Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

ஹர்துவாகஞ்ச் என்ற கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா? அலிகார் மாவட்டத்தில். அலி கார்? அது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம். ஹர்துவாகஞ்சைச் சேர்ந்தவர் விஜய் சேகர் ஷர்மா. ‘நண்பன்’ பட பஞ்சவன் பாரி வேந்தனைப் போல இந்த விஜய்க்கும் படிப்பென்றால் பதினாறு பல்லும் தெரியும். அதனால்தான் 16 வயதில் முடிக்க வேண்டிய பன்னிரண்டாம் வகுப்பை, 14 வயதிலேயே முடித்தார். ஆனால், கல்லூரியில் சேர இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியதானது. அப்போது செலவுக்கு பாக்கெட் மணியெல்லாம் கிடைக்காது. வாரத்துக்குப் பத்து ரூபாய் கிடைத்தால் அது ஜாக்பாட்.

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

இன்று விஜய்க்கு வயது 45. பத்து ரூபாய் பாக்கெட் மணிக்கே சாத்தியப்படாத வாழ்க்கையில்தான் விஜய்யின் பயணம் தொடங்கியது. இன்று அவர் சொத்து மதிப்பு 220 கோடி அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் 16,000 கோடி. இந்தியாவின் இளமையான பில்லியனர் ஆகிவிட்டார். இவர் நிறுவிய பே டிஎம்-மின் இன்றைய சந்தை மதிப்பு 73,000 கோடி.

விஜய்யின் கதையை அவர் கல்லூரியிலிருந்தே தொடங்க வேண்டும். ஹர்துவாகஞ்சில் விஜய் ‘தளபதி’யாக இருக்கலாம். ஆனால், ஆங்கிலம் கோலோச்சும் பொறியியல் கல்லூரிகளில்? டெல்லிப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த விஜய்க்கு முதலாண்டில் பெரிய பிரச்னையாக இருந்தது ராகிங் இல்லை; படிப்புதான்.  சொந்த ஊரில் எல்லாவற்றிலும் முதல் மாணவனாக இருந்த விஜய், இங்கே கடைசி பென்ச் ஆளாக இருந்ததில் நிம்மதியே இல்லை. இந்தி வழியிலேயே 12வது வரை படித்ததால் விஜய்க்கு ஆங்கிலம் ம்ஹூம். அதற்காக இரண்டு புத்தகங்களை வைத்துத் தேர்வுக்குத் தயாரானார். ஒன்று இந்தி; மற்றொன்று அதன் ஆங்கிலப் பதிப்பு. அறிவாளிக்கு மொழியெல்லாம் விஷயமே இல்லை. சில மாதங்களிலே விஜய் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அளவுக்கு  இல்லையென்றாலும் ஆங்கிலம் என்றாலே அவருக்கு வந்த ஷேக்கும் ஃபியரும் வராத அளவுக்குத் தேறினார். 

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytmபேச்சுமொழி சரியானது. கணினி மொழி? கம்ப்யூட்டர் லேபில் தூங்கக்கூடாது என்பதால் அந்த நேரம் தவிர மற்ற நேரம் கணினியே கதி எனக் கிடந்தார். எப்படியாவது சிலிக்கான் வேலிக்குச் சென்று தன்னை இந்த உலகுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டுமென்பதே விஜய்யின் பேரவா.

நெட் பிராக்டீஸ் செய்யாமல் மேட்சுக்குப் போவதா வீரனுக்கு அழகு? தன் முதல் தொழில் முயற்சியைக் கல்லூரியிலே ஆரம்பித்தார் விஜய். XS Communications என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். தனக்குத் தெரிந்த
கோடிங்-ஐப் பயன்படுத்தி விஜய் உருவாக்கிய அந்த சிஸ்டம் அப்போதே ஹிட். இரண்டே ஆண்டுகளில் அவர் தளத்தை ஒரு நிறுவனம் வாங்கிக்கொள்ள முன் வந்தது. தன்னால் இந்த உலகை மாற்றும் விஷயங்களைச் செய்ய முடியுமென்ற நம்பிக்கை விஜய்க்குப் பிறந்தது. கல்லூரியை முடிப்பதெல்லாம் இரண்டாம்பட்சம் ஆனது. ‘ஒரு ஜீபூம்பாவைப் பிடிக்கிறோம். இந்த உலகத்தோட கவனத்தை நம்ம பக்கம் திருப்புறோம்... தட்டுறோம்... தூக்குறோம்” என்பதே விஜய்யின் விஷன், மிஷன் ஸ்டேட்மென்ட் ஆனது.

2001-ம் ஆண்டு விஜய்  One97 என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அது ஒரு கால் சென்டர். அவர்களை அழைத்தால் நமக்கு ராசி பலன் சொல்வார்கள். உண்மைதான். நிறுவனத்தின் பெயருக்குக் காரணம் என்ன தெரியுமா? அப்போதைய டெலிபோன் டைரக்டரியில் பி.எஸ்.என்.எல்-லின் எண் 197. கால் சென்டர் என்றதும் அதையே பெயராக வைத்துவிட்டார்.

2005. விஜய்யின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு ஆண்டு என்றே சொல்ல வேண்டும். நண்பர்களுடன் இணைந்து அவர் தொடங்கிய நிறுவனம் சிக்கலில் சிக்கியது. பிரச்னை ஐடியாவில் இல்லை; உடன் சேர்த்த ஆட்களில். வங்கியில் வாங்கிய லோனை யெல்லாம் அவர்கள் ஸ்வாஹா செய்ய, விஜய் தலையின்மேல் எட்டு லட்சம் கடன் விழுந்தது. “உலகத்தை மாத்தப்போறவண்டா நான்... எட்டு லட்சத்துக்கா அசரப்போறேன்” என விஜய் சொல்லிக்கொண்டாலும், அந்தச் சமயத்தில் எட்டு லட்சம் என்பது விஜய்யின் தலையில் தொப்பி இல்லை, தூக்குக்கயிறு.

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

விஜய் வேலைக்குப் போக நேர்ந்தது. சில சமயம் சிறப்பு விரிவுரையாளராகச் சில கல்லூரிகளுக்குப் போனார், அது நல்ல வருமானம் தந்தது என்பதால். சிக்ஸர் அடிக்கும் பந்துவரும்வரை சிங்கிள்ஸ் தட்டும் பேட்ஸ்மேனைப்போல இருந்தது விஜய்யின் இன்னிங்ஸ். ஆனால், One97-ஐ மூடவில்லை. அவ்வப்போது புதுமையான விஷயங்களை முயன்றுகொண்டேயிருந்தார்.

காலம் மாறியது. விஜய்க்கு ஃப்ரீ ஹிட் சில கிடைத்தன. எதையுமே விடவில்லை. One97 மதிப்பு கூடியது. ஆனால், உலகையே மாற்ற வேண்டுமென நினைத்த அளவுக்கு இல்லை.  இந்தியாவின் டாப் 1000 பணக்காரர்களில் விஜய்யும் ஒருவர் எனச் சொல்லுமளவுக்கு விஜய்யின் பேங்க் பேலன்ஸ் வளர்ந்தது. ஆனால், அது விஜய்யின் கனவு இல்லை. One97 போர்டு மெம்பர்ஸ் முன்னால், 2010-ல் ஒரு ஜீபூம்பாவின் பிளானைச் சொன்னார்.

இதுதான் விஷயம். கைப்பேசி வேகமாகப் பரவிவருகிறது. நயா பைசா இல்லாத பாக்கெட்டில்கூட நோக்கியா, வைப்ரேட் ஆகிக்கொண்டிருக்கிறது. இனி இந்தச் சுரங்கம் கிடைக்கும் எல்லாவற்றையும் சுருட்டித் தனக்குள்ளே சேர்த்துக்கொள்ளும். அதனால், கைப்பேசி மூலம் பணம் செலுத்தும் முறைக்குள் முதலில் நாம் நுழைந்துவிடலாம் என்பதுதான் விஜய் சொன்னதன் சாராம்சம்.

போர்டு மெம்பர்களுக்கு விஷயம் பிடிபடவில்லை. கிரெடிட் கார்டு என்றாலே இந்தியர்களுக்குக் கசக்கும். இதில் மொபைல் மூலம் பேமென்ட்டா? அவர்கள் தயக்கம் நியாயமானதுதான். விஜய்க்கு ஒன்று தெரியும். அவரது ஐடியா அவர்களுக்குப் புரியாமல்போகலாம். ஆனால், அவர்மேல் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள். அதை வைத்துத் தன் ஐடியாவை முன்வைக்கலாம் என முடிவு செய்தார். அந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினார்.

“என்னோட ஷேர்ல இருந்து 15 கோடி இந்த டேபிள் மேல போடுறேன். இந்த ஐடியா ஃப்ளாப் ஆனா 15 கோடியும் உங்களுக்கு. டீல்?”

அவர் நம்பிக்கையின் அளவு போர்டுக்குப் புரிந்தது. தலையசைத்தார்கள்.

“இதை இவன் செய்வான்னு மத்தவங்க நம்புற விஷயத்த செய்றதுல என்ன சார் ஃபன் இருக்கு? செய்ய முடியாத விஷயத்த செய்றதுதான் சந்தோஷம்... மகிழ்ச்சி... திருப்தி... ஃபன் எல்லாம்” இது விஜய் சொல்லும் பன்ச் டயலாக்.

ஜீபூம்பா வெளிவந்தது. பே டிஎம் பிறந்தது.

விஜய்க்கு வேகமாகப் பணம் சம்பாதிக்கும் முறையின் மேல் நம்பிக்கை இல்லை. முதல் தேவை வாடிக்கையாளர்கள்; அவர்களின் நன்மதிப்பு. அதன்பின் வருமானம் பார்த்தால்தான் அது பெரியதாக இருக்கும். அதுதான் ஸ்டார்ட் அப்பின் ஃபார்முலா.  அதன்படி, முதலில் ரீசார்ஜ் போர்ட்டலாக ஆரம்பித்த பே டிஎம் மெதுவாக வளர்ந்தது. பிறகு, மொபைல் வாலட் லைசென்ஸ் வாங்கியதும் அந்தச் சேவையை உடனே தொடங்காமல், அதற்கான கஸ்டமர் கேரை முதலில் உருவாக்கினர்.

கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm

இந்தியர்கள் வித்தியாசமானவர்கள். ஒருமுறை  பணவிஷயத்தில் ஒருவரிடம் ஏமாந்துவிட்டால் அதன்பின் மனதளவில் அவரை ப்ளாக் செய்துவிடுவார்கள். பே டிஎம் கைவைக்கப்போவது அவர்கள் பணத்தில். சிறிய தப்பு என்றாலும் அதன் பாதிப்பு தலைமுறை தாண்டித் தொடரும். அதைப் புரிந்துகொண்ட விஜய், கவனமாக பே டிஎம்-மை உருவாக்கினார். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் லேபிலே கிடந்தது கைகொடுத்தது.

2015-ல் மொபைல் வாலெட் எனும் துருப்புச் சீட்டை இறக்கினார் விஜய். இந்தியாவுக்கு மொபைல் வாலெட் எனும் அதிசயத்தை அறிமுகம் செய்தது பே டிஎம். ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் மொபைலுக்குள் பே டிஎம்முக்கு இடம் தந்தார்கள். இந்தியன் ரயில்வே, “பே டிஎம் மூலமா எங்களுக்குப் பணம் தரலாமே” என்றது. இரண்டே இரண்டு ரூபாய் நோட்டுகள் என்றாலும் கவனமாக இரண்டு முறை எண்ணியபின் தரும் இந்தியர்கள் அதைக் கண்ணிலே பார்க்காமல் டிஜிட்டலாகப் பணம் அனுப்பினர். ஒரே நாளில் பத்து லட்சம் டிரான்ஸாக்‌ஷன்களைக் கண்டது பே டிஎம். ரத்தன் டாடா “வெல்டன் பாய்” என விஜய் முதுகில் தட்டிக்கொடுத்தார். சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா “நாங்களும் மணியார்டர் கட்டலாமா” என பே டிஎம்-மில் முதலீடு செய்ய முன்வந்தது.

நீலமும் வெள்ளையும் கலந்த அந்த பே டிஎம் லோகோ, நகரங்களில் பரிச்சயமானது. ஆனால், கிராமங்கள்தானே இந்தியாவின் பலம்? ஹர்துவாகஞ்ச் என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜய்க்கு அது தெரியாதா? என்ன செய்யலாம் என விஜய் யோசித்துக்கொண்டிருந்தபோது தானாய் வந்த வரம்... இந்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு... பே டிஎம்-மின் வளர்ச்சியை ராக்கெட் வேகத்துக்கு மாற்றக் கிடைத்த வாய்ப்பு அது. சரியாகப் பயன்படுத்தினார் விஜய். இன்று கிராமங்களிலிருக்கும் பெட்டிக் கடைகளில்கூட பே டிஎம்-மின் பார் கோடு ஸ்கேனர் மின்னுகிறது. சமூகவலைதளத்தில் கண்ட ஒரு புகைப்படத்தில், மும்பை நகரின் பிளாட்பாரத்தில், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி பே டிஎம் போர்டு வைத்திருக் கிறார். தொழில்கள் தாண்டி ஒருவருக் கொருவர் தனிநபர் விஷயத்துக்காகச் செய்யப்படும் பணப்பரிமாற்றங் களையும் பே டிஎம் இலவசமாகச் செய்து தருகிறது.

இப்போது சந்தையில் ஏகப்பட்ட இ-வாலெட்டுகள் இருக்கின்றன. பணம் என்றால் அது இன்று ரூபாய் நோட்டுகள் அல்ல; டேட்டா. மற்றவர்கள் அதைத் தாமதமாகப் புரிந்துகொண்டார்கள். விஜய் அதை முதலில் புரிந்துகொண்டார்.

உலகின் முக்கியமான முதலீட்டாளர் வாரென் பஃபெட். அவருக்கு இந்த டெக்னாலஜி மீது பெரிய நம்பிக்கை இல்லை. அவரிடமிருந்து ஒரு நிறுவனத்துக்கு முதலீடு வாங்குவது என்பது மே மாதத்தில், சென்னையின் மையப்பகுதியில் போர் போட்டு  தண்ணீர் எடுக்கும் வேலையைவிடச் சிரமமானது. அவர் பே டிஎம்மில் முதலீடு செய்திருக்கிறார். இன்றைய தேதியில் இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப், பே டிஎம். அதை உருவாக்கியவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். ‘ஸ்டார்ட்அப் எல்லாம் ஜட்டி தெரிய பேன்ட் போடும் மெட்ரோ பசங்களுக்கு’ என்ற மாயையை உடைக்க விஜய் ஒருவர் போதாதா?

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா