Published:Updated:

'2019... சீக்கிரம் வந்துடுப்பா!' - ஃபேஸ்புக்கைச் சோதித்த 2018 டைம்லைன்

ஜனவரி முதல் டிசம்பர் வரை 2018-ல் ஃபேஸ்புக் சந்தித்த சர்ச்சைகள் என்னவென்று தெரியுமா?

'2019... சீக்கிரம் வந்துடுப்பா!' - ஃபேஸ்புக்கைச் சோதித்த 2018 டைம்லைன்
'2019... சீக்கிரம் வந்துடுப்பா!' - ஃபேஸ்புக்கைச் சோதித்த 2018 டைம்லைன்

ரு வருடமுடிவில் அந்த வருடம் ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்தது என்பதை நினைவுபடுத்தும் வகையில் அழகிய வீடியோ ஒன்றை ரெடி செய்து காட்டுவது ஃபேஸ்புக்கின் வழக்கம். ஆனால் அப்படி 2018-ம் ஆண்டு முடியும் இந்நேரத்தில் ஃபேஸ்புக்கிற்கு ஒரு வீடியோ அப்படி ரெடி செய்தால் எவ்வளவு சரிவுகளையும், சர்ச்சைகளையும்  2018-ல் அது சந்தித்திருக்கிறது என்பது நமக்குப் புரியும். அப்படியான ஃபேஸ்புக்கின் 2018-ம் வருட சர்ச்சை டைம்லைனைக் காண்போம்.  

ஜனவரி 11

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை ஃபேஸ்புக் தளத்தில் வந்த வதந்திகளும், மக்களைப் பிரிக்கும் வெறுப்புஉணர்வைப் பரப்பும் கருத்துகளும் பாதித்திருக்கலாம் என்று சர்ச்சையால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பதிவுகளையே அதிகமாகக் காட்டும் வண்ணம் ஃபேஸ்புக்கின் டைம்லைன் மாற்றியமைக்கப்பட்டது. இது ஃபேஸ்புக்கை நாடி இருந்த தொழில் நிறுவனங்கள் பலவற்றை அதிருப்திக்கு உள்ளாக்கின. ஃபேஸ்புக் மூலம் வந்த ட்ராஃபிக் 80% வரை சில நிறுவனங்களுக்குக் குறைந்தது. இதனால் ஃபேஸ்புக் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஜனவரி 31

ஃபேஸ்புக்கில் ஒருவர் செலவிடும் சராசரி நேரம் குறைந்துவிட்டதாக மார்க் சக்கர்பெர்க் தெரிவித்தார். செலவிடும் நேரத்தின் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியினாலேயே இது நடந்ததாகவும், ஒரு பிரச்னையும் இல்லை என்று தெரிவித்து முதலீட்டார்களை சாந்தப்படுத்தினார் மார்க்.

மார்ச் 7

முஸ்லிம் மக்களின் மீது வெறுப்புஉணர்வு ஏற்படும் விதமாக ஃபேஸ்புக்கில் பல பதிவுகள் பதியப்படுவதாகக் கூறி ஃபேஸ்புக்கிற்கு இடைக்காலத் தடையை விதித்தது இலங்கை அரசு. முன்பே இதற்குத் தீர்வு காணுமாறு பல தரப்புகள் கேட்டும் ஃபேஸ்புக் எதுவும் செய்யாததால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மார்ச் 17

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு, ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைத் திருடி, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது எனப் பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த விவகாரம், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த இந்த விவகாரம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்கும் பெரும் தலைவலியாக 2018 முழுவதும் இருந்தது. ஃபேஸ்புக்கின் மீதான பயன்பாட்டாளர்கள் பலருக்கும் இருந்த நம்பிக்கையை மொத்தமாக உடைத்தது இந்த சர்ச்சை.

ஏப்ரல் 4

ஃபேஸ்புக்கில் மார்க் சக்கர்பெர்க்கிற்கு மட்டும் தன் மெசேஜ்களை டெலீட் செய்யும் வசதி இருந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன. இது விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று அப்போது கூறியது அந்நிறுவனம். ஆனால், இது இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. 

ஏப்ரல் 10

மார்க் சக்கர்பெர்க் செனேட் பிரதிநிதிகள் முன் இருமுறை தோன்றி தனது நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் டேட்டா பிரைவசி பிரச்னைகள் பற்றி விளக்கம் கொடுத்தார். இதில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தவறினார். மேலும் தேர்தல்களில் நடந்த குறுக்கீடுகளுக்கு தானே முழுப் பொறுப்பெடுப்பதாகவும் கூறினார் அவர்.

ஏப்ரல் 30

வாட்ஸ் அப் நிறுவனர் ஜான் கொம் ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கிய 4 வருடங்கள் கழித்து இது நடந்தது. இதற்குக் காரணம் வாட்ஸ்அப்பை எந்தப் பாதையில் எடுத்துச்செல்லவேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுதான் என்ற தகவல்கள் வெளிவந்தன.

மே 22

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிரச்னையால் ஐரோப்பாவின் பாராளுமன்ற நிர்வாகிகள் முன்னும் தோன்றி பதிலளித்தார் மார்க். இங்கிலாந்திலும் இப்படி ஏற்கெனவே அழைத்திருக்க, அங்கு ஃபேஸ்புக்கின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியை அனுப்பிவைத்தார் மார்க். இதனால் இங்கிலாந்து நீதித்துறையின் அதிருப்தியையும் பெற்றார் மார்க்.

ஜூன் 6 

பல வதந்திகளுக்குப் பின்னர் சீன உற்பத்தியாளர்களான வாவே, லெனோவா மற்றும் Oppo ஆகியவற்றுடன் டேட்டா பகிர்வு ஒப்பந்தம் ஒன்று வைத்துள்ளதாக ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன அரசாங்கத்துடன் இணைந்து வேலைசெய்யும் சில நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் தகவல்களை பகிர்ந்துகொண்டது அமெரிக்க அரசியல்வாதிகளைக் கோபப்படுத்தியது.

ஜூலை 3

இந்த முறை சர்ச்சை இந்தியாவிலிருந்து எழுந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் சேவையில் பரவிய வதந்தியால் 5 பேர் அடித்துக்கொள்ளப்பட்டனர். குழந்தை கடத்தும் கும்பல் என்று வந்த வாட்ஸ்அப் வீடியோவால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. இந்திய அரசும் இதைப்போன்ற நிகழ்வுகளில் தங்கள் பங்கு எதுவுமில்லை என்று தப்பிக்கமுடியாதென வாட்ஸ்அப் சேவைக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றைத் தந்தது. இது போன்ற போலி வதந்திகளால் இந்த வருடம் மட்டும் சுமார் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஜூலை 19

டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு உதவியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு இருந்தநிலையில் மார்க், டிரம்ப் வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே டிரம்ப்புக்கு போன் செய்து வாழ்த்தியதாகச் செய்திகள் வெளிவந்தன. இதுவும் சர்ச்சையை வலுப்படுத்தியது.

ஜூலை 26 

பங்குச்சந்தை வரலாற்றிலேயே ஒரு நாளில் அதிகமாகச் சரிந்த நிறுவனம் ஆனது ஃபேஸ்புக். அந்த நாளில் மட்டும் ஒரு பங்கின் விலை சுமார் 119 டாலர்கள் குறைந்தது. குறைந்துவரும் வருமானமும், அந்நிறுவனத்தைச் சுற்றிருக்கும் சர்ச்சைகளும்தாம் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 27

ஐக்கிய நாடுகள் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் ``வெறுப்பைப் பரப்ப மிகவும் உதவிகரமான கருவி ஃபேஸ்புக்" என்று கண்டித்தது. மியான்மரில் நடந்த ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலையின் பின் இதைக் கூறியது அந்த அமைப்பு. இதற்கு உடனடியாக விளக்கமளிக்காமல், தாமதமாக மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக். மன்னிப்பு கோரினாலும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்க மறுக்கிறது ஃபேஸ்புக் என்று இதற்காக கடும் விமர்சனத்திற்குள்ளானது .

செப்டம்பர் 24 

வாட்ஸ்அப் நிறுவனரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் வாங்கிய இன்ஸ்டாகிராமின் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம், மைக் க்ரெய்ஜ்ர் தங்கள் பதவிகளிலிருந்து விலகினர். இதற்குப் பின்பு ஒரு சந்திப்பில் பேசுகையில் ``எல்லாம் சூப்பரா இருக்குனு யாரும் வேலையை விடமாட்டாங்க "என்றனர். 

செப்டம்பர்  28

50 மில்லியன் பயனாளர்களின் கணக்குகளை ஒரு சிறிய தொழில்நுட்ப ஓட்டையால் ஹேக்கர்களிடம் காவு கொடுத்துவிட்டதாகத்  தெரிவித்தது ஃபேஸ்புக். இதைச் செய்தது யார், இதன்மூலம் என்ன நடந்தது போன்ற எந்த விவரமும் இன்னும் ஃபேஸ்புக்குக்கே தெரியவில்லை. இது என்னவென்று FBI விசாரணை நடத்திவருகிறது.

அக்டோபர் 8

இதற்கிடையில் வீடியோ சாட்டிங்கிற்கென்று `போர்டல்' என்னும் சிறப்புச் சாதனத்தை அறிமுகப்படுத்தியது. தற்போதைய நிலையில்  எப்படி ஃபேஸ்புக்கை நம்பி இந்தச் சாதனத்தை வாங்கமுடியும் என்று கேள்விகள் எழுப்பினர் வாடிக்கையாளர்கள். `போர்டல்' தோல்வியைச் சந்தித்தது.

டிசம்பர் 14

மீண்டும் ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாற்றால் செப்டம்பர் மாதத்தில் 12 நாள்கள் 6.8 மில்லியன் மக்களின் போட்டோக்கள் ஆபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அறிவித்தது ஃபேஸ்புக். பிரைவேட்டாகப் பதிவேற்றியவர்களின் போட்டோக்களும் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்பது மேலும் மோசமான பெயரை ஃபேஸ்புக்கிற்கு பெற்றுத்தந்தது.

இப்படி அடி மேல் அடியாகப் பெற்று மிகவும் மோசமான 2018-ம் ஆண்டைக் கண்டது ஃபேஸ்புக். மாற்றங்கள் கொண்டுவரப்படாமல் இருந்தால் இது 2019-லும் தொடரும். மார்க் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல்களும் முதலீட்டாளர்களிடமிருந்து வரத் தொடங்கியுள்ளது. முன்பு போல ஃபேஸ்புக் தனிக்காட்டு ராஜாவாகவும் நீடிக்கமுடியாது. எல்லாப் பக்கத்திலிருந்தும் போட்டிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த 2018-லிருந்து ஃபேஸ்புக் மீள்கிறதா இல்லை சரிகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.