அரை மருத்துவர்கள் ரெடி!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்ற துறைகளிலெல்லாம் Test and trial அளவில்தான் நடந்துவருகின்றன. ஆனால் உலகெங்கும் மருத்துவமனைகளில் அறிவுள்ள ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யத்தொடங்கிவிட்டன, செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் கொடுக்கின்றன. எந்த அளவுக்கு என்பதைப் புரிந்துகொள்ள... சமீபத்தில் MIT ஓர் ஆய்வை நடத்தியது. அதன்படி, உலகெங்கும் ரோபோக்கள் செய்த அறுவை சிகிச்சைகளில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1349... அறுவை சிகிச்சைகள் தவறாகி இறந்துபோனவர்கள் எண்ணிக்கை 44...

சர்வைவா - 35

`அதுக்குதான் அப்பவே சொன்னோம்’ என்கிற ஓல்டு சாங் ஓரமாகக் கேட்கிறது.

இந்த ரோபோக்கள் செய்த பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளில் மிகச்சிலநேரங்களில் நடந்த தவறுகளின் எண்ணிக்கைதான் மேலே உள்ளது. வெற்றிகரமான ஆபரேஷன்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.  வெற்றிகளைத்தான் யாருமே ஆய்வு செய்வதில்லையே!  போகட்டும்... நம் ஆபரேஷன் தியேட்டர்களில் எந்திரக்கைகளில் கிளவுஸும் கத்தியுமாகக் காத்திருக்கிறார்கள் ரோபோ மருத்துவர்கள். நாம் தயாரா?

சவாலே சமாளி...

எதிர்கால மருத்துவ வளர்ச்சி பற்றி நமக்கு மூன்று விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒன்று அவை நம்மை சூப்பர்மேன்களாக மாற்றிவிடும், இன்னொன்று நம்மை எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றிவிடும். மூன்றாவதாக அது ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் தரும்.

மூன்றுமே எக்ஸ்ட்ரா லார்ஜ் எதிர்பார்ப்புகள். எளிதில் சாத்திய மேயில்லை. ஏன்?  காலமும் சூழலும் வேகவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நம் உடல்நலப் பிரச்னைகளும் மருத்துவச் சவால்களும் மாறிக்கொண்டி ருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புபோல வெறும் அம்மையும் பிளேக்கும் பசி பட்டினியும் போலியோவும், காரணமற்ற மரணங்களும் மட்டுமே நம் சவால்கள் அல்ல. இன்று நாம் அவற்றையெல்லாம் 99சதவிகிதம் கடந்துவிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 35பருவநிலை மாற்றத்தால் புதிது புதிதாக வைரஸ்கள் புறப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு நாம் சுவாசிக்கிற காற்றையும் அருந்தும் நீரையும்கூடக் காசுக்கு வாங்க வைத்திருக்கிறது. காதுகளையும் கண்களையும் பலி கேட்கும் ஒலி, ஒளி மாசு எல்லாம் நம் தலைமுறைக்கே புதுசு. அளவுக்கதிகமான உப்பும் சர்க்கரையும் ஆரோக்கியமற்ற உணவுமுறையும் ஒபிசிட்டியையும் டயாபட்டீஸையும் டயாலிஸஸையும் வாழ்விலோர் அங்கமாக்கிவிட்டது. ஸ்க்ரீன்களுக்கு அடிமைகளாகிவிட்ட அடுத்த தலைமுறை வளர்ந்து பெரியவர்களாகும்போது என்ன மாதிரி பின்விளைவுகள் இருக்கப்போகின்றன என்பது யாருக்குமே தெரியாது. இருந்தும் கைப்பேசியைக் காட்டித்தான் குழந்தைகளுக்குப் பப்பு... புவ்வா... ஊட்டிக்கொண்டிருக்கிறோம்.

அருகிவரும் உடல் உழைப்பு, தாறுமாறாக அதிகரிக்கும் வேலைநேரம், குறைந்துவரும் தூக்கமின்மை. மனநல பாதிப்புகள்... தற்கொலைகள்... பறவைக் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கும்போதே புறப்படும் பன்றிக்காய்ச்சல்... இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வது எனப் புரியாமல் கசாயம் கொடுக்கிற அரசுகள். ஆன்டிபயாட்டிக்குகளுக்கு நம் உடல் ரொம்பவே பழகிவிட்டது. டோசேஜ்ஜை மில்லிமில்லியாக உயர்த்தி இப்போது கிலோ கிலோவாக ஆன்டிபயாட்டிக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியான மருந்துகளால் மரபணு அளவில் நமக்குள் நடக்கிற மாற்றங்கள் வேறு, ஒருபக்கம் பயமுறுத்துகிறது.

இத்தனைக்கும் நடுவில் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள், கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகளோடு கூட்டுசேர்ந்து ஊழல்பண்ணும் மருத்துவர்கள்... திறமையான மருத்துவர்கள் பற்றாக்குறை என மருத்துவத்துறையும் கண்டமாகிக் கிடக்கிறது. முதியோர்களைத் தனிமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். நாளை நாமும் முதியவர்களாகும்போது தனிமைதான் நமக்குத் துணையாக இருக்கப்போகிறது.

சர்வைவா - 35

மருத்துவத்துறையில் எதிர்காலத்திற்கான நம்முடைய பெரிய சவால்கள் இவைதாம். வேறு வழியில்லை, ஒன்று வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளலாம் அல்லது தொழில்நுட்பக் கப்பலில்தான் கரை சேரமுடியும். செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிக்டேட்டா, பிளாக்செயின், ரோபாட்டிக்ஸ், 3டி பிரின்டிங் என நிறைய சேவியர்கள் இருக்கிறார்கள்! எல்லாருமாகச் சேர்ந்துதான் உயிர்காக்கப் போகிறார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்?

*நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

*சிகிச்சை குறித்த முடிவுகளை விரைந்து எடுக்கலாம்.

*எல்லோருக்கும் கிடைக்கிற வகையில் மருத்துவம் மலிவாக மாறும்.

*பரவலான தகவல்கள் அடிப்படையில் நோய்ப்பரவலைத் தடுக்கலாம்.

*மருத்துவ வசதிகள் எல்லா இடங்களையும் எட்டலாம்.

*மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கலாம்

ஆரம்பத்திலேயே...

பெரிய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியாமற்போவதன் காரணம் நோயின் பாதிப்புகள் முதல் சில ஆண்டுகளுக்கே மிகச்சிறிய அளவில்தான் வெளிப்படும். அதனாலேயே யாரும் மருத்துவ உதவிகளை நாடுவதில்லை. இந்த பாதிப்புகளைக்் கண்டறிதலை நம் உடலிலேயே பொருத்தக்கூடிய சிறிய AI கண்காணிப்புக் கருவிகள் சாத்தியமாக்கும்.

நாம் இப்போதே நிறைய கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆப்பிள் வாட்சில் தொடங்கி, Garmin, ஃபிட்பிட் வரை நிறைய வந்துவிட்டன. இதன் அடுத்த லெவல்தான் எதிர்காலம்.

கூகுள் புதுவகையான லென்ஸ் ஒன்றைச் சர்க்கரை நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளது. இது கண்ணீரில் இருக்கிற குளுக்கோஸ் அளவைக் கணக்கிட்டு சிகிச்சைகளை அறிவுறுத்தும்.

தேசிய தைவான் பல்கலைக்கழகம் புதுவகையான செயற்கைப் பற்களை உற்பத்தி செய்கிறது. இது செயற்கை நுண்ணறிவுக் கருவி பொருத்தப்பட்ட பல்லாம். நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம், அதில் என்னென்ன இருக்கிறது, நாம் அதை மென்று தின்கிறோமா, அப்படியே விழுங்குகிறோமா, நம்முடைய இருமல் எப்படி இருக்கிறது, நம் எச்சிலில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்பவற்றையெல்லாம் ஆராயும். அதற்கேற்ப மருத்துவ முடிவுகளை நமக்குத்தரும். நோய் வருவதற்கு முன்பே நம்மைக் கண்காணிக்கவும், நோயாளிகள் உணவுப்பழக்கம் மற்றும் மருந்து உட்கொள்ளும் செயல்களையும் இது கண்காணித்து நமக்குத் தேவையான தகவல்களைத் தரும்.

இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்த சென்சார்கள் நம் உடல் தகவல்களைத் திரட்டி மென்பொருள்கள் வழி ஆராய்ந்து அறிவுரை சொல்லத்தொடங்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி டாக்டர். 

இவை மட்டுமல்ல பயோ சென்சார் டாய்லெட்கள், டிஜிட்டல் ஸ்டிக்கிங் பிளாஸ்டர்ஸ், எலெக்ட்ரானிக் மாத்திரைகள், விழுங்கக்கூடிய மிகச்சிறிய ரோபாக்கள்... என நம் உடலைக் கண்காணிக்க விதவிதமான விஷயங்கள்  வரிசைகட்டி நிற்கின்றன.
 
மருத்துவர் இல்லாத இடத்தில்...

‘`இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு நோயாளியைப் பார்க்க மருத்துவர்களுக்கு சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள். வங்காளதேசத்தில் அந்த நேரம் வெறும் 43 விநாடிகள்தான்’’ என்கிறார் அடா ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் கிளாயர் நோவோரால். இவர், மருத்துவர் பற்றாக்குறைக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையே மாற்றாக முன்வைக்கிறார். அடா ஹெல்த்கேர் அதைத்தான் செய்கிறது. மென்பொருள்களின் வழி உரையாடக்கூடிய எந்திர மருத்துவர்களை உருவாக்குகிறார்கள். அவை நோயாளிகளோடு உரையாடக்கூடியவை.

ஃபேமிலி டாக்டர் என்கிற கான்செப்ட் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரொம்பவே ஃபேமஸ். பழைய படங்களில் அப்படிப்பட்ட மருத்துவர்கள் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியெல்லாம் யாரும் இருப்பதில்லை. அந்தக்குறையும் சீக்கிரமே தீரப்போகிறது. பாபிலோன் என்கிற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இணையதள சாட்டிங் மூலமாக நோயாளிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, அவர்களுக்கான சிகிச்சைகளையும் பரிந்துரைக்கிறது. பாபிலோனிடம் ‘எனக்கு மூன்றுநாளா காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுவலி’’ எனச் சொன்னால் போதும், அது காய்ச்சல் தொடர்பான ஏராளமான கேள்விகளை ஒரு டாக்டரைப் போலவே நம்மிடம் கேட்க ஆரம்பிக்கிறது. நாம் அளிக்கிற பதில்கள் அடிப்படையில் அது நம்முடைய உடல்நிலையைப் புரிந்துகொண்டு என்ன மாதிரியான சிகிச்சையை உடனே எடுத்துக்கொள்வது நல்லது எனப் பரிந்துரைக்கிறது. நீங்களே முயற்சி செய்து பார்க்கலாம் இங்கே https://www.babylonhealth.com/ask-babylon-chat.

இப்படி நம்மிடமிருந்து எடுக்கப்படும் மருத்துவ டேட்டாக்களைக் கொண்டு மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இதனால் ஆபத்தில்லையா? அறுவை சிகிச்சை ரோபோக்கள் வந்துவிட்டால் மருத்துவர்களின் கதி? மருத்துவமனைகளை மூட வேண்டியதுதானா?

எல்லாம் அடுத்தவாரம்.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism