ஏழு நிமிடங்கள்

சீனாவின் கண்காணிப்பு எந்திரங்கள் குறித்து களத்தில் இறங்கி சோதிக்க விரும்பியது பிபிசி. காரணம், சீனா தன்னுடைய கண்காணிப்புத் தொழில்நுட்பம் குறித்து உலகெங்கும் பரப்பும், நம்ப முடியாத செய்திகள். 20 லட்சம் சிசிடிவி கேமராக்களில் தொடங்கி அவையெல்லாம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்குபவை என்பது வரை எல்லாமே கேட்கும்போது மலைப்பாக இருந்தாலும்  `இதெல்லாம் நிஜமா?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய முடிவெடுத்தது பிபிசி. அதற்காக ஜான் என்கிற பத்திரிகையாளரை சீனாவுக்கே அனுப்பியது. செஞ்சீனத்தின் நெற்றிக்கண்ணைக் காணக்கிளம்பினார் ஜான்.

பிபிசியின் சவால் -  ``எங்கள் ரிப்போர்ட்டர் மக்கள் நெரிசல் மிகுந்த சீன நகரத்துக்குள் சென்றுவிடுவார். அவரை உங்கள் `நுண்ணறிவுள்ள கண்காணிப்பு எந்திர’ங்களின் உதவியோடு கண்டுபிடிக்க வேண்டும்.’’

சீனக் காவல்துறையின் பதில் - ‘எப்ப வெச்சுக்கலாம்?’

35 லட்சம் பேர் வசிக்கும் கீயாங் என்ற பெரிய நகரத்தைத் தேர்ந்தெடுத்தது பிபிசி. ஜானை `AI Powered Cameraக்கள் வழியே மட்டும்தான் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பது நிபந்தனை. சீனக்காவலர்கள் தங்கள் சின்ன வாயைத் திறந்து புன்னகைத்தனர்.

ஜான் கிளம்பினார். சிசிடிவி கேமராக்களின் கண்களில் சிக்காதவகையில் தப்புவதுதான் பிபிசியின் திட்டம். எல்லாம் தயார். கீயாங் நகரின் மக்கள் கடலில் கலந்துவிட்டார் ஜான். அடர்த்தியான மார்க்கெட் பகுதியில் நுழைந்துவிட்டார். ஆனால், அவரால் எந்திரக்கண்களிடமிருந்து தப்பவே முடியவில்லை. எந்தப்பக்கம் திரும்பினாலும் கேமராக்கள். வெறும் 7 நிமிடங்களில், ஜான் காவல்துறையிடம் சிரித்துக்கொண்டே சிக்கினார். Power of AI... பிபிசி அசந்துபோனது.

சர்வைவா - 16

சீன  ரகசியம்

சீனாவின் `கம்ப்ளீட் கண்காணிப்பு’ புராஜெக்ட்டின் மூளைகள் செயற்கை நுண்ணறிவுத்துறையில் இயங்கும் ஸ்டார்ட் அப்கள்.

உலக அளவில் AI ஆராய்ச்சிகளில் மிக அதிக முதலீடு செய்திருப்பது சீனாதான். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத்துறை ஆராய்ச்சிகளில் 48% சீனாவில்தான் நடக்கின்றன. அமெரிக்காவுக்கே இரண்டாவது இடம்தான். 38%. இப்படி செயற்கை மூளை ஆராய்ச்சிக்கென சீனா முதலீடு செய்யும் பணத்தில் பெரும்பங்கு ­கண்காணிப்புத் தொடர்பான ஆராய்ச்சிகளுக்குத்தான் செல்கிறது. `அதெல்லாம் பொய், அதி நவீன, வேகமான புராசஸர்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்’ என சீனா சொல்லிக்கொண்டாலும், புராசஸர்களும் கூட கண்காணிப்பு எந்திரங்களை உருவாக்குவதற்கானவையாகவே இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 16


`டாகுவா டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம் பத்துலட்சம் ஸ்பெஷல் ­சிசிடிவி கேமராக்களை சீன அரசுக்கு அளித்திருக்கிறது. அரசுக்கு உங்கள் மீது சந்தேகமிருந்தால், உங்களுடைய புகைப்படத்தையோ அல்லது அடையாள அட்டை எண்ணையோ (ஆதார் மாதிரி) கொடுத்தால் கூட போதும், இந்த எந்திரம் உங்கள் ஜாதகத்தையே கொடுத்துவிடும். நகரம் முழுக்க அந்த நபர் எங்கு சென்றாலும் அந்த ஃபுட்டேஜ்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துவிடும். கூடவே நீங்கள் எந்த வாகனத்தில் செல்கிறீர்கள், உங்களுடைய நண்பர்கள் யார், உறவினர்கள் யார், நீங்கள் அதிகம் சந்திக்கும் நபர் யார், அடிக்கடி செல்லும் இடம் எது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எங்கே தங்குகிறீர்கள், யாரைக் காதலிக்கிறீர்கள், முத்தமிடுகிறீர்கள்... கூடுதலாக உங்கள் கூட்டாளிகள் பற்றியும் மொத்தத் தகவல்களையும் தொகுத்து அதன் அடிப்படையில் `நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று ரிப்போர்ட் கொடுக்கும்.

இன்னொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான YITU செயற்கை அறிவுள்ள கண்காணிப்புக் கண்ணாடிகளை அரசுக்கு வழங்குகிறது. இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டால் எதிரில் இருப்பவரின் முகத்தைப் புரிந்துகொண்டு கோடிக்கணக்கானோரின் முக ஐ.டி.களை ஆராய்ந்து, அதில் குற்றப்பின்னணி கொண்டோரை ஃபில்டர் செய்து மூன்றே வினாடிகளில் முடிவு சொல்லும். ஏற்கெனவே சீனா முழுக்க இவ்வகைக் கண்ணாடிகளைக் காவல்துறையினர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இப்போது இந்த வகைக் கண்ணாடிகள் எங்களுக்கும் வேண்டும் என மலேசிய அரசும் ஆர்டர் கொடுத்திருக்கிறதாம். கோலாலம்பூரிலேயே பிராஞ்ச் போட்டு உக்காந்துவிட்டது ‘யீட்டு’. LLvision என்ற நிறுவனமும் இதே மாதிரியான கண்ணாடிகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் இருக்கிறது. இதை இப்போதே ரயில்நிலையங்களில் ஐடி செக்கிங் இடத்தில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். 85 சதவீதம் இது சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கிறது என்கிறது சீனா.

மேலே சொன்ன நிறுவனங்கள் எல்லாம் எலிக்குட்டிகள்.  FRS (Facial Recognition System) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எந்திரங்களை உருவாக்கும்  Sensetime, Face++, Cloudwalk என்கிற மூன்று நிறுவனங்கள்தான் சீன அரசின் பிரதானத் தளபதிகள். 
இவர்கள் மூன்று நிறுவனங்களுமாக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

முகம்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறது. நம் முகங்கள்தான் எதிர்காலத்தின் பாஸ்வேர்டுகளாகவும் இருக்கும்;  ஐடி கார்டுகளாகவும் இருக்கும். இந்தியாவின் Paytm மாதிரி சீனாவில் ALIPAY. அது தன் பரிவர்த்தனை களுக்கு முகங்களையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்துகிறது. SMILE TO PAY என்கிற ALIPAY-ன் சேவையில் பணம் செலுத்தப் புன்னகைத்தாலே போதும். முகங்கள் ஏற்கனவே செல்போன்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன (Apple iPhone Xன் Face ID). சீனாவின் யூனியன்பே கம்பெனி, புன்னகைத்தால் பணம் தரும் ஏடிஎம்களை மக்காவ் நகரில் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. எந்திரங்கள் இனி முகம் பார்த்தே அகம் சொல்லும்.  கூடவே முகப்பரிவர்த்தனைகள் நம்மைக் கண்காணிப்பதை சுலபமாக்கும்.  

சர்வைவா - 16

`வீடியோ கண்காணிப்பில் செயற்கை நுண்ணறிவு’ சார்ந்த ஆராய்ச்சியில் சென்ற ஆண்டு மட்டும் 530 புதிய தொழில்நுட்பங்களுக்கு பேடன்ட் வாங்கி இருக்கிறது சீன அரசு. அதில் Facial Recognition சார்ந்த AI ஆராய்ச்சியில் 900 புதிய தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை வாங்கியிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, இது 100 மடங்கு அதிகம். இப்போது உள்ள 20 லட்சம் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை 2020ல் 67 லட்சமாக உயர்த்தும் உன்னதத் திட்டத்தோடு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் முக ஆராய்ச்சி மூவேந்தர்களில் ‘சென்ஸ்டைம்’ நிறுவனம் பெரிய தல. உலக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அதிக முதலீட்டைப் பெற்ற நிறுவனம் என்ற சாதனையைப் பெற்றது. இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை, சீனக் காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் AI ­தொழில்நுட்பத்தின் உதவியோடு கண்காணிப்பு எந்திரங்களை உருவாக்குவது. மொத்தமாக 4.5 பில்லியன் டாலர்கள் முதலீடு. அதாவது இந்திய ரூபாயில் 31,500 கோடி ரூபாய். இதில் சீனாவின் முன்னணி நிறுவனமான ‘அலிபாபா’வின் பங்கு கணிசமானது என்றாலும் மிக அதிக முதலீடு செய்திருப்பது அரசுதான்.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் நிறைய சம்பாதிப்பதும் ‘சென்ஸ்டைம்’தான். அவர்களுடைய அதிநவீன AI உலக அளவில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படு கிறது. இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஓப்போ, விவோ நிறுவன மொபைல்களில் வருகிற Camera Beautifcation தொழில்நுட்பங்களில் தொடங்கி கூட்டத்தில் குண்டுவைத்திருப்பவரைக் கண்டுபிடிக்கிற எந்திரங்கள் வரை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

குவாங்ஜோ மாகாணத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்ஸ்டைமின்  AI தொழில்நுட்பங்கள், எங்காவது வன்முறையோ, அசம்பாவிதமோ, கொலையோ நடந்தால் அதுகுறித்த வீடியோ பதிவுகளையும், இதுவரை பதிவான மற்ற வீடியோ மற்றும் சிசிடிவி பதிவுகளையும் ஆராய்ந்து, கூடவே சீனாவின் கிரிமினல் ரெகார்டு டேட்டாபேஸ்களையும் ஆராய்ந்து... கிரிமினல்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. இதுவரை 2000 குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்த எந்திரக்காவலர்கள்.

இன்னும் நாலு டஜன் ஸ்டார்ட் அப்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கருவிகளைச் சீன அரசின் திட்டங்களில் போட்டு, பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நிதி அங்குதான் இருக்கிறது.

தேவைதான் உற்பத்தியைத் தீர்மானிக்கின்றன. சீனாவின் இன்றைய ஒரே தேவை கம்யூனிஸ அரசுக்கு எதிராகத் திரளும் குரல்களை வேரிலேயே ஒடுக்குவது. அதைச் செய்ய அதிநவீனக் கண்காணிப்பு வசதிகள் வேண்டும். அதற்காகச் சீனா எந்த எல்லைக்கும் செல்லத் தயாராயிருக்கிறது.

அதனால்தான் இந்த ஆராய்ச்சிகளைச் சீன அரசு வெறித்தனமாக ஊக்குவிக்கிறது. சீனாவின் இந்தக் கண்காணிப்பு எந்திரங்களுக்குப் பின்னால் இருப்பது குற்றங்களைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே அல்ல. அரசுக்கு எதிராகச் சிந்திப்பவர்களை ஒழித்துக்கட்டு வதும்தான். புரட்சியால் உருவான சீனா, புரட்சிக்கும் எதிர்ப்புக்கும் அஞ்சுவது வரலாற்றின் முரண்நகைதான்.

ஏற்கெனவே சீனாவின் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மேற்கு சீனப்பகுதியில் இதைச் செய்துகொண்டிருக்கிறது சீன அரசு. தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை உளவு பார்ப்பதுதான் அரசின் பிரதான நோக்கம் என்பதே அங்குள்ள மாற்றுச்சிந்தனையாளர்களின் குரல். ஆனாலும் சீனா அதையெல்லாம் கண்டும் காணாமல் இந்தக் கண்காணிப்பு எந்திரங்களை மேலும் மேலும் மேம்படுத்திக்கொண்டிருக்கின்றன.

 `சீனர்களை ஃபாலோ பண்ணுங்க. நாடு நல்லாருக்கும்’ என உலகம் முழுக்கப் பல நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பிய நாடுகளும் கூட சீனாவின் ‘செயற்கை அறிவுள்ள கண்காணிப்பு கேமராக்களை’ வாங்கத்துடிக்கிறார்கள். சீனாவின் ஸ்டார்ட்-அப்களுக்கு வந்து குவியும் முதலீடுகளே அதற்கு சாட்சி.

சீனாவின் எதிரியான அமெரிக்கா இதைவிடவும் பெரிய வேலைகள் செய்துகொண்டிருக்கிறது. சிலிக்கான் வேலி கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பரபரத்துக் கிடக்கிறது.

இருந்தும் இதையெல்லாம் செயல்படுத்த அமெரிக்காவுக்குக் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது... ஆமாம், அமெரிக்கா அஞ்சுகிறது... யாருக்கு?

- காலம் கடப்போம்