“நாம் சீக்கிரமே மனித உடலில் பொருத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைப் பார்க்கப்போகிறோம். இவை நமக்கு பலப்பல மருத்துவப் பலன்களை அளிக்கக்கூடியவை. பாதிக்கப்பட்ட செல்கள், எலும்புகள், தசைகளைச் சரிசெய்யும்.  அந்த பாகங்களை எல்லாம் மேலும் வலுப்படுத்தக்கூடும். குறிப்பாக, நம் சிந்திக்கும் திறனை அவை அதிகமாக்கப்போகின்றன. நிச்சயமாக அது மனிதகுலத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.’’

சர்வைவா - 30

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கிற கமிட்டிகளில் ஒன்று Artificial intelligence committee. இந்தக்குழு அவ்வப்போது கூடி, செயற்கை நுண்ணறிவுத்துறையில் நாடு அடைந்துவரும் புதிய முன்னேற்றங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதற்கு ஏற்றபடி புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப்பார்ப்பது, நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுவது என நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 30இத்துறையில் முன்னணியில் இருக்கிற விஞ்ஞானிகளும் துறை வல்லுநர்களும் இந்தக் கமிட்டியில் இருப்பார்கள். ஜான் மெக்னமாரா. ஐபிஎம் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். இந்தக் கமிட்டியிலும் இருக்கிறார். அவர் சென்ற ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவுத்துறை தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்ட செய்தி பரவலாக விவாதிக்கப்பட்டது. அவர் முன்வைத்த விஷயம்தான் முதல் பாராவில் படித்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புற்றுநோயைக் குணப்படுத்த, உடலுக்குள் பொருத்தக்கூடிய டி.என்.ஏ கணினி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழித்துவிடக்கூடியதாக இருக்குமாம். இந்த ஆராய்ச்சி முடிவதற்கு இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும்... ஆனால் உடலில் பொருத்திக்கொள்ளக்கூடிய எந்திரங்கள் தயாராகிவிட்டன. அதை உடல் பாகங்களில் மட்டுமல்லாது மூளையிலும் பொருத்திக்கொள்ளப் போகிறோம் என்பதுதான் புதிய செய்தி.

எனக்குள் ஒருவன்!

உன்னோடே கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமானதாயிருக்கும்.

- யாத்திரகாமம் 34:10

கடவுள் இப்படி எல்லாம் சொன்னாரா தெரியவில்லை. ஆனால் IOT, Blockchain, AI இந்த மூவர் அணி செய்யக்கூடிய காரியங்கள் அப்படித்தான் இருக்கப் போகின்றன. இந்த மூன்று அசுர தொழில்நுட்பங்களை இணைத்துப் பயன்படுத்துவதன் வழி நாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களைச் செய்ய முடியும். நோய்கள் வருவதற்கு முன்பே அதை அறிந்துகொள்வதில் தொடங்கி, அரசாங்கத்தை நடத்துவது, பங்குச்சந்தை கணிப்புகள், ஸ்மார்ட் ஹோம் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி வரை நிறைய செய்யவிருக்கிறோம். எஸ்டோனியா மாதிரி சில உதாரணங்களையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். ஆனால் இந்தக் கூட்டணியின் உதவியோடு நாம் செய்யப்போகிற மிகப்பெரிய ஆராய்ச்சி MIND CONTROL.

இதுவரை நாம் பார்த்த செயற்கை நுண்ணறிவுத்துறை ஆராய்ச்சிகள் எல்லாமே அறிவில்லாத மெஷின்களுக்கு அறிவூட்டுகிற ஆராய்ச்சிகள்தான். ஒருவேளை இதே தொழில்நுட்பத்தை மனிதர்கள் மூளையில் பிரயோகித்துப்பார்த்தால் என்னாகும்? படைச்சவன் தலையிலேயே ­Chip வைத்துதான் பார்ப்போமே...

சர்வைவா - 30

மனித உடல்கூட கொஞ்சம் சிக்கலான, புரிந்துகொள்ளக் கடினமான எந்திரம்தான். பல ஆயிரம் ஆண்டுகளாக நாமும் ஆராய்ச்சி பண்ண்ண்ணிக் கொண்டேடேடேடேயிருக்கிறோம். அப்படிப்பட்ட உடல் எந்திரத்தின் Bio-CPU அமைப்புதான் மூளை. 8600 கோடி நியூரான்களைக்கொண்டு காதலித்து, துரோகம் செய்து, அழுது, கொலை செய்து, காமெடி பண்ணி, சர்வைவா எழுதி ஏகபோகமாகத் தானே சிந்தித்து முடிவெடுத்து வாழும் தலைமைச் செயலகம்.

மனிதகுலம் இன்று இந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தில் முன்னேறக் காரணம் மிஸ்டர் 8600-தான். அந்த 8600 கோடி நியூரான்களில் நம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது என்னவோ சில நூறு நியூரான்களைப் பற்றித்தான். மூளையின் செயல்பாடுகள் அந்த அளவுக்குப் புதிர்கள் நிறைந்தவை. அப்படிப்பட்ட வித்தைக்காரனுக்கு AI தொழில்நுட்பத்தைத் சேர்த்துக்கொடுத்தால் என்னாகும்? ஏற்கெனவே தனியாகச் சிந்திக்கிற மூளைக்கு ஒரு Sidekick... துணைவன், வேலைக்காரன்... வீரம், விவேகம் எல்லாம் அதிகரித்து சாதா மேன்கள் எல்லாம் சூப்பர்மேன்கள் ஆகிவிடுவார்களா?

சர்வைவா - 30எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்காக, வாழ்வியலுக்காக நம் அன்றாடப் போட்டி என்பதே அறிவுள்ள எந்திரங்களோடுதான். அறிவிலும் செயல்திறனிலும் நம்மைத்தாண்டி எங்கோ போகப்போகின்றன இந்த எந்திரங்கள். அந்த மெஷின்களைப்போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது நமக்கும் மாற்றம் முன்னேற்றம் வேண்டும்தானே. அதனால்தான் உலகம் முழுக்க `மனிதன் 2.0’ ஆராய்ச்சிகள் பரவலாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன! 

இரண்டுவகையில் நம் மூளையில் AI- யால் செயல்பட முடியும்.

1 - நம் மூளைக்குள் இருந்துகொண்டு நம் உடல்பாகங்களையே இயக்குவது அல்லது கட்டுப்படுத்துவது

2 - நம் மூளைக்குள் இருந்துகொண்டு நம் சிந்தனைகளைப் புரிந்து அதன் வழி வெளியே இருக்கிற எந்திரங்களை, கருவிகளை இயக்குவது அல்லது கட்டுப்படுத்துவது

இந்த இரண்டும்தான் MIND CONTROL ஆராய்ச்சிகள் அத்தனைக்குமான அடிப்படை. இந்த வாரம் நம்பர் ஒன்.

மனிதன் 2.0

நம் தலையில் ஒரு சிப் பொருத்தப்படுகிறது. அந்த சிப் நம் மூளையின் செயல்பாடுகளை ஆராயும். ஒவ்வொரு விநாடியும் நாம் என்ன சிந்திக்கிறோம். என்ன பார்க்கிறோம். என்ன சாப்பிடுகிறோம். என்ன கற்பனை செய்கிறோம் என்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கும். ஃபிட்பிட் ஸ்மார்ட் வாட்சுகள் எப்படி நம்மைக் கண்காணிக்கிறதோ அப்படி நம் உடல் உறுப்புகள் எது எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராயும். அதிகமாக ஆல்கஹால் குடிப்பதால் கல்லீரல் சரியாக இயங்கவில்லையா? உடனடியாக நம்மை எச்சரிக்கும். நாம் கோபப்படும்போதோ அல்லது உணர்ச்சி வசப்படும்போதோ நம்முடைய இதயத்துடிப்பு, மூளைச் செயல்பாடு முதலானவற்றை ஆராய்ந்து,  கட்டுப்படுத்தும் உதவிகளைச் செய்யும்.

இப்படி AI உதவியோடு நம் கால்களை இயக்க முடிந்தால் உசேன் போல்ட்டைப் போல வேகமாக ஓடி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும். ஸ்பைடர் மேன் போல கட்டடங்களுக்கு நடுவில் அங்குமிங்கும் தாவி உலகத்தைக் காப்பாற்றலாம். உலகின் எந்த அறிவையும் சொடக்கு போடும் நேரத்தில் கற்கலாம். காதல் தோல்வி, கடன் தொல்லை மாதிரி தேவையில்லாத நினைவுகளை அழித்து ஆக்கபூர்வமாகச் செயல்படலாம். குங்பூ, கராத்தே சண்டைகள் போடலாம். தலைக்குள் இருக்கும் நம் பங்காளி. நமக்காக எல்லாமே கற்பான், நமக்காகச் சிந்திப்பான், நமக்காகச் சண்டைபோடுவான், நமக்காக முடிவுகள் எடுப்பான், ஆலோசனை வழங்குவான்.

இதை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள `UPGRADE’ திரைப்படம் பாருங்கள்.

ஒரு விபத்தில் சிக்குகிறான் நாயகன், அதில் அவன் உடல் மொத்தமும் செயலிழந்துபோகிறது. அவனுடைய மனைவி கொல்லப்படுகிறாள். அவனுடைய மூளையில் பொருத்தப்படுகிற AI சிப் ஒன்று அவனுக்கு மீண்டும் பழையபடி வாழ்வதற்கான வலிமையைத் தருகிறது. அவனுடைய உடலை முன்புபோல இயக்கமுடிகிறது. அந்த AI அவனுக்குள் இருந்துகொண்டு மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க உதவுகிறது... மண்டைக்குள் கேட்கும் குரலோடு சிநேகமாகிறான். நாயகனை மீறி AI இயங்க ஆரம்பிக்கும்போது பிரச்னை வெடிக்கிறது... நம் சிந்தனைகளை கட்டுப்படுத்துகிற AI ­பற்றி இன்னும் கூட நன்றாக விளங்கிக்கொள்ள இப்படம் உதவும்.

இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் கேட்க அதீத கற்பனைபோல இருந்தாலும், நம் மூளையைப் புரிந்துகொண்டு உடலைக் கட்டுப்படுத்துகிற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. Neurogress என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர்அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது AI, IOT மற்றும் பிளாக்செயின் கூட்டணிதான்.

சர்வைவா - 30நம் மூளையில் சில சென்சார்களைப் பதிப்பதன் மூலம், நியூரான்களின் ஆணைகளை அப்படியே எந்திரங்களுக்குப் புரிகிற மொழிக்கு மாற்றுகிறார்கள், அதன் வழி, கருவிகளை எல்லாம் எந்த இணைப்பும் இல்லாமல் நேரடியாக இயக்க முடியும். இப்போதைக்கு மூளையின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கைக் கரம் (Artificial limb) ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இது விபத்துகளில் கைகளை இழந்தோருக்குப் பயன்படும். நிஜக்கை போலவே இயங்கும். மூளையில் ’கிளாஸை எடு’ என்று நினைத்தால் போதும், நம் செயற்கைக் கரம் கிளாஸை எடுக்கும். அந்தத் துப்பாக்கியை எடுத்துச் சுடு என்று நினைத்தால் போதும்...

Neuro controlled smart environment ஒன்றையும் உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். வீட்டில் நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாக் கருவிகளையும் சிந்தனைகளாலேயே கட்டுப்படுத்துவது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு, உடல்நலம் குன்றியவர்களுக்கு, வயதானவர்களுக்குப் பயன்படக்கூடிய முக்கியமான தொழில்நுட்பமாக இருக்கும் என்கிறார்கள்.

Braingate என்கிற தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக இத்தகைய முயற்சிகளில்தான் இருக்கிறது. Cyberkinetics என்கிற நிறுவனம் இந்த ஆராய்ச்சிகளில் தீவிரமாக இருக்கிறது. மனித மூளையையும் கணினியையும் வயர்கள் இல்லாமல் இணைக்கிற தொழில்நுட்பம்தான் இந்த பிரெய்ன்கேட். மூளைக்குள் மிகமிகச்சிறிய அளவிலான நூற்றுக்கணக்கான எலக்ட்ரோடுகள் கொண்ட ஒரு சிப் பொருத்தப்படும். இது மூளையில் இருக்கிற நியூரான்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு அந்தச் செய்தியைக் கணினிக்கு அனுப்பும். இதுவும் உடல் திறன் இழந்தோர் யார் உதவியும் இல்லாமல் கருவிகளையும் செயற்கைக் கரங்களையும் கால்களையும் இயக்கவும் உதவப்போகிறது என்கிறார்கள்.

 ‘We Must Hack Our Brains or Be Destroyed by AI’ இது எலான் மஸ்க் சொன்ன ஒரு கருத்து. உலகில் யாரையும்விட இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சுவோர் பட்டியலில் முதலிடம் எலானுக்குத்தான். அதனால்தான் பல கோடிகளைக் கொட்டி இவ்வகை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய `Neuralink’ என்கிற நிறுவனம் `Neural lace’ என்கிற தொழில்நுட்பத்தைத் தீவிரமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன தொழில்நுட்பங்கள்போல இல்லாமல் மூளையில் இருக்கிற ஒவ்வொரு நியூரானின் செயல்பாடுகளையும் தனித்தனியாக இதன்மூலம் கவனிக்க முடியும். நியூரல் லேஸ் மூலம் நம் தலைக்குள் இருக்கிற கணினியும் நாம் பார்ப்பதைப் பார்க்கும், நாம் கேட்பதைக் கேட்கும், நாம் சாப்பிடும் உணவின் ருசியை அறிந்துகொள்ளும், நம்முடைய அசைவுகள் தொடங்கி சகலத்தையும் பார்த்து சேமித்துவைக்கும். இதுவும் உடல்நலமில்லாதவர்கள், முதியவர்கள், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக உருவாக்கப்படுவதாகச் சொல்கிறார் எலான் மஸ்க்.

இப்படி ஆளாளுக்கு நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு, முதியோர் நலனுக்கு எனச் சொன்னாலும் அதற்காக ஏன் இவ்வளவு கோடிகளைச் செலவழிக்க வேண்டும். நம் தொழில் நுட்ப ஜாம்பவான்கள் எல்லாம் அவ்வளவு நல்லவர்களா என்ன...

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism