Published:Updated:

கலக்கிய தயாரிப்புகள், சொதப்பிய நிர்வாகம்... கூகுளின் '2018 ரீவைண்ட்'

கலக்கிய தயாரிப்புகள், சொதப்பிய நிர்வாகம்... கூகுளின் '2018 ரீவைண்ட்'
கலக்கிய தயாரிப்புகள், சொதப்பிய நிர்வாகம்... கூகுளின் '2018 ரீவைண்ட்'

ந்த வருடம் கூகுள் நிறுவனத்திற்கு நல்ல ஒரு வருடமாக அமைத்திருக்க வேண்டும். இந்த 2018-ம் ஆண்டுதான் கூகுள் தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடியது. இது மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மற்றும் குரோம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள், இந்த 2018-ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. இப்படி எல்லா நல்ல நாளும் ஒன்றுகூடியும் எதிர்பார்த்ததைப் போல கூகுளுக்கு நன்றாகச் செல்லவில்லை 2018. அப்படி கூகுளில் தாக்கம் செலுத்திய சில முக்கிய நிகழ்வுகள் இதோ.

முக்கிய பிரச்னையாக, முன்பு இருந்த நம்பகத்தன்மையை இந்த ஆண்டு ஓரளவு இழந்துள்ளது கூகுள். தங்கள் தொழிலாளர்கள் போராட்டங்கள் தொடங்கி பல பிரச்னைகள் கூகுளை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பாதித்துள்ளன. உலகையே அதிர வாய்த்த #MeToo கூகுளையும் விட்டுவைக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட தங்கள் முக்கிய நிர்வாகிகளைக் கொண்டுகொள்ளாமல் இருக்கிறது கூகுள் எனப் பல தொழிலாளர்கள் குரல்கொடுத்தனர். 20,000 பேர் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் கூகுளின் நடவடிக்கைகளும் திருப்திகரமாக அமையவில்லை. 

மேலும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பாரபட்சமாக நடத்துகிறது கூகுள் என்று அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது. காபி குடிக்கும் வரிசையில்கூட தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும், ஒப்பந்தப் பணியாளர்களைப் பாரபட்சமாக நடத்தாமல் சமமாக நடத்துமாறும் கூறி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்கள் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகளுடன் போட்டியிடும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 'அலோ' சேவையை நிறுத்திகொள்வதாக அறிவித்தது. ஆர்குட், கூகுள் ப்ளஸ் வரிசையில், கூகுளின் தோல்விப்பட்டியலில் அலோவும் இந்த வருடம் இணைந்தது.

இது GPS மொபைலில் ஆன் ஆகியிருக்கும்போதெல்லாம், நம் லொகேஷன் கூகுளுக்குத் தெரியும். இதேபோல, ஆஃப் ஆகியிருக்கும்போதும், அதற்கு மாற்றாக நம் மொபைல் நெட்வொர்க்குகளின் டவர்கள் மூலமாகவும் வேறு வழிகள் மூலமாகவும் இதை அறிந்துகொண்டது கூகுள். இதற்காகச் செல் ஐடியைப் பயன்படுத்தியது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தபின்பு, தாங்கள் சில மாதங்களாகத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தி வருவதாகவும் விரைவில் இதைக் கைவிட இருப்பதாகவும் Cell ID மூலமாகப் பயனாளர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டாலும், அவற்றைப் பயனாளர்களின் சேவைக்காகவே பயன்படுத்துவதாக்கவும் தெரிவித்தது. இப்படி பயனாளரின் அனுமதி இன்றி மாற்று வழிகள் மூலம் அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணித்ததற்காக கடும் கண்டனங்களை பெற்றது கூகுள்.

கடைசியாகத் தகவல் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க செனேட் முன்னிலையில் தோன்றி சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதிலளித்தார் இந்நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை. ஆனால், செம கூலாகப் பதிலளித்து இதில் பாஸாகிவிட்டார் பிச்சை.

ஏன் பிரச்னைகளை மட்டுமேதான் கூகுள் சந்தித்ததா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். அதற்கு இல்லை என்றுதான் பதிலளித்தாக வேண்டும். புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனாக ஆண்ட்ராய்டு பை களம்கண்டு பெரும் வரவேற்பை பெற்றது. 10-ம் ஆண்டை நிறைவு செய்த குரோம் புது லுக்கை பெற்றது. இதுவும் மக்களைப் பெரிதாக கவர்ந்தது. 

முக்கியமாக வெற்றிகரமாகத் தனது #MadeByGoogle நிகழ்வை நடத்தி முடித்தது. இதில் புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹோம் அசிஸ்டன்ட் சாதனமான ஹோம் ஹப், டேப்லெட் பிக்ஸல் ஸ்லேட், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிக்ஸல் 3 மற்றும் பிக்ஸல் 3XL அறிமுகமானன. இதில் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற மொபைலில் சிறந்த கேமராவை கொண்டது பிக்ஸல் 3 தான் என்று டெக் வட்டாரங்கள் கூகுளை புகழ்ந்து தள்ளின.

இதையடுத்து, ஏற்கெனவே பல டிஜிட்டல் பேமன்ட் ஆப்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தபோதும், அதற்கிடையே வந்த கூகுளின் பேமன்ட் ஆப்பான கூகுள் பே பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக பே ஆப்பின் ஸ்கிராட்ச் கார்டு செம ட்ரெண்ட்டானது. இதைத் தொடர்ந்து போன் பே ஆப்பும் இதேபோல ஸ்க்ராட்ச் கார்டு ஆப்ஷனைக் கொண்டுவந்தது.

கூகுளின் அலோ ஆப் காலைவாரி விடவே, சுதாரித்த கூகுள் தற்போது RCS மெசேஜிங் என்னும் புதிய கான்செப்டில் களமிறங்கியிருக்கிறது. இதன்மூலம் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து வாட்ஸ்அப், ஹைக் போன்றவற்றிற்குப் போட்டியாக மெசேஜிங் சேவையை வழங்கவிருக்கிறது. நம் மொபைலில் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் எஸ்.எம்.எஸ் வழக்கத்தை மொத்தமாக மாற்றியமைக்கவிருக்கிறது இந்த RCS.

மேலும் தனது முக்கிய சமூக வலைதள செயலியான Neighbourly-யை அறிமுகப்படுத்தியது கூகுள். `உங்களிடம் கேள்வி இருக்கிறதா கேளுங்கள்; உங்களிடம் பதில் இருக்கிறதா அதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்'. என்பதுதான் Neighbourly மூலமாகக் கூகுள் சொல்ல வரும் விஷயம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இதைப் பயன்படுத்தும் பயனாளர்களை இந்த ஆப் ஒன்றிணைக்கும்.

மேலும் ஜனநாயகத்தை ஒருபோதும் தொந்தரவு செய்யாமல் நல்ல ஒரு முறையில் நடத்தப்படும் கூகுள் நியூஸ் சேவை மூலமும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றது கூகுள். இப்படி ப்ளஸ், மைனஸ்கள் இரண்டும் ஒரே அளவில் பெற்ற வருடமாகத்தான் இந்த வருடம் கூகுளுக்கு அமைந்தது. தொழிலாளர்கள் பிரச்னை, டேட்டா பாதுகாப்பு பிரச்னை போன்ற சில தவறுகளை சரி செய்தால் 2019 நல்ல ஒரு வருடமாகவே கூகுளுக்கு அமையும். 

பின் செல்ல