் நியூரல் மூளைக்குள் 11,000 நூல்கள் இருக்கின்றன. அதில் 3,000 நூல்கள் முழுக்க முழுக்க ரொமான்டிக். இவரும் காதல் கவிஞன்தான்!

தொழில்நுட்பத்தின் உதவியோடு தான் எழுதிய கவிதைகள் சுமாராக இருந்தால், அவற்றையெல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் மீண்டும் எழுதி பெஸ்ட் கவிதைகளைத்தான் கொடுப்பேன் எனக் கங்கணங்கட்டிக் கொண்டு காத்திருக்கிறான் கூகுள் கவிஞன்.
 
கதை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘The Day A Computer Writes a Novel’  என்ற நாவலை ஜப்பானைச் சேர்ந்த எந்திர எழுத்தாளர் மனித எஜமானர்களின் உதவியோடு எழுதியது. அந்த நாவலை இலக்கியப்போட்டி ஒன்றுக்கு எஜமானர்கள் அனுப்ப, அந்த நாவல் முதல்சுற்றில் தேர்வாகிவிட்டது. உடனே அது பரபரப்புச் செய்தியாகிவிட்டது. நல்லவேளையாக அந்த நாவல் பரிசு வெல்லவில்லை. ஆனால், எழுத்தாளர்கள் எல்லாம் கடுப்பானார்கள்.  ``மனுஷங்க உதவியதால எழுதிடுச்சு, இல்லாட்டி கஷ்டம்’’ என்றார்கள். ஆனால், அது ஆரம்பம்தான்.

அமெரிக்காவின் மாசசூட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஊடக ஆராய்ச்சிக்கூடம். அங்கேதான் இருக்கிறார் எழுத்தாளினி ஷெல்லி. இவர்  `ஃப்ராங்கன்ஸ்டீன்’ எழுதிய மேரி ஷெல்லி அல்லர், எந்திர எழுத்தாளினி.
பதறவைக்கிற அதிபயங்கர திகில் கதைகளை எழுதுகிறவர் இந்த எந்திர ஷெல்லி. இப்போதைக்குக் குறுங்கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஷெல்லியின் நியூரல் மூளை திகில் கதைகள் எழுதுவதற்காகவே உருவாக்கப் பட்டது. அதில் உலகின் ஆயிரக்கணக்கான திகில் கதைகளும் அவை எழுதப்பட்ட விதங்களும் நிரப்பப்பட்டிருக்கின்றன. இரண்டுவரி கதை எழுதி ஷெல்லியிடம் கொடுத்தால் அந்தக்கதையின் அடுத்த வரிகளை ஷெல்லி எழுதுகிறாள்.

எந்திர எழுத்தாளினி ஷெல்லியை 2017ஆம் ஆண்டின்  Halloween திருவிழாவின்போது உலகுக்கு அறிமுகப்படுத்தியது எம்ஐடி ஆய்வுக்குழு. உலகின் முதல்  `திகில் கதை’ எந்திர எழுத்தாளர். இதுவரை நூற்றுக்கணக்கான திகில் குறுங்கதைகளை எழுதிக் குவித்திருக்கிறாள்.  ட்விட்டரில் வாசகர்களோடு சேர்ந்தும் எண்ணற்ற கதைளை எழுதியிருக்கிறாள்.  stories.shelley.ai. என்கிற தளத்தில் ஷெல்லி எழுதிய ஆங்கிலக் குறுங்கதைகளை வாசிக்க முடியும்.

கட்டுரை

ராய்ச்சர்ஸ் ( Reutuers) பத்திரிகை சமீபத்தில்  Lynx insight என்ற  AI பத்திரிகையாளரைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. இது பத்திரிகை யாளர்களோடு இணைந்து பத்திரிகைச் செய்திகளை உருவாக்குவதில் உதவவிருக்கிறது என்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த லின்க்ஸ் இன்சைட், பங்குச்சந்தையைக் கவனிக்கிறது. அதில் பட்டியலிடப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனப் பங்குகளின் போக்கை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது நிறுவனங்களின் போக்குவரத்தில் பிரச்னை என்றால் உடனே மனிதப் பத்திரிகையாள ருக்குத் தகவல் அளிக்கும். 

``வாரன் பஃபெட் தன்னுடைய கோக் பங்குகளை ஒருவாரமாகக் கொஞ்சம் கொஞ்சமாக விற்க ஆரம்பித்திருக்கிறார். கோக் அடுத்தவாரம் முதலீட்டாளர்களை மீட்டிங்குக்கு அழைத்திருக்கிறது. அடுத்த காலாண்டில் கம்பெனி பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும். அலெர்ட்!’’ இப்படித் தகவல் கொடுக்கும். பத்திரிகையாளர் உடனே கவனித்து கட்டுரை எழுதுவார்.

இப்படி சந்தையில் கிடைக்கிற தகவல்களின் அடிப்படையில் செய்திகளைப் புரிந்துகொண்டு செய்தியாளர்களோடு கைகோக்கும்.

வருங்காலத்தில்  `லின்க்ஸ் இன்சைட்’ விளையாட்டுச் செய்திகளையும் இதுபோல கவனிப்பார். கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றால் மேட்ச்சுக்கு முன்பே விளையாட்டு வீரர் விவரங்கள், முந்தைய ஆட்டங்களின் தகவல்கள், வானிலை அறிக்கை, ஆடுகளத் தன்மை முதலானவற்றை அதுவே ஆராய்ந்து அதற்கேற்ப கணிப்புகளை, எதிர்பார்ப்புகளைத் திரட்டிச் சொல்லும். இது பத்திரிகையாளர்களுக்கு நிறையவே உதவும். இருந்தும், பத்திரிகையாளர்களுக்கு பயம்தான்.

 ``பத்திரிகையாளர்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் உருவாக்குவது ரோபாட்டிக் நியூஸ் ரூமை அல்ல. இது சைபர்னெடிக் நியூஸ்ரூம். மனிதர்களும் ரோபோக்களும் இணைந்து செயலாற்றக்கூடிய செய்தியறை’’ என்று பத்திரிகையாளர்களின் பயத்தைப் போக்கியிருக்கிறது ராய்ச்சர்ஸ்.

லின்க்ஸ் இன்சைட்தான் கட்டுரை எழுதாது... இன்னொருவர் இருக்கிறார். பெயர் Babel. கட்டுரை எழுதக்கூடியவர்!

லெஸ் பெர்லேமேன் என்கிற ஆராய்ச்சியாளர் உருவாக்கிய கட்டுரை எந்திரம் இந்த Babel generator. இது லெஸ்ஸின் பத்தாண்டு உழைப்பு. இப்போதைக்கு அது ஆங்கிலத்தில்தான் எழுதுகிறது. மூன்று வார்த்தைகளைப் போட்டால் போதும் எதைப்பற்றியும் முழ நீளத்துக்கு எழுதித் தள்ளிவிடுகிறது. ஆனால், படித்தால் முழுக்க நான்சென்ஸ்தனமாக இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் நாம் படிக்கிற அநேக ஸ்டேட்டஸ்களைவிடவும் பரவாயில்லைதான். நான் காந்தி பற்றி எழுதச் சொன்னேன். இந்திரா காந்தியைப்பற்றி எழுதிவைத்திருக்கிறது. இது ஃப்ரீதான். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்... http://babel-generator.herokuapp.com

சிறார் இலக்கியம்!

கூகுளின்  Natural Language Understanding research group இதேமாதிரியான இன்னோர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவருகிறது. உலகின் அத்தனை நூல்களையும் ஆன்லைனில் தொகுக்கிற கூடன்பெர்க் புராஜெக்ட். அதிலிருக்கிற முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான நூல்களை எல்லாம் ஓர் எந்திரமூளையைப் பிடித்துவைத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கி றார்கள். இந்த எந்திரரின் வேலை என்ன தெரியுமா? எழுத்தாளரின் சில வரிகளைக் கொடுத்தால், அதற்கு அடுத்த வரிகளை அந்த எழுத்தாளர் எப்படி எழுதியிருப்பார் என்பதைக் கணித்து எழுதுவார்.

எழுத்தாளர் எழுதியதைப் படித்து அவருடைய எழுத்துபாணியையும் அவர் என்னமாதிரியான சொற்களை எங்கெங்கே பயன்படுத்துவார் என்பதையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு எழுதுவது. இப்போதைக்கு மிஸ்டேக் ரேட் 20 சதவிகிதம்தானாம்!

கூகுள் மட்டுமன்று, ஃபேஸ்புக்கும் இதே மாதிரியான ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. மார்க் ஸக்கர்பெர்க் தன் எந்திரக்குழந்தைக்கு ஜங்கிள் புக், ஆலிஸ் இன் ஒண்டர் லேண்ட் முதலான பிரபலமான குழந்தைகள் நூல்களை மடியில்வைத்துச் சொல்லிக்கொடுக்கிறார். ஃபேஸ்புக்கின் எந்திரக்குட்டி இப்போதைக்குக் கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறது. சீக்கிரமே அதுவும் சிறார் இலக்கியம் படைக்க வந்துவிடும்!

 கிரியேட்டிவ் எந்திரங்களால் ஆபத்து ஜெயமோகன்களுக்கும் மனுஷ்யபுத்திரன்களுக்கும் மட்டுமில்லை... இளையராஜாக்களுக்கும் மணிரத்னம்களுக்கும் ஷங்கர்களுக்கும்கூட இருக்கிறது. அது அடுத்தவாரம்.

- காலம் கடப்போம்