Published:Updated:

சர்வைவா - 20

சர்வைவா - 20
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 20

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

வில்லேஜ் விஞ்ஞானி!

யலில் வேலைபார்க்கிற வேலைக்காரர்கள் வரிசையில் வர, நகரத்தில் படித்த நாயகி அவர்களுக்கான கூலியைக் கொடுக்கிறார். கூலி குறைவாக இருப்பதைப்பார்த்து ஏழைகள் கோபமடைகிறார்கள்.  ``அம்மா... ஏன் இப்படி எங்க வயித்துல அடிக்கறீங்க?” எனச் சண்டைக்குப் போகிறார்கள்.

 ``ஆறுநாளில் பத்துப் பேர் சேர்ந்து ஆறு ஏக்கர் நிலத்தில் நாத்து நட்டிருக்கீங்க, இது என்னுடைய கால்குலேஷன் படி கம்மி, அதனால் கூலியையும் குறைவாகக் கொடுக்கிறேன்’’ என்று திமிராகச் சொல்கிறார் நாயகி.

அப்பாவி தொழிலாளிகள் வாக்குவாதம் செய்கிறார்கள். உடனே நாயகியே கையில் நாற்றுக் கத்தை ஒன்றை எடுத்துக்கொண்டு நிலத்தில் இறங்குகிறார். ஸ்டாப் வாட்ச் வைத்து  உதவியாளரை அளக்கச் சொல்கிறார். நான்கு நிமிடத்தில் ஒரு கத்தை நாற்றை நடுகிறார். ‘`நாலு நிமிஷத்துக்கு ஒரு கத்தைனா... ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்துக்கு நூத்தி இருபது கத்தை... 120 இன்ட்டூ சிக்ஸ் இன்ட்டூ டென் மெம்பர்...  ஆறுநாளைக்கு ஏழு ஏக்கர் தாராளமா நடலாம். நீங்க எல்லாம் ஏமாத்துறீங்க.’’ தடலாடியாக அடிக்கிறார் நாயகி.

‘`அம்மா, நாளெல்லாம் வெயில்ல வேலை செய்யுறோம். கொஞ்சம் அசதியா இருக்குனு நிழல்ல கொஞ்சம் ஒதுங்கமாட்டமா, கால்ல முள்ளுகுத்திக்கிட்டா என்ன செய்வோம். சில சமயம் பூச்சி புழு கடிச்சிடறதில்லையா? அதெல்லாம் எந்தக் கணக்குலம்மா சேர்ப்பீங்க’’ தொழிலாளர்கள் வேதனையோடு சொல்கிறார்கள். 

சர்வைவா - 20

‘`நான் அக்ரி காலேஜ்ல படிச்சவ. என்னை ஏமாத்த முடியாது. ஆறு நாளைக்கு பத்துப்பேர் சேர்ந்து ஏழு ஏக்கர் நாத்து நட்டாதான் கரெக்டா கூலி, இல்லாட்டி குடுக்கறத வாங்கிட்டுக் கெளம்புங்க...’’ என்று ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிடுகிறார்... எல்லோருமே அதிர்ச்சியில் உறைகிறார்கள். கட்.
- பாக்யராஜ், ஜஸ்வர்யா நடித்த  `ராசுக்குட்டி’ படத்தில் வருகிற காட்சி இது. சரி, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்க்கும் ஐஸ்வர்யாக்கும் என்ன தொடர்பு?

இனிமேல் இப்படித்தான்... நம்முடைய வேலைகளும் இதே வகையில்தான் அளக்கப்படும்.

