``போர் என்பது மோசடிதான். அது லாபங்களை டாலர்களாகவும், நஷ்டங்களை உயிர்களாகவும் கணக்கிடுகிறது. இந்த மோசடியை மிகப்பெரிய மக்கள் கூட்டத்தால் புரிந்துகொள்ளவே முடியாது. போர்களை இயக்குகிற மிகச்சிறிய கூட்டத்தால்தான் புரிந்துகொள்ள இயலும். இந்த முடிவில்லாப் போர்கள் மிகப்பலருடைய உயிர்களைப் பணயமாக வைத்து மிகச்சிலருக்குக் கோடிகளில் லாபம் தரக்கூடியது.’’

- Smedley Butler (War is a Racket நூலில்)

சர்வைவா - 37

பாபிலோனிய காலத்தில் நடந்த போர்கள் தொடங்கி சமீபத்திய போர்கள் வரை எல்லாமே ஒரு குறிப்பிட்ட டைம்டேபிள்படிதான் நடக்கும். அந்தந்தக் காலகட்டங்களுக்கு ஏற்ப பீரங்கியோ அணுகுண்டோ என்ன மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் எல்லாப் போர்களுக்கும் குறிப்பிட்ட கால அளவு என்பது கட்டாயமாக இருந்தது.

பேச்சுவார்த்தைகள், தாக்குதலுக்கான திட்டங்கள், மக்கள் வெளியேறுவதற்கான அவகாசம், எச்சரிக்கைகள் விடுப்பது, படைகளைப் பலப்படுத்துவது, முற்றுகையிடுவது என, போர் ஒரு மிகநீண்ட செயற்பாடு. அப்படித்தான் இதுவரை... ஆனால் இனி அப்படி இருக்காது.  எதிர்காலத்தின் போர்கள் நிமிடங்களில் முடிந்துவிடும். மிச்சம் மீதி இல்லாமல் அமெரிக்கா மாதிரியான பிரமாண்டமான நாட்டையே சில மணிநேரத்தில் ஒன்றுமில்லாமல் சாம்பலாக்கி விடலாம். CYBER WARS அந்த அளவுக்கு குரூரமானது.

எதிரிநாடுகள் அல்லது எதிரி அமைப்புகள் ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பதை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து, அதைப்பற்றிப் பேசி விவாதித்து வெள்ளை மாளிகைக்கு விஷயம் போய் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பேசிவிட்டு வருவதற்கு முன்னால் அமெரிக்காவின் கதையே முடிந்துபோயிருக்கும். இதை CYBER STRIKE என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வைவா - 37மின் இணைப்புகள் அனைத்தையும் ஷட் டவுன் பண்ணுவதில் தொடங்கி, விமானக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயலிழக்கச் செய்வது, தொழிற்சாலைகள், சாலைப்போக்கு வரத்தை ஸ்தம்பிக்கவைப்பது, அணைக்கட்டுகளை உடைத்துவிடுவது, தொலைத்தொடர்புகளைத் துண்டிப்பதன் வழி ராணுவம், போலீஸ், ஊடகம் என முக்கிய அமைப்புகளையும் செயல்படவிடாமல் தடுப்பது, கடைசியாக எங்கும் நிறைந்திருக்கிற அணுமின் நிலையங்களைச் சிதறடிப்பது எனச் சில நிமிடங்களில் அமெரிக்காவை ஒழித்துக்கட்ட லாம். எல்லாமே இணையத்தின் வழியாகவே செய்துவிடமுடியும். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமே இருக்கிற ஆபத்துதான். ஆனால் அது ஒரு பாராவில் எழுதுகிற அளவுக்கு அத்தனை சுலபமல்ல... இருப்பினும் அந்த ஆபத்து இருக்கவே செய்கிறது.

சைபர் வார்தான் எதிர்காலம். அதிலும் ALGORITHMIC CYBERWARS தான் இனி எப்போதும். இந்த இணையவழிப் போர்களில் ஈடுபட மனிதர்கள் தேவையேயில்லை. செயற்கை நுண்ணறிவு எந்திரங்களே போதும். நாம் இதுவரை போட்டுக்கொண்டிருந்த அத்தனை சண்டை முறைகளையும் இந்த சைபர்வார் மாற்றிவிடும். இரும்பு ஆயுதங்கள், பீரங்கிகள், அணு ஆயுதங்கள், விமானப்படைகள், பயோ ஆயுதங்கள் எல்லாம் எப்படி போரின் முகத்தை மாற்றியமைத்தனவோ அதுபோல இந்தச் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் வரலாற்றைப் புரட்டிப்போடும்.

ஒரு மனிதன் ஓட்டிச்செல்கிற போர் விமானமும் தானியங்கி AI போர் விமானமும் நேருக்கு நேராகச் சண்டையிட்டால் யாருக்கு வெற்றிபெறுகிற வாய்ப்பு அதிகம்? யாருக்கு அதிக நஷ்டம் ஏற்படும்?

ஒரு மனிதனை வளர்த்துப் படிக்கவைத்துப் பயிற்றுவித்து, அவனைச் சண்டைக்கு அனுப்புவதற்கும், ஒரு மெஷினை வடிவமைத்துச் சண்டைக்கு அனுப்புவதற்குமான வித்தியாசம்தான் இங்கே கவனிக்கத்தக்கது... மனிதனைவிட மெஷின்கள் துல்லியமாகச் சண்டையிடக் கூடியவை. அதற்குக் கருணையோ, அன்போ, முடிவெடுக்கிற குழப்பங்களோ இருக்காது. மனிதனைத் `தோற்கடி’ என்றால் தோற்கடித்து விடும்!

கற்பனைபோல இருந்தாலும் இது உண்மை யாகவே நடந்தது. சமீபத்தில் அமெரிக்காவின் AIRFORCE RESEARCH LABS போர் விமானங்களை ஓட்டக்கூடிய ஒரு கருவிக்கும், மனிதனுக்கும் இடையே விமானத்தைச் செலுத்துகிற Simulation test ஒன்றை நடத்தினார்கள். போட்டியில் மெஷின்தான் வென்றது!

எழுத்தாளர் யுவால் நோவா ஹராரி தன்னுடைய `ஹோமோ டியஸ்’ நூலில் `‘21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தங்களுடைய பொருளாதார மற்றும் ராணுவ மதிப்பை இழந்துவிடுவார்கள்’’ என்கிறார். காரணம், ராணுவம் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ஆகிவிடும். தானியங்கி டாங்கிகள், ஆளில்லா விமானங்கள், மாலுமிகள் இல்லாக் கப்பற்படைகள், ரோபோட் போர்வீரர்கள் என எல்லாமே மாறிவிடும்! பலவீனமான மனிதர்கள் இனியும் போர்புரிய அவசியப்படமாட்டார்கள். கொல்லப்படுவற்கு மட்டும்தான் இனி மனிதர்கள் தேவை.

உலக அரங்கில் ராணுவத்திற்காக மிக அதிகமாகச் செலவழிக்கிற நாடு அமெரிக்கா. ஆண்டுக்கு 610 பில்லியன் டாலர் அளவுக்குச் செலவழித்துக்கொண்டிருக்கிறது. இது ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அத்தனை நாடுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை (578 பில்லியன் டாலர்) விட அதிகம்!

சர்வைவா - 37

இந்தப் பெருந்தொகை கடந்த சில ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில்தான் கொட்டப்படுகிறது. ஏற்கெனவே சீனா எந்தளவுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கெனச் செலவழிக்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். ஆனால் அமெரிக்கா மற்ற யாரையும்விட அதிகமாகச் செலவு செய்கிறது.

பத்து பில்லியன் டாலர் செலவில் சமீபத்தில் the Joint Enterprise Defense Infrastructure (ஜெடி)  என்ற புதிய புராஜெக்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த ஜெடி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் (800 இடங்களில்) கூடாரம் அடித்திருக்கிற, அமெரிக்க ராணுவத்தை ஒரே இணைய கூரையின் கீழ் (Cloud) ஒன்றிணைக்கிற திட்டமாகும். இந்த ஜெடிக்குப் பின்னால் இருப்பது ALGORITHMIC WARFARE.

உலகெங்குமிருந்து கிடைக்கிற ராணுவத்தகவல்களை ஒரே இடத்தில் திரட்டுவதன் வழி இன்னும் சிறப்பாக எதிரிகளை அழிக்கலாம். அதை மனிதர்களைக் கொண்டு செய்யாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே தானியங்கி எந்திரங்களைக் கொண்டே நிகழ்த்தலாம். இதுதான் திட்டம்! அதற்காகத்தான் கடந்த ஜூன்மாதம் ஜெடிக்குத் தம்பி மாதிரி Joint Artificial Intelligence Center (JAIC) என்ற புதிய அமைப்பையும் 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கி யிருக்கிறார்கள். இங்கே 600-க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு ஆயுத புராஜெக்ட்டுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த ராணுவ ஆட்டோமேஷனால் இரண்டு லாபங்கள் இருக்கின்றன. ஒன்று செலவு குறையும். அடுத்து மனிதப்பிழைகளை முற்றிலுமாகத் தவிர்க்க முடியும். உதாரணத்திற்கு அமெரிக்க விமானப்படையில் ஆளில்லாமல் இயங்கும் ஆயுதக்கப்பல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் SEA HUNTER. இது ஒரு Unmanned Surface Vehicle (USV). முழுக்க மாலுமிகள், போர்வீரர்கள் இல்லாமல் கடலில் வேலை பார்க்கப்போகிற போர்க்கப்பல். இது கடற்பகுதிகளைக் கண்காணிக்கவும், எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்களை அழிக்கவும் என்றே உருவாக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைக் காணலாம். https://youtu.be/inRnG_CMS_4

சரி, இந்தக் கடல்வேட்டையனால் கிடைக்கிற மிகப்பெரிய பலன் என்ன? மனிதர்களால் இயக்கும் ஒரு போர்க்கப்பலை இயக்க ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகும்... அதுவே இந்த ஆளில்லாக் கப்பலை இயக்க ஆகும் செலவு வெறும் ஒன்றரைக் கோடிதான்!

இவ்வகை ஆராய்ச்சிகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்பது அமெரிக்காவின் வாதம். காரணம் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் கொன்றுகுவித்த பொதுமக்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 6000! மிக அதிக மதிப்புள்ள டார்கெட்களைக் கொல்ல கூட்டமான பகுதிகளில் குண்டுபோடவும் அமெரிக்கா தயங்கியதில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் கொண்ட ட்ரான்கள் டார்கெட்டை மட்டுமே அழிக்கக்கூடியவையாக இருக்கும், அதனால் Collateral damage சேதாரங்கள் குறையும் என்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா மட்டுமல்ல, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, இந்தியா என மற்ற நாடுகளும் அமெரிக்காவோடு போட்டிபோட்டுக்கொண்டு செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை உருவாக்கும் முனைப்பில் இருக்கின்றன. இந்தியாவின் DRDO­­வும் ஏற்கெனவே அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவுக்கு இணையாக சீனாவும் மெஷின்லேர்னிங் போர் எந்திரங்களை உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. இந்தப் போட்டியால் மனிதகுலமே அழிவைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் உலக விஞ்ஞானிகள். அதனால்தான் இவ்வகை ஆயுதங்கள் தயாரிப்பதற்குத் தடை கோரி எலான் மஸ்க்கும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் 2017-ல் கூட்டாகக் குரல் கொடுத்தனர்.

“இதில் இருக்கிற பேராபத்துகள் பற்றித் தெரியாமல், அதற்காக நம்மைத் தயார் செய்துகொள்ளாமல் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் தயாரிப்பது, மனிதகுல வரலாற்றில் மிகமோசமான சம்பவமாக இருக்கும்’’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கவலை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி ஐநாவிடம் முறையிட்டனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

2012-ல் உலகெங்கும் இருக்கிற தன்னார்வலர்கள் இணைந்து ‘STOP KILLER ROBOTS’ என்கிற அமைப்பைத் தொடங்கினர். இதில் ஆர்வமுள்ள யாரும் இணைந்துகொள்ளலாம். நீங்களும் விரும்பினால் விவரங்க ளுக்கு https://www.stopkillerrobots.org, இந்த அமைப்பு சக்தி வாய்ந்த நாடுகளிடம் தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்து வதற்காக; கட்டுப்படுத்துவதற்காகப் போராடு கிறார்கள். ஐநாவை வலியுறுத்தி இதற்கெனக் கடுமையான தடைகளையும் சட்டங்களையும் உருவாக்கும் வேலைகளில் ஈடுபடு கிறார்கள். விஞ்ஞானிகளிடமும் இவ்வகை ஆராய்ச்சிகளைக் கைவிட வலியுறுத்துகிறார்கள். நல்ல காரியம்தான் என்றாலும் யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒபாமா ஆட்சிக்காலத்திலேயே அமெரிக்கப்படைகளில் மிக அதிக எண்ணிக்கையில் (90% அளவுக்கு என்கிறது ஒரு கணிப்பு) புதிய படைவீரர்களை நியமிப்பது குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இணையாக ஆளில்லா ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மனிதர்கள் இயக்கும் டாங்கிகளோடு தானாகவே இயங்குகிற டாங்கிகளையும் இயக்கத்தொடங்கி யுள்ளனர். கூகுள் நிறுவனம் `மேவன்’ என்கிற புராஜெக்ட்டில் ஈடுபட்டிருந்தது, எதிரிகளை ட்ரான்களின் உதவியோடு கண்டறிந்து தாக்குகிற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதுதான் இந்த புராஜெக்ட். ஆனால் இப்படிப்பட்ட ஆட்கொல்லி தொழில்நுட்பத்தில் வேலை செய்யமாட்டோம் என கூகுள் பணியாளர்கள் மறுத்துவிட, அதற்குப்பிறகு அந்தத்திட்டமே கைவிடப்பட்டது. கூகுள் செய்யாவிட்டால் வேறொரு நிறுவனம் செய்யத்தான்போகிறது.

மனிதர்களை வேலைக்கு நியமித்து சம்பளம் கொடுத்து அவர்களைப் பயிற்றுவிப்பதைவிட இவ்வகைத் தானியங்கி எந்திரங்களை லட்ச லட்சமாக உற்பத்தி செய்துவிடமுடியும் என்பதுதான் இதில் இருக்கிற பெரிய வசதி. இந்த எந்திரங்கள் போர்களில் ஈடுபடும்போது எதிரி நாடுகளில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடாது, கொலைகள் செய்யாது, அப்பாவிகளைத் துன்புறுத்தாது, எதிரி யார் எனத் தெரிந்துவிட்டால் அவரை மட்டும் முடித்துவிட்டுத் திரும்பிவிடும் என்கிற விஷயத்தையும் கவனத்தில் கொள்ளலாம். எதிரிகளை டார்ச்சர் செய்து உண்மைகளை வரவழைக்கவும்கூட கருவிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பெரிய நாடுகள் செய்கிற ஆராய்ச்சிகளைவிட, சிறிய நாடுகள், தீவிரவாத அமைப்புகள் செய்கிற ஆராய்ச்சிகள்தான் அச்சுறுத்தலை அதிகமாக்குகின்றன. காரணம், இவ்வகை ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளுக்கோ சர்வாதிகாரிகளுக்கோ கிடைத்தால் என்ன மாதிரி விளைவுகள் உண்டாகும் என்பது நமக்கே தெரியாது. அறிவுள்ள எந்திரங்கள்தான் என்றாலும் அந்த எந்திர மூளையை யாருமே மாற்றியமைத்து நம்மையே அழிக்கவும் செய்யலாம் என்கிற ஆபத்தும் இருக்கிறது. 

ஒன்றுமட்டும் உறுதி. இந்தப் போர் எந்திரங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரானவர்களைத் தேடித்தேடி அழிக்க உதவும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரு போலீஸ்காரர் வண்டிமீது நின்று குறிபார்த்துப் பார்த்துச் சுட்டுக்கொண்டிருந்தாரே... அப்படியெல்லாம் கஷ்டப்படாமல், கூட்டத்தில் இன்ன இன்ன ஆட்கள் என முகத்தை மட்டும் காட்டிவிட்டால் ட்ரான்களே ஆளை மிகச்சரியாகப் பார்த்துச் சுட்டுக்கொன்றுவிடும்!   
 
கருவிகளின் தரத்தில் நமக்குப் பிரச்னையே இல்லை. நமக்குப் பிரச்னையெல்லாம் இதை உபயோகிக்கப்போகிற மனிதர்களைப்பற்றியதாகத்தான் இருக்கிறது. கைகளில் உபயோகப்படுத்தாமல் ஆயுதம் வைத்திருக்கிறவனுக்கு, காண்பவரெல்லாம் எதிரிகள்தாம். அதிலும் அங்கிள் சாமுக்கு அமெரிக்காவுக்கு வெளியே இருக்கிற எல்லோருமே எதிரிகள்தாம்.

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி