Published:Updated:

ஃபேஸ்புக்ல குவிஸ் விளையாடுறீங்களா? இந்த 7 விஷயத்தை மறக்காதீங்க!

ஃபேஸ்புக்ல குவிஸ் விளையாடுறீங்களா? இந்த 7 விஷயத்தை மறக்காதீங்க!
ஃபேஸ்புக்ல குவிஸ் விளையாடுறீங்களா? இந்த 7 விஷயத்தை மறக்காதீங்க!

ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டை இன்னொருவர் திருடினாலோ, ஹேக் செய்தாலோதான் பிரச்னை என நினைப்போம். ஆனால், இதுதவிர வேறு வழிகளிலும் நமக்கு பிரச்னைகள் காத்திருக்கின்றன.

ன்றைய டிஜிட்டல் உலகத்தில் திருட்டு என்பது பணம், பொருளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் தகவல்களை உங்களுக்குத் தெரியாமல் பிறருக்குப் பகிர்வதும், அதைப் பயன்படுத்தி உங்களிடம் இருந்து மறைமுகமாகப் பலன்களை எதிர்பார்ப்பதும் கூட திருட்டுதான். பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் இதைப்போன்ற திருட்டுகளில் இருந்து முடிந்தளவு உங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த 7 விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்.

குவிஸ் (Quiz) மற்றும் மற்ற விளையாட்டுகளில் சிக்காதீர்கள் 

மூன்றாம் தரப்பு தளங்களாகக் கருதப்படும் இந்த பர்சனல் Quiz மற்றும் "Which Celebrity do you resemble?" போன்ற விளையாட்டுகளில் பெரிதாக ஈடுபடாதீர்கள். இவற்றுள் பல உங்களிடம் அனுமதி கேட்டு ஃபேஸ்புக்கிடம் தகவல் பெற்று அதைக்கொண்டுதான் உங்களுக்கு விடைகளை அளிக்கும். சிறிய ஆவலைத் தூண்டும் ஒரே காரணத்துக்காக இதைப்போன்ற தளங்களிடம் உங்கள் தகவல்களை தருவது நல்ல விஷயமா என்பதை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக்குடன் லிங்க் ஆகியிருக்கும் ஆப்-களை அவ்வப்போது கண்காணியுங்கள்

லாகின் செய்வது போன்ற பல செயல்களுக்காக உங்கள் ஃபேஸ்புக் கணக்கை லிங்க் செய்யுமாறு பல தளங்களும், ஆப்-களும் கேட்பதுண்டு. நாமும் எந்த ஓர் எச்சரிக்கையும் இன்றி கடகடவென லிங்க் செய்து அந்த தற்காலிக வேலையை முடிப்போம். பின்பு அதை அப்படியே விட்டுவிடுவோம். இதற்கு முன்பு உங்களிடமே எந்தெந்த தகவல்களைப் பெறப்போகிறோம் என்பதைக் கூறி ஒப்புதலும் வாங்கிவிடும் இந்த தளங்கள். நாமும் என்னவென்று பார்க்காமலேயே ஒப்புதல் அளித்துவிடுவோம். இதன்மூலம் உங்கள் தகவல் தேவையில்லாத ஒரு தளத்திடம் சென்றுகொண்டே இருக்கும். எனவே, இதுவரை லிங்க் ஆனவற்றை ஆராய்ந்து சந்தேகத்திற்குரியவற்றை உடனே நீக்குங்கள். இதற்கு ஃபேஸ்புக் செட்டிங்ஸ் சென்று அதில் இருக்கும் 'Apps and Websites' பகுதிக்குச் செல்லவும் அங்கே லிங்க் ஆகியிருக்கும் ஆப் மற்றும் இணையதளங்களின் பட்டியல் இருக்கும். இதில் தேவையில்லாதவற்றை உடனடியாக நீக்கிவிடவும்.

போஸ்ட் ப்ரைவசி செட்டிங்ஸ் 

இயல்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் 'Public'-ல் தான் இருக்கும். இதை உலகின் எந்த இடத்தில் இருக்கும் யார் நினைத்தாலும் பார்க்கமுடியும் பயன்படுத்தமுடியும். எனவே, குறிப்பிட்ட மக்கள் மட்டும் பார்க்கும் 'Only Friends'-க்கு உங்கள் போஸ்ட் ப்ரைவசியை மாற்றலாம். இதனால் நண்பர்களாக இருப்பவருக்கு மட்டும்தான் உங்கள் பதிவு தெரியும். மற்றவர்களுக்கு உங்கள் பர்சனல் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வளவு எளிதில் செல்லாது.

லாகின் அலெர்ட் 

எந்த ஒரு புது சாதனத்தில் இருந்தும் லாகின் செய்யும்போது உங்களுக்கு அலெர்ட் வரும்வகையில் செட்டிங்ஸை மாற்றமுடியும். இதற்கு செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் 'Security' பிரிவுக்குச் செல்லவும். அதில் Login Settings> Settings> Get alerts about unrecognized logins-க்கு சென்று எந்த சாதனத்தில் அலெர்ட் வர வேண்டும் என்பதை செட் செய்து சேவ் செய்தால் புதிய சாதனங்களில் இருந்து வரும் லாகின்களுக்கு உங்களுக்கு அலெர்ட் வரும். இதனால் லாகின் செய்வது நீங்கள் இல்லையென்றால் உடனடியாக சுதாரித்துவிடமுடியும்.

லொகேஷன் தகவல்களைத் தவிர்க்கவும் 

சாதாரணமாகப் பதிவு செய்யும்போது உங்களின் இருப்பிடத்தை அதனுடன் சேர்த்தே பதிவிடும் ஃபேஸ்புக், ஆனால், எப்போதும் எங்கே இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பதும் நல்லதல்ல. எனவே, எப்போது வேண்டுமோ அப்போது மட்டும் இருப்பிடத்தைச் சேர்த்து மற்ற நேரங்களில் அவை பதிவாகாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

முக்கிய தகவல்களைப் பாதுகாத்திடுங்கள்

உங்களது வயது, மொபைல் எண், முகவரி போன்றவற்றை எல்லாருக்கும் தெரியும்வகையில் public-ல் வைக்கவேண்டாம். அதை Private அல்லது Only Friends போன்ற பிரைவசியில் வைக்கவும். இதன்மூலம் உங்கள் தொடர்பு தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

சந்தேகத்துக்குரிய கணக்குகளை ப்ளாக் செய்யுங்கள் 

தெரியாத நபர்களை ஃபேஸ்புக்கில் நண்பராக்குவதால் லைக்ஸை தாண்டி பெரிதாக எந்த ஒரு பயனும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், தீமைகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, இதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. மேலும் நண்பர்கள் கணக்கிலிருந்து விநோதமான நடவடிக்கைகள் தெரிந்தால் உடனே அவரிடம் தொடர்புகொண்டு என்னவென்று கேளுங்கள். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்றால் உடனடியாக ப்ளாக் செய்யுங்கள். ஹேக் செய்யப்பட்ட கணக்கில் இருந்தே மற்ற கணக்குகள் பெரும்பாலும் ஹேக் செய்யப்படுகின்றன. குறிப்பாக நீங்கள், அதிகம் குவிஸ், கேம்ஸ் விளையாடுபவராகவோ அல்லது லாகின்களுக்கு அதிகமாக ஃபேஸ்புக் ஐடியை பயன்படுத்துபவராகவோ இருந்தால் ஃபேஸ்புக் பாதுகாப்பை மீண்டுமொருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முடிந்தவரை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தமுடியும். மேலும் இருக்கும் மற்ற செட்டிங்ஸையும் ஆராய்ந்து பாருங்கள். இதைத்தாண்டியும் உங்களது தகவல்கள் திருடப்பட்டால் அதற்கு ஃபேஸ்புக் மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

அடுத்த கட்டுரைக்கு