Published:Updated:

`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா?'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்

`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா?'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்
`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா?'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்

டெக் நிறுவனங்கள், சரியான விளம்பரங்களைச் சரியான நபர்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக, ஒருவரின் இணைய நடவடிக்கைகளை ட்ராக் செய்வது எப்போதும் நடப்பதுதான். ஆனால், சிலநேரங்களில் இதன் விளைவு, நாம் சிறிதும் எதிர்பாராத விதத்தில் ஒருவரைப் பாதிக்கும் என்பதை ஏற்றுகொள்வீர்களா? மாட்டேன் என்பவர்களையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் இந்தக் கடிதம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கில்லியன் ப்ரோக்கல். இந்த விளம்பரங்களால் பாதிக்கப்பட்ட அவர் டெக் நிறுவனங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தை தமிழில் பார்ப்போம்.

"நான் கர்ப்பமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். அது என்னுடைய தவறுதான். இன்ஸ்டாகிராமில் #30weekspregnent #babybump போன்ற ஹேஷ்டேக்குகளில் புகைப்படங்களைப் பதிவிடாமல் என்னால் இருக்கமுடியவில்லை. அதைவைத்து உங்கள் அல்காரிதங்கள் அதைக் கண்டுபிடித்திருக்கும்.

எனது 'baby shower' (வளைகாப்பைப் போன்ற ஒரு நிகழ்ச்சி) நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்களுக்கு நான் பதிவிட்ட நன்றிப் பதிவையும் நீங்கள் கவனித்தீர்கள் என்று தெரியும். அமேசான் ரெஜிஸ்டரியில் பதிவுசெய்ததன் மூலம் எனது டெலிவரி தேதியையும் அமேசான் நிறுவனம் உங்களிடம் கூறியிருக்கும்.

இதையெல்லாம் அல்காரிதங்களின் மூலம் பார்த்த நீங்கள், "குழந்தை நகராதற்குக் காரணம் என்ன?" என்று நான் கூகுள் செய்ததைப் பார்க்கவில்லையா? அடிக்கடி பதிவிடும் நான், மூன்று நாள்கள் அமைதியாக இருந்தது தெரியவில்லையா? பின்பு நான் பதிவிட்ட அறிவிப்பில் "Heartbroken", "Problem", "Stillborn" போன்ற வார்த்தைகளையும், அதற்கு என் நண்பர்கள் 200-க்கும் அதிகமானோர் கண்ணீர் வடிக்கும் எமோஜியையும் பதிவிட்டது தெரியவில்லையா? இதையெல்லாம் உங்களால் ட்ராக் செய்யமுடியாதா?" 

இப்படிச் செல்கிறது அந்தக் கடிதம். தன் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த கில்லியன், அந்தச் சோகத்திலிருந்து கவனத்தை திசைதிருப்ப மொபைலை எடுத்திருக்கிறார். அந்தச் சமயம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் என அனைத்து இடங்களிலும் குழந்தை வளர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளன. இது, மேலும் அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். இதில் டெக் நிறுவனங்களுக்கு மிக உருக்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். அது இதோ, 

"நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதைக் கண்டறியும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கும் உங்கள் அல்காரிதங்களால் நிச்சயமாக அது நல்ல முறையில் பிறந்துவிட்டதா இல்லையா என்பதையும் கண்டறியமுடியும். அதற்கேற்ப விளம்பரம் செய்யமுடியும். தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முழு ஆங்கிலக் கடிதம் கீழே,

வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் பணிபுரியும் இவரின் இந்தக் கடிதம், சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.