Published:Updated:

சர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன?

சர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன?
சர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன?

ரு பெரிய ஸ்டாரின் டீசர் அல்லது ட்ரெய்லர் வந்துவிட்டால் போதும் சமூகவலைதளங்கள் கலவர பூமி ஆகிவிடும். யூடியூப்பில் எத்தனை வியூஸ், எத்தனை லைக்ஸ், எத்தனை டிஸ்லைக்ஸ் என்று ரசிகர்களிடையே பெரும் போட்டி ஏற்படும். இதில் சிலர் 'வியூஸ் இவ்வளவுதான் இருக்கு ஆனா லைக்ஸ் இவ்வளவு இருக்கே பாருங்க மக்களே' என பாயிண்ட்டாக பேசுவதாகப் பேசுவர். இது ஏமாற்று வேலைகளால்தான் நடக்கிறது என்றும் குற்றம்சாட்டுவர். உண்மையில் இந்த வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ், கமென்ட்ஸ் கூடுதலாக வருவதற்கு சில டெக்னிக்கல் காரணங்கள் உண்டு. அது என்னவென்று பார்ப்போம்.

இதற்கு என்ன காரணம் என்று யூடியூப்பின் சப்போர்ட் பக்கத்தில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சாதாரணமாக வீடியோ பதிவான சில மணிநேரங்கள் வரை யூடியூப் உண்மையான மனிதர்கள் பார்த்தாக உறுதியாக நம்பும் எண்ணிக்கையை மட்டும்தான் கணக்கில் எடுக்கும். அதை மட்டுமே வியூஸாக காட்டும். மீதம் வரும் சந்தேகத்திற்குரிய பதிவுகளைச் சோதனை செய்து கம்ப்யூட்டர்கள், பாட் (Bot) மூலம் தானாக ஏற்றப்படும் வியூஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. சில சோதனைகளுக்குப் பிறகு உண்மையான வியூஸ்தான் என்று கண்டறியப்பட்ட வியூஸ் மொத்த எண்ணிக்கையில் சிறிது நேரத்தில் சேர்க்கப்படும். இதன் மூலம் தொடக்கத்தில் காட்டப்படும் வியூஸ் பெரும்பாலும் உண்மையான எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்குமே தவிர அதிகமாக இருப்பது மிகவும் அரிது.

சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வியூஸ் அப்படியே ஃப்ரீஸ் கூட ஆகிவிடலாம். அளவுக்கு அதிகமாகப் பார்வையாளர்கள் வீடியோவை பார்க்க வருகையில் உண்மையான வியூஸ் எது, செயற்கையாக கம்ப்யூட்டர்கள் மூலம் ஏற்றப்படும் வியூஸ் எது எனத் தீர்மானிப்பதற்கு போதிய நேரம் யூடியூப்பிற்கு கிடைக்காது. இதனால் வியூஸ் எண்ணிக்கை கொஞ்சம் மெதுவாக அப்டேட் செய்யப்பட வாய்ப்புகள் உண்டு. சில நிமிடங்களுக்கு எண்ணிக்கையை நிறுத்திக்கூட வைக்குமாம். லைக்ஸ், கமெண்ட்ஸ்க்கு இப்படி எந்தச் சிக்கலும் இல்லாததால் அது மட்டும் ஏறிக்கொண்டே போகும். இதுதான் வியூஸ் குறைவாக இருந்து மற்றவை கூடுதலாக இருப்பதன் பின்னணி. வீடியோவை குறைந்த குவாலிட்டியில் பார்க்கப்படும் வியூஸ் சிலநேரங்களில் எண்ணப்படாமலேயே போகலாம் என்றும் தெரிகிறது. 

2015-க்கு முன்பு வேறு யுக்தியைக் கையாண்டு வந்தது யூடியூப். 300 வியூஸ் வரை எல்லாம் கணக்கில் சேர்க்கப்பட்டு, அதன் 301-ல் ஃப்ரீஸ் ஆகிக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகுதான் ஒரிஜினல் வியூஸ் அப்டேட் ஆகும். இந்த முறையை மாற்றியமைத்துத்தான் இப்போது உள்ள நடைமுறை வந்துள்ளது.

யூடியூப்பிறகு இந்த விஷயத்தில் இவ்வளவு கவனம் இருக்கவேண்டிய அவசியம் என்ன?

யூடியூப்பிற்கு வீடியோவில் வரும் வியூஸ் உண்மையாக இருந்தால் என்ன பொய்யாக இருந்தால் என்ன, இதனால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் இந்த வியூஸ் விஷயத்தில் பத்திரமாக இருப்பது யூடியூப்பிறகு மிகவும் முக்கியம். விளம்பரங்களை முக்கிய வருமானமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் யூடியூப். விளம்பரம் தருகிறவர்கள் உண்மையான மக்களிடம் தங்கள் விளம்பரங்கள் சென்று சேர்வதாக எண்ணியே இவர்களிடம் விளம்பரம் கொடுக்கின்றனர். பொய்யான வியூஸை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதற்கும் சேர்த்து விளம்பரதாரர்களிடம் பணம் பெரும். இது லாபம்தான் என்றாலும் யூடியூப்பின் மேல் இருக்கும் நம்பகத்தன்மை குறைந்துவிடும். இதை யூடியூப் செய்யும் மோசடியாகத்தான் விளம்பரதாரர்களும் பார்ப்பர். எனவே இந்த மோசடி வேலைகளைக் களையெடுப்பது அவர்களுக்கு மிகமுக்கியம். அதுதான் வீடியோ தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும். எனவே ஃபேக் வியூஸ் மூலம் வியூஸை ஏற்றுகிறார்களா, லைக்ஸை விட வியூஸ் குறைவாக எப்படி இருக்கமுடியும் போன்ற கேள்விகள் முற்றிலும் அர்த்தமற்றது. தெரியாமல் ஏறிவிட்டால் கூட கண்டுபிடித்ததுடன் அதைக் குறைத்தும் விடுமாம் யூடியூப்.

அப்புறம் எப்படி இத்தனை நிமிடங்களில் இத்தனை வியூஸ் எனச் சிலர் பதிவு செய்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி எழும். அதற்கும் வழி உண்டு. வீடியோவை பதிவிட்டவர்களால் மட்டும் மொத்தம் எத்தனை வியூஸ் வந்திருக்கலாம் எனத் தோராயமாக ஓர் எண்ணிக்கையைப் பார்க்கமுடியும். இதை அவர்களது அக்கௌன்ட்டில் இருக்கும் 'YouTube Analytics' பகுதியின் கீழிருக்கும் 'Realtime Report' என்ற பகுதியில் பார்க்கலாம். இந்தக் கணக்கு ஒரு கணிப்பில்தான் காட்டப்படும். இதனால்தான் சன் பிக்சர்ஸ் தங்களது பக்கங்களில் சர்கார் டீசர் 10 நிமிடத்தில் 1 மில்லியன் பேர் பார்த்தனர் போன்ற தகவல்களை வெளியிடமுடிந்தது.

இந்த யூடியூபின் வியூஸ், லைக்ஸ் லாஜிக் இவ்ளோதான் பாஸ்!