Published:Updated:

ஒரே ஸ்க்ரீன்கார்டில் மொபைலை 3D-யாக மாற்றலாம்... எப்படி?

சமீபத்தில் தான் பிரமாண்டமான முறையில் 2.0 படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் சத்தமில்லாமல் ஒரு தொழில்நுட்பமும் அறிமுகமானது. அதை நாம் யாரும் பெரிதாக கவனித்திருக்கமாட்டோம்.

ஒரே ஸ்க்ரீன்கார்டில் மொபைலை 3D-யாக மாற்றலாம்... எப்படி?
ஒரே ஸ்க்ரீன்கார்டில் மொபைலை 3D-யாக மாற்றலாம்... எப்படி?

சாதாரணமாக 3D என்றாலே 3D கண்ணாடிகள்தான் நினைவுக்கு வரும். இதில் பல மாற்றங்களும் வளர்ச்சிகளும் நிகழ்ந்துள்ளன. முதலில் சிவப்பு-நீல நிற கண்ணாடிகள் அணிந்து 3D படங்கள் பார்த்திருப்போம். இன்று அவை மாறி டிவியில் 3D பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது இன்றைய தொழில்நுட்பம். VR ஹெட்செட்டுகள் பயன்படுத்தி மொபைலிலும் 3D-யைக் காணமுடியும். ஆனால் இது எதுவும் இன்றி வெறும்  ஸ்கிரீன்கார்டு கொண்டு உங்கள் மொபைலை 3D-யாக மாற்றும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு 2D விடியோவையும் 3D-யாக பார்க்கமுடியும். அது எப்படி என்று தெரியுமா?

முதலில் 3D எப்படிச் செயல்படுகிறது என்ற அடிப்படையைப் பார்ப்போம். நிஜவாழ்வில் நம் இரு கண்களும் ஒரே இடத்தைப் பார்த்தாலும், ஒவ்வொரு கண்ணிற்கும் வேறுபட்ட படங்கள்தான் சென்று சேரும். ஏனென்றால் நம் கண்கள் இரண்டும் 2 முதல் 3 சென்டிமீட்டர்கள் தள்ளியே இருக்கின்றன. இப்படி வரும் இரண்டு படங்களையும் இணைத்து நம் மூளை ஒரே படமாக நமக்குக் காட்டும். இந்த இரு படங்களும் சேர்ந்துதான் நிஜ வாழ்கையில் நமக்கு 3D கிடைக்கிறது. இதைப் பலமுறைகளில் கொண்டுவர முயல்கின்றன இந்த 3D தொழில்நுட்பங்கள். சிவப்பு-நீல நிற கண்ணாடிகள் அணியும்போது சிவப்பில் சில நிறங்கள் மறைந்து அது ஒரு படமாகவும், நீலத்தில் சில நிறங்கள் மறைந்து அது ஒரு படமாகும் நம் கண்களுக்கு கிடைக்கும். இதுதான் நமக்கு 3D-யாகத் தெரியும். இப்படி இரண்டாகப் பிரிக்கப்படும் தன்மைதான் ஸ்டிரியோஸ்கோப்பி ('Stereoscopy'). இதை இப்போது உள்ள தொழில்நுட்பங்கள் 'Polarisation' என்ற முறையில் செய்கின்றன. மொபைலில் VR ஹெட்செட்டுகள் பயன்படுத்துவதன் மூலம் இரு வேறு படங்களை காணமுடிவதால் அதிலும் 3D-யை காணமுடியும்.  

ஆனால் எப்படி கண்ணாடிகள் இல்லாமல் 3D-யைக் காண்பது?