சர்வைவா - 20

ஐஸ்வர்யாவுக்குப் பதிலாக AI கணக்கு போடுவார்.  `நாம் என்ன வேலை செய்கிறோம், எப்படி வேலை செய்கிறோம்; நம்மால் நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம், நஷ்டம்; நம்முடைய வருகைப்பதிவேடு, வேலை பார்க்கிற நேரம்’ எல்லாவற்றையும் இந்த AI எந்திரங்கள் கணக்கு போடும். கடைசியில் `ஒரு நாளில் நான்கு மணிநேரம்தான் புரொடக்டிவாக இருக்கிறார், இரண்டு மணிநேரம் வேகம் குறைவாக வேலை பார்க்கிறார். அலுவலக நேரத்தில் இரண்டு மணிநேரம் கேன்ட்டீனில்தான் இருக்கிறார். அலுவலகத்திற்குத் தினமும் முப்பத்தி மூன்று விநாடிகள் தாமதமாக வருகிறார்...  எட்டு மணிநேரத்தில் 30 ரிப்போர்ட்டுகள் பார்க்க வேண்டிய இடத்தில் வெறும் 29 ரிப்போர்ட்டுகள்தான் பார்க்கிறார். இவர்மீது நடவடிக்கை எடுக்கலாம். சம்பளத்தைக் குறைக்கலாம். பதவி உயர்வை நிறுத்தலாம்... விடாதிங்க பிடிங்க’ என வக்கணையாக வலியுறுத்தும். ஒவ்வொரு அப்ரைஸலிலும் AI ரிப்போர்ட்டுகளோடு மேலாளர்களுக்கு எதிரில் ஐஸ்வர்யாவிடம் வேலை செய்யும் விவசாயக்கூலியைப் போல நாம் நின்றுகொண்டிருப்போம்.

எதிர்காலத்தில் அலுவலகங்கள் இப்படித்தான் இருக்கப்போகின்றன. உள்ளே நுழைந்தால் AI கேமராக்கள் வரவேற்க, அடையாள அட்டைகளும் வேவுபார்க்க, நம் கணினிகளே நம்மைக் கண்காணிக்க, உட்கார்ந்திருக்கிற நாற்காலிகூட போட்டுக்கொடுக்க... நிறையவே  `பகீர்’கிறதுதான். ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை.

இருக்கிற கண்காணிப்பு எந்திரங்களோடு  IOT யும் சேர்ந்துவிட்டால் அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் கார்த்திகைதான்.  IOT என்பது  Internet of things. உங்களைச் சுற்றியுள்ள ஸ்மார்ட் எந்திரங்கள் (ஏசியில் தொடங்கி காபி மெஷின் வரை) உங்களைக் கண்காணித்து அதற்கேற்ப இயங்கும். IOT வீட்டில் இருந்தால் மருந்து எடுத்துக்கொள்ளுகிற நேரம் தொடங்கி, பிடித்தமான பாட்டு போடுவது வரை நிறைய செய்கிற நாய்க்குட்டியாக வாலை ஆட்டும். அதுவே அலுவலக  IOTயாக இருந்தால் உங்களைக் கண்காணித்து உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப ஏசி அளவைக் கூட்டும் அல்லது குறைக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் காபி அல்லது தண்ணீர் குடிக்க வலியுறுத்தும். “ஓய்வெடுங்க பாஸ்” எனக் கொஞ்சும், உங்களுக்காக மீட்டிங் ஹால் புக் செய்து கொடுக்கும். கூடவே உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளைச் சேகரித்து ‘`இந்தாளு வேலையே பாக்கறதில்ல. எந்நேரமும் பக்கத்து சீட்டு ஆளோட ஆபீஸ் பாலிட்டிக்ஸ் பேசிக்கிட்டே இருக்கார்’’ என்றும் போட்டுக் கொடுக்கும்.

Generative designing மாதிரி விஷயங்கள் நம்முடைய அலுவலகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. IOT மூலம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அலுவலகத்தின் வடிவமைப்பையே இவை மாற்ற உதவும். அதன் மூலம் புரொடக்டிவிட்டியை இன்னும் இன்னும் அதிகரிக்க முடியும் என நம்புகிறார்கள். பணியாளர்களை எப்படியெல்லாம் உட்காரவைத்தால் எப்படியெல்லாம் அதிக வேலை வாங்கலாம் என்பதை எந்திரங்கள் சொல்லித்தரும்!  Autodesk நிறுவனம் டொரன்டோவில் இருக்கிற தன்னுடைய அலுவலகத்தையே அப்படித்தான் வடிவமைத்திருக்கிறது.

எந்திரக் கண்காணிப்பினால் என்ன நன்மைகள் இருக்கின்றன,  தீமைகள் இருக்கின்றன?

சர்வைவா - 20

நன்மைகள்

1 - பணித்திறனை அதிகப்படுத்தும். இனி யாரும் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்க முடியாது.

2 - சிறப்பாக வேலை செய்கிறவர்களை நிர்வாகம் நேரடியாக இனம் காணும், அவர்களுக்குச் சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.

3 - தொழிற்சாலைகளில், கட்டடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு அம்சங்களை முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்யலாம்.

4 - தொழிலாளர்களின் உடல்நிலையைக் கண்காணித்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகளைச் சரியான நேரத்தில் கிடைக்கச்செய்யலாம்.

5 - சம்பளம் மற்றும் பதவி உயர்வில் பொறுப்புகள் ஒதுக்குவதில் பாலியல் ரீதியிலான, மத, இன அடிப்படையிலான பாகுபாடற்ற நிலை வரலாம்.

பாதிப்புகள்

1 -
பொறுமையாக வேலை பார்க்கிற வயதானவர்களுக்கும் பரபரவெனப் பற்றி எரியும் இளைஞர்களுக்கும் ஒரே மாதிரி மார்க் போடுவது என்ன நியாயம்?

2 - எந்திரத்திடம் ‘உடம்புக்கு முடியலை, இரவெல்லாம் பாப்பாவுக்கு உடம்பு முடியாம அழுதது, புதுமனைவியோடு சண்டை, அப்பாவுக்கு அறுவைசிகிச்சை, மன அழுத்தம், வெயில் ஜாஸ்தி’  என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. சொன்னாலும் புரியாது.

3 - எந்நேரமும் கண்காணிக்கப்படுவதால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கப்படலாம்.

4 - அலுவலகத்தில் படைப்பாற்றல் குறைந்து, கண்காணிப்புக்கு ஏற்றபடி வேலை செய்ய ஆரம்பிக்க நேரலாம். (பள்ளிகளில் மனப்பாடம் பண்ணி மக் அடிப்பதுபோல!)

5 - மனிதப்பிழைகள்போல எந்திரங்களும் பிழைசெய்யக்கூடியவை. அலுவலகங்களில் அப்படி ஒன்று நடந்தால் அது ஒருவருடைய வாழ்க்கையையே பாதிக்கும்.

நம் அரசு அலுவலகங்களிலும் நிச்சயம் AI எந்திரங்கள் வரும். கொஞ்சம் பொறுமையாக இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு... ஓரளவு  Geek ஐஏஎஸ் அதிகாரிகள் நினைத்தால் ஐந்தாண்டுகளில் வரலாம். வந்தாலும் உருப்படியாக இயங்குமா இயங்கவிடுவார்களா தெரியவில்லை... வந்தால் நல்லதுதான். ஊழல் குறையும்தான்.

ஏன் தெரியமா... கண்காணிக்கப்படும் போதுதான் நம் கடமைகளில் கட்டுப்பாட்டோடு கண்ணியமாக இருப்போமாம்! அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள்.

சர்வைவா - 20

திருடாதே!

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூவர் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அமெரிக்க ஹோட்டல்களின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, பணியாளர்களே ஹோட்டலில் திருடுவது, பில்போடும்போது டிப்ஸுக்காகக் குறைத்து பில் போட்டுக் கொடுப்பது, டிப்ஸ் கொடுக்காதவர் களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்வது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி டாலருக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணியாளர்களை எத்தனை முறை மாற்றினாலும் இந்த மோசமான விஷயத்தை மாற்றமுடியவில்லை. இதைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா முழுவதும் 392 உணவு விடுதிகளில் இந்த ஆய்வை முன்னெடுத்தது வாஷிங்டன் பல்கலைக்கழகம்.

