மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

ணையம் ஆண்களுக்கானது. பெண்களும் ஆண்களின் எண்ணிக்கைக்கு இணையாக இணையத்தில் இருந்தாலும் பெரும்பாலான இணையச் சேவைகள் ஆண்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், 2010ல் உருவான ஒரு ஸ்டார்ட்அப் மட்டுமே இந்தக் கூட்டத்திலிருந்து தனியே தெரிகிறது. அதன் பயனர்களில் 79% பேர் பெண்கள். அதன் பெயர் பின்ட்ரஸ்ட். (Pinterest.)

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

பென் சில்பர்மேன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அப்பா டாக்டர். அம்மாவும் டாக்டர். அவர் சகோதரிகள் இருவரும் டாக்டர்தான். சிறு வயதிலிருந்தே பென்னும்  ‘டாக்டர் ஆவேன்’ என்றுதான் நினைத்திருந்தார். அவருக்கு வாங்கித் தரப்படும் பொம்மைகள்கூட ஸ்டெதஸ்கோப்பும் முதலுதவிப் பெட்டியும்தான். அவர் பொழுதுபோக்கு விதவிதமான பூச்சிகளைச் சேர்த்துவைப்பது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸும் வால்ட் டிஸ்னியும் பென்னுக்குப் பிடித்த ஆளுமைகள். அவர்களைப் பிடிக்குமே தவிர, பென்னுக்கு டெக்னாலஜி பக்கம் ஆர்வம் வரவில்லை. “பிரபல பேஸ்கட்பால் வீரர் மைக்கேல் ஜோர்டனைப் பிடிப்பதுபோல ஜாப்ஸையும் பிடித்தது. அவ்வளவுதான்” என்கிறார் பென். மருத்துவராக வேண்டுமென்ற பாதையிலிருந்து பென் விலகவேயில்லை; கல்லூரிக்குப் போகும்வரை.

ஒரு நல்ல நாளில் பென்னுக்கு  ‘ஏன் நான் மருத்துவர் ஆக வேண்டும்?’ எனத் தோன்றியது. ரூட்டை மாற்றினார். கன்சல்டன்ட் ஆனார். தினமும் பக்கம் பக்கமாக மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்  உருவாக்கும் வேலை. இடையில் இணையத்தில் கட்டுரைகள் வாசிப்பது ஹாபி. அப்படி அவர் ‘டெக் க்ரன்ச்’ என்ற பக்கத்தில் ஒரு ஸ்டார்ட்அப் சூப்பர் ஸ்டாரைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. ‘இது என் கதையா இல்ல இருக்கணும்’ எனத் தோன்றியது பென்னுக்கு. இன்ஸ்பிரேஷன் என்பது இப்படித்தான் இருக்கும். ஏதோ ஒரு நிகழ்வோ, நபரோ, பொருளோ நம்மைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். பென்னுக்கு அப்படித் தோன்றியது. அவர் அந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டிய நபரல்ல; கட்டுரையின் நாயகனாக இருக்க வேண்டியவர் எனத் திடமாகத் தோன்றியது. தான் ஒரு தவறான இடத்தில் இருப்பதாக நினைத்தார் பென். கரையிலிருக்கும் கப்பலுக்கு என்ன மவுசு இருக்கப் போகிறது?

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST



ஏதாவது செய்ய வேண்டுமென பரபரப்பாக அலைந்தவர் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த படம் தான் ‘Pirates Of Silicon Valley’. ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் பென்னின் வாழ்க்கையில் தலைகாட்டினார். உடனே `சிலிக்கான் வேலி’க்குப் பறக்க முடிவெடுத்தார் பென். அங்குதான் டெக் கில்லிகள் புதியதாகப் பல முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். “நம்மை இன்ஸ்பையர் செய்தவர்களின் அருகிலிருப்பதுதான் நம் கனவை நிஜமாக்கும் பயணத்தின் முதல் அடி” என்றார் பென். சிலிக்கான் வேலிக்கு வந்ததுமே அவர் முதல் வெற்றியைப் பெற்றதாக நினைத்தார். அந்த நம்பிக்கை எந்த ஸ்டார்ட்அப் ஆர்வலருக்கும் இருக்க வேண்டிய சொத்து.

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

பெட்டி, படுக்கையோடு வந்தவருக்குக் கூகுள் வேலை தந்தது. கஸ்டமர் சப்போர்ட் வேலை. சந்தோஷமாகச் செய்தார். கூகுள் அவருக்கு இன்னொரு இன்ஸ்பிரேஷன். ஆனால், வேலை? புதிய புராடக்ட்களைச் செய்ய விரும்பினார் பென். “அது உன் வேலை இல்லை.. போய் டேட்டா எடு” என்றது கூகுள். ஒரு வீக் எண்டில் தன் காதலியிடம் கூகுளைக் குறை சொன்னார் பென். “செய்ய விடலைன்னா நீ தனியாப் போய் செய்ய வேண்டியதுதான” என்றார் பென்னின் பெண். எந்த ஒரு மனிதனுக்கும்  இது போன்ற நம்பிக்கையான ஆறுதல்கள் மகத்தான சக்தியைத் தரும். அதுவும் சொல்பவர் நம் வாழ்க்கைத் துணை என்றால்? பென் வேலையை விட்டார்.

நினைத்தது போலவே நடக்க காலம் என்ன நம் கேர்ள் ஃப்ரெண்டா? பென் வேலையை விட்ட ஒரே வாரத்தில் எல்லாம் தலைகீழானது. உலகப் பொருளாதாரமே தேக்க நிலையை அடைந்தது. முதலீட்டாளர்கள் எல்லாம் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பினார்கள். பென் போன்ற எந்த வெற்றிகளையும் அதற்குமுன் பெற்றிராதவர்களை நம்பி பணம் போட ஆள் வரவில்லை. இது போன்ற சமயங்களில் நமக்காக இருப்பது நண்பர்கள்தானே. பென்னுக்கும் அவர் கல்லுரி நண்பர் பால் (Paul Sciarra) கைகொடுத்தார்.

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST

இருவரும் சேர்ந்து Tote என்ற  மொபைல் ஆப்பை உருவாக்கினார்கள். நமக்குப் பிடித்த கடைகளை இந்த ஆப் மூலம் பார்க்கலாம். பிடித்ததை புக்மார்க் செய்துகொள்ளலாம். அதைப் பற்றிய ரிவ்யூக்களை வாசிக்கலாம். அதன் விலை குறையும்போது நமக்கு அலர்ட் வரும். இதுதான் ஐடியா. ஆப் ஸ்டோரில் வெளியிட, அனுமதிக்காகவே பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. முதலீடு கிடைக்கவும் வழியில்லை. பென்னுக்கு கூகுளிலேயே காபி குடித்துக் கொண்டிருந்திருக்கலாமோ என நினைக்கும் அளவுக்குச் சோதனைகள் தொடர்ந்தன. விடிவதற்கு முந்தைய இரவுதானே இருள் அடர்ந்திருக்கும்? தனக்கும் விடியுமென நம்பினார் பென். தன் வெற்றியைவிடத் தன்னை நம்பி வந்த பால் பற்றி யோசித்தார். அவருக்காகவாது திரும்பப் போகக் கூடாது என முடிவெடுத்தார்.

கேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST



ஒருவழியாக பென்னுக்கு ஒரு முதலீட்டாளர் பணம் தந்தார். ஆனால், புராடக்ட்டில் மாற்றம் வேண்டுமென பென் நினைத்தார். மனிதர்கள் தனித்துவமானவர்கள். அவர்களை அப்படி ஆக்குவது அவர்களின் விருப்பங்கள்தாம். ஒருவர் எதையெல்லாம் சேகரித்து வைக்கிறார் என்பது அவரைப் பற்றி நிறைய சொல்லும். பென் சிறுவயதில் பூச்சிகளைச் சேர்த்து வைத்ததைப் பற்றி யோசித்தார். அதுதான் பென்னின் ஜீபூம்பா. அதன் அடிப்படையில் ஒரு மாடலை உருவாக்கினார். ஆனால், முதலில் அவர் சொல்லும் ஐடியா யாருக்கும் புரியவில்லை. ‘உலகமே உன்னை எதிர்த்தாலும் உன் மனசு சொல்றத கேளு’ என்பதுதானே காலம் காலமாகச் சாதனையாளர்களின் வழக்கம்? பென்னும் அதையே செய்தார்.

ஒருமுறை நியூயார்க் சென்றிருந்தபோது நண்பர் இவான் ஷார்ப்பைச் சந்தித்தார். இவானுக்கு பென் சொல்ல வந்தது புரிந்தது. அது புரிந்தபோது ஷார்ப்பின் கண்ணில் மின்னிய மின்னலை பென் கவனித்தார். இதுதான் வெற்றிக்கான வழி எனத் தெளிவானார். இவான், பென்னின் கனவுக்கு உருவம் கொடுக்க உதவினார்.

நண்பர்கள் களமிறங்கினார்கள். பின்ட்ரஸ்ட் தயாரானது. முதலில் தனக்குத் தெரிந்தவர்கள் 100 பேருக்கு இன்வைட் அனுப்பினார்கள். 4 பேர் மட்டும் ரெஜிஸ்டர் செய்தார்கள். ஷார்ப் சோர்வானபோது பென் சொன்னது இதுதான் “நான் 100 பேர்கிட்ட ஐடியா சொன்னப்ப நீ மட்டும்தான் இதை நம்பின. இப்ப 100ல 4 பேர் நம்பிருக்காங்க”. ஷார்ப்புக்கு இதுவும் புரிந்தது. தொடர்ந்து வேலை செய்தார்கள்.

பென்னின் சொந்த ஊரிலிருந்து திடீரென நிறைய பேர் பின்ட்ரஸ்ட் பக்கம் வந்தார்கள். தன் அம்மா அவருடைய பேஷன்ட்களிடம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பதால் இருக்குமென கணித்தார் பென். உண்மையும் அதுதான்.

இரண்டு பேரை வேலைக்கு எடுத்தார்கள். இருவரும் பின்ட்ரஸ்ட்டின் கடந்த சில மாத டேட்டாவை எடுத்துப் பார்க்க, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. “இருக்கிற 100 பேருக்கா எங்கள வேலைக்கு எடுத்தீங்க” என ரியாக்‌ஷன் தந்தார்கள். அப்போது பின்ட்ரஸ்ட் அலுவலகமே ஒரு வீட்டில்தான் இயங்கியது. பின்ட்ரஸ்ட்டுடன் தொடர்பேயில்லாத இன்னொருவரும் அங்குதான் தங்கியிருந்தார். ஷேரிங். பின்ட்ரஸ்ட்டைப் பெரிய அளவில் அறிமுகம் செய்ய  நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஆனால் பணமில்லை. அப்போது பென் நம்பியது பிளாகர்களை. அவர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். முதன்முதலில் பின்ட்ரஸ்ட் பற்றி அதனோடு தொடர்பு இல்லாத ஒருவர் தன் பிளாகில் எழுதினார். ஒரு விரல் புரட்சி அங்கு ஆரம்பமானது. அதன்பின் பின்ட்ரஸ்ட் எடுத்த வேகம் வெறித்தனமாது.

எல்லாம் சரி. பின்ட்ரஸ்ட் என்பது என்ன? நாம் விரும்புபவற்றை, வாழ்க்கையில் செய்ய விரும்பும் விஷயங்களை ஓரிடத்தில் சேமித்து வைப்பதுதான். அலுவலகத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி பின் குத்தி வைப்போமே… அதன் டிஜிட்டல் வெர்ஷன் தான். அதனுடன் ஒரு சோஷியல் நெட்வொர்க்கும். “இமயமலைக்குப் போகணும்பா” என ஒரு ‘பின்’ வைத்தால், அதே ஆசை கொண்டவர் உங்களைத் தேடி வந்து ஹாய் சொல்லலாம்.

பிடித்த டிசைன் சேலையில் தொடங்கி ஒரு நாட்டுக்கு பிரைம் மினிஸ்டர் ஆவதுவரை எந்த ஆசையையும் ‘பின்’ செய்யலாம். இன்னொருவர் ‘பின்’-ஐ நீங்களும் உங்கள் போர்டில் பகிரலாம். உலகம் முழுவதும் 25 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் பின்ட்ரஸ்ட்டைப் பயன்படுத்துகிறார்கள். அந்த 4 பேரில் ஆரம்பித்து 25 கோடிக்கு வர பின்ட்ரஸ்ட் எடுத்துக்கொண்டது 8 ஆண்டுகள்தாம். அலுவலகத்தையே உள்வாடகை விட்டவர்களின் இன்றைய மதிப்பு 80,000 கோடி. இந்த மதிப்பிற்குக் காரணம் ட்விட்டரைவிட ஃபேஸ்புக்கை விட revenue per click என்ற வருமானம் ஈட்டும் வழி இதில் அதிகம் என்பதே. இதன் நிறுவனர்களான நண்பர்கள் மூவரின் சொத்து மதிப்பு 12,000 கோடியைத் தாண்டும்.

தன் வாழ்க்கை போர்டில் பென் “நானும் சாதிப்பேன்” என ‘பின்’ செய்து வைத்ததை நிஜமாக்கினார். எல்லா நிஜங்களும் ஒரு நாள் கனவாக இருந்தவைதாம். ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பும் தொடங்குமிடம் அந்தக் கனவுதான். உங்கள் கனவு என்ன?

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா