Published:Updated:

சர்வைவா - 34

சர்வைவா - 34
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 34

சர்வைவா - 34

மண்வெட்டியின் பாடல்

என்லில் (Enlil), சுமேரியர்களின் தெய்வம். அவர்தான் இந்த உலகத்தைக் கஷ்டப்பட்டுப் படைத்தார். ஆனால் அது நல்ல வடிவத்தில் இல்லை. அதைச் சரிசெய்ய மண்வெட்டி ஒன்றைத் தயாரித்தார். அந்த மண்வெட்டி தங்கத்தினால் செய்யப்பட்டது. அந்த மண்வெட்டியால் பூமியை ஓங்கி அடித்துப் பிளந்தார். மனிதர்கள் தோன்றினார்கள். தெய்வங்கள் வாழ்ந்த சொர்க்கத்தையும் மனிதர்கள் வாழ்ந்த பூமியையும் பிரிக்க மீண்டும் மண்வெட்டியால் ஓங்கி ஓர் அடி... உலகம் இரண்டாகப் பிரிந்தது. உண்டான இடைவெளியில் விதைகளைத் தூவினார். விவசாயம் உண்டானது. மனிதர்கள் பசியைப் போக்கிக்கொண்டனர். மனிதர்கள் கைகளில் ஆளுக்கொரு மண்வெட்டியைக் கொடுத்தார். அவர்களும் என்லிலைப் போலவே மண்ணைத் தோண்டி விதை விதைத்தனர்... மண்வெட்டியால் நகரங்களை உருவாக்க என்லில் கற்றுக்கொடுத்தார். செத்துப்போனவர்களை, மண்வெட்டியால் புதைக்கவும் அவர் கற்றுக்கொடுத்தார்.

சர்வைவா - 34

இந்தக்கதைகளை எல்லாம் களிமண் டேப்லெட்களில் பாட்டாகவே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் சுமேரியர்கள். இந்தப் பாடல்களை Song of Hoe என்கிறார்கள். மண்வெட்டியின் சிறப்பைச் சொல்லும் அந்தப்பாடல் இப்படி முடிகிறது:

சர்வைவா - 34

“மண்வெட்டி அனைத்தையும் செழிப்பாக்கும்... மண்வெட்டி அனைத்தையும் வளமாக்கும்... மண்வெட்டியே நம் வாற்கோதுமை, மண்வெட்டியே நம் காப்பாளன்... மண்வெட்டியே, நீதான் எங்களுக்கு வீடுகள் தந்தாய்... மண்வெட்டியே, நீதான் எங்களுக்கு நல்ல வயல்களைப் பரிசளித்தாய்...’’

மண்வெட்டி உலகையே மாற்றிய கண்டுபிடிப்புகளில் ஒன்று. பூமியை வெட்டி இலகுவாக்கி அதில் விதைகளைத் தூவி விவசாயம் செய்வதைச் சாத்தியமாக்கிய கருவியின் வரவு, உணவு உற்பத்தியில் அதுவரைக்குமான வரலாற்றையே புரட்டிப்போட்டது. இந்த மண்வெட்டி கண்டறியப்பட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. விவசாயம் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அடுத்து என்ன?

2050-ம் ஆண்டை வைத்துக்கொண்டுதான் உலகெங்கும் மனிதர்களின் உணவுத்தேவையைக் கணக்கிடுகிறார்கள். 2050-ம் ஆண்டில் இப்போது இருப்பதைவிடவும் இன்னும் 200 கோடிப் பேர் அதிகரித்திருப்பார்கள். இன்னும் அதிகமான ஏழைகள் இருப்பார்கள். இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகெங்கும் நடுத்தர வர்க்க மக்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகும். இதனால் அவர்களுக்கான உயர் ரக உணவுகளுக்கான தேவை அதிகமாகும்.

எதிர்காலத்தில் உலகில் நடக்கிற ஒட்டுமொத்த விவசாயமும் உணவுத்தேவைக்காக மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்க முடியாது, அதிலும் எதிர்கால எரிபொருள் தேவைக்காக இயற்கை எரிபொருள் உற்பத்திக்கான விவசாயமும் அதிகரிக்கும்.

சர்வைவா - 34

உலகெங்கும் அதிகரிக்கிற நகரமயமாக்கலால் விவசாய நிலங்கள் குறையும். விவசாய நிலங்களை அதிகரிக்க வேண்டுமென்றால் காடுகளை அழிக்கவேண்டும், விவசாய வேலைகள் பார்க்க ஆள் கிடைப்பதில்லை, விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லை... ஏற்கெனவே விவசாயம் நடக்கிற நிலங்களும் மலடாகிக்கொண்டி ருக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் புதிய புதிய பூச்சிகள் கிளம்பி விவசாயத்தை பாதிக்கின்றன, இவற்றையெல்லாம் தாண்டித்தான் உணவு உற்பத்தியை அதிகரித்துப் பல ஆயிரம் கோடிப் பேரின் பசியைப் போக்க வேண்டும்... உஸ்ஸ் யப்பா... முடியுமா? நடக்குமா?

தொழில்நுட்பத்தால் இவ்வளவு பிரச்னைகளையும் ஒட்டுமொத்தமாகச் சரிசெய்ய முடியாது. ஆனால் ஓரளவு காப்பாற்ற முடியும். செயற்கை நுண்ணறிவுத்துறையும் தானியங்கி வாகனங்களும் ரோபாட்டிக்ஸும் மெஷின் லேர்னிங்கும் தீர்வாக இருக்கப்போகின்றன.

``விவசாயிகள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்றால் வயல்களை ஐ.டி கம்பெனிகள் போல பாவிப்பது ஒன்றுதான் தீர்வு. ஏற்கெனவே மற்ற எல்லாத் துறைகளும் அப்படி மாறிவிட்டன. அதன் பலன்களை அனுபவிக்கவும் தொடங்கிவிட்டார்கள். விவசாயத்தைத் தவிர!’’ என்கிறார் பிரெண்டன் அலெக்ஸான்டர்.

பிரெண்டன் அலெக்ஸான்டர், IronOX என்னும் நிறுவனத்தை நடத்துகிற இளைஞர். ட்ரோன் டெலிவரிகளைச் சாத்தியமாக்கிய கூகுள் X புராஜெக்டில் வேலைபார்த்த டெக் கில்லாடி. அவருடைய குடும்பம் கலிபோர்னியாவில் பூர்வீகமான விவசாயக்குடும்பம். சமகால ட்ரெண்டிங்கை ஏற்று ஐ.டி துறையில் இருந்து விலகி, குடும்ப வேலையை எடுத்துக்கொண்டார். முதலில் விவசாயிகள் ஏன் விவசாயத்தைக் கைவிடுகிறார்கள் என்பதை ஆராய்ந்தார். அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்தார். இப்போது முழுக்க முழுக்க ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய IronOx நிறுவனம் அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

சர்வைவா - 34

``விவசாயம் சார்ந்த தகவல்கள் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரிவதில்லை. இங்குதான் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்கள் உதவும்’’ என்பது பிரெண்டனின் வாதம். அமெரிக்காவின் Descartes labs நிறுவனம் அதைத்தான் செய்கிறது. வெவ்வேறு தகவல்களின் அடிப்படையில் எதை விதைத்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதைச் சொல்கிறார்கள். நோய்கள் பரவுவதற்கு முன்பே கணிக்கிறார்கள். வயலின் எந்தப்பகுதி பயிர்களுக்கு மட்டும் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது; எந்தப்பகுதி மண்ணுக்கு அதிக உரம் தேவை என்பனவற்றைத் தனித்தனியாகக் கணக்கிடுவதன் மூலம், செலவைக் குறைக்கிறார்கள்; உற்பத்தியும் பெருகுகிறது.

பிரபலமான John Deere டிராக்டர் நிறுவனம், சமீபத்தில் 500 மில்லியன் டாலருக்கு Blue River என்கிற ஒரு தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கியது. இது, தானாகவே சிந்தித்துக் களைபறிக்கிற எந்திரம். டிராக்டர்கள் தயாரிக்கிற பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி டிராக்டர்களை உருவாக்கும் முனைப்பில் இருக்கின்றன. அமெரிக்காவிலும் ஜி.பி.எஸ் உதவியோடு மிகப்பெரிய நிலங்களை உழுதுவிடுகிற தானியங்கி டிராக்டர்களை உபயோகிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். நாசா அது சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு உதவுகிறது.

இன்று ஒரு மனிதன் வயலில் இறங்காமலேயே மண்ணின் தரத்திற்கேற்ற பயிர் எது என முடிவெடுப்பதில் தொடங்கி நாற்று நட்டு, களைபறித்து, அறுவடை செய்வது வரை அனைத்தையும் Work From Home ஆகவே செய்யமுடியும். ஆட்டோமேஷன் செய்யப்பட்ட வயல்கள்! இங்கிலாந்தைச் சேர்ந்த Handsfree Hectare என்கிற நிறுவனம் அப்படித்தான் இரண்டு ஆண்டுகளாக விவசாயம் பார்க்கிறது. தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு டிராக்டர்கள், தானாகவே இயங்குகிற ட்ரோன்கள் என விவசாயக்களத்தை மனிதர்களற்ற இடமாக மாற்றியிருக்கிறார்கள்.

சர்வைவா - 34

ட்ரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டர்கள் மண்ணின் தன்மை அறிந்து உழுதிட, ட்ரோன்கள் வழி விதைகள் விதைத்து, உரம் போட்டுச் செய்யப்படும் விவசாயத்தின், மண் பரிசோதனை அறிக்கைகளை மண்ணில் புதைக்கப்பட்ட சென்சார்கள் கொடுத்துவிடும். மெஷின் லேர்னிங் உதவியோடு பயிர்ப் பரிசோதனைகள், பூச்சித்தாக்குதல்கள் அறிந்து... அறுவடை வரைக்கும் செய்து, கோதுமையை லாரியில் ஏற்றுவது வரை எல்லாமே ஆட்டோ மேட்டிக்தான் இங்கே. மனிதர்களின் கைகளே படாமல் ஒரு ஹேண்ட்ஸ் ஃப்ரீ வயல்! இரண்டு ஆண்டுகளாக இவர்களுடைய சிறிய பண்ணையில் முழுக்கவே ரோபோ விவசாயம்தான். இது எப்படி இயங்குகிறது என்பது இங்கே காணலாம். https://www.youtube.com/watch?v=RbOR16-LscQ

அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு விவசாயியின் சராசரி வயது 58.5. இந்தியாவில் அப்படி ஒரு கணக்கெடுப்பை நடத்தினால் அறுபதைத் தாண்டும். உலகெங்கும் விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் வருவது குறைந்துகொண்டிருக்கிறது. இளைஞர்கள் என்றில்லை, யாருமே வருவதில்லை. ஜப்பானிலும் இதே நிலைதான். அங்கே 80% நிலங்கள் விவசாய நிலங்கள்தான். விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்கிற பிரச்னை நாடுமுழுக்கப் பெருக... அதைச் சமாளிக்க முடியாமல் விவசாயத்தையே கைவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைச் சமாளிக்க தானியங்கி ட்ரோன்களை வயலில் இறக்கியிருக்கிறார்கள். மனிதர்களுக்குப் பதிலாக ட்ரோன்கள் உதவியோடு விவசாயத்தைத் தொடர்கிறார்கள். விதை விதைப்பது, உரம் போடுவது, பூச்சிமருந்து அடிப்பது எனத் தானாக இயங்கும் ட்ரோன்களை எல்லோருமே வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய சந்தையாக மாறியிருக்கிறது.

சர்வைவா - 34

ஜப்பானின் இன்னொரு பெரிய பிரச்னை இளைஞர்களை விவசாயம் நோக்கி இழுப்பது. ஜப்பானின் `OPTiM’ என்ற நிறுவனம் உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் விவசாயத்திற்குப் பயன்படுகிற பெரிய ட்ரான்களை இயக்குவது குறித்த ``Agriculutral drone operator” கோர்ஸ்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பாடத்திட்டத்தில்,  பயிர்களைக் கண்காணிக்க, படம்பிடித்து ஆய்வு செய்ய, மண்பரிசோதனைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து சாம்பிள் எடுக்க,  நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிர்களைக் கண்டறிய... என ட்ரோன்கள் மூலம் செய்யக்கூடிய  பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள்.   விவசாய வேலை என்பதைவிட ட்ரோன் ஆபரேட்டர் வேலை என்பது இளைஞர்களைக் கவர்கிறது. நல்ல ஸ்ட்ராடஜி!

இங்கிலாந்தில் ஸ்ட்ராபெர்ரி சீசன் தொடங்கிவிட்டால், பழங்களைப் பறிக்க ஆட்களைத் தேடிப்பிடிப்பது பெரிய பிரச்னை. அதற்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். Dogtooth என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை பறிப்பதற்கென்றே ஒரு தானியங்கிக் கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். இது Machine learning மூலமாகப் பழம் பழுத்துவிட்டதா, அது சத்தாக இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து, செடியையும் மற்ற பழங்களையும் பாதிக்காத வகையில், பழுத்த பழங்களை மட்டும் பொறுமையாகப் பறிக்கும். இந்த ஏற்பாட்டால் பழங்கள் வீணாவது பெருமளவு குறைத்திருக்கிறது.

உலகெங்கும் பல பால்பண்ணைகளில் தொடர்ச்சியாகப் பசுக்களை வளர்க்கவும், பால் கறக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்துகிறார்கள். கனடாவில் இருக்கிற LELY என்கிற பால்பண்ணையில் வெக்டார் என்கிற ரோபோவைப் பயன்படுத்துகிறார்கள். இது 250 மாடுகளுக்குத் தீவனம் போடுவது,  குளிப்பாட்டுவது, பசுக்களின் உடல்நலனைப் பார்த்துக்கொள்வது, பால்கறப்பது என அனைத்தையும் செய்கிறது. கறக்கிற பாலினை ஆய்வு செய்து பசுவின் உடல்நலத்தில் பிரச்னை இருந்தாலும் உடனடியாக நமக்குத் தெரிவித்துவிடும். இது எப்படிச் செயல்படுகிறது என்பதை இங்கே காணலாம். https://youtu.be/-XI4siKp-nU

விவசாய நிலங்கள் குறைந்துவரும் காலத்தில், பெரிய பெரிய நிலங்களில்தான் விவசாயம் நடக்கும் என இனியும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் பிரெண்டன் அலெக்ஸாண்டரின் IronOx பெரிய பெரிய வயல்கள் மட்டுமல்லாது, சின்னச் சின்ன இன்டோர் வயல்களை உருவாக்குகிறது. இது சிறிய நிலங்களில் பல அடுக்குகளில் தொழில்நுட்பங்களின் உதவியோடு யாரும் செய்யக்கூடிய இ-விவசாயம். பருவநிலை மாற்றங்கள் பற்றிய கவலையில்லாமல், பயிர்ப்பாதுகாப்பு பற்றி அஞ்சாமல் சிறிய இடங்களில் வேண்டியதை நாமே உருவாக்கிக்கொள்கிற புதியவகை முயற்சி இது. இதுதான் எதிர்காலம் என்கிறார் பிரெண்டன்.

சர்வைவா - 34விவசாயத்தை விட்டு விலகி ஓடும் தலைமுறையிடமிருந்து, விவசாயத்தைத் தொழில்நுட்பம்தான் காப்பாற்றப்போகிறது. விவசாயத்தைத் துல்லியமான முறையில் செய்வதன் மூலம் மண்பாதுகாப்பு, பயிர்ப் பாதுகாப்பு  போன்ற அவசியமான விஷயங்களெல்லாம் இப்போது இருப்பதைவிட இன்னும் அதிகமிருக்கும். இது உணவுப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும். ட்ரோன்கள், சாட்டிலைட்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறை எல்லாம் இணையும்போது விவசாயத்தின் முகம் முற்றிலும் மாறிவிடும். விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும். அது நம் எதிர்காலத்திற்கான உணவுத்தேவைகளைச் சரிசெய்யும். இருப்பினும் சிறுவிவசாயிகளும் விவசாயத்தை நம்பி வாழும் சிறிய கூலிகளும் இல்லாமற்போவார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் ஏக்கரில் பிரமாண்டமாக ஆட்டோமேஷன் விவசாயம் செய்து கொண்டிருக்கும். நம் உணவு உற்பத்தி முழுக்க கார்ப்பரேட் மயமாகும். அதனால் என்ன பிரச்னை என்கிறீர்களா? நாம் எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பவற்றையெல்லாம் அவர்கள்தாம் தீர்மானிப்பார்கள். அதுதான் ஒரே கவலை!

- காலம் கடப்போம்

அதிஷா /  ஓவியம்: கோ.ராமமூர்த்தி