Published:Updated:

சர்வைவா - 14

சர்வைவா - 14
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 14

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

செயற்கை நுண்ணறிவுள்ள எந்திரங்களுக்கு நம்மைப் போலவே உணர்வுகள் இருக்குமா, நாம் அதோடு பேசும்போது அவை புன்னகைக்குமா, ஓர் எந்திரத்துக்கு நாம் சினேகமாகப் பேசுகிறோமா அல்லது தந்திரமாகப் பேசுகிறோமா என்பது புரியுமா, ஓர் எந்திரத்தை அடித்தால் அது நம்மைப் பழிவாங்க நினைக்குமா, ஈகோ இருக்குமா... அதற்கு நம் கண்ணீர் புரியுமா?

`எந்திரங்களில் உணர்வுகள்’ என்கிற விஷயத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று எந்திரங்கள் நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வது (Understanding of our emotions). இரண்டாவது சூழலுக்கு ஏற்ப தன்னுடைய அறிவினால் உணர்வுகளை வெளிப்படுத்துவது (Exhibiting of emotions).

எதற்காக எந்திரங்கள் நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்? இதனால் யாருக்கு லாபம்?

LG நிறுவனம் சென்ற ஆண்டு  ACRYL என்ற நிறுவனத்தில் 334 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இந்த ACRYL நிறுவனத்தின் முக்கியமான வேலை Emotion AI-களை உருவாக்குவது. அதாவது மனிதர்களின் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ வழி அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிற செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைத் தயாரிப்பது. 2016-ல் ஆப்பிள் நிறுவனமும் Emotient என்கிற நிறுவனத்தை இதுபோலவே பெரிய தொகை கொடுத்து வாங்கியது. மனித முகங்களை, அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களை ஆராய்ந்து அவர்களுடைய உணர்வுகளை யூகிக்கிற  AI-களை உருவாக்கும் நிறுவனம் இது.

சர்வைவா - 14

ஃபேஸ்புக்கும் தன் பங்குக்கு Faciometrics என்கிற ஸ்டார்ட் அப்பை இதுபோலவே வாங்கியது. இதுவும் உணர்ச்சிபூர்வமான எந்திரங்களை உற்பத்தி செய்கிற நிறுவனம்தான். இவர்கள் மட்டுமல்ல; சாம்சங், ஐ.பி.எம், மைக்ரோசாஃப்ட், கூகுள் என உலகின் முன்னணி தொழில்நுட்ப பூதங்கள் எல்லாமே ­Emotion AI-களை உருவாக்கும் சுள்ளான்களை எல்லாம் பெரிய தொகைகொடுத்து வாங்கிப்போட ஆரம்பித்திருக்கின்றன.

(நடுக்குறிப்பு - நிறைய சம்பாதிக்கும் ஆசையிருந்தால் இப்போதே எமோஷனை கட்டுப்படுத்திக்கொண்டு  Emotion AI ஆராய்ச்சியில் குதித்துவிடுங்கள். பிள்ளை குட்டிகளைப் படிக்கவையுங்கள். இதுதான் எதிர்காலம். ஏராளமாகக் காசிருக்கிறது.)

சர்வைவா - 14


தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூகவலை தளங்கள், தேடுபொறி திலகங்கள் மட்டுமல்ல, டிஸ்னி மாதிரி சினிமா கம்பெனிகள் கூட இந்த உணர்ச்சிகர எந்திரங்களுக்கான ஆராய்ச்சிக்கு கோடிகளைக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். “Factorized Variational Autoencoders” (FVAEs)  என்கிற அல்காரிதத்தின் உதவியோடு திரைப்படம் பார்ப்பவர்களைக் கண்காணித்து அவர்கள் எந்தக் காட்சிக்கு அழுகிறார்கள், சிரிக்கிறார்கள், கடுப்பாகிறார்கள், ச்சுச்சூ போகிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்கிற  Emotion AI ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர்கள் ஜாக்கிரதை!

ஒரு படத்தில் நடிகர் விவேக் ‘பொம்பளைங்க மனசை புரிஞ்சுக்கப்போறேன்’ எனத் தெருத்தெருவாக அலைகிற மாதிரி, ஏராளமாகப் பணத்தைக்கொட்டி மனித உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள இந்த நிறுவனங்கள் ஆலாய்ப் பறக்கின்றன. எந்திரங்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டியே தீருவேன் எனத் துடிக்கிறார்கள். எதுக்காம்?

உணர்ச்சிகள்தான் ஒரு நாய்பொம்மைக்கும், உயிருள்ள நாய்க்குமான வேறுபாடு. உயிர் என்பதை விளக்க முற்பட்டால் அது இறுதியில் உணர்வோடு இருப்பதில்தான் வந்து முடியுமோ? பக்கத்து மாவட்டத்தில் பத்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனாலும் அதை கண்டும் காணாமல் உணர்ச்சியே இல்லாமல் இருப்பவரை ‘பிணம்’ என்றுதானே திட்டுகிறோம்? உணர்வற்றவை எல்லாமே உயிரற்றவைதானே?

அதனால்தான் உணர்ச்சிகள் மூலம் எந்திரங்களுக்கு உயிரூட்டிப்பார்க்க முனைகிறது அறிவியல். அதனால்தான் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வுகளைக் கற்றுத்தர போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெய்ட், அது மட்டுமே காரணம் கிடையாது. வேறு காரணங்களும் இருக்கின்றன.

கா  1 - வியாபாரம்

கா  2 - கண்காணிப்பு

கா  3 - தொடர்பு

பேச்சுத்துணை

இப்போது ப்ளாட்டோவுக்கு வருவோம். மனித குணாதிசயமானது அறிவு, வேட்கை, உணர்ச்சி என்கிற மூன்று விஷயங்களால் உருவானது என்கிறார் அவர். நம் எந்திரங்களுக்கு அறிவு ஏற்கனவே தேவையான அளவு ஊட்டப்பட்டுகொண்டிருக்கிறது. பிக்டேட்டா அந்த வேலையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது. அவை எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், நம்மை விழுங்க ஆசைப்படாது! கூடவே என்னதான் அவை அறிவோடு இருந்தாலும் அவை ஆஃப்டர் ஆல் எந்திரங்கள்தான். காரணம் அது நம்மோடு பேசுகிற முறை; பதில்சொல்லும் பாணி.

ஒருவேளை நம்முடைய உணர்வுகளை யெல்லாம் புரிந்துகொண்டு நம்மோடு உரையாடத்தொடங்கினால்... தந்திரமாகப் பேசி நம்மைக் காதல் வலையில் விழச்செய்தால்... பெரியாரியம் பேசி விவாதம் செய்தால்...

சர்வைவா - 14


மனிதர்களுக்கும் எந்திரங்களுக்குமான இடைவெளியைக் குறைக்கக்கூடிய முதல் புள்ளி இந்த கம்யூனிகேஷன்தான்.

கூகுள் சமீபத்தில் டூப்ளக்ஸ் என்கிற ஒரு புதிய AI எந்திரத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இது ஒரு கால்சென்டரில் வேலைபார்க்கக்கூடிய AI. உங்களுக்குப் போனில் அழைத்து உங்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கக்கூடியது. உங்களுடைய பதில்களை புரிந்துகொண்டு, உணர்வுகளைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப லாகவமாகப் பேசி உங்களிடம் நேரம் குறித்துக்கொள்ளும். சுந்தர்பிச்சை டூப்ளக்ஸை அறிமுகப்படுத்தி அது வாடிக்கையாளர்களிடம் பேசி அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணின வீடியோவையும் போட்டுக்காட்டியபோது எல்லோர் வாய்க்குள்ளும் கொசு புகுந்திருக்கும். இதற்குமுன்பு பேசிய எந்த  Automated voice service போல இல்லாமல், இது சுயமாக சிந்தித்துப் பேசக்கூடியதாக இருந்தது. எதிரில் பேசுகிற மனிதர் பிடிகொடுக்காமல் பேசினால் அவரை எப்படி மடக்கி அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவது என்பதை அறிந்திருந்தது. மார்க்கெட்டிங் மனிதர்களுக்கே உரிய தந்திரமான குணம்! அதை முதன்முதலாக எந்திரம் ஒன்று வெளிப்படுத்தியது.

டூப்ளக்ஸ் துவக்கம்தான். போகப்போக எந்திரங்கள் நிறைய பேசப்போகின்றன. மனிதர்களைப்போலவே மனிதர்களைவிடவும் சிறப்பாக... ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்றுகூட அவை ஒருநாள் மேடையில் முழங்கலாம் யார் கண்டது...

உணர்வுகள் விற்பனைக்கு!

இன்றைக்கே மனிதர்களைப்பற்றிய தகவல்தான் தங்கம். அதிலும் தனிமனிதத் தகவல்கள் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறதோ அவ்வளவும் பொக்கிஷம். உதாரணத்துக்கு அமேஸான் மாதிரி நிறுவனம் வாடிக்கையாளரின் மனதைப்புரிந்து கொண்டால் இன்னும் கூட அதிகமாக விற்பனையைப் பெருக்கமுடியும். விதவிதமான வழிகளில் நம்முடைய நியூரான்களைத் தூண்டி ஷாப்பிங் அடிமையாக்க முடியும் இல்லையா! ஏற்கனவே அப்படித்தானே... சைனா மொபைலை பர்மாபஜாரில் வைத்து விற்பதை விட, ஷாப்பிங் இணையதளங்களில் அதிரடி சேல், 3 மணியிலிருந்து 4 மணிவரை மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் என எமோஷனைக் கூட்டினால் அந்தப்போனை தொட்டுக்கூடப் பார்க்காமல் அலறி அடித்துக்கொண்டு வாங்குகிறோமே... எப்படி? 

Emotional manipulation. இது பொதுவான ஆய்வுகளின் அடிப்படையில் செய்யப்படுபவை. Emotion AI-கள் இதை பெர்சனலாக மாற்றிவிடும். `ஒவ்வொரு அடிமைக்கும் தனித்தனியாக ஸ்கெட்ச்சு!’ 

சர்வைவா - 14

ஏற்கனவே ஃபேஸ்புக், ட்விட்டர் மாதிரி சமூகவலைதளங்கள் நம்மைக் கண்காணித்து நம்முடைய உணர்வுகளைக் குருவி சேகரிப்பதுபோல குட்டி குட்டியாகச் சேர்த்து, பிசைந்து பிக்டேட்டாவாக்கி வாடிக்கையாளர்களுக்கு விற்று துட்டு பண்ணிக்கொண்டுதானிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புகூட மன அழுத்தத்தில் இருக்கிற இருபதாயிரம் டீன்ஏஜ் பையன்களைக் கண்டறிந்து அவர்களுடைய விபரங்களை விளம்பரதாரர்களுக்கு வாரி வழங்கியதாக ஃபேஸ்புக் மீது குற்றம்சாட்டப்பட்டது. 7 லட்சம் பயனாளர்களின் டைம்லைனில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளாக அள்ளிக்கொட்டி, அதற்கு அவர்கள் எப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுகிறார்கள் என்று ஆராய்ந்து தகவல் சேகரித்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்ததும் அம்பலமானது. அதை ஃபேஸ்புக் வெவ்வேறு வார்த்தைகளில் மறுத்தாலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மேட்டரில் மார்க் சக்கர்பெர்க் மாட்டிக்கொண்டபோதுதான் எல்லோருக்குமே சமூகவலைதளங்களின் உண்மை முகமெல்லாம் தெரியவந்தது.

எதிர்காலத்தில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய  AI-கள் நாம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளக்கூடிய செல்ஃபியை வைத்தே  `இவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார், இவருக்கு இந்தந்தப் பொருட்களைப் பரிந்துரைக்கலாம், நிச்சயம் வாங்குவார்’ என்று  Potential customers-ஐ பொறுக்கிக்கொடுத்துவிடும்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

கண்காணிப்பு என்பதை இரண்டாகப் பிரிக்கலாம். அன்போடு கண்காணித்து அனுசரணையோடு பார்த்துக்கொள்கிற துணைவன் AI. இன்னொன்று பிக்பாஸ் போல எந்நேரமும் நம்மைக் கண்காணித்து அதை நமக்கு மேல் இருக்கிறவரிடம் போட்டுக்கொடுக்கிற பிக்பாஸ் AI.

காதல் பொம்மைகள், ஆசிரிய எந்திரங்கள், மருத்துவ எந்திரங்கள் எல்லாம் முதல் வகையில் வரும். அங்குதான் உணர்வுகள் அவசியமாகிறது. நோயாளிகள், முதியவர்களைத் தொடர்ந்து கண்காணித்து மருந்து மாத்திரை தருவதற்கு, டைம்டேபிளும் மாத்திரையும் மட்டுமல்ல; கொஞ்சம் பாசமும் வேண்டும். ஆட்டிசம் மாதிரி பாதிப்புகள் கொண்ட குழந்தைகளைக் கண்காணித்து உதவுவது அத்தனை சுலபமல்ல. பள்ளி ஆசிரியையாக குழந்தைகளைக் கண்காணித்து வேலை பார்ப்பதை உணர்வற்ற எந்திரம் எப்படி செய்யும்?

சர்வைவா - 14அடுத்தவகை கண்காணிப்பு நம்மைக் கட்டுப்படுத்த நினைக்கும் அதிகார மையங்களால் செய்யப்படுவது. சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பது போல. நிறுவனங்கள் ஊழியர்களையும், அரசுகள் குடிமகன்களையும் பிக்பாக்ஸ் போல கண்வலிக்காமல் பார்த்து கண்காணித்துக் கட்டுப்படுத்துவது.

சீனாவில் பல நிறுவனங்களில் ஹெல்மெட் உதவியோடு வேலைக்காரர்களின் மனநிலையை ஆராய்கிறார்கள். குறிப்பாக  Hangzhou Zhongheng Electric என்கிற நிறுவனம் தன்னிடம் வேலைபார்க்கிற 40000 தொழி லாளர்களின் ஹெல்மெட்கள் வழியாக அவர்களுடைய உணர்வுகளைக் கண்காணிக்கிறது. இந்தக் கண்காணிப்பை செய்வது ஒரு AI. இது தொடர்ச்சியாக தொழிலாளியின் மூளையில் உண்டாகும் மாற்றங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தொழிலாளியைப்பற்றிய ரிப்போர்ட்களை வழங்கும். தொழிலாளி உடல்சோர்வா கவோ, மனச்சோர்வாகவோ, மன அழுத்தத்திலோ இருப்பதாகத் தெரிந்தால் உடனே வேலையை விட்டு அனுப்பவும் பரிந்து ரைக்கிறது. மதிய நேரத்தில் தூக்கக்கலக்கத்தில் இருந்தாலும் உரிய அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து உதைவாங்கித்தரும்! உலகின் முதல் கங்காணி  AI!

இந்த புராஜெக்ட்டை தொடங்கியபிறகு நிறுவனத்தின் வருமானம் பலமடங்கு உயர்ந்திருக்கிறதாம். ஆனால் இது கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.  இந்த நிறுவனத்தைப் பின்பற்றி இப்போது மேலும் 13 நிறுவனங்களில் இதே பாணி கண்காணிப்பை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். சீக்கிரமே இந்தப் பாணி கண்காணிப்பு பார்டர் தாண்டி இந்தியாவுக்கும் வரலாம். அப்போது மதிய உணவால் மண்டைக் கவிழ்ந்தால்... மெமோ வாங்கவும் நேரிடலாம்!

கண்காணிப்பில் இதெல்லாம் பச்சா... அரசு சார்ந்த பெரிய லெவல் AI கண்காணிப்புகள் இன்னும் பயங்கரமாக இருக்கப்போகின்றன. அவை அடுத்த வாரம்...

- காலம் கடப்போம்