சினிமா
தொடர்கள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 2

கேம் சேஞ்சர்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 2

கேம் சேஞ்சர்ஸ் - 2

 2012-ல், இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. இந்திய ரூபாயில் 7000 கோடி. அப்போது இன்ஸ்டாகிராமில் இரண்டு கோடி யூஸர்ஸ் இருந்தார்கள். ஊழியர்கள் வெறும் 12 பேர். அந்தப் பன்னிரண்டில் அதன் நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோமும் மைக் கிரெய்கரும் (சுருக்கமாக மைக்) அடக்கம். அன்று அவர்கள் ஃபேஸ்புக்கின் பல நூறு ஊழியர்கள் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள். மார்க் சக்கர்பெர்க், கெவினைப் பேச அழைத்தார். கெவின் பேசிய முதல் வாக்கியம்:  

கேம் சேஞ்சர்ஸ் - 2

“நீங்க நினைக்குற மாதிரி இன்ஸ்டாகிராம் போட்டோ ஷேரிங் ஆப் கிடையாது!”

மார்க் உட்பட எல்லோருக்குமே குழப்பம்.  “ஏன் அப்படிச் சொன்னீங்க?” என ஆச்சர்யம் தாங்காமல் கேட்கிறார்.

“நாங்க வெறும் போட்டோ மட்டும் ஷேர் செய்யலை. மக்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில தருணங்களை மற்றவர்களுக்குச் சொல்லவும் உதவுகிறோம். இது உலகுடன் ஒருவர் உரையாட, உறவாட உதவும் களம்.”

கேம் சேஞ்சர்ஸ் - 2“இன்ஸ்டாவுக்குப் போய் ஒரு பில்லியனா?”  என்று ஏளனம் தொனிக்கப் பேசியவர்கள் அப்போது ஏராளம். ஆனால், ‘கனெக்ட்’ என்ற வார்த்தையை வாழ்நாள் மந்திரமாகக் கொண்ட மார்க்குக்கு அந்த ஒரு பில்லியனை வேறு எப்படியும் உபயோகமாகச் செலவழித்திருக்கலாம் என்ற எண்ணமே வரவில்லை. அந்தப் பணத்தில் பிரமாதமான ஒரு நிறுவனத்தையும் அதைவிடப் பிரமாதமான ஒரு மனிதரையும் கிடைக்கப் பெற்றிருக்கிறோம் என்றே நினைத்தார். அதனால்தான் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக்கிலிருந்து பிரித்து வைத்து, அதன் முழுப்பொறுப்பையும் கெவினிடமே விட்டிருக்கிறார். காரணம், கெவினின் செல்லப்பிள்ளை, பட்டுக்குட்டி, தங்க மயிலு எல்லாம் இன்ஸ்டாகிராம்தான்.

இன்ஸ்டாகிராமைத் திறந்ததும் நீங்கள் பார்ப்பது நிஜ சிவகார்த்திகேயன்; நிஜ அனுஷ்கா. அவர்கள் அங்கே நடிப்பதில்லை. தங்கள் வாழ்க்கையின் வெளிவராத பக்கத்தை அவர்களே நமக்குக் காட்டுகிறார்கள். அதனால்தான் மற்ற எந்த சோஷியல் மீடியாவைவிடவும் இன்ஸ்டாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்; குறிப்பாக டீன்ஸ்.

இன்ஸ்டாவுக்கு முன் கெவினின் பயணம் எப்படி இருந்தது? கூகுளில் இரண்டு ஆண்டுகள்; ‘NextStop’ என்ற பயணங்கள் தொடர்பான ஸ்டார்ட் அப் ஒன்றில் வேலை. தனக்கான வளர்ச்சி அங்கெல்லாம் கிடைக்கவில்லை என நினைத்தார். உலகின் உயரமான கட்டடத்தின் மேல் நின்று கீழே பார்ப்பவர்கள் சாதாரண மானவர்கள். அங்கேயும் தலை உயர்த்திப் பார்ப்பவர்கள் சாதனையாளர்கள். கெவின் சாதனையாளன். வேலையை விட்டார். 24 மணி நேரமும் கோடிங் எழுதினார்... எழுதினார்... எழுதினார்.

கெவினுக்கு விஸ்கி பிடிக்கும். அதை வைத்து ஒரு ஐடியா பிடித்தார். Burbn என்ற ஆப்-ஐ உருவாக்கினார். உண்மையில் அது ஆப் அல்ல; இணையதளம்.அதை மொபைலுக்கும் மாற்றியிருந்தார். நீங்கள் ஓரிடத்துக்குச் சென்றால் இந்த ஆப் மூலம் செக் இன் செய்யலாம்; அங்கு கிடைக்கும் விஸ்கி அல்லது மற்றவற்றின் சுவை பற்றி இந்த ஆப்பில் குறிப்பிடலாம். படங்களைப் பதிவேற்றலாம். அடுத்து எங்கே போகலாம் எனத் திட்டமிடலாம். இதுதான் ஐடியா. 

கேம் சேஞ்சர்ஸ் - 2

இந்த ஐடியாவைச் சில முதலீட்டாளர்களிடம் சமர்ப்பித்தார் கெவின். முதலீட்டாளர்களோ ஆப் தான் வேண்டுமென்றார்கள். கெவின் HTML புலி. ஆப்-க்கான கோடிங் தெரியாது. ஸ்டான்ஃபோர்டில் தன்னுடன் படித்த மைக் கிரெய்கரின் ஞாபகம் வருகிறது. மொபைல் ஆப்-கு அவர்தான் சரியான ஆள் என அவர் முன்னால் போய், ஒரு காதலன் தன் காதலை புரபோஸ் செய்வதுபோல செய்தார் கெவின். மைக் ஓகே சொல்ல இருவரும் சேர்ந்து புது Burbn-ஐப் பெற்றெடுக்கிறார்கள்.

Burbn சிங்கிள் ரன்தான். பவுண்டரியோ சிக்ஸரோ இல்லை. ஏன் என மைக்கும் கெவினும் யோசித்தார்கள். மொபைல் ஆப் என்பது பொருள்களைத் திணித்து வைக்கும் பரண் அல்ல என்பதை கெவின் உணர்ந்தார். எனவே, அதிகமானோருக்குப் பிடித்த புகைப்படங்களை ஷேர் செய்யும் வசதியைத் தவிர மற்ற விஷயங்களை எச்சில் தொட்டு அழித்தார்கள். புகைப்படங்களுக்கென ஆப் ஒன்று கொண்டு வரலாமென யோசிக்கத் தொடங்கினர். அப்போது மொபைல் கேமராக்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை.  அதனால், புகைப்படங்களை மெருகேற்றும் வசதியைத் தரலாம் என்பது திட்டம். அந்த முடிவுக்குக் காரணம் கெவினின் கேர்ள் ஃப்ரெண்ட்தான்.

கேம் சேஞ்சர்ஸ் - 2கெவினும் அவரது காதலியும் ஒரு பயணம் சென்றிருந்தபோது எடுத்த படங்களை நண்பர்களுடன் பகிர நினைத்த காதலிக்கு, அவற்றில் திருப்தியில்லை. அழித்துவிட்டார். “புகைப்படங்களை ஃபில்டர் செய்து பதிவேற்றினால் நன்றாக இருக்குமல்லவா?” என்று எண்ணுகிறார் கெவின். அப்போது சில ஆப்களில் ஃபில்டர் வசதி இருந்தாலும் அவை ஹிட் ஆகவில்லை. காரணம் யோசித்தார் கெவின். ஃபில்டர் போடப்பட்ட படங்களை ஷேர் செய்யும் வசதி அந்த ஆப்களில் இல்லை. ஒரு ஃபோட்டோ ஆப் + சோஷியல் நெட்வொர்க்.  இந்த காம்பினேஷன் ஷ்யூர் ஷாட் என கெவினுக்குத் தோன்றியது. மளமளவென வேலைகளைத் தொடங்கினர் இருவரும். எட்டே வாரத்தில் ஆப் ரெடி.

“நம்மைச் சுற்றிப் பல மூலப்பொருள்கள் இருக்கின்றன. அதை வைத்து நாம் என்ன சமைக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்பார் கெவின். அவர் சமைத்தது இன்ஸ்டாகிராம். அதற்குப் பெயரையும் அதே முறையில்தான் எடுத்தார்.  Instant Camera + Telegram இரண்டையும் இணைத்து Instagram என்ற பெயரையும் உருவாக்கினார். உலகையே உலுக்கப்போகும் பெயர் அது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.

அதன்பிறகு நடந்ததெல்லாம் மேஜிக். ஆப்பிள் ஸ்டோரில் வெளியான அன்றே  25,000 டவுன்லோடு. அந்தச் சமயத்தில் வெளியாகியிருந்த ஐபோன் 4 கேமராவுக்கு செம வரவேற்பு. அதனால் மொபைலில் படங்கள் எடுப்பது அதிகமானது. முதலில் இன்ஸ்டாகிராமை டவுன்லோடு செய்தவர்களுக்கு அதில் ஒரு நெட்வொர்க் இருக்கிறது என்பதே தெரியாது. ஃபோட்டோ எடிட்டிங்காகத்தான் டவுன்லோடு செய்தார்கள். ஆனால், அங்கேயே லைக்ஸும் கிடைக்கிறது என்றதும் அனைவரும் இன்ஸ்டா கிராமத்தில் டேரா போட்டு  விட்டார்கள். 13 மில்லியன் பேரை 13 மாதத்தில் பெற்றது இன்ஸ்டா. 

“நான் ஒரு நல்ல போட்டோகிராபர் இல்லை. ஆனால் படங்களின் அருமை எனக்குத் தெரியும்” என்பார் கெவின். சின்ன வயதில் புகைப்படங்களின் மீது இருந்த அந்தக் காதல் கெவினுக்கு மிகப்பெரிய உதவி செய்தது. இன்ஸ்டாகிராம் உலக அளவில் பெரிய ரீச். அது இல்லாத நாடே கிடையாது. இந்தச் சாதனைக்குக் காரணம் அதன் எளிமையோ வசதிகளோ மட்டும் கிடையாது. புகைப்படங்கள். எந்த மொழி பேசும் ஒருவருக்கும் புகைப்படத்தின் மொழி தெரியும். புரியும். உலகில் வாழும் 7 பில்லியன் மக்களையும் சென்றடையும் ஒரே மொழி புகைப்படம்தான். எல்லைகளை உடைத்து இன்ஸ்டாகிராம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தொடங்கியபோது அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மிகப்பெரிய ஹிட். அதுதான் ஃபேஸ்புக்கை வாங்க வைத்தது. ஆனால், இன்றிருக்கும் இன்ஸ்டாவின் பயனர்களில் 80% அமெரிக்காவுக்கு வெளியில் இருக்கிறார்கள் .

இன்ஸ்டாகிராமுக்கு ஒரு எலைட் தன்மை உண்டு. இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தைப் பகிரும்முன் அதன் யூஸர்ஸ் பல தடவை யோசிப்பார்கள். புகைப்படம் நன்றாக இல்லை யென்றால் அங்கே ஷேர் செய்ய மாட்டார்கள். மற்ற சமூக வலைதளத்தில் இல்லாத ஒரு விஷயம் அது. கண்டதையும் போட்டு வைக்கும் இடமாக இன்ஸ்டாவை யூஸர்ஸ் பார்க்கவில்லை; ஏனெனில் கெவினும் அப்படி நினைக்காமல்தான் இன்ஸ்டாவையே உருவாக்கினார்.

கெவினுக்குப் போட்டியாளர்கள் மீது அலாதி விருப்பம். இன்ஸ்டாவுக்குப் போட்டியென்று சக ஃபோட்டோ ஷேரிங் ஆப்ஸை அவர் நினைக்கவில்லை. நேரம்தான் இன்ஸ்டாவுக்குப் போட்டியாளர் என்கிறார். உலகிலிருக்கும் அத்தனை பேருக்கும் 24 மணி நேரம்தான். அதில்தான் செய்திகள் படித்தாக வேண்டும்; வேலை செய்தாக வேண்டும்; லைக்ஸ் போட்டாக வேண்டும். அந்த நேரத்தைப் பங்கு  போட்டுக்கொள்ளும் அத்தனை விஷயங்களுமே இன்ஸ்டாவுக்குப் போட்டியாளர்கள் என்பது கெவின் எண்ணம்.

இன்று இன்ஸ்டாகிராமில்  100 கோடிப் பேர் ஆக்டிவாக இருக்கிறார்கள் . அடுத்து என்ன என கெவினிடம் கேட்டால் “டெக்னாலஜி மாறிக்கொண்டேயிருக்கிறது . இன்ஸ்டாகிராமில் விர்ச்சுவல் ரியாலிட்டி விஷயங்களைச் சேர்க்க வேண்டும். அது முடியாமல்போனால் அப்போதிருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி உலக மக்களை ஒன்றிணைக்கும் ஐடியாவை யோசித்துக்கொண்டிருப்பேன். அல்லது நிகழ்த்திக்கொண்டிருப்பேன்” என்கிறார்.

புகைப்படங்கள் என்பவை ரொம்பவே பர்சனல். அவற்றை ஒளித்து வைத்து ரசிப்பதே உலக வழக்கம். இன்ஸ்டாகிராம் அதைத் தலைகீழாக மாற்றியது. பர்சனல் புகைப்படங்களை எல்லோருக்கும் காட்டும் ஆர்வத்தைத் தூண்டியது. கெவின் செய்த கேம் சேஞ்ச் அதுதான்.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா