Published:Updated:

``டிவியை நாம் ஒழுங்காதான் பார்க்கிறோமா?"- டாம் க்ரூஸ்ஸின் மோஷன் ஸ்மூத்திங் கேள்வி!

``டிவியை நாம் ஒழுங்காதான் பார்க்கிறோமா?"- டாம் க்ரூஸ்ஸின் மோஷன் ஸ்மூத்திங் கேள்வி!
``டிவியை நாம் ஒழுங்காதான் பார்க்கிறோமா?"- டாம் க்ரூஸ்ஸின் மோஷன் ஸ்மூத்திங் கேள்வி!

``தயவுசெய்து இப்படி டிவி பார்க்காதீர்கள்!" எனப் பலரும் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு இந்த மோஷன் ஸ்மூத்திங்கில் என்ன பிரச்னை?

நேற்று பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பதிவிட்ட வீடியோ ஒன்று உலகமெங்கும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன வீடியோ தெரியுமா? டாம் க்ரூஸ் வீட்டிலிருக்கும் டிவியில் அவர் நடித்த மிஷன் இம்பாசிப்பிள் ஃபால்அவுட் படத்தைச் சிறந்த முறையில் பார்க்கும் வழி என்ன என்ற வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அதில் இப்போது வெளிவரும் HDTV-களில் இருக்கும் `மோஷன் ஸ்மூத்திங்' (Motion Smoothing) தொழில்நுட்பம் எப்படி சினிமாவின் தரத்தைக் கெடுக்கிறது என்பதை விளக்கியிருந்தார் அவர். ஏற்கெனவே ஹாலிவுட்டைச் சேர்ந்த பலரும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்திவருகின்றனர். ஆமா அது என்ன பாஸ் மோஷன் ஸ்மூத்திங்?

சில நேரங்களில் ஒரு படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கும் டிவியில் பார்ப்பதற்கும் வித்தியாசமாக, அதே சமயம் தெளிவாக இருக்கும். இதற்கு காரணம் இதுதான். உங்கள் டிவியில் வீடியோ ஸ்மூத்தாக ஓடுவதைப் போன்ற ஓர் உணர்வைத் தருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த மோஷன் ஸ்மூத்திங். பொதுவாக நாம் வீடியோக்கள் பார்க்கும்போது ஏதேனும் ஒரு பொருளோ நபரோ வேகமா நகரும்போது, நமக்கு அது கொஞ்சம் தெளிவற்றதாக தெரியும். நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான். இதை `மோஷன் ப்ளர்' (Motion Blur) என்று அழைப்பர். சினிமா பெரும்பாலும் 24 fps-ல் (frames per second) தான் எடுக்கப்படுகிறது. அதாவது ஒரு வினாடிக்கு 24 படங்கள்/ஃப்ரேம்கள் பதிவுசெய்யப்படும். இத்தனை ஃப்ரேம்கள் இருந்தால்தான் நமக்கு நிஜத்தில் பார்ப்பதைப் போல வீடியோவிலும் `மோஷன் ப்ளர்' இருக்கும். ஆனால் உங்களுக்கு எந்த ஒரு தெளிவின்மையுமின்றி வீடியோ மிகத் துல்லியமாக தெரிவதற்காக இந்த மோஷன் ஸ்மூத்திங் டிவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

இது எப்படிச் செயல்படுகிறது?

24fps-ல் ப்ளே ஆகும் வீடியோவை இது 48fps-ல் ப்ளே செய்யும். அதாவது இதுவே தானாக நடுவில் ஃப்ரேம்களைச் சேர்த்துக்கொள்ளும். இதை முந்தைய மற்றும் அடுத்துவரும் ஃப்ரேம்களை வைத்து உருவாக்குகின்றன இந்த டிவிக்கள். இதை வீடியோ இன்டெர்போலேஷன் (video interpolation) என்று அழைப்பர். இதன்மூலம் ஸ்மூத்தான ஒரு வீடியோ நமக்குக் கிடைக்கும்.

இது நல்ல விஷயம்தானே, இதில் என்ன பிரச்னை?

விளையாட்டு மற்றும் பிற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு இது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், படங்கள் பார்க்கும்போதுதான் பிரச்னையே வரும். பல நேரங்களில் டிவியில் படம் பார்க்கும்போது சாதாரண டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பதைப்போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படும். இதற்குக் காரணம், டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் 30fps-ல்தான் எடுக்கப்படுகின்றன. இதனால் ஓர் உண்மையைத் தாண்டிய ஒரு தெளிவு இவற்றில் பிரதிபலிக்கும். இதை ஹைப்பர் ரியலிசம் என்று கூறுவர். இது சினிமாவுக்கான அழகையே கெடுத்துவிடும். மேலும் உருவாக்கப்படும் புது ஃப்ரேம்கள் தேவையற்ற உருவங்களை வீடியோக்களில் அவ்வப்போது உருவாக்க வாய்ப்புண்டு. 

இதைப் புரிந்துகொண்டு, படம் பார்க்கும்போது இந்த `மோஷன் ஸ்மூத்திங்' தொழில்நுட்பத்தை ஆஃப் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் டாம் க்ரூஸ். இதை வீடியோவில் அவருடன் இருந்த இயக்குநர் கிறிஸ் மேக்குவரியும் வலியுறுத்தினார். அப்போதுதான் படம் எடுப்பவர்கள் எப்படி எடுக்கிறார்களோ அப்படியே படத்தைக் காணமுடியும் என்றார் அவர். இதற்கு ஏற்கெனவே ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை ஆஃப் செய்யமுடியுமா?

பாதிக்கும் மேலான HDTV-களில் வாங்கும்போதே இது ஆனில்தான் இருக்கும். ஆனால் இதைத் தேவைப்படும்போது கண்டிப்பாக ஆஃப் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இது ஒரு டிவிக்கும் இன்னொரு டிவிக்கும் வேறுபடும். உங்கள் டிவிக்கு இதை எப்படிச் செய்வது என்பதை இணையத்தில் தேடினால் எளிதில் கண்டறிந்துவிடலாம். இந்த மோஷன் ஸ்மூத்திங் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு நிறுவனமும் வேறு வேறு பெயரில் அழைக்கும். சோனி இதை `Motion Flow' என்றும் சாம்சங் இதை 'Auto Motion Plus' என்றும் எல்ஜி இதை 'TruMotion' என்றும் அழைக்கிறது.

வீடியோ லிங்க்: https://twitter.com/twitter/statuses/1070071781757616128

இந்த வீடியோவைப் பார்த்து உலகமெங்கும் 'மோஷன் ஸ்மூத்திங்' என்றால் என்ன, இதை ஆஃப் செய்வது எப்படி எனப் பலரும் தேடத்தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சினிமா துறையினர் டிவி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசிவருவதாகவும் டாம் க்ரூஸ் தெரிவித்துள்ளார். HDTV வைத்திருப்பவராக இருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து வித்தியாசம் என்னவென்று பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு