Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 8

கேம் சேஞ்சர்ஸ் - 8
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 8

கேம் சேஞ்சர்ஸ் - 8

கேம் சேஞ்சர்ஸ் - 8

கேம் சேஞ்சர்ஸ் - 8

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 8
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 8
கேம் சேஞ்சர்ஸ் - 8

1990: மதுரை.

குஷ்பூ அப்போது தமிழகம் முழுவதும் பிரபலம். அவரைத் திரையில் பார்க்கவே கூட்டம் அள்ளும்; நேரில் பார்ப்பதென்றால்? மதுரை நகருக்கு ஒரு விழாவுக்காக வருகிறார். ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்; சில பத்திரிகையாளர்களும். கூட்டத்தையும் குஷ்பூவையும் படமெடுக்கிறார்கள். மக்கள் குஷ்பூவைப் பார்த்துக் கையசைக்கிறார்கள். அந்த வெறுங்கைகளுக்குப் பதிலாக குஷ்பூவின் கையசைப்பு வந்து சேர்கிறது. குதூகலிக்கிறார்கள். மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் அந்தப் படங்கள் வந்தன. தமிழகம் முழுவதும் “எவ்ளோ கூட்டம்ப்பா” என அதே பேச்சுதான். 

கேம் சேஞ்சர்ஸ் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2012:சீனா

29 வயதே ஆன ஜாங் யிமிங்(Zhang Yiming) சில முதலீட்டாளர்களிடம் ஒரு ஐடியா சொல்கிறார்.

``ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸை கைல எடுக்கிறோம் சார். நியூஸ் மீடியா கம்பெனிகளுக்கு சவால் விடுற மாதிரி ஒரு புராடக்ட் தயார் செய்றோம். அடி பின்றோம்.”

முதலீட்டாளர்களுக்கு அந்த ஐடியா மீது நம்பிக்கை வரவில்லை. சரி, மேலதிக விவரங்களைக் கேட்டுப் பார்க்கலாம் எனச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.

“எத்தனை நிருபர்கள், காப்பி எடிட்டர்கள் எல்லாம் தேவை?”

“அதெல்லாம் எதுக்கு?” - இது ஜாங்கின் பதில் கேள்வி.

இவர்களெல்லாம் இல்லாமல் மீடியா எப்படி என்ற அவர்களின் சந்தேகம் சரிதான். ஆனால், ஜாங்கின் ஜீபூம்பா ஐடியா, மீடியாவுக்கு ஒரு மாற்றுதானே தவிர இன்னொரு மீடியா நிறுவனம் அல்ல.

2017: சேலம்.


நயன்தாரா தமிழ் சினிமாவை ஆள்கிறார். அவர் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக வருகிறார். மக்கள் தொகை 27 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதால் குஷ்பூவுக்குக் கூடியதைவிட அதிக கூட்டம். இந்த முறை ஒரு வித்தியாசம். வெறுங்கைகள் அல்ல; அனைத்துக் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள். நயனை நேராகப் பார்த்தவர்களைவிட அந்த ஸ்மார்ட்போனின் திரை வழியே பார்த்தவர்கள்தாம் அதிகம். சிலர் புகைப்படங்கள் எடுக்க, சிலர் வீடியோ எடுக்க, பலர் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவே போட்டுவிட்டனர். இம்முறையும் பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படங்கள் அலுவலகம் செல்லும் முன்பு அங்கு திரண்டிருந்தவர்கள் எடுத்த படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகிவிட்டன. இனி செய்திகளை நுகர்வது மட்டுமல்ல; உருவாக்குவதும் மக்களே. இது சோஷியல் மீடியா காலம். இதைத்தான் 2012-ல் ஜாங் கணித்திருந்தார்.

செயற்கை நுண்ணறிவின் உதவியோடு, வாசகர்களின் தேவையைச் சரியாக அறிந்து அவர்களுக்கான செய்திகளைத் தருவது. அந்தச் செய்திகளை அவர்கள் தயாரிக்கப்போவதில்லை. அதை மற்ற செய்தி நிறுவனங்களுடன் கைகோத்துப் பெறுவது; மற்றும் வாசகர்களே அளிக்கும் செய்திகளைப் பயன்படுத்துவது.

இது சாத்தியமா?

கலைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தியை உங்களுக்கு முதலில் சொன்னது நாளிதழா, தொலைக்காட்சியா, சமூக வலைதளமா அல்லது வாட்ஸ் அப்பா? இன்று ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் வாட்ஸ் அப்பும்தான் முதன்மையான செய்தி அறிவிப்பாளர்கள். ஜாங்கின் ஐடியா, தேவையான செய்திகளை, அழகாகக் கண் முன் கொண்டுவருவதுதான்.

கேம் சேஞ்சர்ஸ் - 8

ஆனால், 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட முன்னணிச் செய்தி நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்குவது அவ்வளவு எளிதான காரியமா? கூகுள்கூட முயற்சி செய்தது. ம்ஹூம். முடியவில்லை. அதுவும் ஜாங்குக்கு வயதோ 29. சாதாரண சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவரை நம்பிப் பணம் போடலாமா என்ற சந்தேகம் எழுவது சரிதான். ஒருவழியாகப் பணம் கிடைத்து “பைட் டேன்ஸ்(Byte dance) தொடங்கப்பட்டது. அதன் முதல் தயாரிப்பு Toutiao சீனாவின் பெரிய ஹிட். பெரும்பாலான சீனர்கள் செய்திகளைத் தெரிந்துகொள்வது இதன் மூலம்தான். இன்று பைட் டேன்ஸுக்கு வயது 6. ஜாங்கின் வயது 35. அந்த சாதாரண சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சொத்து மதிப்பு 400 கோடி அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் 29,130 கோடி. பைட் டேன்ஸின் மதிப்பு 5,46,000 கோடி. உலகின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப்களில் உச்சத்திலிருக்கிறது பைட் டேன்ஸ்.

இனி வீடியோக்கள்தாம் உலகை ஆளப்போகின்றன என்று ‘ரமேஷ் அப்பா, சுரேஷ் அப்பா’ தவிர மற்ற எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஆனால், வீடியோக்களை வாடிக்கையாளர்கள் விரும்பும்படி காட்டுவது எப்படி என்பதைத்தான் யாருமே சொல்லவில்லை. திடீரென ஒருநாள் நம் ஃபேஸ்புக் டைம்லைன் முழுக்க வீடியோவாக மாறிவிட்டது. பெரும்பாலான ஃபேஸ்புக் பயனர்கள் அதை ரசிக்கவில்லை. திணிக்கத் தொடங்கியது ஃபேஸ்புக். ஆனால், பைட் டேன்ஸ் தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பயனர்களின் தேவையறிந்து தருவதால், அவை ஃபேஸ்புக் வீடியோக்களைவிட நல்ல ரீச் ஆவதாக டெக் வல்லுநர்கள் சொல்லிவிட்டார்கள். மார்க்குக்கு இப்போதைய பெரிய சவால் பைட் டேன்ஸ்தான் என்கிறார்கள். ஏன்?

ஃபேஸ்புக் தன் முதல் ஆறாண்டுகளில் என்ன வளர்ச்சி அடைந்ததோ, எத்தனை பயனர்களைப் பெற்றதோ அதைவிட அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது பைட் டேன்ஸ்.  ஃபேஸ்புக்கைத் தவிர அதன் மற்ற தயாரிப்புகள் அந்தளவு பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால், பைட் டேன்ஸ் அப்படியல்ல. அதன் தயாரிப்புகள் மாஸ் ஹிட். அப்படி என்ன செய்தார்கள்?

`டிக் டொக்’
. இன்று இந்தியர்கள் குடும்பம் குடும்பமாக ஆடிப் பாடி, வீடியோக்களை ஷேர் செய்கிறார்களே. அந்த ’டிக் டொக்’ (பழைய பெயர் மியூசிக்கலி) பைட் டேன்ஸின் தயாரிப்புதான். ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் ‘ஃபேமிலி ஆடியன்ஸ்’ ரொம்பக் குறைவுதான். ஆனால், டிக் டொக் அப்படியல்ல. குடும்பம் குடும்பமாக கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சென்ற ஆண்டு அதிகமானோரால் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப், டிக் டொக் தான். இப்போது ஆசியாவில் மட்டுமே களமிறங்கியிருக்கிறது டிக் டொக். இன்னும் மேற்கத்திய நாடுகள் பக்கம் போகவில்லை. அங்கும் போய்விட்டால் வேற லெவல்தான். ஒரு நாளில் சராசரியாக 50 நிமிடங்களை ஃபேஸ்புக்குக்குத் தருகிறார்கள் அதன் பயனர்கள். ஆனால், பைட் டேன்ஸ் தயாரிப்புகளில் அது 76 நிமிடங்கள். அப்படியென்றால் அதிக விளம்பரம்; அதிக வருமானம்.

இவற்றையெல்லாம் வைத்து ஜாங் யிமிங்கை மார்க் சக்கர்பெர்கைவிட முக்கியமான நபர் என எளிதில் நிறுவலாம். ஆனால், சீனாவைத் தாண்டினால் அவரைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அவருக்கென விக்கிபீடியாவில் ஒரு பக்கம்கூட இல்லை. “அதனாலென்ன... டிக் டோக்கைத் தெரியாதவர்கள் இருந்தால் சொல்லுங்கள்... அங்கே விளம்பரம் பண்ணிடலாம்” எனச் சொல்வார் யிமிங்.

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்ததும் அதன் தன்மை மாறியதாக அதன் நிறுவனர்களே சலித்துக் கொண்டார்கள். காரணம், மார்க்கின் தொழில் தர்மம் வேறு. பெரிய நிறுவனங்களால் வாங்கப்படும் அல்லது முதலீடு செய்யப்படும் அனைத்து ஸ்டார்ட் அப்களும் இந்தச் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரும். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றதால்தான் சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான அலிபாபா மற்றும் டென்செண்ட் தந்த முதலீடுகளை வேண்டாம் என்றார் யிமிங். அதேசமயம் ஒரு நாள் அந்த இரண்டு ஜாம்பவான்களை ஓவர்டேக் செய்யும் வாய்ப்புகளையும் பிரகாசமாக வைத்துக்கொண்டார்.

சென்ற ஆண்டு கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றினார் ஜாங். அவர் பேசியதிலிருந்து...

“2005-ல் பட்டம் வாங்கிய கையோடு Kuxun என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். புதிதாகத் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் ஆரம்பக்கால ஊழியர் நான். முதல் ஆண்டு நான் சாதாரணப் பொறியாளன்தான். அடுத்த ஆண்டில் 50 பேருக்கு பாஸ். அடுத்த ஆண்டு அத்துறையின் தலைவன். இந்த வேகத்துக்கு என்ன காரணம் என யோசித்தேன். தொழில்நுட்பத்தில் நான் சிறந்தவனா, கடின உழைப்பாளியா, அனுபவமா? இவை எதுவுமே இல்லை. என் வேலை என்பது என்னோடு முடிந்துவிடவில்லை என நினைத்தேன். என் வேலை முடிந்ததும் மற்றவர்களுக்கு உதவினேன். கோடிங் எழுதுவதுதான் என் வேலை என்பதால், நேரம் கிடைக்கும்போது புதிதாக வந்தவர்களுக்கு கோடிங் எழுதப் பாடம் எடுத்தேன்.”

``தொழில்நுட்பமோ, ஐடியாவோ... இரண்டிலுமே நாங்கள் தனித்துவமானவர்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்களின் காப்பி கேட் இல்லை நாங்கள்” என மார்தட்டிச் சொல்கிறார் ஜாங். சீனாவிலிருந்து இந்தக் குரல் வருவதால் அதற்கு மதிப்பு அதிகம். முக்கியம். ஏனெனில், தனித்துவமானவர்களால் தான் இந்த உலகை மாற்ற முடியும்.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா