Published:Updated:

சர்வைவா - 17

சர்வைவா - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 17

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சீனாவின் AI கண்காணிப்புப் புரட்சிக்குக் காரணம் என்ன?

1 - கேமராக்கள் அதிநவீனமாக மாறியதும் மலிவு விலையில் கிடைக்கத்தொடங்கியதும் (360டிகிரியில்  HDதரம்,  Night Vision Etc) முக்கியமான காரணங்கள்.

2 - காட்சிகளைப் பதிவு செய்வதற்கான தொழில்நுட்பத்தில் வளர்ச்சி

3 -  Facial Recognition Techonlogy ஆராய்ச்சியில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

4 - படங்களை, காட்சிகளைப் பார்த்து அதிலிருப்பவற்றைப் புரிந்துகொள்கிற நியூரல் நெட்வொர்க்

ந்த நான்கிலும் சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் கில்லியாகவே இருக்கிறது. இருந்தாலும் சீனாவைப்போல கண்காணிப்பில் அமெரிக்கா தடாலடியாக இறங்கிவிடவில்லை. காரணம் தன் குடிமக்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்குமோ என்ற தயக்கம். கூடவே, கண்காணித்துச் சேகரிக்கும் தகவல்களில் கொஞ்சம் கசிந்தாலோ அல்லது தவறானவர்கள் கைகளுக்குச் சென்றாலோ எதிர்கொள்ளவிருக்கிற ஆபத்துகளைப் பற்றிய அச்சமும்கூட.

இருப்பினும் அமெரிக்கா தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்துகொண்டேயிருக்கிறது. காவல்துறையில் புதியவகை செயற்கை நுண்ணறிவுக் காவலன்களைப் பரிசோதித்துக்கொண்டுதானிருக்கிறது அமெரிக்கா. ஆனால் கொஞ்சமாக... எல்லாமே டெஸ்டிங் லெவலில்... மக்களுக்குச் சொல்லாமல்...

கல்லூரிகளில் பத்தாயிரம் பேர் கூடியிருந்தாலும் ஒரே ஒரு ஆளின் டிஷர்ட் வாசகங்களைக்கூடப் பதிவு செய்து வைக்கிற அளவுக்கு, அதிநவீன செயற்கை நுண்ணறிவு சிசிடிவி கேமராக்களை டென்னஸி பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் கல்லூரி மாணவர்களிடையே பரவும் போதைக் கலாசாரத்தைக் கண்காணிப்பது, அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால் கட்டுப்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்ய முடியும். .

சர்வைவா - 17

மனிதர்களின் அசைவுகளைப் படித்து, புரிந்துகொண்டு அவர்கள் வன்முறையில் அல்லது போதைமருந்துக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கண்டறியும் எந்திரக் கண்காணிப்பாளனை நியூஜெர்ஸியின் காவல்துறையில் பரிசோதித்துப்பார்க்கிறார்கள். 

மிக அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் டிரோன்களின் வழியே வீடியோ எடுத்து மக்களின் அசைவுகளைப் புரிந்துகொண்டு வன்முறைச் சம்பங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறதா என்று எந்திரங்களைக் கொண்டு பரிசோதிக்கிறார்கள். இவையெல்லாம் சாம்பிள்கள்தான். இவற்றைவிடவும் பல மடங்கு சக்திவாய்ந்த கண்காணிப்பு எந்திரங்களை அமெரிக்கா உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

சீனா மற்றும் அமெரிக்காவின் கண்காணிப்பில் அடிப்படையான வேறுபாடு ஒன்று உண்டு. தன் மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அரசை வீழ்த்திவிடுவார்களோ என அஞ்சுகிறது சீனா. அதை நோக்கியே கண்காணிப்பை முடுக்கி விடுகிறது. அமெரிக்காவுக்கு வன்முறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் இரண்டும்தான் பிரதான பிரச்னைகளாக இருக்கின்றன. அதை நோக்கியே தன் கண்காணிப்பு எந்திரங்களை உருவாக்குகிறது அமெரிக்கா.

ஆனால், சீன மக்களைப்போல அமெரிக்கர்கள் லேசுப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் மீது நிகழ்த்தப்படவிருக்கும் கண்காணிப்பு வன்முறையை அவர்கள் இப்போதே புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் ஏற்கெனவே சுதாரித்துக்கொண்டு மக்களை இந்த `சுயமூளை எந்திரங்கள்’ கொண்டு கண்காணிப்பதற்கு எதிராக விவாதங்களை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிநவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அமெரிக்கா பின்வாங்குவது அதனால்தான்.

சர்வைவா - 17


அமெரிக்காவில் இதற்காகச் சங்கமெல்லாம் வைத்துப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். Center for Democracy and Technology என்கிற அமைப்பு இதற்காகவே தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக AI மூலமாகக் கண்காணிப்புகள் மேற்கொள்வதை எதிர்த்துவருகிறார்கள். ``எந்திரக் கண்காணிப்பில் பின்பற்றவேண்டிய விதிகள் என எதுவுமே இல்லை. அதனால் இது ஆபத்தானது’’ எனப் போராடுகிறார்கள். உரிமையாளர்களைத் தவிர வேறுயாராலும் பயன்படுத்தவோ அதிலிருக்கிற டேட்டாக்களை ஹேக் பண்ணவோ முடியாது என்பதுதான் ஐ போனின் சிறப்பு. அதனால்தான் உலகெங்கும் ஐ போன்களுக்கான சந்தையே உருவானது. ஆனால், அமெரிக்கக் காவல்துறை சில மென்பொருள்களின் உதவியோடு `திருட்டுத்தனமாக’ ஐபோன்களை ஹேக் செய்துகொண்டிருந்தது. ஒட்டுக்கேட்கவும், தகவல்களைக் கண்காணிக்கவும் இதைச் செய்தது. விதிகளை மீறுபவர்களைவிட, விதிகளை உருவாக்குபவர்களுக்குத்தானே அதன் ஓட்டைகள் அதிகமும் தெரிந்திருக்கும். CDT அமைப்புதான் ஆப்பிள் நிறுவனத்திடம் இந்த விஷயத்தை எடுத்துச்சென்று காவல்துறையால் ஐபோன்களை நோட்டம்பார்க்க முடியாதபடி செய்தது.

அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும்கூட இந்த எந்திரக் கண்காணிப்புகளுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. அமெரிக்கர்களின் எதிர்ப்புணர்வுக்கு கூகுளே கட்டுப்பட்டு, ராணுவ புராஜெக்ட் ஒன்றையே வேண்டாம் என மறுத்திருக்கிறது.

எழு வேலைக்காரா...

சில வாரங்களுக்கு முன்பு, கூகுளில் வேலை பார்க்கும் 3000 பேர் ஒரு சிறிய போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்க அரசோடு சேர்ந்து கூகுள் செய்துகொண்டிருந்த ஒரு புராஜெக்ட்டுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம். போர் நடக்கும்போது, எதிரிகளின் இடங்களைத் தானாகவே தீர்மானித்துத் தாக்குகிற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான் இந்த புராஜெக்ட். இதன்மூலம் டிரோன்களின் உதவியோடு தொடர்ச்சியாக ஓர் இடத்தைக் கண்காணித்து, அந்த இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதைத் தானாகவே தீர்மானித்து எந்திரங்களே தாக்குதல் நடத்தும். இதில் கூகுள் மட்டுமல்ல, மைக்ரோசாப்ட், அமேசான் என முன்னணி நிறுவனங்கள் பலவும் இருக்கின்றன. ஆனால் கூகுள் தொழிலாளர்கள்தான் முதன்முதலாக இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். 11பேர் வேலையிலிருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து கூகுள் தலைவர் சுந்தர்பிச்சைக்குக் கடிதம் எழுதினர். ‘கூகுள் போர் சார்ந்த வியாபாரங்களில் ஈடுபடக்கூடாது’ எனத் தொழிலாளிகள் வலியுறுத்தினர். இதையடுத்து பென்டகனின் ராணுவத் தளவாட ஆராய்ச்சிகளிலிருந்து விலகிக்கொண்டது கூகுள்.

சர்வைவா - 17

‘The Rise of Big Data Policing: Surveillance, Race, and the Future of Law Enforcement’ என்ற நூல் இந்த விஷயத்தில் மிகமுக்கியமானது. அந்த நூலின் ஆசிரியரான ஆன்ட்ரூ பெர்கூசன் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்கிறார்.

“உலகெங்கும் கோடிக்கணக்கான செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட கண்காணிப்பு எந்திரங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அவை நாளுக்கு நாள் மலிவு விலையில், யாருக்கும் கிடைக்கும்படி உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த நம்மிடம் போதுமான சட்டங்கள் இல்லை. தேசிய அளவில் இதுகுறித்த விவாதங்களை இப்போதே தொடங்க வேண்டும். இல்லையென்றால் அதிகார வர்க்கத்துக்கு நம் அடுத்த தலைமுறை அடிமைகளாக இருக்கவேண்டியிருக்கும்.’’ என்கிறார்.

அமெரிக்கர்கள் இந்த அளவுக்கு அலெர்ட்டாக இருக்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?

ஒரு டெண்டர்

மிகச் சமீபத்தில் இந்திய அரசின் ‘Ministry of Information & Broadcast’ டெண்டர் ஒன்றை வெளியிட்டது. Broadcast Engineering Consultants India Limited ( BECIL) என்ற அரசு நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த டெண்டரின் நோக்கம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்குதல். குறிப்பாக இணையத்தில் இயங்குபவர்களைக்் கண்காணித்து அதன்மூலமாக கணிப்புகளை உருவாக்குவது. AI-powered predictive analysis tool. 

இந்தியக் குடிமகன்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள், ஃபேஸ்புக்கில் என்ன பதிவு செய்கிறார்கள், ட்விட்டரில் எதை டிரெண்ட் செய்கிறார்கள், அவர்களுடைய விருப்பமான தலைவர் யார், விருப்பமான கொள்கை எது... அவர்கள் எதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.... யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்... இப்படி இந்தக் கண்காணிப்பு அமைப்பின் நோக்கங்கள் நீள்கின்றன. இதன்மூலம் இந்திய அரசு ஒட்டுமொத்த இந்தியர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும்.

இது வெறும் கணிப்புகளை மட்டும் செய்யக்கூடிய எந்திரமாக இருக்காது, கூடவே வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இனி எதிர்காலத்தில் தேசநலனுக்கு விரோதமாக ‘சமூக விரோதிகள்’ யாராவது இயங்குகிறார்களா என்பதையும்கூடக் கண்காணித்துச் சொல்லவேண்டுமாம்... டெண்டரிலேயே இருக்கிறது.  “historical data to identify potential risks.”

இது இந்திய ஜனநாயகத்திற்கே எதிரானது என்று சொல்லப்பட்டாலும், அரசு இந்த எந்திரத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கிறது. நிச்சயமாக அப்படி ஓர் எந்திரம் வந்தே தீரும். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரானதாகவே இருந்தாலும்...  இது வரப்போகிறது...

இதுமட்டுமல்ல இந்தியமக்களே… இன்னும் நிறையவே வருகின்றன...

- காலம் கடப்போம்