Published:Updated:

அமெரிக்காவில் நடந்த `டிஜிட்டல் வோட்டிங்'... எதிர்காலத் தேர்தல்கள் இனி இப்படித்தானா?

அமெரிக்காவில் நடந்த `டிஜிட்டல் வோட்டிங்'... எதிர்காலத் தேர்தல்கள் இனி இப்படித்தானா?
அமெரிக்காவில் நடந்த `டிஜிட்டல் வோட்டிங்'... எதிர்காலத் தேர்தல்கள் இனி இப்படித்தானா?

இந்த மொபைல் வாக்களிப்பு ஆப் ப்ளாக்செயின் என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இந்தத் தொழில்நுட்பம் இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் முன்னணி தொழில்நுட்பம். பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள், இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகின்றன.

மெரிக்காவின் நாடாளுமன்ற மற்றும் செனட் அவைகளுக்கான இடைத்தேர்தல் (Midterm elections) கடந்த வாரம் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் புதிதாக, கிழக்கு விர்ஜினியா மாகாணத்தில் மட்டும் ஊரில் இல்லாதவர்களுக்கு மொபைல் வாக்களிப்பு முறை கொண்டுவரப்பட்டது. இந்த மொபைல் முறையில் சுமார் 150 வாக்குகள் வரை பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது எப்படிச் செயல்படுத்தப்படுகிறது, இதன் நிறைகுறைகள் என்ன, இது மற்ற நாடுகளுக்கும் சென்று சேருமா என்பவற்றை விரிவாகப் பார்ப்போம்.

எப்படி நடக்கிறது இந்த மொபைல் வாக்களிப்பு?

இதற்கு முன்னதாகவே முதன்மைத் தேர்தல்களில் இதை இரண்டு மாவட்டங்களில் சோதனையிட்டிருந்தது கிழக்கு விர்ஜினியா மாகாண அரசு. சுமார் 13 பேர் இந்த முறையில் வாக்களித்து அதில் கிடைத்த முடிவுகள் எந்த ஒரு சிக்கலுமின்றித் திருப்திகரமாக இருந்ததால், இம்முறை அதை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இப்படி மொபைல் மூலம் வாக்களித்தவர்கள் பெரும்பாலும் ராணுவம் அல்லது சமாதானப் படையைச் சேர்ந்தவர்களே. `Voatz' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ஆப் மூலம் வாக்களிக்க வழிசெய்யப்பட்டிருந்தது. 

முன்பு இப்படி நேரில் வர முடியாதவர்களுக்குத் தபால் வாக்குப்பதிவு (Absentee Ballot) தான் அமலில் இருந்தது. இது எளியமுறைதான் என்றாலும் இதைச் செய்ய எடுத்துக்கொள்ளப்படும் நேரம் அதிகம். ஆனால் இந்த மொபைல் வாக்குப்பதிவுமுறை அப்படியில்லை. இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். மொபைல் நம்பரைக் கொடுத்து முதலில் பதிவுசெய்ய வேண்டும். பின்பு 8 இலக்க எண் ஒன்றைப் பின் நம்பராக செட் செய்ய வேண்டும். பின்பு வாக்காளரின் அடையாளத்தை உறுதிசெய்ய சில வழிமுறைகள் பின்பற்றப்படும். முதலில் ஓட்டுநர் உரிமத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்ற வேண்டும். பின்பு அந்த ஆப் சொல்வது போல முகத்தை வீடியோ எடுக்கவேண்டும். அதை ஆப்பிளின் Face ID போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு அரசின் தளத்தில் இருக்கும் வாக்காளர் போட்டோவுடன் ஒப்பிட்டுப் பார்த்து அது நீங்கள்தானா எனச் சரிபார்க்கப்படும். இந்த வழிமுறைகளில் பாஸ் ஆகிவிட்டால் போதும். பின்பு வாக்களிக்கும்போது மட்டும் Face ID யோ அல்லது ஃபிங்கர்பிரின்ட் மூலமோ உங்கள் அடையாளத்தை ஒரு முறை உறுதிசெய்து வாக்கைப் பதிவுசெய்யலாம். இறுதியில் இந்த வாக்குகள் எல்லாம் நம்மூரில் தேர்வுகளுக்குப் பயன்படுத்தும் OMR போன்ற ஒரு சீட்டில் பிரின்ட் செய்யப்பட்டு ஒரு ஸ்கேன் மெஷினுக்குள் அனுப்பப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

தொழில்நுட்பப் பின்னணி 

இந்த மொபைல் வாக்களிப்பு ஆப் ப்ளாக்செயின் என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இந்தத் தொழில்நுட்பம் இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படும் முன்னணி தொழில்நுட்பம். பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்துகின்றன. இதை எளிதாக விளக்கவேண்டுமென்றால் இதில் சாதாரணமாகச் செல்வது போல் ஒரு தகவல் ஒரே வழியில் செல்லாது. இது ப்ளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு peer-to-peer நெட்ஒர்க் (இதில் சர்வர் என்று ஒரு தனி சிஸ்டமே இருக்காது) மூலம் பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு மீண்டும் பெறப்படும். ப்ளாக்குகளுக்கிடையே இருக்கும் தொடர்புகள் அனைத்து ப்ளாக்கிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவேதான் இந்த ப்ளாக் செயின் என்ற பெயர். இதில் பதிவான தகவல்களை மாற்றியமைப்பது என்பது நடக்காத காரியம். எனவே இந்த மொபைல் வாக்களிப்பு என்பது வெறும் ட்ரெண்ட்டுக்காக அல்லாமல் வருங்காலத்தை மனதில் வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாக்களிப்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றிய முழுமையான அறிக்கையையும் விரைவில் வெளியிடவுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தென்ன?

உலகம் முழுதும் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கே எதிர்ப்புகள் வலுவாக இருக்கும் இவ்வேளையில் இந்த மொபைல் வாக்களிப்புக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? இந்தத் தேர்தல்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாது எனக் குற்றம்சாட்டுகின்றனர் இதை எதிர்ப்பவர்கள். இதனால் தேர்தல்முறையின் மீதே நம்பிக்கை இழக்க நேரிடலாம். அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே இன்னும் வாக்குச்சீட்டு முறைதான் அங்கு பின்பற்றப்படுகிறது. 2010-ம் ஆண்டு கூட அமெரிக்க அரசு ஆன்லைன் வாக்குப்பதிவு முறையின் டெமோ ஒன்றை நிகழ்த்தியபோது தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் அதை ஹேக் செய்துகாட்டியிருந்தனர். அதனால் இன்னும் பலருக்கும் தற்போது வந்துள்ள இந்த மொபைல் வாக்குப்பதிவு முறையிலும் முழு நம்பிக்கை வரவில்லை என்பதே உண்மை.

படம்: அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு

மின்னணு வாக்குச் சாதனங்கள் கூட ஆன்லைனில் கனெக்ட் செய்யப்பட்டிருக்காது. பாதுகாப்பான இடத்தில் எந்தவோர் இணைப்பும் இல்லாமல்தான் இருக்கும். ஆனால் மொபைல்களோ எந்நேரமும் இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு சாதனம். இதனால் எளிதாக ஆபத்துக்குள்ளாகின்றன மொபைல்கள். வாக்காளருக்கே தங்கள் மொபைல் பாதுகாப்பாக இல்லாதது பல நேரங்களில் தெரியாது. இதை ஆதரிப்போர் பணப்பரிவர்த்தனைகள்  செய்யும் அளவுக்கு இப்போது மொபைலிலேயே பாதுகாப்பு நடைமுறைகள் வந்துவிட்டன என்று கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முறை என்பது மொத்தமாக வேறானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளமறுக்கின்றனர். தேர்தலில் உங்கள் வாக்கு மட்டுமே பதிவாகும், உங்கள் தகவல்கள் எதுவுமே பதிவாகக் கூடாது. அதுதான் அடிப்படை. ஆனால் பணப் பரிவர்த்தனைகள் அப்படியில்லை. இதனால் ஏதேனும் இதில் மோசடிகள் நடந்தால் மறுபரிசோதனை என்ற ஒன்றே இல்லாமல் போகிறது. ப்ளாக்செயின் பாதுகாப்பானதாக இருந்தாலும் அதைப் பற்றிய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பற்றி முழுமையாக விளக்கத் தவறியுள்ளது அந்த நிறுவனம். எப்படியும் ப்ளாக்செயினுக்குத் தகவல்கள் செல்வதற்கு முன்பே அத்தனை பிரச்னைகள் இருக்கின்றன. வாக்காளரின் லாகின் தகவல்கள் ஹேக் செய்யப்படுவது தொடங்கிப் பல சிக்கல்கள் இருக்கின்றன. வாக்களித்த பிம்பத்தை ஏற்படுத்தி இன்னொருவர் வாக்களித்தால் கூட வாக்காளருக்கு அது தெரியாது. 

இப்படிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். எனவே அமெரிக்கா செய்துவிட்டது, நாமும் செய்வோம்; டிஜிட்டல் காலம் என்றெல்லாம் அவசரப்படாமல் பிற நாடுகள் இதில் பொறுமைகாத்து பிரச்னைகள் என்னவென்று கண்காணித்து அதற்குத் தீர்வுகள் என்னவென்று பார்த்து, பின்னர் பொறுமையாக இதை நடைமுறைப்படுத்தலாம். அமெரிக்காவே தற்போது சோதனை ஓட்டமாகத்தான் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லாச் சோதனைகளிலும் பாஸ்மார்க் பெற்றே இருக்கிறது இது. இந்தத் தொழில்நுட்ப விவாதங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும், ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்றும் ஆதரவுக்குரல்கள் வருகின்றன. இன்னும் இதில் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு