அரவணைப்புவாதம் (Paternalism)

ஹென்றி ஃபோர்டு, ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய புரட்சிகளைச் செய்தவர். 1915 காலகட்டத்தில் அமெரிக்கச் சாலைகளை ஃபோர்டின் ‘­Model T’ கார்கள் நிரப்பிக்கொண்டிருந்தன. அந்த நேரத்தில் லட்சக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்றுக்கொண்டிருந்தார் ஃபோர்டு. நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு லாபம். அவருடைய பிரமாண்டத் தொழிற்சாலைகளில் 50,000 பேருக்கு மேல் பணியாற்றிக்கொண்டி ருந்தனர். 24மணிநேரமும் உற்பத்தி. 3 நிமிடத்தில் கைகளாலேயே ஒரு முழுக் காரை அசம்பிள் செய்யும் கடுமையான வேலை.

ஃபோர்டு கொஞ்சம் லோலாயான ஆள். தான் நம்புகிற விஷயத்தைப் பணியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பினார். ­அப்படிக் கடைப்பிடித்தால் நிறைய சலுகைகள் கொடுப்பார்.  அவர் சொல்வதைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு டபுள் சம்பளம், போனஸ், மருத்துவ உதவிகள், அகதிகளாக ஐரோப்பாவிலிருந்து வந்திருந்தால் குடியுரிமை பெறச் சட்ட உதவிகள் என நிறைய செய்துகொடுத்தார். ஆனால், அந்த விதிகளை மீறுகிறவர்க ளுக்குக் குறைந்த சம்பளமும் சலுகைகள் மறுப்பும் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.

சர்வைவா - 19

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், குடிப்பழக்கம் கூடாது, காதலுக்கு அனுமதி இல்லை, 22 வயதுக்கு மேலிருப்பவர்கள் கட்டாயம் திருமணம் செய்து மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தே ஆகவேண்டும், குழந்தைளை ஒழுங்காகப் பள்ளிக்கு அனுப்பவேண்டும், வீட்டிலும் தொழிற்சாலையிலும் கட்டாய ஆங்கிலம், ஆங்கிலம் தெரியாமலிருந்தால் ஃபோர்டு நடத்திய கல்லூரியில் பகுதி நேரமாகப் படித்து ஆங்கிலம் கற்று ஆறுமாதத்தில் பாஸ் பண்ணிவிட வேண்டும்... இப்படியாக  `Factory facts from Ford’ என்ற ரூல்ஸ்புக் பல பக்கங்களுக்கு நீளக்கூடியது.

சரி, இவற்றையெல்லாம் பணியாளர்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை எப்படி உறுதிசெய்வது? கண்காணிப்புக்கென்றே தனியாக ஸ்பெஷல் டீம் வைத்திருந்தார் ஃபோர்டு.  Ford Sociological Department.

இந்தக் கண்காணிப்பு டீமில் 200 பேர் இருப்பார்கள். அவர்களின் வேலை, பணியாளர்கள் ஒவ்வொருவரும் பக்காவாக விதிகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை நோட்டம் விட்டுக்கொண்டேயிருப்பது.

திடீரென்று ஒரு பணியாளரின் வீட்டிற்குள் நுழைவார்கள். வீடு சுத்தமாக இருக்கிறதா, மனைவி என்ன செய்கிறார், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறதா, புதிதாகக் கடன் வாங்கியிருக்கிறார்களா, குடிப்பழக்கம் இருக்கிறதா, ஆங்கில அறிவு எப்படி என்பதையெல்லாம் பரிசோதிப்பார்கள். அகதிகளாகக் குடியேறியவர்கள் பிழைப்புக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார்கள். ஆனால், ஃபோர்டு சலுகைகளைக் காட்டி, தனிமனித சுதந்திரத்தை விலைபேசுவதைப் பணியாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்ப்புகள் வலுத்தன. ஃபோர்டின் இந்தத் திட்டம் சில ஆண்டுகளுக்குக்கூடத் தாக்குப்பிடிக்கவில்லை.

இந்தத் திட்டம் தோல்வியடைய இரண்டு விஷயங்கள் காரணமாக இருந்தன.

1.கண்காணிக்கப்படுவது தொழிலாளி களுக்குப் பிடிக்கவில்லை

2. கண்காணிப்புக்கு ஆன செலவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 19

ஒருவேளை ஃபோர்டு இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவரால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்க முடியும். காரணம், இன்று அதிக செலவில்லாமல் பணியாளர்களின் மூளைகளைக்கூட Hack  செய்து கண்காணிக்கிற  AI எந்திரங்கள் வந்துவிட்டன. வேலைக்காரர்களுக்குத் தெரியாமலே இவற்றையெல்லாம் செய்து முடிக்கலாம். என்ன முடிக்கலாம்... ஏற்கெனவே செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

ஃபோர்டு மட்டுமல்ல; அவருக்கு முன்பும் பின்பும்கூட, தங்கள் அடிமைகளைச் சிறப்பாகக் கண்காணிக்கிற கங்காணி களுக்குத்தான் வரலாறு நெடுக முதலாளிகள் காத்திருக்கிறார்கள். அதனால்தான் உலகெங்கும் எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் உழைக்கும் தொழிலாளிகளைவிட உழைக்கவைக்கிற கங்காணிகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான், எந்திரக்கங்காணிகளுக்காகக் கோடிகளைக் கொட்டித்தரவும் தயாராய் இருக்கிறார்கள் முதலாளிகள்.

2017ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களை வாங்க 22 பில்லியன் டாலரைச் செலவழித்திருக்கின்றனர். இது 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 26 மடங்கு அதிகம்.

சர்வைவா - 19இன்று உலகம் முழுக்க அலுவலகப் பணியாளர்களைக் கண்காணிக்கும் எந்திரங்கள் மளமளவென உருவாக்கப்படுகின்றன. மற்ற எந்த ஆராய்ச்சிகளையும்விட இதற்கான சந்தை மிகப்பெரியது என நம்புகிறார்கள்.

மனிதவள ஆலோசனை எந்திரம்

லண்டன் நிறுவனமான  PWC (Pricewaterhousecoopers) இந்தியாவில் ஒரு சர்வேயை எடுத்தது. Artificial intelligence in India - hype or reality என்பதுதான் தலைப்பு. இதில் இடம்பெற்ற முக்கியமான ஒரு கேள்வி... `உங்களுடைய பதவி உயர்வை, சம்பள உயர்வை ஒரு செயற்கை நுண்ணறிவுள்ள எந்திரம் தீர்மானிப்பதாக இருந்தால் ஒப்புக்கொள்வீர்களா?’

இந்தக் கேள்விக்கு, தயங்காமல்  `நிச்சயம் சம்மதிப்போம்’ எனச் சொன்னவர்கள் 83% பேர். அந்த அளவுக்கு மக்கள் மனித மேனேஜர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணியாளர்கள் மட்டுமல்ல, 80% முதலாளிகளும் எந்திர ஆலோசகர்கள் இருந்தால் நல்லது, அவை எடுக்கிற முடிவுகள் மனிதர்கள் எடுக்கிற முடிவுகளைவிட நேர்மையாக இருக்கும், அதிலும் HR துறையில் இருந்தால் இன்னும் நல்லது என்று விரும்புகிறார்கள் என்கிறது இதே ஆய்வு.

எல்லாம் ரெடி

ஒரு பணியாளர் ஏன் கண்காணிக்கப்பட வேண்டும்?

- பணித்திறன் அல்லது உற்பத்தித்திறன் அறிய.

- நிறைய ஓ.பி அடிக்கிறாரா, வேலைபார்க்காமல் ஏமாற்றுகிறாரா?

- சக பணியாளர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்?

- வேலையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருக்கிறாரா?

- அவருடைய மனநிலை மற்றும் உடல்நிலை அப்டேட்கள்.

- அலுவலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் வேலை பார்க்கிறாரா?

சர்வைவா - 19

இவையெல்லாம்தான் அடிப்படை. இதற்குத்தான் உலகெங்கும் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கெனவே நம்முடைய சமூகவலைதளப் பக்கங்கள், இணையச் செயல்பாடுகள், கணினிகள், லேப்டாப்கள், செல்போன்கள் கூட அலுவலகங்களில் முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றன.  AI கண்காணிப்பு இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லப்போகின்றன.

 வாடிக்கையாளர் சேவை மையங்களில் பயன்படுத்தக்கூடிய AI மென்பொருளை உருவாக்கியுள்ளது Cogito நிறுவனம். கஸ்டமர் கேரில் பணியாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு விரைவாகப் பேசுகிறார்கள், எவ்வளவு வேகமாகக் குறைகளைத் தீர்த்துவைக்கிறார்கள் என்பவற்றையெல்லாம் இது கணக்கு போட்டுச் சொல்லுமாம்.

SLACK பணியிடங்களில் பயன்படுத்தக்கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலி. “searchable log of all conversation and knowledge” என்பதன் சுருக்கம்தான் ­Slack. இதன் உதவியோடு பணியிடங்களில் நாம் எப்படிப் பேசுகிறோம், நமக்குத் தொழில்சார்ந்து எந்த அளவுக்கு அறிவிருக்கிறது என்பவற்றையெல்லாம் கணக்கிடுகிறார்கள்.

Veriato மென்பொருள் நிறுவனம் உருவாக்கியிருக்கிற எந்திரம், ஒரு பணியாளர் ஒருநாளில் எத்தனை முறை கீபோர்டைத் தட்டுகிறார் என்பதைக் கண்காணித்து அதன் வழி அவர் எவ்வளவு சிறப்பாக வேலை செய்கிறார் என்பதைக் கணிக்கும்.  ஸ்வீடனைச் சேர்ந்த ABB நிறுவனமும் இதே மாதிரி Flowlight என்கிற எந்திரத்தைத் தயாரித்திருக்கிறது. பணியாளர்களுடைய மவுஸ் மற்றும் கீபோர்டு அழுத்தல்களைக் கண்காணித்து அவர்கள் பிஸியாக இருந்தால் அவர்களுடைய டெஸ்க்கின் மேல் சிவப்பு விளக்கையும், அவர் வேலை பார்க்காமல் ஓ.பி அடித்தால் பச்சை விளக்கையும் அடித்து மேலதிகாரிக்குப் போட்டுக்கொடுக்கும்!

Mettl நிறுவனம், பணியாளர்களில் மோசமான குணங்கள் கொண்டவர்களைக் கண்டுபிடிக்கிற எந்திரத்தைத் தயாரித்திருக்கிறது. மனிதர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அவர்களிடம் self-obsession, opportunism, temperament, insensitivity, proclivity for thrill-seeking, impulsiveness  முதலான ஆறு விதமான குணாதிசயங்களை ஆய்வுசெய்து அதன்மூலம் `நல்லவர் யார், கெட்டவர் யார்?’ என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும். இவற்றையெல்லாம் ஆராய்ந்து எந்திர எஜமானர்கள் மனிதர்களுக்குப் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என கிரேடு கொடுப்பார்கள். சிவப்பு என்றால் உடனே ஆளை விரட்ட வேண்டியதுதான். இப்போதைக்கு இதைவைத்து மோசமான மனநிலை கொண்டவர்களை 75 சதவிகிதம் கண்டுபிடிக்க முடிகிறதாம். இந்தியா முழுக்க 60க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். நீங்களும்கூட உங்கள் அலுவலகத்தில் இந்த மென்பொருளால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

Three square market என்ற அமெரிக்க நிறுவனத்தினர், அரிசி அளவு மைக்ரோ சிப்புகளைப் பணியாளர்கள் உடலில் பொருத்தும்படியான தொழில்நுட்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

Humanyze என்கிற நிறுவனம் உருவாக்கியிருக்கிற கைப்பட்டையைப் பணியாளர்கள் அணிந்துகொண்டால், அவர்கள் எங்கே போகிறார்கள், யாரோடு பேசுகிறார்கள், அவர்கள் என்ன மாதிரி சொற்களைப் பயன்படுத்துகிறார்கள், எங்கெல்லாம் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்கிற விவரங்களை எல்லாம் அளிக்கும். அடுத்த டெஸ்க்கில் வேலை பார்க்கிற பெண்ணோடு கடலைபோட்டால்கூடக் கண்டுபிடித்துப் புகார் கொடுத்துவிடுகிற ஆற்றல் பெற்றது இது. சில நிறுவனங்களில் சக பணியாளரோடு டேட்டிங் போக முயற்சி செய்தவர்களைக்கூடப் பிடித்திருக்கிறது.

 Workday என்ற மென்பொருள் நிறுவனம் உருவாக்கிக்கொண்டிருக்கிற AI, ஒரு பணியாளர் வேலையை விட்டு நிற்கிற நினைப்பில் இருக்கிறாரா என்பதை 60 விதமான ஆய்வுகளின் வழி கண்டறிந்து சொல்லக்கூடியது.

Herman and miller என்ற நிறுவனம் ஸ்மார்ட் நாற்காலி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அந்த நாற்காலியில் எந்த பொசிஷனில் அமர்ந்திருக்கிறோம், எவ்வளவு நேரம், எந்தப் பக்கமாக அமர்ந்திருக்கிறோம் என எல்லாத் தகவல்களையும் அது திரட்டித் தரும்.

இப்படி இன்னும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவையெல்லாம் தனித்தனி ஆராய்ச்சிகளாக இருந்தாலும் எல்லாம் கூட்டு சேர்ந்து திரளும்போது பணியாளர்கள் முழுதாகக் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடுவார்கள். எட்டுமணிநேர வேலை நேரத்தில் வேலைக்கு வெளியே எதைச் செய்தாலும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  Modern Times படத்தில் சார்லி சாப்ளின் பணியாற்றுகிற தொழிற்சாலையைப்போல நம் அலுவலகங்கள் மாறிவிடும். நம் கண்சிமிட்டல்கள்கூடக் கேள்விக்குள்ளாக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் நம்முடைய வேலைகளைப் பறித்துவிடும் என்கிற அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவை நம்முடைய அலுவலகங்கள் செயல்படுகிற விதத்தையே மாற்றியமைக்கப்போகின்றன. கணினிகளின் வரவு ஏற்படுத்திய மாற்றங்களை விட, இது பல மடங்கு அதிகமான பாதிப்புகளை உண்டாக்கப்போகின்றன. மனிதகுல வரலாற்றில் இதுவரை முதலாளிகளுக்குக் கிடைத்திடாத கண்காணிப்பு சக்தி,  AI-களால் கிடைக்கப்போகிறது. கடைநிலை ஊழியர்களின் உற்பத்தித்திறன் குறித்து முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாத முதலாளிகளால் இனி அவர் டீயை ஸ்ட்ராங்காகக் குடிக்கிறாரா, லைட்டாகவா என்பதுவரை தெரிந்துகொள்ள முடியும்.

இதனால் பணியாளர்களுக்கும் சில லாபங்கள் இருக்கவே செய்கின்றன... ஆனால், அதைவிட ஏராளமான ஆபத்துகளும் காத்திருக்கின்றன...

- காலம் கடப்போம்