இந்த உணவுவிடுதிகளில் ஒரு  AI மென்பொருள் கண்காணிப்புமுறை கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பணியாளர்கள் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டனர். இப்படிக் கண்காணிக்கப்படுகிற விஷயம் ஒவ்வொரு வெயிட்டருக்கும் சொல்லப்பட்டது.

அடுத்த ஆறே மாதங்களில் பணியாளர் திருட்டு 90சதவிகிதம் குறைந்தது. வருமானமும் அதிகரித்தது. அதுவரை நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஹோட்டல்கள்கூட லாபம் பார்க்க ஆரம்பித்தன. எல்லோருக்குமே அதிர்ச்சி. எப்டி... எப்டி... என்று வியந்து போனார்கள்.  ``நான் கண்காணிக்கப்படுகிறேன் என்கிற உணர்வு பணியாளர்களை நேர்மையாகவும் அதே சமயம் இன்னும் சிறப்பாகவும் பணியாற்றச்செய்திருக்கிறது’’ என்றார்கள் பேராசிரியர்கள்.

கட்டுப்பாடுகள்?

நாடுகளின் கண்காணிப்புகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமோ, அதே அளவுக்கு அலுவலகக் கண்காணிப்பிலும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அவசியம் என்று வலியுறுத்துகிறவர்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் இல்லை; அமெரிக்காவில். சட்ட ஆராய்ச்சியாளர்கள் இபேமோ அஜூன்வா, கேட் க்ரபோர்ட், ஜாசன் என்கிற மூவர் இணைந்து சமீபத்தில் ‘` Limitless worker surveillance” என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் மக்களுடைய தகவல்களைப் பாதுகாக்கும் “comprehensive federal information privacy law” என்கிற ஒன்றை வலியுறுத்தியிருந்தார்கள். கூடவே, பணியிடங்களில் பணியாளர்களைக் கண்காணிப்பதிலும் கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அவசியம் என்கிறார்கள். ‘Employee privacy protection act’ என்ற ஒன்றையும் பரிந்துரைக்கிறார்கள். நாம் பார்க்கிற வேலைக்கு வெளியேயும், நம் மனநிலையை பாதிக்கும் வகையிலும் கண்காணிப்பதையும் தடை செய்யும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

1 - வேண்டியபோது தகவல்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படவேண்டும்.

2 - கண்காணிப்பு எந்திரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன, என்ன மாதிரி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதைப் பணியாளர்களுக்கு முன்பே விளக்கமாகச் சொல்லவேண்டும். மறைமுகக் கண்காணிப்பு தவறானது.

3 -
பணியாளர்கள் தங்களைப்பற்றிய தகவல்களைக் கேட்கும்போது ஒளிவுமறைவு இல்லாமல் கொடுக்க வேண்டும். இது தகவல்களைத் திரித்துக்கூறி நடவடிக்கைகள் எடுப்பதிலிருந்து காக்கும்.

4 - வேலையை விட்டு வெளியேறிய பின்னும்கூட தன்னைப்பற்றிய தகவல்களைக் கேட்டால் நிறுவனங்கள் தரத்தயாராக இருக்கவேண்டும். (நல்ல தகவல்கள் புதிய இடத்தில் வேலைதேட உதவுமே!)

இப்படிப்பட்ட கோரிக்கைகளை எல்லாம் நிறுவனங்கள் நிறைவேற்றி, பணியாளர்களின் பிரைவஸியைக் காப்பாற்றுவார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இப்படிக் கண்காணித்தால்தான் குற்றங்களை முன்பே கண்டுபிடித்துத் தடுக்க முடியும் என்கிற பார்வையும் இதிலிருக்கிறது. கண்காணிப்பில் இறங்கியிருக்கிற அரசுகளும்கூட இதையேதான் சொல்கின்றன!

 AIகளால், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே கணிக்க முடியுமா?

- காலம் கடப்போம்