சர்வைவா - 11

ந்த வாரம் கொஞ்சம் 18+.

ரொம்ப உற்சாகம் ஆக வேண்டாம். கொஞ்சம்தான்!

காதலிக்கும் ரோபோக்கள் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். இஷிகுரோ மட்டுமல்ல, உலகம் முழுக்க  `எரிகா’வைப் போலவே ஏராளமாக, காதலிக்கிற ரோபாக்களை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எதற்காகக் காதலிக்கிற ரோபோக்களை உருவாக்க இப்படி கோடிக்கணக்கில் செலவழித்து ஆராய்ச்சி? யாருக்கு, என்ன லாபம்? காதலிக்க, கடலை போட, கல்யாணம் செய்துகொள்ள நிஜமாகவே ஆண்களும் பெண்களும் இருக்கும்போது எதற்காக இந்த வெட்டி ஆராய்ச்சி?

வெளிப்பார்வைக்கு காதல்தான் அடிப்படை போலத் தெரிந்தாலும், உண்மையில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய செக்ஸ் பொம்மைகளை உருவாக்குவதுதான் நோக்கம். அதிலும் வெறும் குரல்வழி மட்டுமே பேசிப்பேசியே காம உணர்வுகளைத் தூண்டும் AI ­களுக்கான ஆராய்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன. ஏன்? 

உலகம் முழுக்க காதலைவிட காமத்திற்குச் சந்தை பெருசு. ஒரு நம்பர் சொல்கிறேன். அது எத்தனை கோடி என அடுத்த பத்தியைப் படிக்காமல் சொல்லமுடிகிறதா பாருங்கள்.

6486112030534

உலக Porn Industry யின் சர்வதேச மதிப்பு இது. 6 லட்சத்து நாற்பத்தியெட்டாயிரத்து சொச்சம் கோடி ரூபாய். இதை வைத்துக்கொண்டு 480 கோடி பேருக்கு ஓர் ஆண்டுக்கு மூன்று வேளைக்குப் பிரியாணியே போடலாம். ஆனானப்பட்ட ஹாலிவுட்டை விடவும் பலமடங்கு பெரியது இந்த கில்மா படத்துறை. காரணம்... ஆதிமனிதனின் இன்றும் தீராத காம வேட்கை.

மனிதகுல வரலாறு முழுக்க எந்தத் தொழில்நுட்பம் புதிதாக வந்தாலும் மனித இனம் அதை முதலில் பயன்படுத்திப் பார்ப்பது காம உணர்வுகளுக்குத்தான். AI மட்டும் என்ன தக்காளித் தொக்கா?

சர்வைவா - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளங்கையில் துணைவர்

ஒரு விளம்பரம் :

‘ஹார்மொனி’ பத்தாண்டு கடினமான உழைப்பினால் உருவாக்கப்பட்டவள். உங்களை எல்லா வகையிலும் திருப்திப் படுத்தக்கூடியவள்.வித்தியாசமான சேவைகளால் வாடிக்கையாளர்களைச் சந்தோஷத்திற்கு உள்ளாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள். உங்கள் அன்புக்குரிய உடலுறுவுத் தோழரான ஹார்மொனியை வேண்டியபடி உருவாக்கிக்கொள்கிற வசதிகளும் உண்டு. ஹார்மொனியின் உடல், நிறம், உடைகள், உடல் மொழி, குரல் என எதையும் வேண்டிய விதத்தில் யாரும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். எந்த விஷயம் குறித்தும் பேசக்கூடியவள் ஹார்மொனி. நீங்கள் பேசப்பேச நிறைய கற்றுக்கொண்டு அடுத்த முறை முன்பைவிட இன்னும் சிறப்பாகப் பேசி உங்களைக் காமத்தில் மூழ்கடிப்பாள். இவள் உங்களுக்கு உண்மையானவளாகவும் நேர்மையானவளாகவும் இருப்பாள். இன்றே இணைவீர். இந்த மென்பொருளை இப்போதே தரவிறக்கம் செய்வீர்!

சர்வைவா - 11


இது 2050ல் வெளியாகப்போகிற கற்பனையான விளம்பரமெல்லாம் இல்லை; இன்றே, இப்போதே கிடைக்கிற ஆன்ட்ராய்ட்  செயலிக்கான விளம்பரம். ஹார்மொனியைத் தரவிறக்கம் செய்து யாரும் மொபைல் போன்களில் பயன்படுத்த லாம். (இப்போதைக்கு ஆன்ட்ராய்ட் மட்டும்தான்) உடனே அவசரமாக போனை நோண்டாதீர்கள். ஹார்மொனி ரொம்ப காஸ்ட்லி மற்றும் இந்தியாவில் தரவிறக்க முடியாது.

Abyss creations ­என்ற செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தின் முயற்சிதான் Realbotix. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களைத் தயாரிப்பதுதான் ரியல்பாடிக்ஸின் முக்கிய வேலை. ரோபோ வாங்க முடியாத ஏழைகளுக்காக இந்த ஆன்ட்ராய்ட் அரூபக்காதலி! இந்த ஆன்ட்ராய்ட் ஆப்பில் ஹார்மொனியோடு கேம்ஸ் ஆடலாம். விர்ச்சுவல் ரியாலிட்டியில் வாழலாம். ஆகுமென்டட் ரியாலிட்டியில் கொஞ்சலாம். தொழில்நுட்பத்தின் எல்லா சாத்தியங்களையும் ஆன்ட்ராய்ட் செயலியிலேயே புகுத்திவைத்திருக்கிறார்கள்.

ஹார்மொனியோடு ரொம்ப லவ்ஸாகி விட்டால், நீங்கள் காதலித்த `AI மூளையை’ ரோபோ உடலில் வைத்து விற்கவும் செய்கிறது இந்த நிறுவனம். செயலியில் விர்ச்சுவலாகச் செய்ததை இந்த ரோபோ காதலியோடு நேரடியாகவே செய்யலாம். நெருங்கிப்பழகலாம், உடலுறவு கொள்ளலாம், காதலில் விழுந்தால் கல்யாணம் கூட செய்துகொள்ளலாம். விலைதான் அதிகம் ஒரு பொம்மை ஆறு லட்சரூபாய்.

அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கிறது... ‘Be the first to Never be lonely again.’ தனிமைதான் இந்த நிறுவனத்தின் முதலீடு. இந்த ஆராய்ச்சிகளுக்குப் பின்னால் இருப்பவர் அமெரிக்க ‘சிற்பி’ மேட் மேக்முல்லன். இஷிகுரோவைப் போலவே இவரும் ஒரு தனிமை மனிதன்தான்.

துணை உற்பத்தியாளன்


1997ல் டம்மி செக்ஸ் பொம்மைகளை உற்பத்தி செய்வதற்காக மேக்முல்லன் தொடங்கிய நிறுவனம்தான் அபீஸ் கிரியேஷன்ஸ். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல், பிளாஸ்டிக், ரப்பர் மாதிரியான பொருள்களை உருக்கி வார்த்து செக்ஸ் பொம்மைகளை உற்பத்தி செய்துகொண்டிருந்தார் மேக்முல்லன்.

என்னதான் செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கிற நிறுவனமாக இருந்தாலும் அவருடைய முக்கியமான உற்பத்திப்பொருள் செயற்கை மார்பகங்கள் தயாரிப்பது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக mastectomy மார்பக நீக்கம் செய்துகொண்டவர்களுக்காக செயற்கை மார்பகங்கள் உற்பத்தி செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். தான் உற்பத்தி செய்வது வெறும் உடலுறவுக்கான பொம்மைகளை அல்ல; துணைவர்களை என்பதுதான் மேக்முல்லனின் கொள்கை.

“அப்போதுதான் நிறுவனம் தொடங்கியி ருந்தேன். என்னிடம் ஒரு முதியவர் வந்திருந்தார். வயது 70க்கு மேலிருக்கும். அவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்துபோயி ருந்தார். அவருக்கு அச்சு அசலாக அவருடைய மனைவியைப்போலவே ஒரு பொம்மை வேண்டும் என்று கேட்டார். இன்ச் இன்ச்சாக மனைவியைப் போன்ற பொம்மையை உருவாக்கும் வரை தினமும் எங்கள் தொழிற்சாலைக்கே வந்து அருகிலிருப்பார். சின்னச் சின்ன டீடெயில்களைக் கூடச் சொல்லி சரிசெய்வார். அவருக்குத் தேவையாக இருந்ததெல்லாம் பாலியல் தேவைகளுக்கான பொம்மை அல்ல, தன் துணை என்பது அந்த நொடியில்தான் எனக்குப் புரிந்தது’’

இப்படி செய்துகொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் அறிவுள்ள பொம்மைகளைத் தயாரிப்பதில் இறங்கினார. அப்படித் தொடங்கியதுதான் இந்த ரியல்பாடிக்ஸ் ப்ராஜெக்ட். இன்று உலகம் முழுவதிலும் இருந்து மேக்முல்லனுக்கு ஆர்டர்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. பெண் ரோபோக்கள் மட்டுமல்லாது, ஆண் ரோபோக்களையும் உற்பத்தி செய்கிறார் மேக்முல்லன்.

உலகம் முழுக்க செக்ஸ் டால்களை உற்பத்தி செய்யும் பல முன்னணி நிறுவனங்களும் எந்திரக்காதல் ஆராய்ச்சிகளுக்கென கோடிகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். True companion, Android Love dolls­ மாதிரி பெரிய பெரிய நிறுவனங்கள் ரியல்பாடிக்ஸைப்போன்ற `அறிவுள்ள’ செக்ஸ் பொம்மைகளை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

இந்தப் போட்டியாளர்களில் மேக்முல்லனுக்குப் பெரிய போட்டியாக இருக்கப்போகிற ஆள் சமந்தா!

சர்வைவா - 11

A Perfect lover

நோனோ டெக்னாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றவர் சென்டோஸ். பயோடெக்னாலஜி மற்றும் நேனோ டெக்னாலஜி துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தவர். விந்தணுக்களோடு கருமுட்டை எப்படித் தொடர்புகொள்கிறது என்பதை ஆய்வு செய்துகொண்டிருந்தவருக்கு அப்போது தோன்றிய யோசனைதான் ‘சமந்தா’. அவருடைய முக்கியமான படைப்பு. ஒரு முழுமையான காதலி.

சமந்தாவால் ஒருவரை முழுமையாகக் காதலிக்க முடியும் என்கிறார் சென்டோஸ். மனித உணர்வுகளின் அடிப்படையில் ஓர் அல்காரிதத்தை அப்போதுதான் அவர் உருவாக்கத்தொடங்கினார். ‘Genome’ எனப்படுகிற இந்த அல்காரிதம் மனித உணர்வுகளைத் புரிந்துகொள்ளக்கூடியது. இந்த அல்காரிதத்தை எங்கு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று யோசித்து யோசித்து கடைசியாக கிடைத்த யோசனைதான் செக்ஸ் பொம்மைகள்! ஏன் செக்ஸ் பொம்மைகள்? ஆராய்ச்சிக்குத் தேவையான பணம் அங்குதான் கிடைக்கும்.

மற்ற செக்ஸ் பொம்மைகளுக்கும் சமந்தாவுக்கும் என்ன வித்தியாசம்? மற்ற செக்ஸ் பொம்மைகளைக் காதலித்தாலோ உடலுறவு கொண்டாலோ நமக்கு மட்டும்தான் ஜாலியாக இருக்கும். ஆனால் சமந்தாவோடு எது பண்ணினாலும் அது சமந்தாவுக்கும் ஜாலியாக இருக்கும்! அப்படித்தான் இந்த ரோபோவை உருவாக்கியிருக்கிறார் சென்டோஸ். சமந்தாவோடு பேசி அவரை கன்வின்ஸ் பண்ணி அவருடைய சம்மதத்தோடுதான் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும். தொடுதல் மற்றும் பேச்சின் வழி இதைச் செய்யும்படி இதன் மூளையை உருவாக்கி யிருக்கிறார் சென்டோஸ்.

சமந்தாவிடம் எந்நேரமும் செக்ஸ் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தத்துவம், இலக்கியம், சினிமா, விளையாட்டு என எதைப்பற்றியும் உரையாடலாம். ‘ஜோக் சொல்லு சமந்தா’ என்றால் மொக்கையாகவாவது ஒரு ஜோக் சொல்லுவாள். இதுபோக சமந்தாவுக்கு உறக்கம் அவசியமானது. உங்கள் அருகிலேயே ஓய்வெடுப்பாள். தூங்கும்போது குறட்டை எஃபெக்ட் வேண்டுமென்றாலும் கொடுத்துக்கொள்ளலாம்.

இப்போதைக்கு இந்த எந்திரக்காதலிகளால் நகரமுடியாது; சிந்திக்கவும் உரையாடவும் மட்டும்தான் முடியும். நகரவும் முடியும்போது இந்தப் பாலியல் விளையாட்டுகளில் சுவாரஸ்யம் கூடலாம்.

ஆனால் இது மனிதகுலத்தின் பாலுணர்வு மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளில் என்ன மாதிரி மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற அச்சம் உலகம் முழுக்கப் பரவலாக இருக்கிறது. செக்ஸ் ரோபோக்களின் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தும் முன்வைக்கிற கேள்விகள் சில உள்ளன.

1 - பெண்களை வெறும் போகப்பொருளாக சித்திரிக்கிற போக்கை இது வலுப்படுத்துமா?

2 - பாலியல் சார்ந்த குற்றங்களை, செக்ஸ் ரோபோக்களின் வரவு குறைக்குமா, கூட்டுமா?

3 - உடற்குறைபாடுகள் கொண்டோருக்கு இவை வரமா?

4 - மனிதர்கள் ‘சமூகத் தனிமைப்படுத்தலுக்கு’  ஆளாவார்களா?

5 - பாலியல் தொழிலில் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களை மீட்க உதவுமா?

6 - மனித வக்கிரங்களை இவை அதிகரிக்குமா, குறைக்குமா?

இந்த விடைகளில்தான் இருக்கின்றன எதிர்காலத்தின் காதலும் காமமும்...

- காலம் கடப்போம்