ஆனால் கண்ணாடி, VR என்று எதுவும் இல்லாமல் வெறும் கண்கள் மூலம் 3D முறையை வடிவமைக்க முயற்சி செய்துவருகிறார் அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன். இது அடுத்த ஆண்டு வெளிவரும் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு AutoStereoscopy என்று பெயர். தற்போது இதேபோல கண்ணாடிகள் இன்றியே 3D-யைக் காண்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்திருக்கிறது ரேய்ஸ் 3D (Rays 3D) என்னும் இந்திய நிறுவனம். இந்நிறுவனம் மொபைலில் பொருத்தும் ஸ்கிரீன்கார்டு மூலம் 3D-யைப் பார்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து 2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியது. Wow 3D என்ற இந்தத் தொழில்நுட்பத்தை நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிலைநாட்டியுள்ளனர் இவர்கள். இந்த ஸ்கிரீன்கார்டுகளின் உள்ளே இருக்கும் பல நானோ லென்ஸ்கள் டிஸ்பிளேயில் வரும் ஒளியை இருபுறமும் விலக்கும் (refraction) இதனைக் கொண்டு வலதுகண்ணிற்கு ஒரு படமும் இடது கண்ணனுக்கு ஒரு படமும் தெரியும். இதன்மூலம் நம்மால் 3D-யை காணமுடியும். ஆனால் ஒவ்வொரின் பார்வைக்கேற்ப ஒவ்வொரு தூரத்தில்தான் இது மிகத்தெளிவாகத் தெரியும். இந்த ஸ்கிரீன்கார்டுடன் இவர்களது செயலி ஒன்றையும் தருகின்றனர். அது உங்களிடம் இருக்கும் 2D வீடியோக்களையும் 3D-யாக மாற்றித்தரும்.

இதைக் குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் அனுபா சின்ஹா அவர்களிடம் பேசினோம். அவர் கூறியது, "எங்கள் நிறுவனம் பல வருடங்களாக 2D படங்களை 3D-யாக மாற்றித்தரும் பணியை செய்துவருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை விட மிகவும் குறைந்த விலையில் 2D-யை 3D-யாக மாற்றும் புரோக்ராம் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இதைத்தான் Wow 3D சேர்த்துள்ளோம். இது தானாகவே உங்கள் வீடியோவை ஆராய்ந்து அதை 3D-க்கு மாற்றித்தரும். கடந்த வருடம் கூட புலிமுருகன் திரைப்படத்தை 3Dயில் மாற்றியமைத்து அதை திரையிட்டு 'ஒரே அரங்கில் திரைப்படத்தை 3D-யில் பார்த்த அதிகமான பார்வையாளர்கள்' என்ற கின்னஸ் விருதும் பெற்றோம். முதலில் இந்த ஸ்கிரீன்கார்டு வெளிநாடுகளில் நம்பாமல் சந்தேகித்தே வந்தனர். ஆனால் அதன் பின் தெளிவாக ஆராய்ந்துவிட்ட Advanced Imaging Society (AIS) ஆப்பிள், IBM, ட்ரீம்ஒர்க்ஸ் அனிமேஷன் போன்ற பெரிய நிறுவனங்களுடன் எங்களுக்கும் விருது அளித்துள்ளனர். மொபைல், சினிமா என்று இரண்டிலும் இருக்கும் லைக்கா நிறுவனமும் எங்களது தொழில்நுட்பத்தை பற்றிக் கேட்டதும் சரியெனத் தலையசைத்தனர். அதனால்தான் எங்கள் தொழில்நுட்பத்தை வெளியிட 2.0 விழா போன்ற பிரமாண்ட மேடை கிடைத்தது".

இதுபோன்ற முயற்சிகள் இதற்கு முன்பே பலமுறை நடந்திருந்தாலும் எதுவுமே பெரியளவில் சோபிக்கவில்லை. காரணம், அவை பயன்பாட்டில் தோற்றுப்போனதுதான். ஆனால், அந்தக் கட்டத்தை தாண்டியிருக்கிறது இந்த 3D ஸ்க்ரீன்கார்டு. இந்த ஸ்கிரீன்கார்டுகள் தற்போதைக்கு ஐபோன் 6, 6 ப்ளஸ், 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மாடல்களுக்கு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுகசலுகையாக இவை 1,999 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த ஸ்கிரீன்கார்டை எப்படிச் சரியாக பொருத்துவது, செயலியை எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பற்றி அவர்களின் தளத்தில் வீடியோக்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.