மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

னிந்த்ர சாமாவுக்குத் தொழிலபதிபர் ஆக வேண்டுமென்ற கனவெல்லாம் ஏதுமில்லை. ஒரு இன்ஜினீயரிங் டிகிரி; நல்ல சம்பளத்தில் ஒரு வேலை; அப்படியே சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பதுதான் அவர் ஆசை. அதுவும் நடந்தது. மின்னணுப் பொறியியல் முடித்துவிட்டு பெங்களூரில் அவர் நினைத்தபடி ஒரு வேலையில் இருந்தார். அதுவரை சாமா போட்டிருந்த எல்லாக் கோட்டையும் அழித்து, புதிதாய்ப் போடச்சொன்னது ஒரு தீபாவளி நன்னாள்தான். 

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

2005. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு. இப்போது போலதான் அப்போதும். பேருந்து, ரயில் டிக்கெட் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. ஆந்திராவைச் சேர்ந்த பனிந்த்ர சாமாவுக்கு எந்த டிக்கெட்டும் கிடைக்கவில்லை. 6 நாள்கள் விடுமுறை. அப்போது பட்டாசு வெடிக்க எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லைதான். ஆனால், தனியாக எவ்வளவு நேரம்தான் வெடிப்பது? சாமா ஒரு இன்ஜினீயர். ஒரு பிரச்னை கண்ணுக்குத் தெரிந்தால் அதற்கான தீர்வை யோசிப்பதைத்தான் 4 ஆண்டுகள் பொறியியலில் கற்றுத் தருகிறார்கள். சாமா பிட்ஸ் பிலானி மாணவர்; நன்றாகப் படிக்கக்கூடியவர் வேறு. பஸ் டிக்கெட் முன்பதிவு எப்படி நடக்கிறதெனப் பார்க்கலாம் என நினைத்தார்.

மொபைல் ஆப்ஸை விடுவோம். 2005-ல் இணையம் மூலம் புக்கிங் என்பதே அரிது. எல்லாமே மேனுவல் புராசஸ். சாமாவுக்கு டிரான்ஸ்போர்ட் துறையில் சிலர் பதில் சொல்ல முன் வந்தனர். அவர்கள் சொல்லச் சொல்ல சாமாவின் கண்களுக்குப் பிரச்னைகள் பெரிதாகிக் கொண்டேபோனது. உதாரணமாக, பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 50 நிறுவனங்கள் மூலம் 200 பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கொள்வோம். 10,000 பேருக்கு டிக்கெட் கிடைக்கலாம். ஆனால், புக்கிங் நடப்பது எப்படி? ஒவ்வொரு ஏஜென்ட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் ஒதுக்கப்படும். சில ஏஜென்ட்கள் விரைவில் விற்றுவிடுவார்கள். சிலரிடம் டிக்கெட் தேங்கி நிற்கும். அவற்றை மற்ற ஏஜென்ட்கள் மூலம் விற்பதும் சிரமம். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைன் மூலம் கால் செய்து, ‘இடம் இருக்கா’ என உறுதி செய்து டிக்கெட் கொடுக்க வேண்டும். 200 பேருந்துகளும் முழுமையான கொள்ளளவுடன் கிளம்புவது அரிது. கடைசி நேரத்தில் பயணம் செய்பவர்களும் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எந்தப் பேருந்தில் இடம் இருக்குமென ஏஜென்ட்கள் கண்டறிந்து சொல்வது கிட்டத்தட்ட நடக்காத காரியம். இது முதல் பிரச்னை; பெரிய பிரச்னை.

அடுத்து,  பயணிக்கு எந்த சீட் கிடைக்குமென்பதே தெரியாது. பல சமயம் பெண்கள் சீட்டுக்குப் பக்கத்திலேயே ஆண்களுக்கு சீட்டு கிடைக்கும். முதலில் புக் செய்திருந்தாலும் கடைசி சீட்டுதான் கிடைக்கும். பயணம் செய்பவரால் தன் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவே முடியாது என்ற நிலை.

தீபாவளிக்கு ஊருக்குப் போனவர்களுக்குக் கூட திரும்ப வர டிக்கெட் கிடைக்குமா என்பது தெரியாது. அது அடுத்த பிரச்னை. இப்படி பிரச்னைகள் நீண்டுகொண்டே சென்றன. சாமாவுக்கு இவற்றையெல்லாம் பட்டியலிடும்போதே இணையம் இதற்கான தீர்வு வைத்திருப்பதை உணர முடிந்தது.  ஒவ்வொரு பிரச்னையாக அவர் எழுத எழுத, அவர் உள்ளிருந்து ஜீபூம்பாக்கள் எகிறிக் குதித்து வெளியே வந்தன.  'இதை இப்படிச் சரி செய்யலாம்; இதை இப்படி எளிதாக்கலாம்' என அன்று முழுவதும் சாமா இரண்டடி உயரத்தில் பறந்துகொண்டேயிருந்தார். தீர்க்கப்படாத பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதைவிட ஒரு இன்ஜினீயருக்கு வேறு எது சந்தோஷம் தந்துவிட முடியும்?

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

தகவல்களைச் சொன்னவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினார் சாமா. முதல் நாள் பிரச்னையால் பாதிக்கப்பட்டார்; அடுத்த நாள் அந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களைத் தேடி அறிந்தார். மூன்றாம் நாள் பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஓரளவுக்குக் கண்டுபிடித்தார். இன்னும் 3 நாள்கள் விடுமுறை இருக்கிறதே!

அறைக்கு வந்தவர் தன் நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். ‘என்னிடம் பேருந்து நிறுவனங்களுக்கு உதவும் மென்பொருள் உருவாக்கும் திட்டமிருக்கிறது. இந்த மென்பொருளை உருவாக்கி அவர்களிடம் விற்கலாம். அதில் வரும் வருவாயை என்.ஜி.ஓ-க்களுக்குத் தந்துவிடலாம். பயணிகளுக்கும் சேவை, வருவாயில் இன்னொரு சேவை. டீல்?” என ரெட்பஸ்ஸின் முதல் மின்னஞ்சல் காற்றலைகளில் கலந்தது. ஏழு பேர் சாமாவுடன் கைகோத்தனர். வேலைகளைப் பிரித்துக் கொண்டார்கள். மென்பொருள் தயாரானது.

அந்த ஏழுபேரைப் பொறுத்தவரை, இந்த மென்பொருள், பேருந்து உரிமையாளர்களுக்கு வரம். போய்ச் சொன்னதும் வாங்கிக்கொள்வார்கள் என நினைத்திருந்தார்கள். ஆனால், நடந்தது வேறு. யாருமே இவர்களிடம் பேசக்கூட நேரம் ஒதுக்கவில்லை. 'யார்ரா இவன் கோமாளி' என்பது போலத்தான் பலரின் ரியாக்‌ஷன் இருந்தது. இதை சாமாவும் நண்பர்களும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

2006-ல் இந்தியாவில் ஸ்டார்ட் அப் குறித்த விழிப்பு உணர்வு சுத்தமாகக் கிடையாது. ஆனால், இளம் தொழிலதிபர்களுக்கு உதவ சில அமைப்புகள் இருந்தன. சாமா, அவர்களிடம் சென்றார். தன் தயாரிப்பிலிருக்கும் சிக்கல்களைத் தன்னாலே சரிசெய்துகொள்ள முடியும். ஆனால், தொழில் தந்திரங்களை அறிய நிபுணர்களின் உதவி தேவை என்ற சாமாவின் முடிவுதான் உண்மையில் ரெட் பஸ் சாம்ராஜ்யத்தின் முக்கியமான திருப்புமுனை என்று சொல்லலாம். ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் அனைவருக்குமான பாடமும்கூட. 

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

அந்த நிபுணர்கள் சாமாவுக்கும் நண்பர்களுக்கும் சில ஹோம் ஒர்க் தந்தார்கள். டிரான்ஸ்போர்ட் துறையைப் பற்றி இவர்கள் சேகரிக்காத பல தகவல்களைத் திரட்டச் சொன்னார்கள். எத்தனை பேருந்துகள் ஓடுகின்றன, ஒரு நாளைக்கு எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன, சராசரி விலை என்ன, பயணிகள் எப்படி டிக்கெட் வாங்குகிறார்கள், ஏஜென்ட் கமிஷன் என்ன…  வேலைகள் அதிகரிக்க அதிகரிக்க, நண்பர்கள் சிலர் நழுவிக்கொண்டார்கள். இறுதியில் இருந்தவர்கள் மூன்று பேர். பனிந்த்ர சாமா, சரண் பத்மராஜூ, சுதாகர் பசுபுணரி.

தங்கள் கைவசமிருந்த பணத்தையெல்லாம் போட்டு ஐந்து லட்சம் திரட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதையே அலுவலகமாக்கினார்கள். இப்போது தேவை ஒரு பெயர். இணையத்தில் எளிதில் தேடப்படக்கூடியதாக, மக்கள் மறக்காத பெயராக, பேருந்தை நினைவுபடுத்தும் பெயராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு நிறம் இருக்கும். அது லோகோவிலிருந்து அவர்கள் மார்க்கெட்டிங் விஷயங்கள் வரை அனைத்திலும் இடம்பெறும். இதைப் பற்றிப் படித்ததும், ‘ரெட்’ தங்களுக்கு ஏற்ற நிறமாக இருக்குமென முடிவு செய்தார்கள் நண்பர்கள். மூன்று பேரும் படித்தது பிட்ஸ் பிலானியில். அங்கே ரெட்லைன், வொயிட்லைன் என இரண்டு விதமான மாணவர்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. ரெட்லைனையே பெயராக வைக்க நினைத்தவர்களுக்கு அந்த டொமைன் கிடைக்கவில்லை. அடுத்த சாய்ஸ்தான் ரெட்பஸ். இணையத்தில் ரெட்பஸ் என்ற டொமைனையும் வாங்கினார்கள். கல்லூரி நண்பரான ஏஞ்சலின்தான் ரெட்பஸ்ஸின் முதல் லோகோவை வடிவமைத்தவர்.

ஒரேயொரு கஸ்டமர் கிடைக்க, பல மாதங்கள் அலைய வேண்டியிருந்தது. ஒரு பக்கம், ஐ.டி. நிறுவன வாசல்களுக்குச் சென்று ரெட்பஸ் இணையதளத்தை மார்க்கெட்டிங் செய்தார்கள். இன்னொரு பக்கம் டிராவல்ஸ், டிராவல்ஸாகச் சென்று ரெட்பஸ்ஸுக்குள் அவர்களை இணைக்க முயன்றார்கள். “ஸ்டார்ட் அப்ல ஜெயிக்க நம்ம ஈகோவை அழிக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சாமா. அவரின் பொறுமைக்குப் பரிசாக  ஒரேயொரு நல்லவர், “நான் ஐந்து டிக்கெட் தறேன். இந்த வாரம் அத வித்துக் காமிச்சா அப்புறம் பார்க்கலாம்” என்றார். தங்களை நிரூபிக்க ஒரேயொரு வாரம் அவகாசம். பரபரப்பானது ரெட்பஸ் அலுவலகம்.

கேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS

இன்ஃபோசிஸைச் சேர்ந்த ஒரு பெண் திருப்பதிக்கு ஒரு டிக்கெட் புக் செய்தார். ரெட்பஸ்ஸின் முதல் வாடிக்கையாளர். அவர் பயணம் செய்த நாளன்று நண்பர்கள் மூவரும் `மாறுவேஷத்தில்’ அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் பஸ் ஏறிக் கிளம்பும்வரை அங்கேயே இருந்தார்கள். முதல் வாடிக்கையாளர் இல்லையா?!

அடுத்தடுத்த நாளில் ஐந்து டிக்கெட். கொஞ்சம் கொஞ்சமாகப் பல நிறுவனங்கள் ரெட்பஸ்ஸுக்கும் டிக்கெட் தந்தார்கள். மளமளவென வளர்ந்தது ரெட்பஸ். முதலீடுகளும் வரத் தொடங்கின. 2013-ம் ஆண்டு ரெட்பஸ்ஸை ஐபிபோ நிறுவனம் சுமார் 700 கோடிக்கு வாங்கிக்கொண்டது. சாமா, அதன் சி.இ.ஒ ஆனார். ஓராண்டுக்குப் பிறகு சாமா ரெட்பஸ்ஸை விட்டு வெளியேறினார்.

இந்திய டெக் உலகின் முதல் வெற்றி, முதல் சாதனையாக ரெட்பஸ் என்றும் நினைவுகூரப்படும். நல்ல ஐடியா, நேர்மையான உழைப்பு, பொறுமை… மூன்றும் சேரும்போது வெற்றி எப்போதுமே வசப்படும், இந்த மூன்று நண்பர்களுக்கு வசப்பட்டதுபோல.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கி பவா