Published:Updated:

ஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி!

ஷியோமியின் ஃபிளாஷ் சேல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். ஆனால், பிரிட்டனில் அதே ஃபிளாஷ் சேல் ஷியோமிக்குப் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி!
ஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி!

பிரிட்டனில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஷியோமி நிறுவனம் செய்த விளம்பரத்தால் அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற வசதிகளைத் தருவதில் ஷியோமியை விட்டால் வேறு ஆள் கிடையாது. அந்த ஒரு காரணத்துக்காகவே பல நாடுகளின் சந்தைகளில் கொடி கட்டிப் பறக்கிறது ஷியோமி நிறுவனம். ஷியோமி நிறுவனம் ஒவ்வொரு முறை புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும்போதும் அதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அதை வாங்கும்போதுதான் அதில் இருக்கும் சிக்கல் தெரியவரும். அந்தப் போனை உடனடியாக வாங்கிவிட முடியாது. எப்பொழுது போய் பார்த்தாலும் அவுட் ஆஃப் ஸ்டாக்கிலேயே இருக்கும் அந்த ஸ்மார்ட்போன். அதன்பிறகு அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். தற்பொழுது அதேபோல ஒரு அவுட் ஆப் ஸ்டாக் விஷயத்தில்தான் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது ஷியோமி.

ஃபிளாஷ் சேலா...கிரேஸி சேலா குழப்பிய ஷியோமி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷியோமி தொடங்கப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளாகவே மொபைல் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சமீப காலமாக தனது சந்தையை உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 8-ம் தேதி பிரிட்டனில் தனது தயாரிப்புகளை புதிதாக அறிமுகப்படுத்தியது. அதைக் கொண்டாடும் வகையில் சில ஆபர்களையும் அறிவித்திருந்தது. அதில் ஒன்றுதான் 'கிரேஸி டீல்ஸ்' என்ற சிறப்பு விற்பனை மூலமாக 1  பவுண்ட் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் என்பது. 1 பவுண்ட் என்றால் இந்திய மதிப்பில் சுமார்  90 ரூபாய். அந்த விலையில் ஸ்மார்ட்போன் என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா? எனவே, இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியது மட்டுமின்றி மக்களிடையே எதிர்பார்ப்பும் எகிறியது. ஆனால், 9-ம் தேதி குறிப்பிட்ட விற்பனை நேரத்தில் மக்கள் ஷியோமியின் பக்கத்தை அணுகி வாங்க முயற்சிக்கும்போது அவர்களுக்குக் கிடைத்த பதில் 'அவுட் ஆஃப் ஸ்டாக்' என்பதுதான். இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சிலருக்கு இதில் ஏதோ முறைகேடு நடந்திருப்பதாகத் தோன்றவே ஷியோமியின் இணையப் பக்கத்தின் 'சோர்ஸ் கோடை' பரிசோதித்தபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

ஃபிளாஷ் சேலுக்காக மொத்தமாகவே வெறும் 10 ஸ்மார்ட்போன்களை மட்டுமே அந்தப் பட்டியலில் கொடுத்திருந்தது ஷியோமி. அதன்படி பார்த்தால் எத்தனை பேர் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு அணுகினாலும் பத்து பேருக்கு மட்டுமே மொபைல் கிடைக்கும். மற்றவர்களுக்கு out of stock என்ற தகவலே காட்டப்படும். இந்தத் தகவல் வெளியானதையடுத்து ஷியோமியின் சமூக வலைதளக் கணக்குகளை டேக் செய்து பலரும் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். மேலும், மக்களை ஏமாற்றிவிட்டதாகப் பல தரப்பினரும் ஷியோமி நிறுவனம் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஷியோமி

பிரிட்டனுக்கு ஷியோமி புதிது என்பதால் இந்தக் குற்றச்சாட்டு முதல் முறையாக எழுந்திருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்று சந்தேகம் எழுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது இதை உணர முடியும். 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது என்றால் அடுத்த நொடியே அதாவது 12.01 -க்கெல்லாம் அவுட் ஆஃப் ஸ்டாக் என்று காட்டப்படும். தங்கள் பொருளுக்குத் தேவை மிக அதிகமாக இருக்கிறது என்பது போன்ற போலியான தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற போலி விற்பனைகளை ஷியோமி நடத்துகிறது என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது இதனால்தான். ஆனால், பல முறை அதை மறுத்திருக்கும் ஷியோமி தாங்கள் நேர்மையாகவே இருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால், இந்த முறை பிரிட்டனில் விஷயம் கொஞ்சம் பெரிது என்பதால் பல தரப்பினரும் ஷியோமியைக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். எனவே, இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது ஷியோமி. அதில் ``இந்த விற்பனை முதலில் 'crazy deal' என்றே பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் 'Flash sale' என மாற்றம் செய்யப்பட்டது. அதனால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போலவே இங்கேயும் Flash sale என்றால் அதிக அளவிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என மக்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேநேரத்தில் குறிப்பிட்ட பத்து ஸ்மார்ட்போன்களும் அதை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 1 யூரோ என்ற விலையில்தான் அளிக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம். இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோரிக்கைகளை எங்கள் சிஸ்டம் பரிசீலனை செய்து அதில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்தது. அதே நேரத்தில் தெளிவற்ற அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஷியோமியின் இந்த விளக்கத்தைப் பலரும் ஏற்க மறுத்திருக்கிறார்கள். தற்பொழுது ஷியோமி அளித்திருக்கும் தெளிவான தகவல்கள் விற்பனைக்கு முன்பு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) பகுதியில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, விளம்பரங்களை முறைப்படுத்தும் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு விளம்பரத்தில் ஒரு பொருளைப் பற்றியும் அதன் விற்பனையைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பது விதிகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஷியோமி நிறுவனத்தின் மீது விளம்பரங்களை முறைப்படுத்தும் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.