Published:Updated:

சர்வைவா - 33

சர்வைவா - 33
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 33

சர்வைவா - 33

“உலக சரித்திரத்தில் இதுவரை இப்படியெல்லாம் இருந்ததில்லை. உணவு கிடைக்காமல் செத்துப்போகிறவர்களைவிட, உடல்பருமனால் செத்துப்போகிறவர்கள் அதிகமாகிவருகிறார்கள். நோய்வந்து இறந்துபோகிறவர்களைவிட முதுமையால் இறந்து போகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. போர்களால் பலியாகிறவர்களைவிடக் கூடுதலாக மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கன்பவுடரைவிட சர்க்கரை ஆபத்தானதாக மாறிவருகிறது... நம் பிரச்னைகள் மாறிவிட்டன!’’

- Homo deus நூலில் யுவால் நோவா ஹராரி.

சர்வைவா - 33

சென்ற நூற்றாண்டுவரை மனிதனுக்கு மூன்று விஷயங்கள்தாம் அன்றாடப் பிரச்னையாக இருந்தன. பஞ்சம், போர், கொள்ளை நோய்கள். அவனை இந்த மூன்றில் இருந்தும் ஓரளவு மீட்டெடுத்திருக்கிறது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி. இன்றைய மனிதனுக்கு லைக் கிடைக்கவில்லை, ஐபோன் வாங்கமுடியவில்லை, புளூ டிக் காட்டியும் ரிப்ளை போடவில்லை, இன்டர்நெட் ஸ்பீடு ஸ்லோவாக இருக்கிறது என்று... பிரச்னைகள் மாறிவிட்டன.

சர்வைவா - 33இன்று மனிதர்கள் அந்த ஆதி மூன்று (ப.போ.கொ) அவஸ்தைகள் பற்றி தினம் தினம் அஞ்சுவதில்லை. பஞ்சத்தைத் தீர்க்க, கடவுள்களிடமோ தேவதைகளிடமோ வேண்டுவதில்லை. மழைவேண்டிப் பலிகொடுப்பதில்லை. புதிய ஆயுதங்களை முயன்று பார்க்க வம்படியாகப் போருக்குப் போவதில்லை. பிரச்னைகளுக்கான காரணங்கள் அவர்களுக்கு விளங்கத்தொடங்கிவிட்டன. பெட்ரோல் விலையேற்றத்துக்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய மதிப்பு பேரலுக்கு ப்ளா ப்ளா ப்ளா ஏறிவிட்டது என்பதுதான் என்கிறான். அதனாலேயே பெட்ரோல் விலை குறைய யாகமெல்லாம் நடத்துவதில்லை!

குருப்பெயர்ச்சி பலன்கள் பார்த்தாலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கைப்பாடுகளை ஓரளவுக்காவது அறிவியல்பூர்வமாக அணுகத்தொடங்கிவிட்டார்கள். ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ குழுவினர் மட்டும்தான் இன்னமும் திருந்தாமல் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் நிறையவே முன்னேறியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக வறுமையை, போர்ச்சூழலை, இயற்கையின் சீற்றங்களை, கொள்ளை நோய்களை நம்மால் முற்றிலுமாக ஒழித்துக்கட்டிப் பாதுகாப்பான வாழ்வை வாழ்ந்துவிட முடியவில்லை. இருந்தாலும், அதை எதிர்த்துப்போராடுகிற மனநிலை மனிதனுக்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம்கொஞ்சமாக அதன் தாக்கங்களைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறோம்.

சரி, அடுத்த நூறாண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்கமுடியுமா? கேன்சர், எய்ட்ஸ் மாதிரியான தப்பவே முடியாத நோய்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை கிடைக்குமா? தீவிரவாத அச்சுறுத்தல்களும் எல்லைகளில் நிலவும் பதற்றங்களும் ஒழிக்கப்படுமா? இயற்கையின் பேரழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள முடியுமா? வறுமையும் மருத்துவமும் போர்களும் எப்படி இருக்கும்? பிக்டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திடம்தான் இருக்கிறது இதற்கான விடை.

எந்திரங்களால் வறுமையை ஒழிக்க முடியுமா?

உங்களிடம் அப்படி ஒரு தொழில்நுட்பம் இருக்கிறதா? அல்லது, உங்களால் அப்படி ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா? உங்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. Xprize என்கிற அமைப்பு அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்திற்கு ஐந்து மில்லியன் டாலரைப் பரிசாகத் தரக் காத்திருக்கிறது. ஏப்ரல் 2020 வரை காலம் இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் பரிசை அள்ளிவிடலாம்... திறமையுள்ளவர்கள் முந்துங்கள். Xprize தொழில்நுட்பர்களுக்கு இதுமாதிரி நிறைய போட்டிகள் வைத்திருக்கிறார்கள்.

சர்வைவா - 33

ஒருபக்கம் கார் ஓட்டுவதில் இருந்து கதை எழுதுவது வரை நம்முடைய வேலைகளை எல்லாம் இந்தச் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் பிடுங்கிக்கொள்ளப்போகின்றன என்று பயம் வருகிறது. வருமானம் பறிபோகப்போகிறது என்கிறார்கள்... நம்முடைய பாக்கெட்டை எப்படியெல்லாம் காலி பண்ணலாம் என கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த எந்திரங்களைக் கொண்டே திட்டமிடுகின்றன. இப்படி இருக்க, எப்படித் தீரும் வறுமை... சொல்லப்போனால் அதிகம்தானே ஆகவேண்டும்... ஆகாது என்கிறார்கள் ப்யூச்சரிஸ்டுகள்.

எதிர்காலத்தில் வேலைவாய்ப்புத் தேடலை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் இன்னும் துல்லியமாக மாற்றப்போகின்றன. குறிப்பிட்ட திறமைகள் கொண்டவர்களை மட்டும் தேடிக் கண்டுபிடிப்பது, அவர்களை வேலைக்கு நியமிப்பது என வேலைவாய்ப்புத் தேடலை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சுலபமாக்கும். கருவிகளும் சிந்திக்கிற எந்திரங்களும் பூதங்களாகக் கிளம்பினாலும் புதிய வேலைகள் உருவாகும். வறுமையில் இருக்கிற ஏழைத்தொழிலாளர்களைக் கண்டறியவும் அவர்களுடைய திறமைக்கு ஏற்ற மிகச்சரியான வருமானத்தையும் பலன்களையும் பெற்றுத்தரவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான் உதவப்போகிறது. ஏற்கெனவே இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகள் எல்லாம் பயன்படுத்தத்தொடங்கிவிட்டன. கார்ப்பரேட் உலகின் இன்றைய முக்கியமான பிரச்னைகளில் ஒன்று திறமையான ஏழைகளைக் கண்டுபிடிப்பதுதான்!

சரி, மனிதர்களின் வறுமைக்குக் காரணமான வேலை வாய்ப்பின்மையை AI குறைக்கும். ஆனால் மற்ற பிரச்னைகள்? உணவுப் பற்றாக்குறை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வாய்ப்பின்றி இருப்பது, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பஞ்சம்... இந்த விஷயங்களை எப்படிக் களைவது? இதற்கும் செயற்கை நுண்ணறிவுத்துறை யில்தான் தீர்வுகள் தேடிக்கொண்டி ருக்கிறார்கள்!

இலவசத் திட்டங்கள் நல்ல பலன் கொடுத்தாலும் அவை சரியான ஆட்களுக்குத்தான் சென்று சேர்கின்றனவா, அவை தம் நோக்கத்தை எட்டுகின்றனவா என்பவற்றையெல்லாம் கண்காணிக்க நம்மிடம் சரியான கருவிகள் இல்லை. அதனாலேயே அரசு போடுகிற பல திட்டங்களும் வறுமை ஒழிப்பு முயற்சிகளும் வீணாகின்றன. யாருக்கு உதவி தேவை, யார் நிஜமாகவே வறுமையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் போவதால்தான் இந்த நிலை.

இதைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக்டேட்டா மாதிரியான தொழில்நுட்பங்கள்தாம் எதிர்காலத்தில் அரசுக்கும் உதவி, அமைப்புகளுக்கும் உதவுகின்றன. இப்போதே ஆப்பிரிக்க நாடுகளில் இதுமாதிரியான தொழில்நுட்பங்களை ஐநா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வறுமையில் அதிகம் இருக்கிறவர்கள் பகுதிகளில் இருக்கிற நீர்நிலைகள், வானிலை, வருமானம், உணவு, கல்விநிலை முதலான விஷயங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சொல்கிற அல்காரிதங்களை உருவாக்கியுள்ளார்கள்!

உதவி தேவைப்படுகிற இடங்களை ஒவ்வொரு டேட்டாவாக மனிதர்களே அலசி ஆராயாமல் உடனுக்குடன் எந்திரங்களே அதிவேகமாக ஆராய்ந்து சொல்கிற நிலை உருவாகியுள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தப்பகுதிக்கு உடனடி உதவி தேவை, எங்கே மருத்துவ வசதிகள் அவசியம், எங்கே விவசாயிகளுக்குப் பிரச்னை வரப்போகிறது, பருவநிலை மாற்றங்களால் யாருக்கு பாதிப்பு என்பவையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி அரசுகளை உதவும்படி வலியுறுத்துகிறார்கள். இது வறுமை மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளில் நல்ல பலன்களைத் தர ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள்.

வறுமைக்கு அடிப்படையான காரணிகளில் முக்கிய மான இன்னொன்று கல்விமறுப்பு. எங்கெல்லாம் அடிப்படைக் கல்வி மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அடிமைத்தனமும் வறுமையும் நிறைந்திருக்கும். அதனால்தான் பெரியாரும் அம்பேத்கரும் கல்வியே விடுதலைக்கான வழி என வலியுறுத்தி னார்கள், அனைவருக்கும் சமமான கல்வி என்பதற்காகப் போராடினார்கள். கல்விமறுப்பு மட்டுமல்ல, மோசமான கற்பித்தலும் உலகின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தி ருக்கிறது.

ஒருபக்கம் பல லட்சம் செலவழித்துப் படிக்கிற குழந்தைகளும் இன்னொருபக்கம் ஓராசிரியர் பள்ளிகளும் என மிகப்பெரிய பாகுபாடு நிலவுகிற உலகம் நம்முடையது. இந்தப் பிரச்னைகளைப் போக்குவதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் உதவக்கூடும். அனைவருக்கும் கற்பதற்கான சரிசமமான வாய்ப்புகளை இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்கித்தரும். மாணவர்களின் எந்தக் கேள்விக்கும் உடனடியாக இணையத்தில் தேடி விடை தருகிற எந்திர ஆசிரியர்களும் Khan Academy மாதிரியான Self learning கருவிகளும் இணைந்தால், யாருக்கும் எந்த மாதிரியான கல்வியையும், கற்றுக்கொள்ள விரும்புகிற துறையையும் வழங்கமுடியும். ஆசிரியர்கள் சென்றுசேர முடியாத இடங்களையும்கூடத் திறமையான எந்திர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பலாம்.

திறன் மேம்பாடு என்பது அனைவருக்கும் ஒன்றுபோலவே கிடைக்கும். இந்தத் தொழில்நுட்பத்தை செல்போன்களின் வழி எப்படிச் செயல்படுத்த முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகளும் நிறையவே நடக்கின்றன.

ஐபிஎம் நிறுவனம் ‘சயின்ஸ் ஃபார் சோஸியல் குட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வழி சமூகப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்த விஷயத்தை முன்னெடுத்திருக்கிறது ஐபிஎம். உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களோடு சேர்ந்து இதைச் செய்கிறார்கள். இதன்மூலம் கொள்ளைநோய்கள் பரவும் முன்பே கண்டறிவது, ஆன்லைனில் பரவும் வதந்திகள் ஆஃப்லைனில் உண்டாக்கும் தாக்கங்களைச் சரிசெய்வது, குறைவான மின்சாரத்தை அதிக மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது மாதிரி நிறைய நிறைய தொழில்நுட்பங்களுக்குக் கோடி கோடியாய் ஸ்பான்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று படிப்பறிவில்லாத மக்களும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்கிற வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தேடல். Simpler Voice: Overcoming Illiteracy என்கிற புராஜெக்ட். செயற்கைநுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு இதை உருவாக்கி வருகிறார்கள்.

இயற்கைப் பேரிடர்கள் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் விவசாயிகளும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறவர்களும்தாம். இயற்கைப் பேரிடர்களை முன்கணிப்பது, அதற்கேற்ற முன்னேற்பாடுகள் செய்வதன் மூலம் உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகளைத் தவிர்ப்பது என நிறையவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யமுடியும்.

சென்னை மழை, கேரள வெள்ளம் மாதிரியான விஷயங்களையெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்திருந்தால் எவ்வளவு சேதங்களைத் தவிர்த்திருக்கலாம். இந்தமுறை பருவமழை சரியாக இருக்காது என்பதைக் கணித்துச்சொல்ல முடிந்தால் தற்கொலை செய்துகொள்கிற எத்தனை விவசாயிகளைக் காக்கலாம். எனவேதான் உலகெங்கும் இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கவும் மெனக்கெடுகிறார்கள்.

எப்போதும் உலக உதாரணங்களைக் காட்டி போரடிக்கிறது. உள்ளூரில் நம்ம சென்னையிலேயே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம்  வெள்ள பாதிப்பை ஒருவாரம் முன்பே கணிக்கிற C-FLOWS என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்போகிறோம். National Centre for Coastal Research (NCCR) தயாரித்திருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வெள்ள பாதிப்பு உண்டானால் சென்னையின் மூலை முடுக்கெல்லாம் எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்தக் கட்டடத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது வரை துல்லியமாகச் சொல்ல முடியும் என்கிறார்கள். வானிலை அறிக்கைகள், ஏரிநீர் அளவுகள், நீர்வரத்து, ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, நம்முடைய பாதாளச் சாக்கடை நிலவரம், கழிவுநீர் வெளியேற்றங்கள் என வெவ்வேறு தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் பாதிப்புகளை முன்னறிவிக்குமாம் இந்த சி-ஃப்ளோஸ்.

வறுமை ஒழிப்பின் அடுத்த முக்கியமான காரணி உணவு உற்பத்தி... அந்த `வயலும் வாழ்வும்’ ஏரியாவிலும் செயற்கை நுண்ணறிவுத்துறையின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கப்போகிறது. அது அடுத்தவாரம்.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி