மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 5

கேம் சேஞ்சர்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 5

கேம் சேஞ்சர்ஸ் - 5

ல்லோர் வாழ்க்கை யிலும்  ‘ஸ்பார்க் மொமண்ட்ஸ்’ நிகழ்வ துண்டு. அதுவரையிலான வாழ்க்கையை அந்த ஒற்றை நிகழ்வு புரட்டிப்போடும். சீனாவைச் சேர்ந்த லீ ஜூன் வாழ்க்கையை அப்படி மாற்றியமைத்தது ஒரு புத்தகம். 

கேம் சேஞ்சர்ஸ் - 5

அந்தப் புத்தகத்தின் பெயர் ’Fire in the Valley: The Making of the Personal Computer’. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் போன்றவர்களை நாயகனாகக் கொண்டாடிய புத்தகம். 1988-ம் ஆண்டு அதை வாசித்தபோது லீக்கு வயது 19. அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டப் புரட்ட லீ மனதுக்குள் ஒரு கற்பனை சாம்ராஜ்யம் வளர்ந்தது. ‘ஒரு நாள் நானும் ஸ்டீவ் போல பெரிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவேன்’ என அவருக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தன் வாழ்வின் இலக்காக அதை அமைத்துக் கொண்டார் லீ. அன்று முதல் அவர் கால்கள் சென்ற திசையின் முடிவு, ஆப்பிளுக்கு இணையான ஒரு டெக் நிறுவனம். அவ்வளவுதான். இத்தனைக்கும் கணினித்துறை ஒன்றும் லீயின் விருப்பம் கிடையாது. அவர் நண்பர்கள் சேர்ந்ததால் அவரும் சேர்ந்தார்.

அப்படியே 2018-க்கு வந்துவிடுவோம். இன்று உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 3வது இடத்திலிருப்பது ஆப்பிள். அதற்கடுத்து, நான்காவது இடத்தில் இருப்பது ஷியோமி. அதன் நிறுவனர் லீ ஜூன்.

“ ‘பில் கேட்ஸும் ஸ்டீவ் ஜாப்ஸும் இளம் வயதில் செய்த ஒன்றை என்னால் ஏன் செய்ய முடியாது?' இதை நினைக்க நினைக்க என் ரத்தம் சூடானது. வெறி தலைக்கேறியது. இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்க யார் பணம் தருவார், பேங்க் அக்கவுன்ட் எப்படித் தொடங்குவது என்பதையெல்லாம் அப்போது யோசிக்கவேயில்லை. ஜெயிக்க வேண்டும் அவ்வளவுதான்” என அந்த நாள்களைப் பற்றிச் சொல்கிறார் லீ.

இன்றைய தேதியில் ஷியோமியின் மதிப்பு 3,25,000 கோடி. லீயின் சொத்து மதிப்பு 1,42,000 கோடி. (20 பில்லியன் அமெரிக்க டாலர்). உலகின் 118வது பணக்காரர் இந்த 49 வயது அங்கிள் தான். தன் கனவை நனவாக்க லீ எடுத்துக்கொண்டது 28 ஆண்டுகள். ஆனால், அதை எப்படிப் பிரித்துக்கொண்டார் என்பதிலிருக்கிறது சுவாரஸ்யம். வெற்றிக்கான சூட்சுமம்.

1991-ல் டிகிரியை முடித்தார் லீ. உடனே, ஆப்பிளுடன் சண்டை போடுவது ‘லூஸுத்தனம்’ என்பது லீக்குத் தெரியும். அப்போது மைக்ரோசாஃப்ட் போலவே கிங்சாஃப்ட் என்ற சீன நிறுவனம் இருந்தது. அவர்கள் வேலை மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் போன்ற மென்பொருள்கள், ஆன்டி வைரஸ் ஆகியவற்றைத் தயாரிப்பதுதான். 1991-ல் அங்கே மென்பொருள் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார் லீ. இப்போது ஒரு ‘சூறாவளி கிளம்பியதே’ பாடலை நினைத்துக்கொள்ளுங்கள். வ்ரூம்ம்ம். 7 ஆண்டுகளில், 1998-ல் லீதான் கிங்சாஃப்டின்  CEO.

