Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 9

கேம் சேஞ்சர்ஸ் - 9
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 9

செயலி

கேம் சேஞ்சர்ஸ் - 9

செயலி

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 9
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 9

ண்பர்கள் இருவர். ஜேன் கோம் மற்றும் பிரயன் ஆக்டன். யாஹூவில் ஒன்றாக வேலை செய்தவர்கள். ஃப்ரீஸ்பீ (Freesbie) என்ற விளையாட்டுதான் அவர்களை நண்பர்கள் ஆக்கியது. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி. அதனாலோ என்னவோ இருவரும் வேலையை விட்டுவிட்டு ஒரு பயணத்துக்குக் கிளம்பினார்கள். ஒரு கட்டத்தில் கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்தது. இருவருக்கும் நல்ல அனுபவம் இருந்ததால், அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். இருவருக்கும் ‘நோ’ சொன்னது ஃபேஸ்புக். 

கேம் சேஞ்சர்ஸ் - 9

பிரயன் ட்விட்டரில் இந்தச் செய்தியை இப்படிப் பகிர்கிறார்:  “ஃபேஸ்புக் எங்களை வேண்டாம் எனச் சொல்லிவிட்டது. வாழ்க்கையின் அடுத்த சாகசத்துக்காகக் காத்திருக்கிறேன்.” பிறகு ட்விட்டரிலும்  வேலைக்கு விண்ணப்பித்தார் பிரயன். அங்கேயும் கதவு சாத்தப்பட்டது.

  சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யனைப்போல  காத்திருந்து சாகசம் புரிந்தார்கள். அந்த சாகசத்தின் பெயர் “வாட்ஸ் அப்”.

ஃபேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்ட இருவர் இணைந்து உருவாக்கிய வாட்ஸ் அப்பை அதே ஃபேஸ்புக், அதற்கு முன் எந்த ஸ்டார்ட் அப்க்கும் தராத தொகையைத் தந்து வாங்கிக்கொண்டது. “எது வெற்றி?” என்ற ஒரு கேள்விக்கு வாட்ஸ் அப்பின்  இந்தக் கதையை, பலரும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 

பங்காளி ஜேன் கோமைப் பற்றி சொல்லவில்லையே; உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். வறுமை அவர் குடும்பச் சொத்து. பள்ளிப் படிப்பே `எப்போ வேணும்னாலும் நின்னுடும்’ என்ற ரீதியில்தான் இருந்தது. 16வது வயதில் அமெரிக்காவுக்கு அவர் அம்மாவுடன் தப்பி ஓடி வந்தார். கிடைத்த வேலையெல்லாம் செய்தார்கள் அம்மாவும் மகனும். கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. கல்லூரியில் படித்தபோது செய்துகொண்டிருந்த ஒரு வேலையில்தான் ஜேனும் பிரயனும் நட்பானது. பிரயன்தான் ஜேனை யாஹூவுக்கு அழைத்து வந்தார். நண்பன்மீதான நம்பிக்கையில் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் வேலைக்கு வந்துவிட்டார் ஜேன். பிரயனுக்கும் ஜேன் மீது அபார நம்பிக்கை. “நீயெல்லாம் படிச்சுத்தான் பெரியாள் ஆகணும்னு இல்லப்பா... படிக்கலைன்னாலும் ஆயிடுவ” என்றார் பிரயன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேம் சேஞ்சர்ஸ் - 9

ஒருநாள் ஜேன் ஜிம்மில் தன் உடலைப் பட்டைதீட்டிக் கொண்டிருந்தார். திரும்ப வந்து மொபைலைப் பார்த்தபோது 12 மிஸ்டு கால். தான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என நண்பர்களுக்குச் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்குமே... இத்தனை கால்கள் வந்திருக்காதே என யோசித்தபடி ஜேன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அதுதான் வாட்ஸ் அப் என்ற ஜீபூம்பாவுக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி.

ஜேன் மற்றும் பிரயன் இருவரும் சேர்ந்து அந்த ஐடியாவை மெருகேற்றினார்கள். இயல்பாகவே இருவருக்கும் ஆடம்பரம் பிடிக்காது. பணத்தாசை கிடையாது. எனவே, வாட்ஸ் அப்பின் ப்ளூ பிரின்ட் எளிமையாக இருந்தது.

No Games / No Ads / No Gimmicks என ஒரு காகிதத்தில் எழுதி கண்ணில்படும்படி வைத்துக்கொண்டார் ஜேன். உலகம் முழுவதுமிருக்கும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உரையாட ஒரு களம். அவ்வளவுதான்.

முதலில் ஐபோனுக்கான செயலியைத்தான் உருவாக்க நினைத்தார்கள். ஆனால், இருவருக்கும் ஆப் கோடிங் தெரியாது. மூன்றாவதாக ஒருவரை டீமில் சேர்த்தார்கள். செயலி உருவானது.

“ரொம்ப ஆர்வமாக அந்தச் செயலியை லான்ச் செய்தோம். ஆனால், யாருமே பயன்படுத்தவில்லை என்றதும் அதே நாளில்  ஏமாற்றமும் அடைந்தோம்” என்கிறார் ஜேன். செயலியில் ஏகப்பட்ட சிக்கல்; தொழில்நுட்பப் பிரச்னைகள். “வேலைக்கே போயிடலாமா ப்ரோ” என பிரயனைத் தொல்லை செய்தார் ஜேன். பிரயனுக்குக் கொஞ்சம் பொறுமை அதிகம். ஜேனின் ஐடியாவில் பிரச்னை இல்லை என அவருக்குத் தெரியும். ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் பெரும்பாலானோர் சறுக்கும் இடம் இது. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தவறா அல்லது செய்யும் முறையில் தவறா என்பதைக் கண்டறியும் மூளை வேண்டும். இல்லையேல், ஐடியாவே வேலைக்காகாதென ஊத்தி மூடிவிடுவோம்.

கேம் சேஞ்சர்ஸ் - 9தனக்குத் தெரிந்த நண்பர்களிடமிருந்து கொஞ்சம் பணத்தை முதலீடாகப் பெற்றார்கள். அதை வைத்து செயலியைச் சரி செய்தார்கள். காலம் எல்லோருக்கும் ஒரு பரிசு வழங்கும். அந்தப் பரிசு வாட்ஸ் அப்புக்கு ஆப்பிள் வடிவில் வந்தது. அப்போதுதான் ஐபோனில் Push notification வசதி அறிமுகம் ஆனது. நமக்கு மெசேஜ் வந்ததும் மேலே ‘டிங்’ என ஒரு அலர்ட் வருமே... அதுதான் Push notification. அது வாட்ஸ் அப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. அப்டேட் ஆன செயலியை அதிகமானோர் டவுன்லோடு செய்தார்கள். ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் டாப் 20 செயலிகள் பட்டியலில் வாட்ஸ் அப் வந்தது. உற்சாகமான டீம், வாட்ஸ் அப்பை பிளாக்பெரி மொபைலுக்கும் கொண்டு வந்தது.

ஆப் ஹிட்டுதான். ஆனால், வருமானம்? வாட்ஸ் அப்பைக் கட்டணச் சேவையாக மாற்றினார்கள். நல்ல பொருளுக்கு விலை எப்போதும் ஒரு தடையில்லை என்பது நிரூபணம் ஆனது. வாட்ஸ் அப் மீது பயனர்களின் நம்பிக்கை அதிகரிக்க, முதலீடும் நிறைய கிடைத்தது. கிடைத்த பணத்தை வைத்து, புதிய வசதிகள் தருவது, ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய அலுவலகம் திறப்பதெல்லாம் செய்யவில்லை ஜேனும் பிரயனும். வாட்ஸ் அப் அலுவலகத்தின் வெளியே சைன் போர்டுகூடக் கிடையாது. இதுவரை விளம்பரத்துக்கென வாட்ஸ் அப் நயாப் பைசாகூடச் செலவு செய்தது கிடையாது. வந்த முதலீட்டை வைத்துக் கட்டணச் சேவையின் விலையைக் குறைத்தார்கள். ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே கட்டணம். இது வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கையைப் பல கோடிகள் உயர்த்தியது.

அடுத்து, ஜேனின் பார்வை இந்தியாமீது விழுந்தது. அதுவரை 20 கோடிப் பயனர்களுடனிருந்த வாட்ஸ் அப் இந்தியாவுக்கு வந்ததும் ராக்கெட் வேகத்தில் எகிறியது. 50 கோடியைத் தாண்டியது. “விளம்பரம் கிடையாது; கட்டணமும் கிடையாது, மக்களை ஒன்றிணைக்கவும் செய்கிறது. இது நம்ம வேலை இல்ல?” எனப் பொறி தட்டியது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்குக்கு.  `ஃபேஸ்புக்குடன் வாட்ஸ் அப் இணைந்தால்?’ என்ற எண்ணம் அவருக்கு வர, ஜேனை 2012-ல் சந்தித்தார். தொடர்ந்து பலமுறை சந்தித்த பின் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக்குக்கு விற்க முடிவு செய்தார்கள் ஜேனும் பிரயனும். அவ்வளவுதான் ‘நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி... காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி’ என்று டூயட் பாடியது ஃபேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும்.

“அப்போ என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எங்க அறை முழுக்க சட்ட வல்லுநர்கள். 19 பில்லியனுக்கு முடிவாச்சு” என்றார் ஜேன். இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி. ஓவர் நைட்டில் உலகின் முக்கியமான பணக்காரர்கள் ஆகிவிட்டனர் ஃப்ரீஸ்பீ நண்பர்கள். ஜேனின் இன்றைய மதிப்பு 70,000 கோடி. பிரயனின் மதிப்பு 26,000 கோடி.

``லாட்டரி அடித்துவிட்டதே... இனிமேல வேலைக்குப் போக மாட்டீங்கள்ல” நண்பர்கள் கேட்டதற்கு, “இன்னும் வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஆட்கள் இருக்காங்க. அவங்ககிட்ட வாட்ஸ் அப்பைக் கொண்டு போகணும்” எனத் தொடர்ந்து வேலை செய்தார்கள். ஆனால், ஃபேஸ்புக்கின் சில செயல்களில் நம்பிக்கை இல்லாத பிரயன் சமீபத்தில் வெளியேறினார். ஜேன் இப்போதும் வாட்ஸ் அப்பைப் பார்த்துக்கொள்கிறார்.

இன்று வாட்ஸ் அப் மூலம் படங்கள் மட்டுமல்ல; பணம்கூட அனுப்பலாம். நிறைய மாறிவிட்டது. ஆனால் மாறாத ஒரே விஷயம் அதன் எளிமை; விளம்பரமில்லா சேவை. இன்றைய தேதியில் 150 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார்கள். வேறு எந்தச் செயலியையும்விட அதிகமானோரால் பயன்படுத்தப்படுகிறது வாட்ஸ் அப். ஒரு ஐடியா, 2 பேர், கொஞ்சம் பணம், எக்ஸ்ட்ரா உழைப்புதான் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. இதில் எல்லாமே எல்லோராலுமே செய்யக்கூடியதுதான்.  ஆனால் ஒருசிலர்தான் துணிந்து செய்கிறார்கள்.

அப்படிச் செய்பவர்களுக்கு தினந்தோறும் தீபாவளிதான்!

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism