Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

மேசானின் உயர்மட்டக் கூட்டம் அன்று டெல்லியில் நடை பெற்றுக்கொண்டி ருந்தது. மீட்டிங்கில் இருந்த 25 பேருக்கும் மதிய உணவு ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் டேல் வாஸ். ஸ்விகியில் ஆர்டர் செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வந்ததும் லேசாக ஜெர்க் ஆனார் டேல். காரணம், அமேசானில் முக்கியப் பதவி வகிக்கும் அவருக்கு ஸ்விகியிலிருந்து வேலைக்கான ஒரு ஆஃபர் வந்திருந்தது. அப்போது, ஸ்விகி சிவகார்த்திகேயன் என்றால், அமேசான் ரஜினி. வேலை மாறலாமா என்ற குழப்பத்திலிருந்தார் டேல். 25 பேருக்கான உணவு என்பதால் அந்த டெலிவரி பாய் பைக்கில் அதைக் கொண்டு வர முடியாது. பெரிய ஆர்டர் என்பதை உடனடியாக உணர்ந்த ஸ்விகியின் சர்வீஸ் டீம், அந்த டெலிவரி பாய்க்கு ஒரு டிராலியை எப்படியோ ஏற்பாடு செய்து தந்துவிட்டது. கார்களும் பைக்குகளும் பறக்கும் சாலையில் சூப்பர் மார்க்கெட் டிராலியைத் தள்ளிக்கொண்டு ஓடிவந்தார் அந்த டெலிவரி பாய். வாடிக்கையாளர்களின் மீது ஸ்விகிக்கு இருக்கும் அக்கறையை டேல் அன்று உணர்ந்தார். அமேசான் சூப்பர்ஸ்டாராக இருக்க முக்கிய காரணமே அந்த அக்கறைதான் என்பது டேலுக்குத் தெரியும். ஒருநாள் ஸ்விகியும் அமேசான் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது டேலுக்கு. இன்று டேல், ஸ்விகியின் முக்கியமான நபர்களில் ஒருவர். ஆம், ஸ்விகியில் சேர்ந்துவிட்டார் டேல். 

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

ஸ்விகி.  ஆன்லைனில் நம்மிடம் ஆர்டர் வாங்கி அந்த உணவை நம் வீட்டுக்கே கொண்டு வந்து தரும் ஒரு நிறுவனம். கடந்த ஓராண்டில் நீங்கள் சென்னைக்கு எந்த வேலைக்காக வந்திருந்தாலும் ஸ்விகியைப் பார்க்காமல் இருக்க முடிந்தி ருக்காது. சென்னையின் பரபரப்பான சாலை களில் ஆரஞ்சு நிற டி ஷர்ட்டுடனும், கறுப்பு நிற பேக் பேகுடனும் எந்நேரமும் பறந்துகொண்டேயிருப்பார்கள் ஸ்விகி பணியாளர்கள். ஒவ்வொரு மாதமும் 1.4 கோடிப் பேரின் பசி தீர்க்கிறது இந்த ஆன்லைன் அன்னபூரணி. இந்தியாவின் மிக முக்கியமான, வலிமையான ஸ்டார்ட் அப்பாக உருவாகியிருக்கிறது ஸ்விகி. இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு ‘பில்லியன் டாலர் மார்க்’ என்பது முக்கியம். அதாவது அவர்கள் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 7000 கோடி). இதை, முதன்முதலில் தொட்டது ஃப்ளிப்கார்ட். அதற்கு ஆறு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால், ஸ்விகி இந்த இலக்கைத் தொட 4 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தையே எடுத்திருக்கிறது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ என ஆர்ப்பரிக்கும் ஸ்விகியின் கதை சுவாரஸ்யமானது. 

ஸ்விகியின் நிறுவனர்கள் மூன்று பேர். ஸ்ரீஹர்ஷா மெஜட்டி, நந்தன் ரெட்டி, ராகுல் ஜெய்மனி. இவர்களில் முதலாமவர், முக்கியமானவர் ஸ்ரீஹர்ஷா மெஜட்டி. பிட்ஸ் பிலானியில் படித்தவர். அது ஒரு வித்தியாசமான கல்லூரி. அட்டெண்டென்ஸ்க்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள். அதனால் நிறைய பயணம் செல்ல முடிந்தது ஸ்ரீஷர்ஷாவால். தன்னை உருவாக்கியதே பயணங்கள்தான் என்கிறார் ஸ்ரீஷர்ஷா. டிகிரி முடித்ததும் லண்டனில் வேலை செய்துகொண்டிருந்தவருக்கு வேலை பிடிக்கவில்லை. தயங்காமல் வேலையை விட்டுவிட்டார். போலந்து நாட்டிற்கு ஒரு சைக்கிள் டிரிப் கிளம்பிவிட்டார். அந்த நாட்டின் பருவ நிலையைச் சரியாகக் கணிக்காததால் வழியெங்கும் தொல்லைகள். பயணத்தைக் கைவிட வேண்டிய நேரத்தில் அவருக்கு உள்ளூர்வாசி ஒருவர் உதவினார். “மலை மேல சைக்கிளிங் போறியா? மலை ஏறும்போது கார்ல  ஏறு. இறங்கி வர்றப்ப சைக்கிள்ள வந்துடு. ஈஸி. வாழ்க்கைல சின்னச் சின்னத் தோல்விகளைக் கண்டு பயந்தா பெரிய பெரிய வெற்றிகள் மிஸ் ஆயிடும்” எனப் போகிற போக்கில் பன்ச் அடித்திருக்கிறார். அது ஸ்ரீஷர்ஷாவை ஏதோ செய்திருக்கிறது. இந்தியா திரும்பினார்.

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

அவர் திட்டம், ஏதேனும் ஒரு புதிய ஸ்டார்ட் அப்பில் சேர்ந்து வேலை செய்வதுதான். ஆனால், அவருக்கு அப்போது எந்த ஸ்டார்ட் அப்பும் பெரிய நம்பிக்கை அளிக்கவில்லை. அதைத் தானே செய்துவிடுவது நல்லது எனத் தோன்றியது. ஸ்ரீஹர்ஷாவுக்கு பிசினஸ் புதியதல்ல. அவர் அப்பா விஜயவாடாவில் உணவகம் நடத்தியவர். அம்மா டாக்டர்; சொந்தமாக கிளினிக் வைத்திருப்பவர். ‘ரத்தத்திலே பிசினஸ் இருக்கு’ என்ற நம்பிக்கையில் இறங்கினார் ஸ்ரீஹர்ஷா.

2012. அப்போது இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் எகிறி அடித்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்னை. டெலிவரி. குறைந்த விலையில் பொருளை வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்ப்பதில் பெரிய சிக்கல் நிலவியது. இதற்காக, இந்தியாவிலிருக்கும் டெலிவரி நிறுவனங்கள், சின்னச் சின்ன கொரியர் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கினார் ஸ்ரீஹர்ஷா. Bundl என்ற செயலியை நந்தன் ரெட்டியுடன் இணைந்து உருவாக்கினார். ஓராண்டு உழைப்பின் முடிவில் அந்தச் செயலி தயாரானபோது ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் சொந்தமாக டெலிவரி நிறுவனம் தொடங்கிவிட்டார்கள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றியிருக்கிறார் ஸ்ரீஷர்ஷா. நல்லவேளை, அப்போது Bundl-க்கு என யாரிடமும் நிதியுதவி வாங்கவில்லை; ஊழியர்கள் யாருமில்லை. சத்தம் போடாமல் அதற்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள்.

ஆனால் Bundl சொல்லித் தந்தவை ஏராளம். அதில் ஒன்று, இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் டெக்னாலஜியைச் சரிவரப் பயன்படுத்தவில்லை என்ற தகவல். ஆன்லைனின் சக்தி, ஆஃப்லைனின் வாய்ப்புகள். இவற்றைச் சரியாகப் பிடித்துக்கொண்டார் ஸ்ரீஹர்ஷா. தன்னை உருவாக்கப்போகும் ‘ஜீபூம்பா’-வை இவற்றிலிருந்துதான் எடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அதுதான் ஸ்விகி.

ஸ்விகியின் மாடல் உருவானது. முக்கியமான உணவகங்களோடு கைகோக்க வேண்டும். அவர்கள் மெனுவை ஸ்விகி ஆப் வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும். அதை ஆர்டர் செய்தால் ஸ்விகியே அதை உணவகத்துக்குத் தெரியப்படுத்தும். அவர்கள் ஓகே சொல்லிவிட்டால், அருகிலிருக்கும் டெலிவரி பாய் யார் எனப் பார்த்து அவரை அந்த உணவகத்துக்கு ஸ்விகி அனுப்பும். அவர் அந்த உணவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பணத்தில், தனது சேவைத்தொகை போக மீதியை ஸ்விகி, உணவகத்துக்குத்  தந்துவிடும். 

கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY

ஸ்விகிக்கு முன்பே சில நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இருந்தார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். ஒரு நிறுவனம் ஆஃபராகக் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. கைவசமிருந்த முதலீடுகள் தீர்ந்ததும் ஆஃபரைக் குறைத்தது. உடனடியாக  வாடிக்கையாளர்கள் வெளியேறினார்கள். இன்னொரு ஆப், டெலிவரியில் சொதப்ப அவர்களும் மரண அடி வாங்கினார்கள். உணவகங்கள் நீண்டகாலம் அந்தத் தொழிலில் இருப்பவர்கள். அதனால் பிரச்னையில்லை. ஸ்விகி தன் வேலையைச் சரியாகச் செய்துவிடும். அதுவும் பிரச்னையில்லை. மூன்றாவது, டெலிவரி பாய்ஸ். இவர்கள் இந்த சப்ளை செயினில் முக்கியமானவர்கள். அவர்கள் சரியாக இருந்தால்தான் வெற்றி. ஸ்விகி முதலில் கவனம் செலுத்தியது அந்த ஏரியாவில்தான்.

நல்ல கமிஷன்; தவறு செய்யாத தொழில்நுட்பம். பிரச்னை நேர்ந்தால் உடனடியாக உதவி செய்ய வாடிக்கையாளர் சேவை என இந்தத் துறையின் தன்மையையே மாற்றி எழுதியது ஸ்விகி. இன்று சராசரியாக 40 நிமிடத்துக்குள் ஆர்டரை டெலிவரி செய்கிறது ஸ்விகி. அதற்குக் காரணம் ஸ்ரீஷர்ஷாவும் அவர் டீமும். ஸ்விகியின் நிறுவனத்துக்குள் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு. அது ஸ்விகி டீமை பலம் பொருந்தியதாக ஆக்குகிறது.

ஒருமுறை, ஸ்விகியிலிருந்து வெளியேறிய ஊழியர் ஒருவர் “ஸ்விகி ஆர்டர் எண்ணிக்கையை ஏமாற்றுகிறது” என சோஷியல் மீடியாவில் தட்டிவிட, பொறி கிளம்பியது நிறுவனத்துக்குள். ஸ்ரீஹர்ஷா அலட்டிக்கொள்ளவேயில்லை. அனைத்து டேட்டாவையும் எல்லோரின் பார்வைக்கும் திறந்துவிட்டார். ஊழியர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது; பொறுப்பும் அதிகரித்தது. ஸ்விகி இன்னும் வேகமாக வளர்ந்தது. இன்று இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சந்தையின் மதிப்பு 70 கோடி டாலர். அது 2020-ல் 250 கோடியாக அதிகரிக்கும் எனக் கண்டக்கிடப்பட்டிருக்கிறது. இதில் 35% ஸ்விகியின் பங்கு என்பது கவனிக்கத்தக்கது.

ஸ்விகி இன்னும் இந்தியாவையே முழுமையாகச் சென்றடையவில்லை. 15 மாநகரங்களுக்கு மட்டும்தான் இன்று ஸ்விகி சேவைகள் கிடைக்கின்றன. அதனால் மற்ற பிரபலமான ஸ்டார்ட் அப்கள் போல ஸ்விகி பெரிய நம்பரைத் தொடவில்லை. ஆனால், அது செய்திருக்கும் புரட்சி பெரியது. முன்பு வீட்டிலே சமைத்து சாப்பிடுவதுதான் அதிகம். அதன்பின், வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிடுவது அதிகரித்தது. வெளியே சாப்பிடச் செல்வது வெறும் உணவுக்காக மட்டுமாக இருந்ததில்லை. அது சினிமா போவது போல, கடற்கரைக்குப் போவது போல ஒரு என்டர்டெயின்மென்ட். அதனால் செலவும் அதிகம். ஆனால், ஸ்விகியால் செலவு குறைந்திருக்கிறது. ஒரு வேளை உணவுக்கு நாம் செலவிடும் தொகையை ஸ்விகி குறைத்திருக்கிறது. அது மட்டுமல்ல; இதனால் கிடைக்கும் பணம் முழுவதும் ஸ்விகி மற்றும் உணவகங்களின் பாக்கெட்டுக்கு மட்டும் போவதில்லை.

இன்று ஸ்விகியில் வேலை செய்யும் ஒரு டெலிவரி பாய் மாதம் 18,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இதில் பார்ட் டைமாக வேலை செய்யும் பலர் மாணவர்கள். மாணவர்களுக்கு உலகமெங்கும் இருக்கும் பிரச்னை, பொருளாதாரம் என்கிறார்கள் வல்லுநர்கள். அவர்களுக்கான செலவை அவர்களே சம்பாதித்துக்கொள்ளும்போது நிறைய பேர் கல்வி பயில்வார்கள் என்கிறார்கள். ஸ்விகி போன்ற நிறுவனங்கள் தரும் வேலைவாய்ப்புகள் இதை இந்தியாவிலும் சாத்தியமாக்குகிறது. அதனால் நம் இளைஞர்களின் சக்தி இன்னும் அதிகரிக்கும் எனக் கணிக்கிறார்கள். அந்த வகையில் ஸ்விகி தானும் வளர்ந்து சமூகத்துக்கும் முக்கியப் பங்களிக்கிறது. இது போன்ற காரணங்களால்தான் ஸ்டார்ட் அப்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன. அவை வெறும் தொழிலாகவும் பொருளாதார வெற்றியாகவும் மட்டுமே பார்க்கப்பட வேண்டியவை அல்ல; அவை நாளைய இந்தியாவைச் சரியான பாதையில் செலுத்தக்கூடியவை.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கி பவா