தேச்சையாகப் பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா?
முனிகள் பிறழ்ந்தனரா?

இதற்காகத்தான் இப்படி
தேம்பித் தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா?
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை
எதிர்க்கிறார்களா?
செங்குருதியில் மடலிடுகிறார்களா?

இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப்
போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்துப் பிறன்மனைக்குள்
குதிக்கிறார்களா?
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா,
கைவளை நெகிழ்கிறதா?

இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை
அன்பு செய்கிறார்களா ?
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா?

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை
எழுதி வைக்கிறார்களா?
இதற்காகத்தான் தூங்கும்போது தலையில் கல்லைத்
தூக்கிப் போடுகிறார்களா?
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா?

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.


- கவிஞர் இசை எழுதிய அழகான கவிதை இது. கொஞ்சம் நீளமான கவிதையாக இருந்தாலும் படிக்க நைஸாக இருக்கிறதில்லையா... உண்மை எப்போதுமே நைஸ்தான்! ஏனெனில் உலகம் இயங்குவதே இந்த நைஸ்களால்தான். ஆண்-பெண் உறவின் அத்தனை சிக்கலான முடிச்சுகளுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இருப்பது இந்த நைஸ்கள்தான். மனிதகுல வரலாறுகள் நைஸ்களுக்காக சிந்திய ரத்தத்தால் எழுதப்படுபவை.

சர்வைவா - 12

இன்றைய AI தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த  `நைஸ்’ வேலையை எல்லாம் முழுமையாக எந்திரங்களை வைத்தே அவுட்சோர்ஸ் பண்ணிவிட முடியும். எல்லாவற்றிற்கும் அவை தயார். அதுமட்டும் அமைந்துவிட்டால் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள், கணவன் - மனைவி சச்சரவுகள், ‘பூரிக்கட்டை’ ஜோக்ஸ், விவாகரத்துகள்... எல்லாம் காணாமற்போகும் வாய்ப்புண்டுதானே?

 `அன்பானவர்களே அப்படியெல்லாம் மனப்பால் குடிக்கவேண்டாம், ஆண்பால்-பெண்பால்-அன்பாலில் எந்திரப்பாலின் வருகை வேறுமாதிரியான விளைவுகளை உண்டாக்கும்’’ என்கிறார்கள் ஃப்யூச்சரிஸ்டுகள்.

ஆப்பு காத்திருக்கிறது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 12


 ``AI ஆராய்ச்சிகள் எல்லாமே பெரும்பான்மை ஆண் விஞ்ஞானிகளால் செய்யப்படுகின்றன. அவர்கள் படைக்கிற எல்லாமே ஆண்களுக்கா னவை, ஆண்களைக் குறிவைத்தே இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆணாதிக்கம் தொழில்நுட்பத்தின் போர்வையில் திரும்ப வருகிறது’’ என உலகப் பெண்ணியவாதிகள் எல்லாம் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூற்றில் உண்மை இருக்கவே செய்கிறது. இதுவரை எழுதிய முந்தைய அத்தியாயங்களில் எத்தனை பெண் விஞ்ஞானிகளைக் கடந்துவந்திருப்போம்?

இன்னொரு பக்கம் செக்ஸ் ரோபோக்களில் தொடங்கி கூகுள் அஸிஸ்டென்ட் வரை பெண் குரல், பெண் உடல் எனப் போலிப்பெண்களை உருவாக்குவதில்தான் மும்முரமாக இருக்கிறது விஞ்ஞான சமூகம்.

இப்படிப்பட்ட போலிப்பெண்களை உருவாக்குவதால் இரண்டு விஷயங்கள் நடக்குமோ என்பது பெண்ணியவாதிகளின் அச்சம்.

1-நீலப்படங்களில் வருவது போன்ற உடல மைப்புள்ள எந்திர பொம்மைகளை, ஐஸ்க்ரீம் குரல்களை உருவாக்குவதால் பெண்களை வெறும் உடலாக, போகப்பொருளாக மட்டுமே பார்க்கிற (Objectification of Women) மனநிலை ஆண்களிடையே பலமடங்கு அதிகரிக்கும்.

2 - இந்தப் பொம்மைகள் எல்லாம் அடங்கிப்போகிறவையாக, அதீத காம உணர்வுகள் (hypersexual) கொண்டவையாக, பாலியல் அடிமைகளாக உருவாக்கப்படுவதால் சக பெண்களையும் அப்படிப் பார்க்கிற மனநிலை ஆண்களுக்கு வந்துவிடும். 

நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண் எழுத்தாளர் கேத்தி ஓ நீல் பெண்களுக்கு நல்ல செய்தி ஒன்றை முன்வைக்கிறார். ``செக்ஸ் ரோபோக்களால் ஆபத்து ஆண்களுக்குத்தான்’’ என்பதே அது.

சர்வைவா - 12

“ஆண்கள்தான் கவலைப்பட வேண்டும். உலகில் ஆண் செக்ஸ் ரோபோக்களும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவை உடலுறவில் எளிதில் ஆண்களைத் தோற்கடித்துவிடும். நமக்கு நிறைவான ஆனந்தம் கிடைக்கப்போகிறது. பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பதை ஆண்களைவிட இந்த எந்திரங்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கும். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அது ஆண்களுக்குத் தெரியப்போவதில்லை. சொல்லப்போனால் எதிர்காலத்தில் பெண்களுக்கான (செக்ஸ் ரோபோ)கேளிக்கை விடுதிகள் தோன்றக்கூடும்’’ என்பதுதான் கேத்தியின் கணிப்பு.

கேத்தி சொல்வதற்கேற்ப உலகெங்கும் பாலியல் தேவைகளுக்கான ஆண் ரோபோக்களும் ஆராய்ச்சியில் இருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பீல்பெர்க் இயக்கிய AI படத்தின் நாயகன்  `கிகலோ ஜோ’ பாலியல் தொழில் செய்யும் எழிலான ரோபோதான்.

ரோபோ உற்பத்தியாளர் மேட் மெக்குல்லன் ஆண்களுக்காக மட்டுமல்ல; பெண்களுக்காகவும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். கிகலோ ஜோவைப்போலவே ஒருவனை உருவாக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார்.

 ``இந்த ஆண்டு நிச்சயமாக முழுமையான எந்திர ஆசைநாயகர்களைக் களமிறக்கியே தீருவேன்’’ எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். வேண்டிய படி உருவம், அளவு, நீளம், அகலம் என, பெண்களே அளவு கொடுத்துத் தங்கள் காதலர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஏற்கெனவே மெக்குல்லனின் ஆண் ரோபாவுக்கு உலகெங்கும் இருந்து அட்வான்ஸ் புக்கிங்கில் ஆர்டர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அனேகமாக இன்னும் சில ஆண்டுகளில் மெரீனாவின் காதல் குடைகளுக்குப்பின்னால் ஒரு கட்டிபிடி ரோபோ அமர்ந்திருக்கக்கூடும்!

கேத்தியைப்போலவே இந்த சுய அறிவுள்ள ரோபோக்களின் வருகை ஆண்-பெண் உறவில் ஆண்களைத்தான் அதிகமும் பாதிக்கும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இந்தியா தொடங்கி உலகில் பல நாடுகளிலும் இத்தனை விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் எட்டிவிட்ட காலத்திலும் இன்னமும் பெண்களுடைய பாலியல் உணர்வுகள் பெரிய அளவில் மதிக்கப்ப டுவதில்லை. சொல்லப்போனால் திருமணமான பெண்களை செக்ஸ் ரோபோக்களைப்போலத்தான் ஆண்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் `எந்திர நாயகர்கள்’ பெண்களுக்குத் தரப்போவது மிகப்பெரிய சுதந்திரத்தை. ஏற்கெனவே பொருளாதார சுதந்திரத்தைப் பெண்கள் பெறத்தொடங்கிவிட்டனர். பாலியல் சார்ந்தும் ஆண்களுடைய தேவை இல்லாமல் போகும்போது சமூகத்தில் ஆண்களுடைய இடம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதும், இது

ஆண்-பெண் இருபாலினத்தினரிடம் பிரிவினையை உருவாக்கும் என்பதும் காலக்கணிப்புகளாக இருக்கின்றன.

 `குழந்தைக்கு என்ன பண்ணுவாங்களாம்?’ எனக் காலரைத் தூக்கவேண்டாம். AI ஆராய்ச்சி போலவே அந்தத் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டிருக்கிறது.  Parthenogenisis -  பாலுறவு இல்லாமல் செயற்கை விந்தணுக்கள் மூலமாகக் கருத்தரிக்கச்செய்வது.  The Institute for Reproductive Medicine and Genetics in Los Angeles என்கிற ஆராய்ச்சி நிறுவனம் இதைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் இருக்கிறது.

உடனே இதெல்லாம் நடந்து பெண்கள் வாழ்வு ஒளிவீசப்போவதில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்காவது ஓங்கி இருக்கப்போவது ஆண்களுடைய கைகள்தான். காரணம் செக்ஸ் இன்டஸ்ட்ரியை இப்போதைக்கு 99 சதவிகிதம் இயங்கச்செய்வது, இயக்குவது ஆண்கள்தான். இப்போதுதான் நம்குலப்பெண்கள் எல்லாம் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ பார்க்க தியேட்டருக்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள்...காலம் வரும், காத்திருப்போம்.

சர்வைவா - 12

அடிமைகளை மீட்குமா?

உலக அளவில் நான்கரைக் கோடிப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டி ருக்கிறார்கள். இவர்களில் கடத்தப்பட்டவர்கள், கொத்தடிமைகள், கடனைத் திருப்பிச்செலுத்தாத வர்கள், போதைக்கு அடிமையாக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு விதமானவர்கள் இருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதம்  பேர் வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டவர்கள் என்கிறது ஆஸ்திரேலியாவின் தொண்டுநிறுவனம் வாக் ஃப்ரீயின்  Global slavery index 2016. செக்ஸ் ட்ராஃபிக்கிங் உலகையே அச்சுறுத்துகிற மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று. குறிப்பாகப் பிஞ்சுகளையும்கூட குறிவைக்கிற கொடூரமெல்லாம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம்  AI தொழில்நுட்பம்  மாற்றும் என்பதுதான் ஃப்யூச்சரிஸ்டான டேவிட் லெவியின் கணிப்பு. என்ன மாதிரியான மாற்றம்?  Love and sex with robots  என்ற அவருடைய நூலில் இதைப்பற்றி விரிவாக அலசுகிறார்.

“தொழில்நுட்பம் வளரவளர உலகம் முழுக்க இருக்கிற பிராத்தல்களில் பெண் ரோபோக்கள் அதிகரிக்க ஆரம்பிப்பார்கள். அதே நேரத்தில் லேப்டாப், மொபைல் போன் போலவே செக்ஸ் ரோபோக்களின் விலையும் குறையத்தொடங்கும். யாரும் வீட்டிலேயே ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளக்கூடிய அளவில் அவை குறைந்துவிடும். அல்லது பொதுவான பயன்பாட்டுக்கென நாம் வாங்குகிற எந்திர அஸிஸ்டென்ட்டுகள் நம்முடைய பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவையாக இருக்கும்’’ என்று கணிக்கிறார்.

சர்வைவா - 12

அவருடைய மேலும் சில கணிப்புகள்

- செக்ஸ் ரோபோக்களால் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை குறையும். கொத்தடிமைகள் மீட்கப்படுவார்கள்..

- இன்னொருவரோடு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாதபடி உடற்குறை பாடுகள் கொண்டோர்களுக்கு, மாற்றுத்திறனாளி களுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

- பெண்கள்மீதான பாலியல் வன்முறைகளை இது குறைக்கும்.

- செக்ஸ் ட்ராஃபிக்கிங் குறையும்.

இப்படிப் போகின்றன அவருடைய கணிப்புகள். இவையெல்லாம் டேவிட் லெவி முன்வைக்கிற பாசிட்டிவ் எதிர்பார்ப்புகள். இவையெல்லாம் நடந்து பொல்லாத பாலியல் தொழிலிலிருந்து அப்பாவிப்பெண்கள்  மீட்கப்பட்டால் மகிழ்ச்சியே. ஆனால், இந்தக் கணிப்புகளுக்கு மாறாக எதிர்விளைவுகள் உண்டானால் என்னாகும்?

சமூக ஆர்வலர் கேத்லீன் ரிச்சர்ட்சனின் அச்சம் அதுதான். செக்ஸ் ரோபோக்களுக்கு எதிராகச் சங்கம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்.

#Campaignagainstsexrobots

- காலம் கடப்போம்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism