வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். ஒரு கிலோமீட்டர் சென்ற பிறகுதான் சில விஷயங்களில் சந்தேகங்கள் வரும்.

சர்வைவா - 28

சந்தேகம் எண் 1 - வீட்டைப் பூட்டினோமா?

உலகிலிருக்கிற கடைக்கோடி மனிதனுக்கும் வரக்கூடிய சந்தேகங்களில் முதன்மையானது இந்த `பூட்டினோமா’.. அடுத்தடுத்து, விளக்குகளை அணைத்தோமா?,  கேஸ் ஸ்டவ்வை ஆஃப் பண்ணினோமா?, மோட்டாரை நிறுத்தினோமா... அயர்ன் பாக்ஸ் என்னாச்சு... பைப்பை க்ளோஸ் பண்ணுனோமா...வீட்டுக்காரம்மா வரும்போது ஏதோ வாங்கிட்டுவரச் சொல்லுச்சே...

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் வரத்தொடங்கும். எதுவுமே நினைவுக்கு வராது. கொஞ்சம் குழப்பமாக இருக்கும். சிலநேரங்களில் பதறியடித்துத் திரும்புவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 28தினமும் திரும்பத்திரும்பச் செய்கிற சில வேலைகள் நம் மூளையில் ஆட்டோபைலட் மோடில் நடப்பதால் வருகிற மனக்குழப்பம் இது. இந்த வேலைகளைச் செய்யும்போது கிறுக்குத்தனமாக (பூட்டும் சாவியால் உள்ளங்கையில் சிலுவை போட்டுக்கொள்ளலாம்...) எதையாவது செய்தால் அது மறக்காதாம். விஷயம் அதுவல்ல...

ஒருவேளை உங்கள் கதவுகளுக்கு, அயர்ன்பாக்ஸுக்கு, ஏசிக்கு, விளக்குகளுக்கு எல்லாம் பகுத்தறிவு இருந்து, ``நம் மதிப்பிற்குரிய எஜமானர் வீட்டிலிருந்து கிளம்பிட்டார், எல்லோரும் உறக்க நிலைக்குப் போய்டுவோம்’’ என்று `டாய் ஸ்டோரி’ படத்தில் வருகிற பொம்மைகள் போல தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? வீட்டின் ஏசி கதவிடம் ‘`கதவண்ணே, ஜிபிஎஸ் மாமா சொன்னார், நம்ம ஓனர் கோயம்புத்தூர் போயிருக்காராம், வீட்டைப் பூட்டிக்கோங்க...’’ என்று உத்தரவிட்டால்...

இதுதான் எதிர்காலத்தின் ஸ்மார்ட் ஹோம். இதைச் சாத்தியமாக்குகிற தொழில்நுட்பம்தான் Internet of Things என்கிற IOT. இப்போதைக்கு ஏதாவது ஓர் இணைப்புக்கருவி (Smart Device) உதவியோடுதான் இவற்றையெல்லாம் நம் வீட்டுச் சாமான்களால் செய்யமுடியும். அவற்றுக்கு சுயபுத்தி வர காலமிருக்கிறது. வீட்டைப் பூட்டுவது, விளக்குகளை அணைப்பது, மோட்டாரை ஆஃப் செய்வது முதலான வேலைகளை இப்போதே எங்கிருந்தோ செய்யமுடியும், ஆனால், செல்போன்மாதிரியான இடைநிலைக் கருவிகள் தேவைப்படும். எதிர்காலத்தில் செயற்கைநுண்ணறிவுத் தொழில்நுட்பத்தோடு இணைந்துவிட்டால் இந்த இடைநிலைக்கருவிகள் இல்லாமல் தங்களுக்குள் பேசி, சிந்தித்து, தாமே முடிவெடுத்துவிடும். முதலில் IOT பற்றிப் பார்த்துவிடுவோம். பிறகு AI இணைப்பு பற்றி...

90-களில்தான் முதன்முறையாக IOT மாதிரியான விஷயங்கள் பரவலாகப் பேசப்பட்டன. 1999-ல் கெவின் அஸ்டோன் என்கிற ஆராய்ச்சியாளர் `Internet of things’ என்கிற சொல்லாடலை முதன்முறையாகப் பயன்படுத்தினார். அந்தக்காலகட்டத்தில். எந்திரங்களை ரேடியோ அலைகளின் வழி இணைத்துக் கண்காணிக்கிற RFID (Radio-frequency Identification) தொழில்நுட்பம்தான். அதற்குப் பிறகு M2M என்கிற எந்திரங்களுக்குள் தொடர்புகொள்கிற புதிய தொழில்நுட்பமுறைகள் பிரபலமாக ஆரம்பித்த­­ன. IOT-யின் தாத்தா M2Mதான்.

சர்வைவா - 28

அஸ்டோன் சொல்லி 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிஜமான IOT சாத்தியமானது. காரணம், இப்போதுதான் அதிவேக புராஸசர்களும் இணைய இணைப்புகளும் கிளவுடு கம்ப்யூட்டிங்கும் அதிக செயல்திறன் மிக்க சென்சார்களும் சாத்தியமாகியிருக்கின்றன.

IOT என்றால் என்ன?

இணையச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பொருள்கள் அல்லது மனிதர்கள், அல்லது விலங்குகள் அல்லது கருவிகளின் வழி தகவல்கள் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒரு சிஸ்டம்.

இதில் ‘Things’ என்பது ஒரு பொருளாக இருக்கலாம், ஒரு வாகனத்தின் வேகத்தைக் கண்காணித்துச் சொல்கிற கருவியாக இருக்கலாம், உடலில் பயோசிப் ட்ரான்ஸ்பான்டர் பொருத்தப்பட்ட விலங்காக இருக்கலாம் அல்லது இதயத்தில் மானிட்டர் கருவி பொருத்தப்பட்ட மனிதராக இருக்கலாம்... ஆனால் இணைக்கப்பட்ட பொருள் எதுவாக இருந்தாலும் தனக்கேயுரிய இணைய முகவரியின் வழி இன்டர்நெட்டில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் இந்த இடத்தில் `Things!’ இந்த திங்க்ஸ் மாட்டை இன்டர்நெட் மரத்தில் கட்டியிருக்கிறோம்.

ஸ்காட் ஹேன்செல்மேன் ஒரு சர்க்கரை நோயாளி. ஆனால் அது அவருடைய அடையாளம் அல்ல, அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் நிபுணர். தன்னுடைய சர்க்கரை நோயைத் தொழில்நுட்பத்தின் உதவியோடு எப்படி எதிர்கொள்வது என சிந்தித்தார். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, தன் உடலிலேயே ஒரு சிறிய மருத்துவ அமைப்பை உருவாக்கிப்பார்க்க முடிவெடுத்தார். கைகளில் ஒரு ஃபிட்னெஸ் பேண்ட், உடலிலேயே பொருத்தப்பட்ட இன்சுலின் ஏற்றுகிற பம்ப், இடுப்பில் Implant செய்யப்பட்ட CGM (Continuos glucose monitor) ஒன்று. இந்த மூன்றையும் உடலில் பொருத்திக்கொண்டார். அடுத்து இந்தக் கருவிகளை இணையத்தோடு ஒரு சிறப்புக் கருவியின் (RasberryPI) வழி இணைத்துக்கொண்டார். உடலில் பொருத்தியிருக்கிற இந்தக் கருவிகள் தொடர்ந்து ஸ்காட்டின் உடல்நிலையைக் கண்காணிக்கும். இந்தத் தகவல்கள் எல்லாம் Night scout என்கிற Machine learning-ல் இயங்கும் மென்பொருளுக்குச் செல்லும். இதன் மூலம் ஒவ்வொரு விநாடியும் ஸ்காட்டின் உடலில் நடக்கிற சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்க முடியும். எந்த நேரத்தில் எல்லாம் சர்க்கரை அளவு கூடுகிறது குறைகிறது என்பதை ஸ்காட்டுக்கு இந்தக் கருவிகள் தெரிவிக்கும். ஸ்காட் எதுவும் செய்யவில்லை என்றால், அவையே சேர்ந்து இன்சுலின் ஊசி போட்டுவிடும்.

இது சும்மாங்காச்சுக்கும் ஒரு முயற்சிதான். ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற ஏராளமான மருத்துவக்கருவிகள் வரக்கூடும். குறிப்பாக அல்சைமர், டிமென்ஷியா பாதித்த நோயாளிகளுக்கும், தங்களால் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள முடியாத வயதானவர்களுக்கும் மருத்துவ உதவிகளைச் செய்யக்கூடிய நர்ஸிங் கருவிகளை IOT சாத்தியப்படுத்தும்.

இதுபோல உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான கருவிகள் சென்சார்கள் வழி IOT தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் தொகையைவிட அதிகமாகிவிடும் என்கிறார்கள். நம்முடைய கருவிகள்கூட இந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. இப்படி இணைக்கப்பட்டிருக்கிற கருவிகள் ஒவ்வொன்றும் நமக்கே தெரியாமல் நம் தகவல்களைச் சேகரித்துக்கொண்டும் தன் எஜமானர்களுக்கு (நாம இல்ல; பொருள்களை உற்பத்தி செய்த கம்பெனிக்காரன்!) பகிர்ந்துகொண்டும்தானிருக்கின்றன. இன்று இந்த இணைப்புகளின் வழி வானில் பறக்கிற ஏரோப்ளேன் தொடங்கி வீட்டில் ஓடுகிற ஸ்மார்ட் டிவி வரை கன்ட்ரோல் செய்யமுடியும்.

வீட்டுக்கு... நாட்டுக்கு...

நம் வீடுகளில் ஏற்கெனவே நேரடியான IOT­ கருவிகளான அமேசான் எக்கோவும், கூகுள் ஹோமும் வந்துவிட்டன. நம் கைகளில் கட்டிக்கொள்கிற ஸ்மார்ட்வாட்ச், ஃபிட்னெஸ் ட்ராக்கர்கள்கூட அப்படித்தான். நம்முடைய உடல்நலத்தைக் கண்காணித்துத் தகவல் பகிரும்! ஆனால் அவையெல்லாம் ஒன்றுமேயில்லை. எதிர்காலத்தில் ஸ்மார்ட் பல்புகள் தொடங்கி ஸ்மார்ட் ஏசிகள், ஃப்ரிட்ஜ்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் வரை வீட்டுக்குள் வந்துவிடும். 2021-க்குள் ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 50 ­IOT கருவிகளாவது இருக்குமாம். ஏற்கெனவே வீட்டில் வெவ்வேறு கருவிகளை வை-பை மூலமாக கனெக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டோம். இனி வரும் காலங்களில் வீட்டின் செக்யூரிட்டி கேமரா, டிஜிட்டல் பூட்டுகள், கேஸ் ஸ்டவ் என எல்லாமே ஸ்மார்ட் ஆகி இணையத்தோடு இணைக்கப்படும்.

மிகச் சமீபத்திய எதிர்காலத்தில் தானாகவே இயங்கும் டிரைவர் இல்லா கார்கள் நம் சாலைகளில் ஓடப்போகின்றன. இப்படி டிரைவர் இல்லாமல் ஓடுகிற இந்த கார்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம், கேமராக்கள், சென்சார்கள், நேவிகேஷன் மென்பொருள்கள் என வெவ்வேறு கருவிகளின் இணைப்பில் இயங்கக்கூடியவை. கூடவே சாலைகளில் ஓடுகிற சக டிரைவர் இல்லா கார்களோடும் தொடர்பிலிருக்கும். இதைச் சாத்தியமாக்கப்போவது IOT­தான்.

பெரிய கிடங்குகளில் உணவுப் பொருள்களைச் சேமிப்பதிலும் அவற்றை அதிக நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் வைப்பதிலும் DELTATRAK என்கிற நிறுவனம் IOT வழியாக உதவுகிறது. லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் வாகனங்கள் எங்கே செல்கின்றன என்பது தொடங்கி, அவற்றின் வேகம், செயல்திறன், இன்ஜின் நிலைமை, பிரேக் செயல்படுவது, செல்லும் வழிகளில் எது சிறந்த வழி என சகலத்தையும் ஆராய்கிற IOT எந்திரங்கள் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் இயங்குகிற டிராம்களைக் கண்காணிக்க IOTதான் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கும் விவசாயத்துறையிலும்கூட மண்ணில் தொடங்கி நீர்ப் பாசனம், பயிர்ப் பாதுகாப்பு, கண்காணிப்பு என வெவ்வேறு நிலைகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டு IOT வழி அவை உரச்செலவு தொடங்கி குறைந்த நீரில் விவசாயம் வரை பல நன்மைகளைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

Enertech என்கிற நிறுவனம் ARISTOTELES என்று பெயரிடப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, உலகெங்கும் இருக்கிற காற்றாலை மின் உற்பத்தி மையங்கள், சோலார் பார்க்குகள், ஹைட்ரோ பவர் ஸ்டேஷன்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து எங்கு அதிக தேவை இருக்கிறது, எங்கு எந்த முறை சரியாக வொர்க் அவுட் ஆகும் என்பவற்றையெல்லாம் சொல்லிவிடும். அதற்கு ஏற்ப விநியோகத்தையும் உற்பத்தியையும் மாற்றி அமைக்கலாமாம்.

நகரத்தின் முக்கியமான விஷயங்கள் அத்தனையையும் இணைத்து அதன்மூலம் நகரமேம்பாட்டுக்கு உதவப்போகிற ஸ்மார்ட் சிட்டி புராஜெக்ட்களுக்கு பின்னால் இருப்பதும் IOT­தான். டிரைவர்கள் தாங்களாகவே பார்க்கிங் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள், டிராபிக் பேட்டர்ன்களை கவனித்து அதற்குத்தக்க டிராபிக் லைட்களை இயக்குகிற தொழில்நுட்பம், தெருவிளக்குகளை இயக்குவதில் கடைப்பிடிக்கவேண்டிய சிக்கனமான வழிமுறைகள், இலவச வைபை வசதிகள், ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் மருத்துவமனைகள், ஸ்மார்ட் கட்டடங்கள்... இப்படி எல்லாமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும். அதன்மூலம் கிடைக்கும் தகவல்களின் அடைப்படையில் நகரநிர்வாகம் மற்றும் மேம்பாடுகளைத் தீர்மானிக்கலாம். நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெள்ளம் வரப்போகிறது என்றால், அதை முன்பே கணித்து, மக்களை அப்புறப்படுத்துவது, டிராபிக்கை மாற்றுவது, மின் இணைப்பைத் துண்டிப்பது, சாக்கடைகளை மூடுவது என எல்லாவற்றையும் எந்திரங்களே செய்துவிடும். நாம் பதற்றமில்லாமல் உட்கார்ந்து எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதைப் பார்த்தால் போதும்.

இப்படி மொத்தத்தையும் இணையத்தின் வழி இணைத்துவிட்டால் நம்ம பாதுகாப்பு என்னாவறது? அதுவும் இந்த எந்திரங்கள் எல்லாம் நம் வீட்டிலும் நாட்டிலும் நாம் பண்ணுகிற கொஞ்சல்களை, ஊடல்களை, கூடல்களை, சண்டைகளை, சச்சரவுகளைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் பதிவுசெய்துகொண்டும் இருந்தால் என்னாகும்?

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி