Published:Updated:

ரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ!

ரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ!
ரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ!

பிரிட்டனில் ரோபோக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ளது தனியார் நிறுவனம் ஒன்று. வெயிட்ரோஸ் & பார்ட்னர்ஸ் குழுமங்களின் தாய் நிறுவனமான `தி ஜான் லூயிஸ் பார்ட்னர்ஷிப்', ரோபோக்களை உருவாக்கும் ‘ஸ்மால் ரோபோ கம்பெனியுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக மிகச்சிறிய அளவிலான மூன்று ரோபோக்கள் மூன்று வருடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ரோபோக்களை வைத்து ஒரு ஹெக்டேர் (அதாவது 2.5 ஏக்கர்) கோதுமை நிலங்களில் சோதனை செய்து, விவசாயத்தில் ஆட்டோமேஷன் சாத்தியமா என சோதிக்கப்போகிறார்கள்.

விவசாய செலவுகள் ஒவ்வொரு வருடமும் 8 சதவிகிதம் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமன்றி பெருகிவரும் மக்கள்தொகை, உணவு உற்பத்தியின் தேவையைக் கூட்டிக்கொண்டே செல்கிறது. எனவே, இந்த ரோபோக்களை விவசாயத்தில் உபயோகப்படுத்துவது மனிதர்களுக்கு மாற்றாக அமைவதாக மட்டுமன்றி, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படும் என்கின்றனர் நிபுணர்கள்.  ரோபோக்களால் மனித ஆற்றலைத் தாண்டிய பணிகளையும் செய்ய முடியும்.

தற்போது டாம், டிக், ஹேரி எனும் மூன்று ரோபோக்களை சோதனைக்குட்படுத்தப் போகிறார்கள். 10 கிலோ எடைகொண்ட டாம் ரோபோவில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அது ஓர் இடத்தை முழுமையாய், மிகத் துல்லியமாக ஆராய்ந்து, அந்த இடத்தில் இயல்புகளையும், அங்கிருக்கும் செடிகளின் படங்களையும் பதிந்துகொள்ளும்.

ஹேரி, டிஜிட்டலாக விதைபோடும் ரோபோ. இடங்களை வைத்து சீரான இடைவெளியில் விதை விதைக்கும். டிக், அதன் இயந்திர ஆற்றலைக் கொண்டு செடிகளைக் களையெடுக்கிறது. இந்த மூன்று ரோபோக்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களும் தொழில்நுட்பமும் நிலத்தின் சூழல்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும் கையாளவும் முடிகிறதாம். உரங்கள், பூச்சி மருந்துகள் எப்போது உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க இவை உதவுகின்றன. இப்படித் துல்லியமாக இயங்குவதன்மூலம் உற்பத்திச் செலவுகளை 60 சதவிகிதம் வரை குறைகிறது. வருமானமும் அதிகரிக்கிறது என்கின்றனர் ரோபோ நிறுவனத்தினர்.