தன்னால் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமென்ற நம்பிக்கை லீக்கு வந்தது. இனி அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும். எந்த பிசினஸ் மாடல் பெரிய வெற்றியைத் தரும் என்று சோதனை செய்ய வேண்டும். வேலையை விட்டுவிடாமல், புதுப்புது ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யத் தொடங்கினார். கிட்டத்தட்ட 70 ஸ்டார்ட்அப்களில் லீயின் பணம் பரவியிருந்தது. சில ஹிட்; பல ஃப்ளாப். அதில் ஒன்றுதான்  joyo.com. ஆன்லைனில் புத்தகம் விற்கும் தளம். 4 ஆண்டுகள்தான் அது லீயின் வசமிருந்தது. 2004-ல் அமேசான் அதன் வளர்ச்சியைப் பார்த்து, வாங்கித் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டது. 

கேம் சேஞ்சர்ஸ் - 5

லீயின் 16 ஆண்டு கிங்சாஃப்ட் சேவை 2007-ல் முடிவுக்கு வந்தது. பள்ளியில் விடுமுறை வேண்டு மென்றால் “As I am suffering from fever..." என எழுதுவோமே... அதே மாதிரி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லிவிட்டு கிங்சாஃப்ட்டின்  சி.இ.ஒ பதவியிலிருந்து விலகினார்; வைஸ் சேர்மன் ஆனார். அதாவது, அன்றாடப் பணிகளிலிருந்து விலக்கம். ’அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்’ எனச் சொல்வதற்கேற்ற திறமைகளை வளர்த்துகொண்டாகிவிட்டது. ஆனால், அதை உலகுக்குச் சொல்ல ஆப்பிள் போல ஒரு ஹிட் வேண்டும். இரண்டு ஆண்டுகள் முழுக்க சிந்தனை... சிந்தனை... சிந்தனை. அதன் முடிவில் 2010-ல் லீயின் ஜீபூம்பா உருவானது. அதன் பெயர் ஷியோமி. புரியும்படி சொன்னால், இன்று ஸ்மார்ட்போன்களின் சூப்பர் ஸ்டார் ஆன ரெட்மி மொபைல்களைத் தயாரிக்கும் நிறுவனம்.

ஷியோமி தொடங்குவதற்கு முன்பே 90% அதன் பிசினஸ் மாடல் தயார் செய்துவிட்டார் லீ. விஷயம் இதுதான். ``மொபைல் என்பது ஒரு தனி உலகம். உலகம் உள்ளங்கையில்.” என்பதை 100% நிரூபித்த ஒரு கண்டு பிடிப்பு. எல்லோரும் மொபைலை விற்றுக் காசாக்குகிறார்கள். ஆனால், அந்த உலகத்துக்குள்தானே எல்லாமே நடக்கின்றன? ஆக, அந்த உலகம் தன்வசமானால் அதனுள்ளே எவ்வளவோ விஷயங்கள் செய்யலாமே!” என்பதுதான் ஐடியா. அதாவது கோடிக்கணக்கான பேரிடம் ஷியோமி மொபைலைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதன் பின், அந்தக் கோடிக்கணக்கான பேரிடம் மொபைல் மூலம் எதையாவது விற்றுக் காசாக்க வேண்டும். அதுவரை மொபைல் நிறுவனங்கள் லாபம் பார்த்த வழிகளை பைபாஸ் செய்வதுதான் ஷியோமியின் திட்டம். ஷியோமி என்றால் சீன மொழியில் சிறுதானியம் என்று அர்த்தம்.

மொபைல் வாங்க கிட்னி விற்க வேண்டும் என்றாக்கியது ஆப்பிளின் வேதனையான சாதனை. ஆனால், அந்த ஆப்பிளைப் பார்த்து வளர்ந்தவர் முன்வைத்த யோசனை அதற்கு அப்படியே நேரெதிர்.  “எனக்கு ஸ்டீவ் போல வெற்றிபெற வேண்டும் என்பதுதான் கனவு. ஸ்டீவ் போன பாதையிலே போக வேண்டுமென்பதல்ல” என்றார் இந்தச் சீன அங்கிள்.

