
கேம் சேஞ்சர்ஸ் - 3
எதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது. நம்மைச் சாதிக்கத் தூண்டுபவர்கள் நம் எதிரிகள்தாம். ஆண்டி ரூபினுக்கு இரண்டு எதிரிகள். ஒன்று ஆப்பிள்; இன்னொன்று மைக்ரோசாப்ட். இந்த ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றிபெற்றுவிட முடியுமென நம்பினார் ஆண்டி ரூபின். ஆனால் ஒரு பிரச்னை. அன்று அவரால் அலுவலகத்துக்கு வாடகை தர முடியாத சூழ்நிலை. கேட்க முடிந்த அனைவரிடமும் கேட்டாகிவிட்டது. கடைசியாக மிச்சமிருந்த பெயர் ஸ்டீவ். அவரிடம் கேட்டுவிட்டார். ஸ்டீவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. உடனே பணத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டார். வாடகைக்கே இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்த ஆண்டிதான் ஆப்பிளையும் மைக்ரோசாப்ட்டையும் எதிர்த்து ஜெயிப்பேன் என நம்பினார். கொஞ்சம் ஓவர்தான் இல்ல?
இல்லை!
எந்தத் தயாரிப்புக்காக அன்று ஆண்டி கடன் வாங்கினாரோ அதை இன்று உலகம் முழுவதும் 85% பேர் பயன்படுத்துகிறார்கள். போட்டியாளர் ஆப்பிளையோ 11% பேர்தான். மைக்ரோசாப்ட் பந்தயத்திலேயே இல்லை. ஆண்டி ரூபனின் அந்த ஜீபூம்பா ‘ஆண்டிராய்டு.’

ஆண்டிக்குச் சொந்த ஊர் நியூயார்க். அப்பா மார்க்கெட்டிங் நிறுவனம் வைத்திருந்தார். கிரெடிட் கார்டு பில்லுடன் இணைத்து அனுப்பப்படும் கேட்லாக்குகளை அவர்தான் உருவாக்குவார். அதற்காக எடுக்கப்படும் கேட்ஜெட்களின் புகைப்படங்களை வீட்டில் போட்டு வைத்திருப்பார். ஆண்டி ரூபினுக்கு அந்த கேட்ஜெட்களை சைட் அடிப்பதுதான் வேலை. அவற்றின் மீதுதான் க்ரஷ், காதல், காமம் எல்லாம்.
டிகிரி முடித்ததும் 1986-ல் ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயராகத் தன் கரியரைத் தொடங்கினார். 1989 முதல் 1992 வரை ஆப்பிளில் வேலை செய்தார். அப்போதே அவருக்குச் செல்லப்பெயர் ‘ஆண்டிராய்டு.’ ஆண்டிராய்டு என்றால் `ஆன் ரோபோ’ என்று பெயர். ஆப்பிளில் இருந்தபோது நண்பர் ஆனவர்தான் வாடகைக்கு உதவி செய்த ஸ்டீவ்.
ஆண்டிக்கு ஆப்பிளில் வேலை கிடைத்ததே ஒரு ‘வாவ்’ சம்பவம். ஆப்பிளில் பெரிய கையான, பில் கேஸ்வெல் என்பவர் தன் கேர்ள் ஃப்ரெண்டுடன் சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் இருவருக்கும் சிறு ஊடல்; கேஸ்வெல்லை அறையை விட்டு வெளியே தள்ளிவிட்டார் காதலி. கடற்கரை மணலை எண்ணிக்கொண்டிருந்த பில்லுக்கு ஆண்டி அன்றிரவு அடைக்கலம் கொடுக்க, கைம்மாறாக ஆண்டிக்கு ஆப்பிளில் வேலை தந்தார் பில்; ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது எப்போதும் நல்லது. அதுதான் உலகைச் சரியாக இயங்க வைக்கும் என்பது ஆண்டியின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் ஓப்பன் சோர்ஸ்மீது ஆண்டிக்குப் பெரிய ஆர்வத்தைத் தந்திருக்க வேண்டும்.
ஓப்பன் சோர்ஸ்?
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒருவர் கண்டுபிடிக்கும் விஷயமோ தரும் சேவையோ இலவசமாகக் கிடைக்காது. ஆனால் இன்று அப்படியில்லை. ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாமே இலவசம். வாடிக்கையாளர்களை விட்டுவிடலாம். நிறுவனங்களுக்கேகூட ஓப்பன் சோர்ஸ் சேவைகளைத் தருகின்றனர் சிலர். ஆண்டிராய்டும் ஓர் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்.
அப்போது அமெரிக்காவில் சர்வீஸ் புரொவைடர் கைகளில்தான் மொபைல் சந்தை. அவர்கள் வைப்பதுதான் விலை; தருவதுதான் சேவை. ஆண்டியின் ஐடியா அதைத் தகர்ப்பதாக இருந்தது. எல்லா மொபைலுக்கும் ஆண்டிராய்டை இலவசமாகத் தருவது; சர்வீஸ் புரொவைடர்ஸ் ஏதாவது சேவை தருவதாக இருந்தால் அதை ஆண்டிராய்டு இயங்குதளம் மூலம் தரலாம். அதற்கு ஆண்டிராய்டுக்கு அவர்கள் பணம் தர வேண்டும். யாரும் பணம் தரவில்லை. குறைந்தபட்சம் 10 லட்சம் மொபைல்களாவது விற்றால்தான் போட்ட காசே வருமென கால்குலேட்டரைத் தட்டிக் கணக்கு சொன்னார்கள். ஆண்டி சிரித்துக்கொண்டார். 2017-ல் விற்ற ஆண்டிராய்டு மொபைல்களின் எண்ணிக்கை 130 கோடி. ஆண்டி அன்று சிரித்தது நியாயமானதுதானே?
ஆண்டியுடன் ரிச் மைனர், நிக் சியர்ஸ் சேர்ந்துகொண்டனர். இன்னொரு ஆபத்பாந்தவன் ஆண்டிக்கு ஹலோ சொன்னார். அவர் கூகுளின் லாரி பேஜ்.

2005-ம் ஆண்டு. போன் உலகையே மாற்றியமைத்த ஆண்டிக்கு அன்று அவர் வாழ்க்கையையே மாற்றிய போன் வந்தது. அது கூகுளிடமிருந்து வந்த அழைப்பு. ஆண்டி கூகுளுக்குச் சென்றார். லாரிபேஜும் அவரின் சகாக்களும் காத்திருந்தார்கள். அவர்களுக்கு ஆண்டியின் T-Mobile Sidekick மொபைல் (ஆண்டிராய்டுக்கு முன்பு ஆண்டி முயற்சி செய்த விஷயம் அந்த மொபைல்) பிடித்திருந்தது. அதையே மெருகேற்றாமல் ஏன் அடுத்த முயற்சி என்றார்கள். இவர் பதில் சொன்னால், அவர்கள் வேறு ஒன்றைக் கேட்டார்கள். ஆண்டியால் அந்த உரையாடலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று மட்டும் தெரிந்தது. கூகுளுக்கு ஆண்டிராய்டின்மீது ஒரு கண். ஆனால், ஏன்?
அடுத்த சந்திப்புக்கு ஆண்டிராய்டின் மற்ற நிறுவனர்களும் சென்றார்கள். கூகுள் 50 மில்லியன் டாலர் தர முன்வந்தது. இந்திய ரூபாயில் 350 கோடி. 2005-ல், இன்னமும் லாபம் வராத நிறுவனத்துக்கு அது நல்ல தொகைதான். ஆண்டி கூகுளுக்கு ஹைஃபை தரலாமென முடிவெடுத்தார். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம்.
ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். கடலில் சென்றுகொண்டிருந்த கப்பலில் குடிநீர்ப் பற்றாக்குறை. கேப்டன் உதவியாளர்களிடம் “இப்போ கடல்ல இருந்து தண்ணி எடுங்க” என்றார். உப்புத்தண்ணீரை எதிர்பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். தண்ணீர் சுவையாக இருந்தது. அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று. அது கடலில் கலந்தபின்னும் சில மைல்களுக்குத் தன் தன்மையை விட்டுவிடாது. அதே சுவையுடனே இருக்கும்; அவ்வளவு பெரிய நதி அது. அமேசானின் வேகம் ஆண்டிக்கும் ஆண்டிராய்டுக்கும் உண்டு. கூகுளில் இணைந்தபின்னும் அவர்கள் தனியே தெரிந்தார்கள்.
“ஆண்டிராய்டு டீம் கூகுளுக்குள் ஒரு தனித்தீவு போலதானிருந்தது. அவர்கள் கூகுளுக்கு உள்ளே இயங்கும் ஒரு தனி ஸ்டார்ட் அப் போல” என்றார் ஒரு கூகுள் ஊழியர். அது உண்மைதான். ஆண்டி அதில் பிடிவாதமாக இருந்தார். கூகுள் அதை அனுமதித்தது.
மொபைல் விஷயத்தில் மூன்று பேர் முக்கியம். மொபைலைத் தயாரிப்பவர்கள், நெட்வொர்க் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள். நெட்வொர்க் புரொவைடர்ஸ்தான் இதில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் இருந்தார்கள். அதை ஐபோன் மாற்றியது. அது தனக்கென ஒரு ரசிகர்படையை உருவாக்கியது. அதனால், யார் நல்ல விலைக்கு ஆப்பிள் மொபைல் தருகிறார்களோ அந்த நெட்வொர்க்கிற்கு வாடிக்கையாளர்கள் மாறினார்கள். இப்போது ஆப்பிளைச் சமாளிக்க இன்னொருவரின் தேவை உருவானது. தளபதி ஒருவர் இருந்தால் தல ஒருவர் வேண்டும்தானே? ஆண்டிராய்டுக்குச் சில நிறுவனங்கள் ஓகே சொன்னார்கள். நெட்வொர்க் நிறுவனங்களும் ஆதரவு தந்தனர். ஓப்பன் சோர்ஸ் என்பதால் மொபைல் விலை குறைவு. அதனால் ஆப்பிளைவிட அதிக வாடிக்கையாளர்கள். ஆனால், மறைமுகமாக மூவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஆண்டிராய்டு. இந்த சந்தோஷ நாள்களுக்காகத்தான் இவ்வளவு காலம் பொறுமையோடு இருந்தார் ஆண்டி.
ஆண்டிராய்டு முன்னணி மொபைல் இயங்குதளமானது. ஆண்டிராய்டை ஆண்டியிடமிருந்து வாங்கி சுந்தர் பிச்சையிடம் கொடுத்தது கூகுள். கூகுளில் ரோபோட்டிக்ஸ் பிரிவை ஆண்டியிடம் கொடுத்தது கூகுள். ரோபோ தன் முன்னாள் காதலி என்பதால் சில ஆண்டுகள் அங்கே இருந்தார். ஆனால், அவருள்ளிருந்த தொழில் முனைவர் அவ்வப்போது எட்டிப் பார்த்து “அடேய். இன்னும் நீ இங்கதான் இருக்கியா?” எனக் கேட்க, வெளியே வந்துவிட்டார் ஆண்டி. இப்போது எஸென்ஷியல் என்ற ஆண்டிராய்டு மொபைலை மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ``இன்னொருமுறை இந்த உலகை என்னால் மாற்ற முடியும்” என நம்பி உழைக்கிறார் இந்த ரோபோ காதலன்.
சிறுவயதில் நமக்கு ஒன்றின் மீது வரும் ஆர்வம் இயல்பானது; தன்னெழுச்சியானது. அது மனசு மட்டுமே சொல்லும் வழி. அந்த வழியில் போனால் வெற்றியின் தூரம் குறைவு. ஆண்டி போனது அந்த வழியில்தான். வென்றது அதன் உதவியால்தான்.
- ஐடியா பிடிப்போம்
கார்க்கிபவா