Published:Updated:

ஸ்னேக், பவுன்ஸ், கிளாஷ் ஆப் கிளான்ஸ்... இந்த கேம்ஸ்லாம் இன்னும் நினைவிருக்கா? #NostalgiaGames

ஸ்னேக், பவுன்ஸ், கிளாஷ் ஆப் கிளான்ஸ்... இந்த கேம்ஸ்லாம் இன்னும் நினைவிருக்கா? #NostalgiaGames
ஸ்னேக், பவுன்ஸ், கிளாஷ் ஆப் கிளான்ஸ்... இந்த கேம்ஸ்லாம் இன்னும் நினைவிருக்கா? #NostalgiaGames

பழைய பட்டன் மொபைலிலேயே நம்முள் இருந்த கேமிங் ஆர்வத்தைத் தூண்டியதில் இந்த நாஸ்டால்ஜியா கேம்களுக்கு முக்கியப் பங்குண்டு.

ன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்து விஷயங்களும் சட்டென்று மாறிக்கொண்டே உள்ளன. ஒரு விஷயம் ஏற்படுத்தும் தாக்கம் சில நேரமே என்றாலும் அதன் நினைவுகள் எப்பொழுதும் நம்முடன் பயணிக்கும். செல்போன் கண்டுபிடித்தது பேசுவதற்குத்தான் என்றாலும் கால மாற்றத்தில் பல விஷயங்கள் அதனுடன் இணைந்துகொண்டன. அதில் மிக முக்கியமான ஒன்று கேமிங். ஆரம்பத்தில் மிக சாதாரணமாக இருந்த அதன் வடிவமைப்பு செல்போனின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கேம் விளையாடுவதற்காகவே செல்போன் நிறுவனங்கள் தங்களின் செல்போன்களில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கின்றனர். அதன்படி செல்போனில் அறிமுகமாகி ஹிட் அடித்த வைரல் மற்றும் நாஸ்டால்ஜியா கேம்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஸ்னேக் (snake) :

      1976-ம் ஆண்டு Arcade கேமாக அறிமுகமானது ஸ்னேக். அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த கேமை நோக்கியா நிறுவனம் தனது செல்போனில் 1997-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ஸ்னேக் கேம் மிக வேகமாக பிரபலமடைய தொடங்கியது. நோக்கியா போன் என்றாலே ஸ்னேக் கேம் என்னும் அளவுக்கு நோக்கியாவும் தனது அடுத்தடுத்த மாடல்களில் இதைக் கொடுத்து வந்தது. நோக்கியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப இதன் வடிவமைப்பும் snake, snake 2, snake xenzia, snake ex, snake ex2, snake 3D, snake (2017), என மாறிக்கொண்டே வருகிறது. தற்போது வெளியாகும் இதனை Gameloft நிறுவனம் வெளியிடுகிறது. பழைய பட்டன் மொபைலிலேயே நம்முள் இருந்த கேமிங் ஆர்வத்தைத் தூண்டியதில் இந்த கேமிற்கு முக்கியப் பங்குண்டு.

பவுன்ஸ் (Bounce):

கேம்கள் `பிளாக் அண்ட் வொயிட்டாக' இருந்து கலருக்கு மாறியபோது, இன்னும் ஒருபடி மேல் சென்று செல்போன் நிறுவனங்கள் கேம்களை கொடுக்கத் தொடங்கின. அப்பொழுது உருவாகிய கேம்தான் பவுன்ஸ் `Nokia மற்றும் Rovio' நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இதைத் தயாரித்தனர். 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இது மிகுந்த வரவேற்புடன் நோக்கியாவின் அடுத்தடுத்த மாடல்களிலும் வலம் வரத் தொடங்கியது. ஒரு பந்தை, இடையில் வரும் சவால்களை சமாளித்து எல்லைக் கோட்டில் செலுத்த வேண்டும். இடையில் வரும் தடைகளைச் சமாளித்து செல்வதற்குள் விளையாடுபவருக்குக் கை வியர்த்து விடும். இதன் இறுதி வெர்ஷன் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த நாஸ்டால்ஜியா கேம்களைத் தாண்டி, அடுத்தகட்டமாக ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கோலோச்சத் தொடங்கியதும் கேம்களும் அதற்கேற்ப அப்டேட் ஆகின. அப்படிச் சமீபத்தில் சக்கைப்போடு போட்ட ஸ்மார்ட் கேம்கள் இவை.

