ஆர்கேஞ்சலின் கதை

மே
ரி, சிங்கிள் மதர். தன் மூன்று வயது மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவள். ஒருநாள் பாப்பாவைப் பூங்காவில் தொலைத்துவிடுகிறாள். ஊரே தேடி பாப்பாவைக் கண்டுபிடிக்கிறது. மகளைத் தன் அணைப்பிலேயே வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறாள். தொழில்நுட்பம் உதவுகிறது. ARKANGEL என்கிற கருவியைப் பாப்பாவின் தலையில் நிரந்தரமாகப் பொருத்துவதன் மூலம், பாப்பாவைக் கண்காணிக்க முடியும் என்று தெரியவருகிறது. IPad மாதிரியான TAB மூலம் பாப்பா என்ன பார்க்கிறாள், யாரோடு பேசுகிறாள், எங்கே செல்கிறாள், உடல்நிலை எப்படி, என்ன உணவு தரவேண்டும் என்பதை எல்லாம் கண் காணிக்க முடியும். அவள் எதைப் பார்க்கக்கூடாது, எதைக் கேட்கக்கூடாது என்பதையும் சென்சார் செய்யலாம்.

சர்வைவா - 29

சென்சார் பட்டனைத் தட்டினால் பாப்பாவின் கண்களுக்கு அந்தக்காட்சிகள் எல்லாம் மங்கலாகத் தெரியும். யாராவது கெட்டவார்த்தைகள் பேசினால் அது மட்டும் ம்யூட் ஆகிவிடும். பாப்பா யாரிடமாவது பேசினால் அவள் கண்களே கேமராவாக மாறி IPad-ல் காட்சிகள் தெரியும்.

ஆனால் பாப்பா வளரவளர இந்த ஆர்கேஞ்சலால் அவள் மனநிலை பாதிக்கப்படுகிறது. உலகைப் புரிந்துகொள்வதில் பாப்பாவுக்குக் குழப்பம் வருகிறது. எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறாள். மருத்துவர் ஆலோசனைப்படி ஆர்கேஞ்சலை ஆஃப் செய்துவிட முடிவு செய்கிறாள் மேரி. ஆர்கேஞ்சலை மொத்தமாக. நீக்கினால் ஆபத்து. ஆஃப் செய்துவிட்டு அந்தக் கண்காணிப்பு IPad-ஐயும் தூக்கிப் பரணில் போட்டுவிடுகிறாள். அடுத்த சில ஆண்டுகளில் ஆர்கேஞ்சல் புராஜெக்ட்டே அரசால் தடை செய்யப்படுகிறது.

மகளுக்குப் பதினைந்து வயதாகிறது. மற்ற டீன்ஏஜ் பிள்ளைகளைப்போலவே எல்லாவற்றையும் முயற்சி செய்துபார்க்கிற துறுதுறு பெண்ணாக இருக்கிறாள். தன் காதலனோடு சேர்ந்து ஊர் சுற்றுகிறாள். போதை மருந்துகளை முயற்சி செய்துபார்க்கிறாள். அம்மாவிடம் பொய் சொல்கிறாள். காதலனோடு டேட்டிங் செல்கிறாள். மகள் தன்னை மீறிச் செல்வதாக மேரி உணர்கிறாள். அவளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறாள். மீண்டும் ஆர்கேஞ்சலைக் கையிலெடுக்கிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 29மகளை ஒவ்வொரு விநாடியும் கண்காணிக்கிறாள். மகளின் காதலனைச் சந்தித்து  `இனிமேல் என் மகளோடு பேசக்கூடாது, நான் நீங்கள் செய்ததை எல்லாம் பார்த்துவிட்டேன், வீடியோ ஆதாரம் இருக்கிறது போலீஸுக்குப் போவேன்’ என மிரட்டுகிறாள். காதலன் காரணமே சொல்லாமல் பாப்பாவிடம் இருந்து விலகுகிறான். பாப்பாவுக்குக் குழப்பம் வருகிறது. இவனுக்கு என்ன ஆச்சு... ஏதோ நடந்திருக்கிறது என யூகிக்கிறாள்.

ஒருநாள் பள்ளியில் மகள் கடுமையாக வாந்தி எடுக்கிறாள். மருத்துவரிடம் செல்லும்போது கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டதால் வந்த வாந்தி என்பது தெரியவருகிறது. அவள் அம்மா தரும் உணவு தவிர வேறு எதையுமே உண்ணாதவள். வீட்டிற்குச் சென்று குப்பைத்தொட்டியைக் கிளறுகிறாள், அங்கே கருத்தடை மாத்திரை கவர்கள் கிடைக்கின்றன. கண்காணிப்பு IPad-ஐத் தேடுகிறாள். அது ஆன் செய்யப்பட்டது தெரியவருகிறது. அதில் அம்மா என்னவெல்லாம் பார்த்திருக்கிறாள் என்பதை மெமரியில் காட்டுகிறது. அம்மா தன்னைக் கண்காணித்தது அவளுக்குப் புரிகிறது. தன் காதலனோடு உடலுறவு கொண்ட காட்சிகளைக்கூட அம்மா பார்த்ததை அறிந்து, அதிர்ந்துபோகிறாள். கோபம் வெறியாக மாறுகிறது.

அம்மாவோடு சண்டையிடுகிறாள். கோபத்தில் அம்மாவை அந்த IPad-ஆல் அடித்து மண்டையை உடைக்கிறாள். IPad உடைந்து ரிப்பேராகி சென்சார் பட்டன் ஆனாகிவிடுகிறது. அம்மாவுக்கு எந்த அளவுக்குக் காயம் ஏற்படுகிறது என்பதை மகளால் பார்க்க முடியாதபடி செய்கிறது. ரத்தம்  Blurr ஆகத் தெரிகிறது. அம்மாவைக் கொன்றுவிட்டதாக நினைத்து வீட்டை விட்டே மகள் ஓடிவிடுகிறாள். சில மணிநேரத்துக்குப் பிறகு தலையில் பலத்த காயங்களோடு கண்விழிக்கும் மேரி மகளை மீண்டும் ஆளில்லாத் தெருக்களில் தேடத்தொடங்குகிறாள். உடைந்த IPad-ல் மகளுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிறாள்.

‘Black mirror’ வெப்சீரிஸில் வருகிற கதை இது. இது வெறும் குழந்தை வளர்ப்பு குறித்த கதை மட்டுமே இல்லை. நம் அதிநவீனக் கண்காணிப்புத் துறையின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் கதை. குழந்தைகளை மட்டுமல்ல; பெரியவர்களையும் இப்படித்தான் கண்காணிக்கப்போகிறோம், அல்லது கண்காணிக்கப்படப்போகிறோம்.

இன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக  Personalised Advertisments சாத்தியம் ஆகியிருக்கிறது. அதுபோல தனிப்பட்ட முறையில் தணிக்கை முறையும் சாத்தியமாகும். இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ் (IOT) பர்சனல் தணிக்கை முறையை இன்னும் எளிதாக்கும்.

இன்று வரை கண்காணிப்புக் கருவிகளைப் பொதுவான இடத்தில் பொருத்தித்தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்  IOT கருவிகளின் கண்காணிப்பு இன்னும் பர்சனல் ஆகிவிடும். நம் உடலில் நமக்கே நமக்கென்று ஒரு சிசிடிவி கேமரா. அதனால்தான்  IOT குறித்து எல்லோருமே அஞ்சுகிறார்கள். அதன் திரளான பலன்களைத் தாண்டி  Privacy and Security அச்சுறுத்துகிறது. 

சர்வைவா - 29

ஸ்மார்ட் வீடு ஒன்றில் வாழ்பவர், காலையில் எத்தனை மணிக்கு எழுகிறார், என்ன உணவு உண்கிறார், எப்படிப் பல் விளக்குகிறார், யாரைக் காதலிக்கிறார், காதலிப்பவருக்கு என்ன மெசேஜ் அனுப்புகிறார், அலுவலகத்திற்கு காரில் போகிறாரா, பைக்கிலா, அலுவலகத்தில் என்ன வேலை, எப்படிப்பட்ட வேலை, எவ்வளவு சம்பளம், கழிவறையில் எவ்வளவு நேரம் செலவு பண்ணுகிறார் இப்படிப் பல அரிய தகவல்கள்  IOT-யில் சேமிக்கப்படும்.  Privacy at stake! இந்தத் தகவல்கள் எல்லாம் இந்த செட் அப்களை உருவாக்கிய நிறுவனங்களுக்குச் சென்றுகொண்டேயிருக்கும். இத்தகைய தகவல்களைக் கொண்டு உங்களுக்கு டூத்பேஸ்ட் விற்கலாம். அல்லது உங்களை உளவு பார்க்கலாம், நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்கிற உங்கள் மனநிலையை அறிந்துகொண்டு அதைக் கட்சிகளுக்கு விற்கலாம்.

வீட்டிற்குள் ஓர் ஒற்றன்

சென்ற ஆண்டு அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் நகரின் ஒரு வீட்டில் பேட்ஸ் என்பவர் தன்வீட்டில் இரவு விருந்துக்கு நண்பரை அழைக்கிறார். இருவரும் நன்றாகக் குடித்துவிட்டு இரவெல்லாம் கால்பந்தாட்டம் பார்க்கிறார்கள். பிறகு பேட்ஸ் ஒருமணிக்கு உறங்கச் செல்கிறார். விடிந்ததும் பார்த்தால் அவருடைய பாத்டப்பில் நண்பர் இறந்துகிடக்கிறார். கொலைப்பழி பேட்ஸ் மீது விழுகிறது. அந்த இரவில் நடந்தது என்ன என்பதைத் துப்புதுலக்கக் கிளம்புகிறது போலீஸ். பேட்ஸ் வீட்டில் அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் பயன்படுத்துவது தெரியவர, அமேசானின் உதவியை நாடியது போலீஸ். அந்த இரவில் என்ன பேசப்பட்டது என்பது எக்கோவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் காவல்துறையின் ப்ளான். எக்கோ எல்லாவற்றையும் பதிவு செய்திருந்தது. போதையில் விழுந்துதான் நண்பர் இறந்தார் என்பது தெரிந்தது. அதை ஸ்மார்ட் வாட்டர் சிஸ்டமும் உறுதிசெய்தது. பேட்ஸ் வழக்கிலிருந்து தப்பித்தார்.

ஆனால், முதல்முறையாக ஸ்மார்ட் கருவிகள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கின்றன, அவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டிருக்கின்றன என்பது உலகுக்குத் தெரிய வந்தது. 2017-ல் ஸ்மார்ட் டிவிகளின் வழி மால்வேர் ஒன்றைப் பரப்பி, சிஐஏ-வின் ரகசியங்களைக்கூடத் திருடியிருக்கிறார்கள். ஸ்மார்ட் டிவியும் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருக்கிறது.

IOT கருவிகள் ஒருபக்கம் நம் தகவல்களை நமக்கே தெரியாமல் சேமித்து நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் கருவிகள் நம் சமூக வலைதள விஷயங்களை நோட்டம் விடுவதன் வழியாக, நம்முடைய கேட்ஜெட்கள் வழியாகவும்கூட நம்மை உளவு பார்க்கின்றன.

இன்னொரு பக்கம்  IOT கருவிகளுக்கு ஹேக்கர்களால் காத்திருக்கிற ஆபத்து. நம் வீட்டு ஸ்மார்ட் கதவுகளை யாரோ எதிரிகள் ஹேக் செய்து செயல்படவிடாமல் செய்துவிட்டால் வீட்டுக்குள்ளேயே போக முடியாமல் திணறுவோம். அல்லது வீட்டிலேயே அடைந்துகிடக்கவும் வேண்டியிருக்கும். இதையே ஒரு ஸ்மார்ட் சிட்டி அளவில் யோசித்துப்பார்த்தால் கொஞ்சம் வசதியான பெரிய பட்ஜெட் ஹேக்கர்களால் ஒரு நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும்.

அதனால்தான்  IOT எந்திரங்களைத் தயாரிக்கிற நிறுவனங்கள் எல்லாம் செக்யூரிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமீபத்தில் ஹேவெல்ஸ் நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட் கீசர்களின் சைபர் செக்யூரிட்டி பற்றியெல்லாம் பங்குதாரர்களின் ஆண்டிறுதி அறிக்கையில் குறிப்பிட்டு எழுதியது. காரணம் இந்த கீசர்கள் வாடிக்கையாளர்களின் செல்போனோடு இணைக்கப்பட்டிருக்கும். சைபர் செக்யூரிட்டிதான் எதிர்காலத்தின் வியாபாரத்தைக் கட்டுப்படுத்தப்போகிறது.

ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார விஷயம் மட்டுமல்ல. நாடுகளின் பாதுகாப்பு தொடர்பானவை. ஸ்மார்ட் தேசங்கள் நாளை போரில் இறங்கினால் ஹேக்கிங்தான் முதல் ஆயுதமாக இருக்கும்...  Cyberwarfare.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி