Published:Updated:

சர்வைவா - 36

சர்வைவா - 36
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 36

சர்வைவா - 36

லகின் மிகப் பழமையான மொழிகளைக் கூட யாரும் எளிதில் படிக்க முடிகிற, அதை நொடிப்பொழுதில் மொழிபெயர்க்கும் தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் அப்படிப்பட்ட தொழில் நுட்பங்களுக்கே சவால் விடக்கூடிய ஒரு படுபயங்கர மொழி இருக்கிறது. உலக மருத்துவர்களின் பொது மொழி. மருந்துக்கடைக்காரர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற ஒரே மொழி! டாக்டர்கள் தங்களுடைய பிரிஸ்கிரிப்ஷனில் எழுதுகிற இந்த சங்கேதக் குறிப்புகளை Decipher பண்ணுகிற எந்திரங்களை யாராலும் இன்றுவரை உருவாக்க முடியவில்லை. 

சர்வைவா - 36

ஒரு நோயாளி, தான் என்ன மாதிரியான மருந்துகளை உட்கொள்கிறோம் என்பதை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஏனோ மருத்துவர்களின் ஹைக்கூ கிறுக்கல்களால் அது இன்றுவரை பலருக்கும் சாத்தியப்படவில்லை.

பெரிய்யய டேட்டா!

`டாக்டர்களின் ரகசியக் குறிப்புகளிலிருந்து சீக்கிரமே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்’ என்கிறார்கள். காரணம், எதிர்கால பிரிஸ்கிரிப்ஷன்கள் அத்தனையும் டிஜிட்டல்தான். வாழ்நாள் முழுக்க எப்போதெல்லாம் என்னென்ன மருந்துகள் உட்கொள்கிறீர்கள் என்கிற அத்தனை ரெகார்டுகளையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள வழிதரும் முறை. மருத்துவரைப் பார்க்கப் போகும்போது ஆதார்போல ஓர் எண்ணை மருத்துவரிடம் கொடுத்தால் அவரே நம் பழைய மருத்துவ ரெகார்டுகளைப் பார்த்து முடிவுகள் எடுப்பார். அப்படிப் பார்க்கும்போது செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் நோயாளியைப் புரிந்துகொள்வதில் மருத்துவர்களுக்கு நிறையவே உதவும். முந்தைய ரெகார்டுகளின் அடிப்படையில் எவ்வகை பாதிப்பு என்பதைச் சொல்லி, மருத்துவரின் வேலையைப் பாதியாக குறைக்கும். கூடவே, வேகமாக சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும் உதவும்.

சர்வைவா - 36



இதை எல்லாம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிவுசெய்யலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் இந்தத் தகவல்கள் வெளியே கசிவதிலிருந்து நம்மைக் காக்கும். ஒரு நோயாளியின் ஒட்டுமொத்த மருத்துவ ஆவணங்களையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் மூலம் ஆராய்வதால் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ள நோய்களையும் முன்பே கண்டறிய முடியும்.

இப்படிக் கண்காணித்த தகவல்கள் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று சொல்லவும் முடியாது. இதையெல்லாம் நிர்வகிக்கிற நிறுவனங்கள்  மருந்து கம்பெனிகளுக்கோ ஆய்வு நிறுவனங்களுக்கோ தகவல்களை நல்ல விலைக்கு விற்கலாம். ஆனால், இதையெல்லாம் தவிர்க்க முடியாது. தீமைகள் இருந்தாலும் பெரிய நன்மைகளும் இருக்கவே செய்கின்றன. இந்தப் பெரிய டேட்டாக்களின் அடிப்படையில் ஓர் ஊரில் குறிப்பிட்ட பகுதியில் பரவுகிற நோய்களைக்கூட ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கட்டுப்படுத்தலாம். புதிதாக பரவும் நோய் எங்கிருந்து பரவுகிறது, அதன் பாதிப்பு என்ன என்பதையெல்லாம் பிக்டேட்டா மூலமாகக் கண்டறிந்து அது மற்ற ஊர்களுக்கு பரவுவதையும் தடுக்கலாம்!

மூன்றாவது கை!

அறிவியல் வளர வளர நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிகிறோம். நம் கண்களுக்குப் புலப்படாத  உடலின் மிகச் சிறிய இடங்களில் உண்டாகும் பாதிப்புகளையும் அறிகிறோம். ஆனால் அங்கெல்லாம் சிகிச்சைகள் செய்வது மனிதக் கரங்களுக்கு சாத்தியமாவதில்லை. மனிதக் கரங்களால் எட்டவே முடியாத இடங்களை எந்திரங்களால் எட்ட முடியும்.  மைக்ரோ அறுவை சிகிச்சைகள் செய்வதை செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் எளிதாக்கியுள்ளன. சிக்கலான அறுவை  சிகிச்சைகளில் இந்த ரோபா கைகள் மிகப் பெரிய உதவி செய்யத் தொடங்கி இருக்கின்றன.

நெதர்லாந்தைச் சேர்ந்த மாஸ்ட்ரிச்ட் பல்கலைக்கழக மருத்துவமனை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஓர் எந்திரத்தை உருவாக்கியுள்ளது. ரத்தநாளங்களில் .03 மில்லிமீட்டர் அளவு சிறிய இடத்தில் கூட இது நுழைந்து சர்ஜரி செய்யக்கூடியது. Lymphedema என்கிற நிண நீர் தேக்க வீக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இந்த ரோபோ உதவுகிறது. மனித மருத்துவர்கள் வெறும் கைகளால் செய்யும் செயல்களை அப்படியே இந்த ரோபோ மிகச்சிறிய அளவில் செய்யும். மருத்துவரின் கைகளில் ஏற்படுகிற மிகச் சிறிய அதிர்வுகளைக்கூட புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி இது தன்னை சரிபடுத்திக்கொண்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க உதவும்... இப்படிப்பட்ட விதவிதமான எந்திரக் கைகள் விரைவில் வரும்.  சிக்கலான அறுவை சிகிச்சைகளை அவை செய்யத் தொடங்கும்!

இந்தியாவிலும்...

புற்றுநோயை  குணப்படுத்துவதுதான் இன்றுவரை மருத்துவத்துறைக்கே இருக்கிற பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது. எத்தனையோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்துவிட்டபோதும் கேன்சர் மரணங்களை நம்மால் குறைக்கவே முடிவதில்லை. உலகெங்கும் நடக்கும் பல ஆராய்ச்சிகள் அதை நோக்கியே இருக்கின்றன. இந்தியாவின் சிறிய ஸ்டார்ட்  அப்கள் சிலவையும்கூட கேன்சருக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.  பெங்களூரைச்   சேர்ந்த SigTuple என்கிற நிறுவனமும் மும்பையைச் சேர்ந்த UE Lifesciences நிறுவனமும்  எளிய வழியில் ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே மூலமாக கேன்சரைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

மருந்துகளும் மாற்றங்களும்

இன்று பார்மா கம்பெனிகள் பெரிய சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன. மருத்துவத்துறை வளர்ச்சி, மிகத் துல்லிய முடிவுகளைத் தரவேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆளாக்கியுள்ளன. எனவே மேலும் மேலும் ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்டுக்காகப் பல கோடிகளைக் கொட்டி ஆராய்ச்சிகள் செய்யவேண்டிய நிலைக்கு பார்மா நிறுவனங்கள் ஆளாகியுள்ளன. ஆனால் இப்படிப் பணத்தை கொட்டிச் செய்யும் ஆராய்ச்சிகளால் மருந்துகளின் சக்தியைப் பெரிய அளவில் கூட்ட முடிவதில்லை. ஏனென்றால் ஏற்கெனவே நாம் ஏராளமாக முன்னேறியிருக்கிறோம்.

இப்படி ஆய்வுகளுக்காகப் பணத்தைச் செலவழித்தாலும், அது வருமானமாக மாறுவதில்லை . இதைச் சமாளிக்கவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை நோக்கி இந்த நிறுவனங்கள் நகரத்  தொடங்கியிருக்கின்றன. காரணம், ஆய்வுகளுக்காகச் செய்யப்படுகிற அபரிமிதமான செலவுகளை இந்த ஆட்டோமேஷனால் குறைக்க முடியும் என நம்புகிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வழி மருந்து ஆய்வுகளை செய்யும்   ஸ்டார்ட் அப்களை மருந்து கம்பெனிகள் வாங்க ஆரம்பித்திருக்கின்றன.

சர்வைவா - 36

Pfizer நிறுவனம் ஐபிஎம்மோடு சேர்ந்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. கேன்சரை எதிர்த்துப் போராடுகிற வலிமையான மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஃபைசர் இருக்கிறது. இதற்காக ஐபிஎம்மின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான வாட்சன்தான் உதவப்போகிறது. பல ஆயிரக்கணக்கான,  நேரடியான ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. ஃபைசரைப்போலவே நோவார்டிஸ் நிறுவனமும் வாட்சன் உதவியோடு மார்பகப் புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கண்டறியும் முனைப்பில் இருக்கிறது. நல்லது நடக்கட்டும். புற்றுநோய் ஒழிந்தால் சரி.

இந்த ஆய்வுகளின் பலன்களை நம்மால் இப்போதே அனுபவிக்க முடியாது. அதற்குக் காரணம் ஓர் எந்திரம், மருந்து ஒன்றில் குறிப்பிட்ட ­சில மூலக்கூறுகளை மாற்றி அமைக்கவோ, அல்லது சேர்க்கவோ பரிந்துரைக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைப் போகிற போக்கில் செய்துவிட முடியாது. அதைப் பரிசோதித்து பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அக்கறையோடு கவனிக்கவேண்டியிருக்கும். அதனாலேயே மருத்துவத்துறையில் மருந்து தயாரிப்பில் மட்டும் செயற்கை நுண்ணறிவுத்துறையின் பாய்ச்சல் இன்னும் ஆமை வேகத்தில்தான் நடக்கிறது. இருந்தாலும், `மருந்துகளை மனிதர்கள் மீது பிரயோகித்துப் பார்க்கிற Human trials மாதிரியான விஷயங்களை இந்தத் தொழில்நுட்பங்களின் வழி குறைக்க முடியும்’ என்கிறது ஐபிஎம்.

என்னாகும்?


செயற்கை நுண்ணறிவுத்துறையின் வரவு ஒட்டுமொத்தமாக டாக்டர்களை மருத்துவ மனைகளில் இருந்து வெளியேற்றிவிடாது. மருந்துகளுக்கு மாற்றாகக் குட்டி ரோபோக்களை நாம் விழுங்கப்போவதில்லை. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மருத்துவர்களுக்குத் துணையாக இருக்கும். மருத்துவத்தை இன்னும் எளிமையாகவும் வலிமையாகவும் மாற்றும். ஐபிஎம்மின் வாட்ஸன் மாதிரியான சூப்பர் கம்ப்யூட்டர்கள் கோடிக்கணக்கான மருத்துவக் குறிப்புகளின் வழி நம் சிகிச்சைகளை மேலும் துல்லியமாக மாற்றப்போகின்றன. தவறுகளை சில நிமிடங்களில் அவை கண்டுபிடித்துச் சொல்லிவிடும். அரியவகை நோய்களையும் அதற்கான சிகிச்சைகளையும் எளிதில் கண்டறியவும் அது உதவக்கூடும்.

‘மலிவான மருந்துகள், அனைவருக்கும் மருத்துவம்’ என்பதை இந்தத் தொழில்நுட்பப் புரட்சி சாத்தியமாக்கும் என்கிற குரல்களே எங்கும் ஒலிக்கின்றன. இருந்தாலும், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. காரணம் இந்த ஆய்வுகளுக்கென கொட்டப்படும் கோடிகள்... அதுதான் அச்சுறுத்துகிறது. முதல் போட்டவனுக்குத் தேவை லாபம்தானே தவிர மக்களுடைய பாராட்டோ வாழ்த்தோ அல்ல.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம் கோ.ராமமூர்த்தி