ஆங்கிரி பேர்ட்ஸ் (Angry birds):

Crush the castle என்ற கேமின் மூலம் ஈர்க்கப்பட்ட Rocio நிறுவனத்தினர் அதை மனதில் வைத்து உருவாக்கிய கேம்தான் `ஆங்கிரி பேர்ட்ஸ்'. பறவைகள் மூலம் கூண்டுகளைத் தகர்த்து, பறவைகள் மற்றும் விலங்குகளைக் கொல்ல வேண்டும்; இதுதான் இதன் ஆட்டமுறை. 2009-ம் ஆண்டு வெளியானது முதல் தற்போது வரைக்கும் தனக்கெனத் தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த கேமின் வெற்றியால் இதை திரைப்படமாகவும் தயாரித்து பெரும் வெற்றியும் பெற்றது. அடுத்த ஆண்டில் இதன் லேட்டஸ்ட் வெர்ஷன் வெளிவரவிருக்கிறது.

கேண்டி கிரஷ் சாகா (Candy crush saga):

      கேம்கள் என்றாலே அடிப்பது, சுடுவது, அல்லது ரேஸ் செய்வது போன்ற விஷயங்களை ஒதுக்கி PUZZLE வடிவமைப்பு மூலமாகவும் வெற்றி பெறலாம் என்பதற்கு சாட்சி இந்த `Candy crush saga'. இந்த கேம் அறிமுகமான சில நாள்கள் எவ்வித ஆரவாரமின்றி இருந்தாலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் டவுன்லோடு செய்யச் செய்ய ட்ரெண்டிங் பட்டியலில் நீண்ட நாள்கள் இருந்தது. KING என்ற கேம் வடிவமைப்பு நிறுவனம் தயாரித்த இந்த கேம் 2012-ம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை உலகளவில் அதிகமுறை தரவிறக்கம் செய்யப்பட்ட கேம்கள் வரிசையில் தற்போது வரை உள்ளது.

கிளாஷ் ஆப் கிளான்ஸ் (Clash of Clans):

நம்மூரில் சூரஹிட் அடித்த சூப்பர் கேம்களில் இதுவும் ஒன்று. 2013-16 வரையிலும் உலக அளவில் ட்ரெண்ட்டிங் கேம்களில் ஒன்றாக இருந்தது இது. நாமே ஒரு கிராமத்தைக் கட்டியெழுப்பி, அதைப் பாதுகாப்பதுதான் இந்த கேம். கூடவே பிறரின் கிராமங்களுக்குச் சென்று கொள்ளையடிப்பது, நம் கிராமத்தைப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பது போன்றவை இதில் சுவாரஸ்யம். இந்த கிளாஷ் ஆப் கிளான் காலகட்டத்திலேயே இதற்கு சவால்விடும் மற்ற கேம்களும் இருந்தன. உதாரணமாக டெம்பிள் ரன்னைச் சொல்லலாம். இன்னுமேகூட பலரது மொபைல்களில் டெம்பிள் ரன்தான் பிரைமரி கேமாக இருக்கும். இதற்கடுத்து Subway Surfers. இதுவும் வைரலான ஒரு கேம்தான். 

மினி மிலிடியா (Mini militia):

தனித்தனியாகதான் கேம் விளையாட வேண்டும் என்ற நியதிதை மாற்றி செல்போனில் Multiplayer கேம் விளையாடலாம் என்ற விஷயத்தை முன்வைத்து மிகப்பெரிய ஹிட் அடித்த கேம் இந்த Mini militia. Appsomniacs என்ற நிறுவனம் தயாரித்த இந்த கேம் முதன் முதலில் ios இயங்குதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. பின்னர்  2015-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியானது. வெளியான பிறகு இந்தியன் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகமுறை டவுன்லோடு செய்யப்பட்ட கேமாக உள்ளது.

பப்ஜி (PUBG):

                 Player Unknown Battle Ground என்பதன் சுருக்கமே இந்த PUBG ஆகும். தென் கொரியாவைச் சேர்ந்த `Bluehole' என்ற நிறுவனம் இதனை வடிவமைத்தது. ஜப்பானிய படமான Battle royal-ஐ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது. முதன்முதலில் Windows இயங்குதளத்தில் அறிமுகமான PUBG பெரிய வெற்றியை ருசித்தது. அதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளங்களில் February 2018-ல் வெளியானது. இதை வடிவமைத்த நிறுவனமே எதிர்பாராத அளவுக்கு இமாலய வெற்றியை இந்த கேம் பெற்றது. செல்போனில் வெளியான சில காலத்திலேயே Xbox மற்றும் Pc கேமாக மாறிய பெருமை இந்த PUBG கேமிற்கே சேரும். இதேபோல மிகக்குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த கேம் போக்கிமான் கோ. ஆனால், அது இந்தியாவில் கால்பதிக்க முடியாமல் போய்விட்டது. 

பின் செல்ல