Published:Updated:

சர்வைவா - 32

சர்வைவா - 32
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 32

சர்வைவா - 32

Hacking: ஒரு கணினி அல்லது மென்பொருளின் உள்ளே அதைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமல் நுழைந்து, தகவல்களைத் திருடுவது அல்லது முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவது.

அடிமைகளே அடிமைகளே...

சர்வைவா - 32

கணினிகள், செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதைப் போல நம் மூளைகளும் ஹேக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும். அப்படியெல்லாம் செய்யமுடியுமா? இந்த `Brain hacking’ எல்லாம் ஏற்கெனவே நம்மிடையே செய்யப்பட்டுக்கொண்டிருக்கிற சமாசாரம்தான். நமக்கே தெரியாமல் நம் ரகசியங்கள் எல்லாம் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த மூளைத்திருடர்கள் வேறு யாருமல்ல; ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள், வாட்ஸ் அப், அமேசான் மாதிரியான நிறுவனங்கள்தாம். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் உருவாக்கும் அல்காரிதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களின் ஒரே வேலை, நம் மூளைகளை ஹேக் செய்வதுதான். உடனே நம்தலையில் வயர்கள் செருகி நிறைய கம்ப்யூட்டர்கள் வைத்து... ஸ்டாப் ஸ்டாப்... அப்படி இல்லை மக்களே. இது நேரடி ஹேக்கிங் இல்லை... Some Indirect Methods.

எதைக் காட்டினால் நாம் சமூகவலைதளங்களைத் திரும்பத்திரும்ப உபயோகிப்போம், எதைக்காட்டாமல் இருக்கவேண்டும், உங்களுக்கு எப்போது அதிக லைக்ஸ் கிடைக்கவேண்டும்... எப்போது உங்களுக்குக் குறைந்த லைக்ஸ் கிடைக்கச்செய்வது, உங்களுக்குப் பிடித்த விஷயங்களை உங்களுக்குத் தேர்ந்தெடுத்துப் பந்திவைப்பது, அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு எந்த மாதிரி பிரசாரங்களை உங்களிடம் திணிப்பது, எந்தெந்த விளம்ரபங்களை யாருக்குக் காட்டினால் அவர் உடனே வாங்குவார், நம்மை எப்படியெல்லாம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்குவது, எந்த விதத்தில் எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிக்ட் ஆக்குவது... எந்த மாதிரி உத்திகள் மூலம் நம் மூளைகளின் வழி நம் பர்ஸ்களைக் காலி பண்ணுவது என அனைத்தையும் தீர்மானிக்கிற தந்திர ஆட்டம் இது.

சர்வைவா - 32இந்த வேலையைச் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த அல்காரிதங்கள் நம்முடைய செயல்பாடுகளைக் கண்காணித்து அவற்றையெல்லாம் தொகுத்து, அதன் அடிப்படையில் விதிகளை மாற்றி நம்மை அடிமைகளாக்கும். எது நமக்கு போதை ஏற்றும் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலைக்காரர்களின் ஒரே வேலை.

சென்ற ஆண்டு CBSNEWS நிறுவனம் இந்த மூளைத்திருடர்களைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டது. உலகெங்கும் இதுமாதிரி மூளைத் திருட்டில் ஈடுபடும் சமூகவலைதள நிறுவனங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து அவர்களுடைய நேரடி வாக்குமூலங்களைத் தொகுத்தது. அந்த ஆவணப்படத்தில் பார்த்த, கேட்ட, அதிர்ந்த சில தகவல்கள், குரல்களின் தொகுப்பு மட்டும்...

* அவர்களுக்குத் தேவையானதெல்லாம் உங்களுடைய கண்கள் அந்தத்திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக அந்தப்பக்கங்களில் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்களுக்குப் பணம் கிடைக்கும். காரணம் ஃபேஸ்புக்குக்கோ ட்விட்டருக்கோ நீங்கள் வாடிக்கையாளர் அல்ல... அவர்களுடைய வாடிக்கையாளர்கள் விளம்பரம் கொடுப்பவர்கள்தாம். நாம்தாம் விற்பனைப்பண்டங்கள். இவர்கள் அதனால்தான் உங்கள் மூளைகளின் டோபமினையும், கோர்டிசாலையும் தூண்டிவிட்டு உங்களை எப்படி சமூகவலைதளங்களுக்கு அடிமைகளாக மாற்றுவது என்பதை விதவிதமாக ஆய்வு செய்கிறார்கள்!

* நமக்கே தெரியாமல் இந்தச் சமூகவலைதள நிறுவனங்கள் செய்கிற `மூளைச் செயற்பாடுகள் குறித்த ஆய்வு’களில் நாம் எல்லாம் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாமெல்லாம் கினியா எலிகள். பெட்டிக்குள் பட்டன்களைத் தட்டிக்கொண்டே இருக்கிற எலிகள். அங்கே நமக்குக் கிடைப்பதெல்லாம் லைக்குகள்... லைக்குகள்... அதுமட்டும்தான். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பட்டன்களைத் தட்டுவோம்.

* கோர்டிசால் எனப்படுவது மூளையில் சுரக்கிற ஹார்மோன். இந்த ஹார்மோன் எப்போது உருவாகக்கூடியது தெரியுமா? நம்முடைய முன்னோர்கள் வேட்டைக்குப் போகும்போது எதிரில் ஒரு சிங்கம் வந்துநின்றால் உருவாகிற ஹார்மோன்... அதைச் செயற்கையாகத் தூண்டுவது எப்படி என்பது இந்த நிறுவனங்களுக்கு அத்துப்படி! 15 நிமிடங்களுக்கு உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்து பாருங்கள். உள்ளுக்குள் ஓர் அவசரம் உருவாகும். வாட்ஸ் அப்ல என்ன வந்திருக்கோ... ஃபேஸ்புக்ல யார் கமென்ட் போட்டாங்களோ என மூளை துடிக்கும். அந்த அவசரம் மூளையில் கோர்டிசாலை உருவாக்கும்.

சர்வைவா - 32

சமூக வலைதள நிறுவனங்கள்மீது கோபம்வருகிறதா. ரத்தம் கொதிக்கிறதா... உடனே ஃபேஸ்புக்கை வாட்ஸ் அப்பை டெலிட் பண்ணிவிடத் தோன்றுகிறதா... அதெல்லாம் தேவையில்லை. இந்தச் சமூகவலைதளங்கள் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல் நாம் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிய கதைகளும் உண்டுதான். Use wisely.

நம் மூளைகளின் மீது சமூகவலைதள நிறுவனங்கள் ஏன் இத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறதா? ஏன் மூளைக்குள்ளேயே Implant Chip வைக்கத் துடியாய்த் துடிக்கிறார்கள் என்பதன் பின்னணி தெரிகிறதா? Brain Hacking-தான் எதிர்காலம். வெளியே இருந்து செய்துகொண்டிருக்கிற இந்த ஹேக்கிங்கைத் தலைக்குள்ளேயே அமர்ந்துகொண்டு செய்யும்போது என்னவெல்லாம் செய்யலாம். எப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் திணிக்கலாம். எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்... அதனால்தான் இவ்வளவு அவசரம்!

ஹிட்மேன்!


ஸ்மார்ட் போன்களுக்குப் பிறகு மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கப்போவது இந்த மூளை Implant-கள்தான். எதிர்காலத்தில் இத்தகைய இம்ப்ளான்ட்கள் விற்கிற நிறுவனங்கள் பரபரவெனப் படையெடுக்கலாம். ஐபோன் போல அடுத்தடுத்த அப்டேட்டட் மாடல்கள் வந்துகொண்டே யிருக்கலாம். சீனாவில் இருந்து மலிவு விலையில் அரைகுறை டூப்ளிகேட் இம்ப்ளான்ட்கள் ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கலாம்.

இன்று நம்முடைய செல்போன்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனவோ... அந்த வேலைகளை எல்லாம் எதிர்காலத்தில் நம் மூளைகளுக்குள் பொருத்தப்பட்டிருக்கிற சின்ன செயற்கை நுண்ணறிவு சிப் ஒன்று செய்துகொண்டிருக்கும். அந்தச் சிப்புக்கு `முருகன்’ எனப் பெயர் வைத்துவிடுவோம். மூளைக்குள் இருக்கிற முருகனிடம் என்ன சொன்னாலும் அல்லது நினைத்தாலும் செய்துவிடுவான். ‘`முருகா, காதலிக்கு கால்பண்ணு’’ எனச் சிந்தனையுத்தரவு போட்டால் போதும். ``முருகா, உடனே Swiggy-ல இடியாப்பம் பாயா ஆர்டர் பண்ணு!’’ என்று நினைத்தால் போதும், உடனே ஆர்டரை அனுப்பிவிடுவான். ``முருகா, நெட்ஃபிளிக்ஸில் Wild Wild Country போட்டுவிடுப்பா” என்றால் நேரடியாக VR மாதிரியான தொழில்நுட்பத்தின் வழி படத்தை நம் விழிகளில் ஓடவிடுவான்.

கேம்ஸ் ஆட வேண்டுமா, பாட்டு போட வேண்டுமா... அனைத்தையும் மூளைக்குள் இருந்து செய்துகொண்டிருப்பான் முருகன். தனிமையில் இந்த முருகனோடு உரையாடலாம், அவனைக் காதலிக்கலாம், சண்டை போடலாம்... அவன் கூடவே இருப்பான். எங்கு சென்றாலும் நம்மோடு வருவான். அமேசான் எக்கோ, கூகுள் அஸிஸ்டென்ட் இன்று எப்படி வெளியே இருந்து வேலை பார்க்கிறதோ அதுபோல தலைக்குள் ஒரு தம்பிப்பயல்!

ஆனால், இந்த முருகனை நமக்கு இலவசமாகக் கொடுப்பார்களா? செல்போன்களைப் போலவே இந்த முருகனுக்கும் ஒரு விலை இருக்கும். கூடவே ஒவ்வொரு வேலைக்கும் இன்று செல்போன்களில் வருவதுபோல ஆப்கள் இருக்கும். பேங்கிங் வேலைக்குத் தனியாக, பாட்டுப்போடத் தனியாக, படம் பார்க்கத் தனியாக, கேம்ஸ் ஆடத் தனியாக... அந்தச் செயலிகள் எல்லாம் இலவசமாகக் கிடைக்கும். அல்லது அதற்குப் பணம் தரவேண்டியிருக்கும். அல்லது அந்தச் செயலிகள் உங்கள் மூளைக்குள் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கலாம். ஒவ்வொரு செயலியும் எப்படியாவது நம் மூளையின் வெவ்வேறு பகுதிகளைப் படிக்க அனுமதி கேட்கும்.

ஒவ்வொரு மூளைக்கென்றும் தனித்தனி விளம்பரங்கள் நேரடியாக, நம்மைப் புரிந்துகொண்டு நம் தேவைகளை அறிந்துகொண்டு... உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம், மருத்துவர் உங்களைத் தினமும் வாக்கிங் போகச் சொல்கிறார் என்றால் ஷூக்கள், சுகர்லெஸ் உணவுகள், மருந்துகள் என விளம்பரங்கள் உங்கள் மூளைகளை நிரப்பும்.

மூளைக்குள் அமர்ந்திருக்கும் முருகன் விளம்பரம் மட்டும் போட மாட்டான். நாம் எந்தெந்தத் தருணங்களில் எல்லாம் பொருள்கள் வாங்குகிறோம், எப்போதெல்லாம் பொருள்கள் வேண்டாம் என முடிவு செய்கிறோம், நம்முடைய அரசியல் என்ன, நாம் யாருக்கு ஓட்டுபோடக்கூடும் என்பதில் தொடங்கி, நாம் புரட்சி செய்ய வாய்ப்புகள் இருக்கிறதா, அரசுக்கு எதிராகத் திட்டம் போடுகிறோமா என்பது வரை இந்த மண்டை முருகன்கள் ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுப்பார்கள். ரிப்போர்ட் நமக்கில்லை... மார்க் சக்கர்பெர்க்குக்கோ, லாரி பேஜுக்கோ, எலான் மஸ்க்குக்கோ... அல்லது முதலாளிகளுக்கோ... நம்மைக் கட்டுப்படுத்த நினைக்கிற அரசுக்கோ ராணுவத்துக்கோ... சர்வாதிகாரிகளுக்கோ... ஆபத்துதான்!

இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம் நம் தலைக்கு வந்து சேர எப்படியும் இருபது ஆண்டுகளாவது ஆகிவிடும். ஆனால், அதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன.

நம் மூளையில் இருக்கிற சிப்களின் வழி நாமேதான் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டி ருப்போம் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. இந்தச் சிப்களை யாராவது ஹேக் செய்தால் என்னாகும்... அதன் வழியே நம்மைக் கட்டுப்படுத்தி நினைத்த விஷயங்களை எல்லாம் செய்ய முடியும் இல்லையா? கொலைகூடச் செய்ய வைக்கலாம்! ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதியில் இருக்கிற வாக்காளர்களின் மூளைகளை ஹேக் செய்தால் என்னாகும்...

மூளையில் சிப்வைத்துக்கொள்வது என்கிற தொழில்நுட்பம் கேட்க ஒருபக்கம் உற்சாகம் தருவதாக இருந்தாலும் அது அச்சுறுத்தவும் செய்கிறது. நம்முடைய கார்களை வெறும் சிந்திப்பதன் வழி இயக்கமுடியும் என்பது எவ்வளவு ஜாலியாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம்முடைய மூளையை வேறுயாராவது இயக்குவார்கள் என்பது பீதியூட்டுகிறது.

மாற்றங்களைத் தடுக்கவே முடியாது. அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம் தரும் மாற்றங்களை...  வாய்ப்பே  இல்லை ராஜா! செல்போன்களைப்போலவே இதுவும் ஒரு நாள் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பமாக இருக்கும். வேண்டாமென மறுத்தாலும் நாளைக்கே உங்கள் கொள்ளுப்பேரன்கள் மூளைக்குள் மாட்டிக்கொண்டு ``தாத்தா அப்டேட் ஆகு, நீயும் ஒண்ணு வாங்கி மூளையில மாட்டிக்கோ...’’ எனச் சொல்லத்தான் போகிறார்கள்.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி