காதலிக்கு மெசேஞ்சர்களில் நீங்கள் அனுப்புகிற ‘Muaxxxxx’களில் தொடங்கி காதலிகள் உங்களுக்கு அனுப்புகிற  ‘Poda panni’கள் வரை எல்லாவற்றையும் இந்திய அரசின் AI எந்திரங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அல்லது பார்க்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.

நம்முடைய மின்னஞ்சல், குறுஞ்செய்தி, செல்போன் அழைப்புகள், பகிர்கிற ஃபார்வர்டுகள் எல்லாமே அரசுக்குத் தெரியும். சீனா தன் நாடு முழுக்க கேமரா கண்களைப் பொருத்தியிருக்கிறதென்றால் இந்தியா இணையம் முழுக்க  AI நெற்றிக்கண்களை வைக்கப் பார்க்கிறது. ஏன்... இந்த அரசே ஆன்லைன் பிரசாரத்தால் ஆட்சியைப் பிடித்த அரசுதானே. கத்தி எடுத்தவனுக்கு... கத்திதானே அச்சம் தரும்!

நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் இனி எந்திரங்களால் கண்காணிக்கப்படுவோம். அதன் முதலடிதான் ஆதார். அதன் மூலம் நாம் செய்துகொண்டிருப்பது நேரடியான Machine empowerment தான்.

உங்கள் மனைவியைவிட, உங்கள் கணவரைவிட, பெற்றோரைவிட இந்திய அரசின் அறிவுள்ள எந்திரங்களுக்கு உங்களைப்பற்றி அதிக விஷயங்கள் தெரியும். உங்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது, நீங்கள் எங்கே பயணிக்கிறீர்கள், உங்களுடைய கடன் எவ்வளவு, கடன் அட்டையை எதற்காகத் தேய்த்தீர்கள், செல்போனில் யாரிடம் அதிகமாகக் கடலை போடுகிறீர்கள்... எல்லாமே தெரிந்தவர் இந்திய அரசின் சர்வரேசன்தான்.

இந்த  AI கண்காணிப்புக்காகச் சமீபத்தில் ஒரு டென்டரை விட்டது இந்திய அரசு. அதைப்பற்றிப் போன வாரம் பார்த்தோம். அது புதிய புராஜெக்ட். சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட பழைய புராஜெக்ட் ஒன்று இந்த ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதுதான் இந்தியாவின் மிகப்பெரிய  Mass surveillance project... பெயர்  Central Monitoring System. ஷார்ட்டா CMS. நம் பிரைவஸிக்கு வேட்டு வைக்கிற எத்தன்!

சர்வைவா - 18

வல்லவன் ஒருவன்

அமெரிக்க PRISMன் இந்திய வெர்ஷன்தான் CMS. ஙே. PRISMனா என்ன?! அமெரிக்கர்களின் ஆன்லைன் விஷயங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே உளவு பார்க்கிற அமைப்புதான்  PRISM. அதையேதான் இந்தியாவும் செய்யப்போகிறது. கூடவே நம் செல்போன்களையும் சேர்த்துக் கண்காணிக்கப்போகிறது. ஒட்டுமொத்த நாட்டையும் கண்காணிக்கும் ஒரே மைய எந்திரம்.

2009ல் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அநேகமாக இந்த மாதமோ, அடுத்த மாதமோ இது வேலையைத் தொடங்கிவிடும் என்கிறார்கள். ஆன்லைனில் தும்மினாலும் அரசு எந்திரம் நோட் பண்ணிக்கொள்ளும். ஆனால் இன்றுவரை இந்தத் தகவல்களை மத்திய அரசின் எந்தெந்தத் துறைகள் பெறப்போகின்றன, என்ன மாதிரியான மனிதர்கள் கண்காணிக்கப்படப்போகிறார்கள், இந்தத் தகவல்களை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள்... எதுவுமே தெரியாது. ஆனால் அரசு கண்காணிக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை. இனி உங்கள் ஒவ்வொரு என்டர் அழுத்தல்களையும் அரசு பார்க்கும்.

``இதில் வெறும் கண்காணிப்பு மட்டும்தான் பண்ணப்போகிறார்களா, அல்லது வேறு எதுவுமா என்பதில் தெளிவே இல்லை. குடிமக்களுக்கு அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.’’ இப்படிப் பேசி ஏற்கெனவே போராட்டத்திற்குத் தயாராகிவிட்டது டாக்டர் அஞ்சா கோவாக்ஸ் தலைமையிலான  Internet democracy project என்ற ஒரு குரூப். அமெரிக்கா போல இந்திய அரசு இந்த எதிர்ப்புக்கெல்லாம் காது கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. எதிர்ப்பவர்களை டுப்பு டுப்பு என டுமீலலாம்.

தொழில்நுட்பத்தை அரசைவிட, மக்களை விட கிரிமினல்களும் தீவிரவாதிகளும்தான் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆன்லைன் கண்காணிப்பு என்பது நிச்சயம் அவசியம். ஆனால் காவல்துறையிலேயே கட்டிங் கொடுத்தால்தான் காரியம் நடக்கும், க்ரைம் எதுவாக இருந்தாலும் அப்பாவிகள்தான் முதல் பலியாடுகள் என்கிற மாதிரி அன்றாட வழக்கங்கள் உள்ள ஒரு நாட்டில் எந்திரக் கண்காணிப்பு முறையெல்லாம் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 18

பெங்களூருரைச் சேர்ந்த  Centre for internet and Security அமைப்பின் சுனில் அபிரகாம் இதுமாதிரியான தவறான கணிப்புகளுக்கு எதிராகத்தான் போராடிக்கொண்டிருக்கிறார்!  Target Surveillence களைவிட இதுமாதிரியான மாஸ் கண்காணிப்புகளில் தவறுகள் நேர அதிக வாய்ப்பிருக்கிறது. சின்னப் பிசகு என்றாலும் நாளைக் காலை உங்களைத் தேசத்துரோக வழக்கில் உள்ளே தள்ளலாம் என்பது அவருடைய பார்வை.

இருப்பதிலேயே CMS ஆல் வரக்கூடிய பெரிய ஆபத்து என இந்தப் போராட்டக்காரர்கள் கருதுவது,  DATA Breach. இன்று தொழில்கள் எல்லாமே ஆன்லைன் மயமாகிக்கொண்டிருக்கிற காலத்தில் மனிதத் தகவல்கள் என்பது சாதாரண விஷயமில்லை. நிறுவனங்கள் இந்தத் தகவல்களுக்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருக்கும்போது பொதுவில் ஒட்டுமொத்தத் தகவல்களையும் திரட்டுவதன் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். லட்சக்கணக்கானவர்களின் ஆதார் தகவல்களையே ஆயிரம் ரூபாய்க்கு அள்ளிக்கொடுத்த நாடு நம்முடையது.

நம்மகிட்டயும் இருக்கு!

இதுபோக, இந்தியா முழுக்க எல்லாப் பகுதிகளையும் சிசிடிவி கேமரா கண்காணிப்பிற்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது அரசு. ஆனால் இப்போதைக்கு நம் கேமராக்களுக்குக் கண்பார்வை கிடையாது. அது பதிவு செய்கிற அத்தனை காட்சிகளும் குற்றம் நடந்தபிறகு அதைச் செய்தவர், செய்யப்பட்ட விதம் தெரிந்துகொள்ளவே உதவுகின்றன.

சீனாவின் அறிவுள்ள கேமராக்களைப்போல நம் சிசிடிவி கேமராக்களால் காட்சிகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நம்மிடமும் அந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது. பெங்களூரைச்  சேர்ந்த  Uncanny vision என்ற நிறுவனம், அத்தகைய காட்சிகளைப் புரிந்துகொள்ளும் ­AI சிசிடிவி கேமராக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏடிஎம்களில் பணம் எடுக்க வருகிற ஒருவர் பணத்தை மட்டும் எடுக்காமல் எடிஎம் எந்திரத்தையே உடைக்க முயற்சி செய்தால் அதைப் பார்த்துப் புரிந்துகொண்டு எச்சரிக்கக்கூடியது இந்க்த கேமரா. டிராஃபிக்கில் ஒரு கார் தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்துகிறது, அல்லது ஒரு பைக் தொடர்ந்து ராஷ் டிரைவிங்கில் ஈடுபடுகிறது என்றால் அதைப் புரிந்துகொண்டு உடனடியாகக் காவல்துறையை எச்சரிக்கும் இந்தக் கேமரா. இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி புராஜெக்ட்களில் இந்தக் கேமரா முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறது கம்பெனி தரப்பு. சீனாவிடம் மட்டுமல்ல நம்மிடமும்  FACE++ பாணி தொழில்நுட்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே சீன பாணியில் நம் அரசுகளும் நம்மை ஸ்மார்ட்டான முறைகளில் கடுங்கண்காணிப்புக்கு உட்படுத்தலாம்.

இப்போதைக்கு இவ்ளோதான்

 ``நாம் இப்போது ஏராளமான பகுப்பாய்வுகளை (Analytics) மேற்கொண்டுவருகிறோம். அதன் அடுத்தகட்டம் செயற்கை நுண்ணறிவோடு கைகோப்பதுதான். அதைப் பொறுமையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இப்போதைக்கு எல்லாமே பரிசோதனை முயற்சி அளவில்தான் இருக்கின்றன!’’   Ministry of Electronics and Information Technology-ன் கூடுதல் செயலாளராக இருந்த அஜய்குமார் சென்ற ஆண்டின் இறுதியில் கொடுத்த தகவல் இது.

இந்திய அரசைவிட இந்தியாவின் தனியார் நிறுவனங்கள்தான் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைக்கொண்டு நம்மை அதிகமும் உளவு பார்க்கின்றன. அதையெல்லாம் கட்டுப்படுத்துகிற முயற்சிகளில்தான் இப்போதைக்கு இந்திய அரசு மும்முரமாக இருக்கிறது.

குறிப்பாக ஃபேஸ்புக், அமேசான், கூகுள் மாதிரி பெருந்தலைகள் எல்லாம் நம்மை 360டிகிரியில் உளவு பார்க்க, அதைத் தட்டிக்கேட்க சட்டதிட்டங்கள் இல்லாமல் விண்டோஸ் XP காலத்துச் சட்டங்களையே புரட்டிக்கொண்டி ருந்தோம். இப்போதுதான் ஓய்வுபெற்ற நீதிபதியான எஸ்.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை அமைத்துத் தகவல் ஒழுங்குமுறைச் சட்டங்களை (Data-privacy Law) தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறது அரசு. அமெரிக்காவின் நடக்கிறபடி நடக்கட்டும் Laissez-faire பாணியும் இல்லாமல், ஐரோப்பாவின் கடுமையான GDPR பாணியும் இல்லாமல் இரண்டுக்கும் இடையே மையமாக ஒரு தீர்வை ஸ்ரீகிருஷ்ணா உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

சர்வைவா - 18

சீனாவுக்கு எதிர்ப்புக்குரல்கள், அமெரிக்கா வுக்கு உள்ளூர் வன்முறைபோல இல்லாமல் இந்தியாவின் கவனம் காசு விஷயத்தில்தான் இருக்கிறது. நமக்கு அதுதானே முதல் பிரச்னை. அதனால் முதல்வேலையாக கைகளில் இருக்கிற தகவல்களை வைத்துக்கொண்டு வங்கிகள் மற்றும் வருமானவரித்துறையில்தான் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் மருத்துவம், இணையப் பாதுகாப்பு முதலான வேலைகள் எல்லாம். செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. எந்தெந்த வங்கிக்கணக்குகளில் கறுப்புப்பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கணிக்க இந்த மென்பொருள்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்திய எந்திரங்களைப்போலவே இந்த மென்பொருளும் ஸ்லோதான்போல.

முப்படைகளிலும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இவ்வகை எந்திரங்கள் மனித இழப்புகளைப் பெருமளவில் தவிர்க்க உதவும். கூடவே கண்காணிப்பையும் துல்லியமாக்கும் என இந்திய அரசு நம்புகிறது. அதனால்தான்  DRDO இவ்வகை ஆராய்ச்சிகளுக்கென அதிக காசு ஒதுக்கி மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆளில்லா டாங்கிகள், ஆளில்லாப் போர் விமானங்கள், தானியங்கி ரோபாட்டிக் ரைபிள்கள்,  Unmanned vessels,  என விதவிதமான ஆயுதங்களோடு அப்டேட் ஆகும் முயற்சிகள் நடக்கின்றன.

உண்மையில் போர்த் தளவாட விஷயத்தில் இந்தியா இப்போதுதான் கின்டர் கார்டன் குழந்தை. சீனாவும் அமெரிக்காவும் செய்துகொண்டிருப்பதெல்லாம் அடல்ட் ஒன்லி கன்டென்ட். அவற்றையெல்லாம் பின்னால் பார்ப்போம். செயற்கை நுண்ணறிவுத்துறையில் இப்போதைக்கு இவ்வளவுதான் இந்திய அரசு அப்டேட்.

செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பு எந்திரங்களை அரசுகள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன என்பதைப் பார்த்தோம். நாம் வேலை பார்க்கும்அலுவலகங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன என்பது அடுத்தவாரம்.

ஏன்னா... சீக்கிரமே எந்திர HRகள் நம்மை இன்டர்வியூ பண்ணப்போகிறார்கள்...

 Dear Human, Tell me about yourself?

- காலம் கடப்போம்