சீனாவின் பெயர்கள் வாயில் நுழையாது. ஆனால், அந்நாட்டுப் பொருள்கள் நுழையாத இடமே இல்லை. இருந்தும், இப்படியொரு புதுவிதமான ஐடியா அதற்குமுன் வேறு எந்தச் சீன நிறுவனமும் முயன்றதில்லை. லீயின் ஐடியா க்ளிக் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கும். ஆனால், அவரை நம்பிப் பணம் போட சிலர் முன் வந்தனர்.

தனியாகவே தம் கட்ட லீயால் முடியும். இருந்தும், உடன் ஒருவர் இருப்பது நல்லது என நினைத்தார். கூகுளில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த பின் லின் என்பவரைச் சேர்த்துக்கொண்டார். “உன்னை எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் கைவிட மாட்டேன்” என லின் சொல்ல, லீக்கு சந்தோஷம். தைரியமாக அடுத்த அடி எடுத்து வைத்தார்.

குறைந்த விலையில், தரமான மொபைல்கள் விற்றால் வாடிக்கையாளர்கள் தாமாக வருவார்கள் என்பது எல்லாத் தொழிலுக்குமான அடிப்படை. ஷியோமி மொபைல் விற்பனையில் தமக்கு லாபமே வேண்டாமென முடிவு செய்தது. அடக்க விலைக்கே மொபைல்களை விற்றது. சின்னக் கணக்கு இதை எளிதாக்கும். ஐபோன் ஒரு மொபைல் விற்றால் ஆப்பிளுக்கு அதனால் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், ரெட்மி ஒரு மொபைல் விற்றால் ஷியோமிக்கு 150 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். இதனால், உலகமெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரு சில ஆண்டுகளிலே சேர்ந்தார்கள். ஷியோமியைப் பொறுத்தவரை அது கோடிக்கணக்கான வாய்ப்பு.

2011-ல் முதல் ஸ்மார்ட்போனை விற்றது ஷியோமி. 2013-ல் 1.87 கோடி மொபைல்கள் விற்றன. 2014-ல் அது 6 கோடி ஆனது. 2017-ல் சாம்சங்கை முந்தி, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆனது.

இந்திய மென்பொருள் ஜாம்பவான்களில் ஒருவரான ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி ஷியோமியின் ரசிகர். “ஷியோமியைப் பாருங்கள். மற்ற மொபைல்களைவிட அது எந்த விதத்திலும் மோசமில்லை. ஆனால், விலை குறைவு. கொடுக்கும் பணத்துக்கேற்ற மதிப்பு கிடைத்தால்தான் வாடிக்கையாளர் களைத் திருப்திப்படுத்த முடியும். அதைத்தான் ஷியோமி செய்கிறது” என்றார்.

இப்போது, ஆப்பிளை நெருங்கிவிட்டார் லீ. சமீபத்தில் அவர் தந்த பேட்டியில் அவர் இலக்கு மாறிவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். “என்னை ஸ்டீவ் ஜாப்ஸ் 2 அல்லது ஜெஃப் பஸாஸ் 2 எனச் சொல்வதில் விருப்பமில்லை. அவர்களிடமிருந்து ஷியோமி சில விஷயங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால், ஷியோமி ஒரு தனித்தன்மையான பிசினஸ் மாடல். அது ஒரு சுயம்பு” என்கிறார். இந்தத் தனித்தன்மை என்பது எல்லா ஸ்டார்ட்அப்க்கும் இருக்க வேண்டிய அம்சம்.

சீனர்களின் முகங்களை நினைவில் கொள்வது சிரமம்தான். ஆனால், அதைவிட சிரமம் அந்த முகம் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது. அதுவும் லீயின் முகம் வேற லெவல். “அவருக்கு நாம் சொல்லும் ஐடியா பிடித்திருக்கிறதா இல்லையா என்பதே நமக்குத் தெரியாது...  Poker face" என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள்.

மொபைல் நிறுவனங்களின் வருவாய் வழிகளை மாற்றியமைத்தது மட்டுமல்ல; சீனப் பொருள்கள் என்றாலே தரம் குறைந்தவை என்ற இந்தியர்களின் எண்ணத்தையும் சுக்குநூறாக்கியவர் லீ. அந்த விதத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கேம் சேஞ்சர் லீ ஜூன்தான்.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா