Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

1985... அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவரான ரீட் ஹேஸ்டிங்ஸ் ஒரு புராஜெக்ட் செய்துகொண்டிருந்தார். 

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

அப்போதெல்லாம் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு டேட்டாவை அனுப்ப மேக்னடிக் டேப்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அதைக் ‘குட்டி யானை’ போன்ற வண்டிகளில் இடம் மாற்றினர். அப்படி மேக்னடிக் டேப்களை எடுத்துச் செல்லும் ஒரு குட்டி யானையின் Bandwidth என்ன என்பதை ஹேஸ்டிங்ஸ் கண்டுபிடிக்க வேண்டும். பேண்ட்விட்த் என்பது எவ்வளவு டேட்டா என்ற கணக்கு.

ஒரு டேப்பில் 800 ஜிகா பைட் டேட்டாவைச் சேமிக்கலாம். ஒரு பெட்டியில் 1000 டேப்களைக் கொண்டு செல்லலாம். இந்தப் பல்கலைக்கழகத்தில் சேரும் முன் இரண்டாண்டுகள் கணக்கு வாத்தியாராக வேலை செய்தவர் ஹேஸ்டிங்ஸ். ஆனால், அவருக்கே இந்தக் கணக்கைப் பார்த்தபோது `ஒருநிமிஷம் தலையே சுத்திடுச்சு’. அவ்வளவு நீளமான எண். ஹேஸ்டிங்ஸுக்கு ஒன்று தோன்றியது. டேட்டாவை அனுப்ப இதைவிட மலிவான வழி எதுவும் கிடையாது. டேட்டா டிஜிட்டல்; டெலிவரி பிஸிக்கல்!

10 ஆண்டுகள் ஓடின... 1995. ஹேஸ்டிங்ஸ் ஒரு கோடிங் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். ஒருநாள் வீடியோ டேப் கடையில் திரைப்படமொன்றை வாடகைக்கு எடுத்தவர் திருப்பித் தர மறந்துவிட்டார். `சினிமா டிக்கெட் 120. பார்க்கிங் கட்டணம் 300’ என்ற கணக்காக டேப் விலையைவிட 3 மடங்கு அதிகமாக ‘தாமதக் கட்டணம்’ வந்தது. அப்போதுதான் டி.வி.டிக்கள் அமெரிக்காவில் காலடி வைத்த நேரம். இந்த டேப்களைத் தூக்கிப் போட்டுவிட்டு டி.வி.டியில் டேட்டாவைச் சேமித்தால் இடம் மிச்சம். அப்படியென்றால், டி.வி.டிக்களை கூரியரில் அனுப்பினால்? ஹேஸ்டிங்ஸுக்கு அது அபராதம் அல்ல; அற்புத விளக்கு என்பது தெரிந்தது. 40 டாலர் அபாராதத்தை சந்தோஷமாகக் கட்டினார். அந்த  அற்புதவிளக்கைத் தேய்த்துப்  பிறந்த ‘ஜீபூம்பா’வான நெட்ஃப்ளிக்ஸின் இன்றைய மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்! 

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIXஹேஸ்டிங்ஸ், தன் நண்பர், நெட்ஃப்ளிக்ஸின் இணை நிறுவனர் மார்க் ரேண்டால்புடன் கடைக்குச் சென்று ஒரு டி.வி.டியை வாங்கினார். அதைத் தன் முகவரிக்கே கூரியர் மூலமாக அனுப்பினார். இருவரும் கூரியர் டெலிவரிக்காகக் காத்திருந்தனர். வந்த கூரியரை ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தனர். எந்த சேதாரமுமின்றி பத்திரமாக வந்து சேர்ந்தது டி.வி.டி. ஐடியா சக்சஸ். அப்போது நடத்திக்கொண்டிருந்த நிறுவனத்தை விற்றுவிட முடிவு செய்தார் ஹேஸ்டிங்ஸ்.

நண்பர்கள் மளமளவென வேலைகளைத் தொடங்கினர். டி.வி.டியை வாடகைக்குத் தரும் வியாபாரம். ஆனால், சின்ன மாற்றம். டி.வி.டி வீடு தேடி வந்துவிடும். ஒவ்வொரு டி.வி.டிக்கும் வாடகை தர வேண்டியதில்லை. மாதாந்திரக் கட்டணம் கட்டினால் போதும்; அந்த மாதத்தில் எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம். நெட்ஃப்ளிக்ஸின் இன்றைய மாடல் இதுதான்.

1997-ல் தொடங்கப்பட்டபோது நிறுவனத்தின் பெயர் Kibble. பின்னர், இணையம் மூலம் ஸ்டிரீமிங் சேவையைத் தொடங்கிவிட்டார்கள். ``அடுத்த 100 ஆண்டுகளுக்கும் கூரியர் மூலம் படங்களை அனுப்ப முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. டெக்னாலஜி மாறும். ஆனால், மக்களுக்குப் பார்க்க கன்டென்ட் எப்போதும் தேவை. காலத்துக்கேற்ப டெக்னாலஜியை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், வீடியோ சேவை என்றால் நெட்ஃப்ளிக்ஸ் என்பதைப் பதிவு செய்ய வேண்டும்’’ என்பதே ஹேஸ்டிங்ஸ் & கோவின் எண்ணமாக இருந்தது. ஸ்டிரீமிங் பக்கம் திரும்பியதால் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. netflix.com, இறுதியாக Netflix. 

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

ஸ்டிரீமிங் முயற்சிக்கு முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தது கனடாவை. முதல் நாள், அவர்கள் நினைத்ததுபோல 10 மடங்கு அதிகமானோர் சந்தா கட்டினர். “நாம் தொட்டிருப்பது புதையல் அல்ல; தங்கச்சுரங்கம்” என அவர்களுக்குப் புரிந்தது. கூடுதல் கவனத்துடன் அடுத்த அடியை எடுத்து வைத்தார் ஹேஸ்டிங்ஸ். கணக்கு வாத்தியார் இல்லையா? ஸ்டெப் பை ஸ்டெப் ஆகத்தான் முன்னேறினார்.

நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பல கோடிப் பேர் வீடியோக்களைக் கண்டு ரசிக்கத் தொடங்கினர். ஆனால், யாருக்கும் நெட்ஃப்ளிக்ஸ்மீது காதல் வரவில்லை. ஏனெனில், அவர்கள் பார்க்கும் படமோ தொலைக்காட்சி நிகழ்ச்சியோ நெட்ஃப்ளிக்ஸுக்குச் சொந்தமானதில்லை. ‘மாப்பிள்ளை இவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை அவருதில்லை’ போல.

மக்கள் நெட்ஃப்ளிக்ஸுடன் கனெக்ட் ஆக ஹேஸ்டிங்ஸ் களம் இறக்கிய டிரம்ப் கார்டுதான் ‘ஒரிஜினல்ஸ்.’ அதாவது, தனது தளத்தில் மட்டும் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தது.

ஹேஸ்டிங்ஸ் கல்லூரி முடித்ததும் செய்த முதல் வேலை வீடு வீடாகச் சென்று வேக்குவம் க்ளீனர் விற்பது. அப்போது, ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையும் வேறு வேறு என்பதை உணர்ந்தார். அது இப்போது கைகொடுத்தது. நெட்ஃப்ளிக்ஸில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்தாலும் யாருக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து, அந்த வேலையை எளிமையாக்கினார். அதற்காகப் பல அல்காரிதங்களை உருவாக்கியது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால், வெறும் இணையக் கருவிகள் சொல்வதைக் கேட்டால் வேலைக்காகாது என ஹேஸ்டிங்ஸுக்குத் தெரியும்.

கேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX

அவர் ஒரு பேட்டியில் சொன்னதன் சாராம்சத்தை நம்ம ஊர் உதாரணங்களோடு சொல்கிறேன். ``எது நல்ல படம்? ஆடுகளமா, வி.ஐ.பி-யா என்றால் பலரும் ஆடுகளத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால், அதிகமானோர் எந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது வி.ஐ.பி-யாக இருக்கும். `எங்களிடம் ஆடுகளமும் இருக்க வேண்டும்; வி.ஐ.பி-யும் இருக்க வேண்டும்’ என்றார் ஹேஸ்டிங்ஸ். எல்லாத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும், எல்லா மனநிலைக்கும் ஏற்ற படங்கள், சீரியல்கள் அவர்களிடம் உண்டு. அதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் 50,000 கோடியைச் செலவழிக்கிறார்கள்.

“50,000 கோடின்னா பிரமிப்பாதான் இருக்கும்... ஆனால், உலக அளவில் அது அவ்வளவு பெரிய தொகை இல்லை. ஏனெனில், நெட்ஃப்ளிக்ஸில் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கன்டென்ட் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” - இதுவும் ஹேஸ்டிங்ஸ் சொன்னதுதான். தொலைக்காட்சி என்பது அந்தந்த மொழி, நிலவியல் சார்ந்த மக்களுக்கானதாக மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது. விளையாட்டு ஊடகங்கள்கூட அப்படித்தான். ஆனால், நெட்ஃப்ளிக்ஸை உலக மக்கள் அனை வருக்குமானதாக உருவாக்கியிருக்கிறார் ஹேஸ்டிங்ஸ். அதற்குத்தான் 50,000 கோடி. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் வசம் 190 நாடுகளில் 10 கோடி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

எந்த ஒரு ஸ்டார்ட் அப்பும் தொடக்கத்தில் ஊழியர்களே இல்லாமல்கூட ஹிட் அடிக்கலாம். ஆனால், அடுத்தகட்ட வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. நெட்ஃப்ளிக்ஸில் வேலை கிடைத்தால் “டேமேஜ் ஆன பீஸு நானே... ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்” எனப் பாடலாம். காரணம், அதிக சம்பளம், அளவில்லா சுதந்திரம். இவை நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கும். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஆரம்பத்தில் ஹேஸ்டிங்ஸுக்கு எல்லாமே புராசஸ்தான். ஏதேனும் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது ஏன், எப்படி, எதற்கு நடந்தது என ஆணிவேர் வரை சென்று அலசுவார். தவறு செய்தவருக்கு பீப் சாங்தான். ஆனால், அனுபவம் அவரை மாற்றியது. கிரியேட்டிவான வேலைகளில் இருப்பவர்களை  இப்படி புராசஸ், புராசஸ் என அலைக்கழிப்பதிலிருக்கும் சிக்கல்களை உணர்ந்தார். தன்னை மாற்றி, தன் நிறுவனத்தின் கலாசாரத்தையும் மாற்றினார்.

``வெகேஷன் போகணும் பாஸ்” என்பவர்களுக்கு உடனடி விடுமுறை.  குழந்தை பிறக்கப்போகிறதென்றால் அம்மாவோ அப்பாவோ... சம்பளத்துடன் அன்லிமிட்டெட் விடுமுறை. நிறுவ னத்துக்குள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு, நெட்ஃப்ளிக்ஸின் திட்டம் என்னவென்று ஊழியர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். சுதந்திரம் பொறுப்புணர்ச்சியைத்தான் தருமென்பது ஹேஸ்டிங்ஸின் அனுபவப் பாடம். ஒவ்வொரு ஸ்டார்ட்அப் ஆர்வலருக்குமான முக்கியக் குறிப்பு இது. நோட் பண்ணிக்கங்க வருங்காலத் தொழிலதிபர்களே!

இந்தக் கணக்கு வாத்தியாருக்குக் கல்வியின் மீது மிகப்பெரிய காதலும் நம்பிக்கையும் உண்டு. தன் 27,000 கோடி சம்பாத்தியத்தில் கணிசமான தொகையை ஏழைக்குழந்தைகளின் கல்விக்காகச் செலவு செய்கிறார் இந்த 58 வயது வாத்தியார்.

2002-ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸின் பங்குகளைப் பத்து ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு 2015-ம் ஆண்டு கிடைத்த தொகை 99,250. அதாவது 9,925 மடங்கு லாபம். அடுத்த 20 ஆண்டுகளில் தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மவுசை இழக்கும்; அதே வேகத்தில் இணையத் தொலைக்காட்சிகள் மவுசு பெறும் என்பதை அடிக்கடி குறிப்பிடுவார் ஹேஸ்டிங்ஸ். இப்போதுதான் உலகம் அதைப் புரிந்துகொண்டு வருகிறது. ஸ்டார்ட்அப்களின் அழகு அதுதான். எதையும் மற்றவர்கள் அறியும் முன்னர் கண்டறிந்துவிட்டால் போதும்; அதனுடன் உழைப்பைச் சேர்த்து உலகம் அதுவரை ஆடிவரும் ஆட்டத்தையே மாற்றிவிடலாம்; ஹேஸ்டிங்ஸ் செய்ததைப் போல.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா