Published:Updated:

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 10 - தொடர்

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 10 - தொடர்

Published:Updated:
மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையின் பாதைகள், பல புதிய பரிணாமத்தை நோக்கிச் சென்றன. அதிலும், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் மனித சமூகத்தில் ஏற்படுத்திய  தாக்கத்தால், உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புதிய பொருள்களையும், மூலப் பொருட்களையும்  (புராடக்ட்ஸ், புதிய மெட்டீரியல்) இன்றும் பயன்படுத்திவருகிறோம். 

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

‘உலகப் போரால் உருவான சாதனங்கள்’ என ஒரு தனிப் புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன. போரின் விளைவுகள் பற்றி ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் செயற்கையை நோக்கிய பயணங்களே! அவற்றால் நாம் பயனடைந்தது உண்மைதான். இல்லை என மறுக்க முடியாது. ஆனால், அதே அளவுக்கு எதிர் மறையான பாதிப்புகளும் ஏற்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டைக் கவலையோடு இன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மனித சமூகத்தின் சுயநலத்தால் உலகம் வெப்பமயமாதல், கதிரியக்க விபத்துகள் என உலக உருண்டையைப் புரட்டிப் போட்டுத் துவைத்து எடுக்கிறோம். இதில் உண்மை என்னவென்றால், நம்மோடு சேர்ந்து பிற உயிரினங்களும் பாதிப்படைகின்றன.

இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்த ஆய்வுலகமும் இயற்கையை நகலெடுப்பதன் வாயிலாக சஸ்டைனபிள் டிசைன் (Sustainable Design), எக்கோ டிசைன் (Eco Design), பயோமெட்ரிக் (Biometric), பயோமெடிசன் (Biomedicin), பயோமிமிக்ரி (Biomimicry) என்பன போன்றவற்றிலும் இன்னும் பல்வேறு தளங்களிலும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிலையங்கள், மேற்கண்ட நுண்புலங்களை நோக்கிப் பயணிக்க வேண்டியது, காலத்தின் அவசியம்.

இத்தகைய ஆராய்ச்சிகள், அவற்றின் விளைவுகளை ஒட்டிய வடிவமைப்புகள்,  மிகச் சிறிய வடிவ மாற்றத்தில் இருந்து ஒட்டுமொத்த புராடெக்ட் வரை எந்த நிலையிலும் இருக்கலாம். உதாரணமாக, காற்றாலை விசிறிகளின் நீண்ட இறக்கைகளின் விளிம்பின் வடிவில் செய்த சிறு மாற்றம் பெரிய பலன்களை அளிக்கிறது. குறைவான காற்று வீசும்போதும், நிறைவான மின் உற்பத்தி சாத்தியமாகிறது. இது எப்படி நிகழ்ந்தது என்று அறிய வேண்டும் என்றால், ஆழ்கடலுக்குச் சென்று Humpback whale எனும் திமிங்கிலம் நீந்துவதைப் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

ஜாய் ஹார்மென் (Jay Harman), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிசைனர். கடற்புறத்திலேயே வளர்ந்தவர். சிறுவயது முதல் கடற்கரையில் அலைகளோடு விளையாடி, சர்ஃபிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளில் அதீத  ஆர்வம்கொண்டவர். அத்தோடு கிளிஞ்சல்கள், சங்குகளைச் சேகரிக்கவும் செய்வார். அவற்றைத் தொடர்ந்து கவனித்தபோது, அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. Aerodynamics அல்லது Hydrodynamics படி ஒரு வடிவம் இருந்தால்தான் காற்றையோ நீரையோ வேகமாகக் கிழித்துக்கொண்டு நகர முடியும்.

‘ஏரோடைனமிக்ஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத ஆட்டோமொபைல் வல்லுநரே இல்லை என்றே சொல்லலாம். காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைப்பாளர்கள், மிகத் துல்லியமான அளவீடுகளில் ஏரோ டைனமிக்ஸை அணுகி, காரை ஃபைன் ட்யூன் செய்கிறார்கள். ஏரோ டைனமிக்ஸைக் கையாள்வதில் வெளி வடிவமும், பரப்பு எனும் சர்ஃபேஸும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக, ட்ரக்குகளின் ஏரோடைனமிக் வடிவப் பரப்புகளால் பெரும் எரிபொருள் சேமிக்கலாம் என விளக்கப்படுகிறது. எந்த மாதிரியான வளைவுகள், பரப்புகள் சிறந்த பலனைத் தரும் என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வியாகத் தொடர்கிறது.

ஆக, ஏரோடைனமிக் ஷேப் என்றாலே மிருதுவான, தடையற்ற, நீண்ட  வளைவுகளே (Smooth Curves) வேக ஊக்கிகள் என்று நம்பப்படுகிறது. ஆனால் சங்குகள், கிளிஞ்சல்கள் போன்ற உயிரினங்களின் கடினமான ஏடுகளின் மேற்பரப்பு ஏன் ஸ்பைரலாகவும் பல சிறு சிறு முகடுகளாகவும் இருக்கின்றன? இன்னும் ஆழமான கடலில், ஆயிரக்கணக்கான கி.மீ-களை வெகுவேகமாக நீந்திக் கடக்கும் ‘ஹம்ப்பேக்’  திமிங்கிலங்கள், தங்கள் முன் துடுப்புகளில் வரிசையான ஹம்ப்களைக் கொண்டிருக்கின்றன. இவை வேகத்தடைகள்போல இருந்தாலும் வேக ஊக்கிகளாகவே இருக்க வேண்டும் என்றெண்ணி, காற்றாலை விசிறியின் நீண்ட இறக்கையின் ஸ்மூத்தான முகப்புப் பரப்பில் இத்தகைய வரிசையான முகடுகளை ஏற்றிச் சோதனை செய்தார் ஜாய் ஹார்மென். ஆச்சர்யமான முடிவுகளைத் தந்தது இந்தச் சோதனை.

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

டாக்டர் ஃபிஷ் எனும் பொறியியல் வல்லுனர் இதை மேலும் மேம்படுத்தி எஃபெக்ட்டிவ் டிசைனாக வடிவமைத்தார். கலிபோர்னியாவின் வேல் பவர் நிறுவனம் (Whalepower Corporation) தற்போது இத்தகைய காற்றாலை விசிறிகளை நிறுவியுள்ளது. இதன் மூலமாக குறைந்த காற்றோட்டத்திலும் நிறைவாக இயங்குகின்றன. 40 சதவிகிதம் கூடுதல் மின்திறன், 32 சதவிகிதம் குறைவான டிராக் (Drag) கிடைக்கிறது. எனவே, சத்தமே இல்லாமல் காற்றாடிகள் சுழல்கின்றன. இது, மிகப் பெரிய மாற்றம். நம் இளைய பொறியியல் வல்லுநர்கள் இந்த பயோமிமிக்ரியை சீலிங் ஃபேனில் ஏற்றிச் சோதிக்க வேண்டும். எங்கள் வீட்டு சீலிங் ஃபேன் சத்தம் குறைந்தால், நாங்கள் நிம்மதியாக டி.வி பார்க்கக்கூடும்.

அப்படியானால், வழவழவென பளபளக்கும் தோல் கொண்ட சுறா மீன்கள், எவ்வாறு அதிவேக வேட்டை விலங்காக வெற்றிகரமாகக் கடலில் நீந்துகின்றன? சுறாக்களுக்கு இயற்கை ஒரு ரகசிய உத்தியை வழங்கி இருக்கிறது. அது ஷார்க் டென்டிக்கிள்ஸ் (Shark denticles). இவை நுண்ணிய பல் முனைகள். மீன்களின் செதிலிலிருந்து இவை வேறுபட்டவை. சத்தமில்லாமல் வேகமாக நீந்த இந்தப் பல்முனைகள் உதவுகிறது. இவை டிராக்-ஐ (drag) பெருமளவு குறைப்பதே கூடுதல் வேகத்துக்கான காரணம்.

டிராக் (Drag) என்பது பின்நோக்கி இழுக்கும் விசை. நீளக் கூந்தல்கொண்ட பெண் ஒருவர் வேகமாக ஓடும்போது, அவரது முடிக்கற்றைகள் பின்னால் பறப்பதுதான் டிராக் (Drag). ஒலிம்பிக்கில் 28 தங்கங்களை வென்ற மிக்கேல் பெல்ப்ஸ் (Michael Phelps), போட்டியின்போது  ஷார்க் டென்டிகிள்ஸில் இருந்து பயோமிமிக்ரி செய்யப்பட்ட நீச்சல் உடையை (swim suit) அணிந்திருந்தார்.

2005-06 ஆண்டுகளில் மெர்சிடீஸ் பென்ஸ் வடிவமைப்பாளர் குழு ஒன்று, ஒரு வித்தியாசமான கான்செப்ட் காருக்கான இன்ஸ்பிரேஷனுக்காக பல திசைகளிலும் அலைந்து திரிந்தது. இறுதியாக, அந்தக் குழு தேடிய அத்தனை அம்சங்களையும் ஒரு கடல்வாழ் உயிரினத்திடம் கண்டனர். அதுதான் பாக்ஸ் ஃபிஷ் (Box Fish). இது பவளப் பாறைகளில் உலவும் மீன். 40 சென்டிமீட்டர் வரை அதிகபட்ச நீளம் வளரும் சிறுமீன்.

கிட்டத்தட்ட ஒரு பெட்டியைப் போன்ற வடிவில், பாக்ஸ் போன்ற  இதன் உடலமைப்பு ஏரோடைன மிக்ஸானது என்று மெர்சிடீஸ் பென்ஸ் வடிவமைப்பாளர்கள் அறிவியல் பூர்வமாக நிறுவியபோது, நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஆம், இந்த மீனின் பயோமிமிக்ரி கார் மாடல் முற்றிலும் வித்தியாசமான புது வகையான மாடல் என்று ஏற்றுக்கொள்ள, சற்றே கடினமாகத்தான் இருந்தது. காரின் நீள அகல வடிவம் பொருண்மை கொண்டதாக இருந்தது.

நீல நீளக் கடல் போலவே இயற்கைப் பிரதி எனும் பயோ மிமிக்ரி பெரும் ஆச்சர்யமான அதிசயம். நம் முந்தைய யூகங்களை, நம்பிக்கைகளை முறியடித்து, சிறுகக் கட்டி பெருக வாழ, புவியைப் புதுப்பிக்க, நம் கண்களைக் கூர்தீட்டி, அறிவை விரிவு செய்து, விசாலமாக்கிக் கொள்ள வேண்டும்!

- வடிவமைப்போம்

 க.சத்தியசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism