ஒரே செல்லில் இரண்டு சிம் போடுவது போல, ஒரே நம்பரை இரண்டு செல்லில் பயன்படுத்த முடியுமா, ஸ்மார்ட் போனை வீட்டில் வைத்துவிட்டு, சாதா போனோடு வெளியே போனால், நேரம் மிச்சம் ஆகுமே?
- அனசுயா, பெங்களூரு.

“நீங்கள் கேட்பது போல் ஒரே நம்பரை இரண்டு செல்களில் பயன்படுத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனியாக ஒரு நம்பர் ஒதுக்கப் பட்டிருக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு சிம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். எனவே ஒரே நம்பரை இரண்டு சிம்களில் பயன்படுத்த முடியாது. ஆனால் சமீப காலமாக ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்சுகளில் இ-சிம் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. தற்போது ஐபோனுக்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக போனில் இருக்கும் நம்பரை, ஸ்மார்ட் வாட்ச்சிலும் பயன்படுத்த முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போனை வீட்டில் வைத்துவிட்டு கையில் வாட்சைக் கட்டிக் கொண்டால்போதும். அந்த வாட்சிலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் முடியும். எதிர்காலத்தில் இந்த இ-சிம் தொழில்நுட்பம் பரவலாகும்போது வேண்டுமானால் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல நடக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கேட்ஜெட்களில் தான். சாதா போனில் நடக்க வாய்ப்பில்லை.”
காளைப்பாண்டி, அட்வைசர், தனியார் மொபைல் ஷோரூம்
காசு கொடுத்துப் படத்தைப் பார்க்கத்தான் செல்கிறோம், ஆனால் சில பெரிய திரையரங்குகளில் நிறைய விளம்பரங்களைப் போட்டு எரிச்சலூட்டுகிறார்கள். இதற்கு வரையறை எதுவும் உண்டா?
- மு.இளங்கோ, கருப்பூர்.

“ஒரு காட்சிக்கு 20 நிமிடங்கள்தான் விளம்பரம் போட வேண்டும் என்று சட்டம் ஒன்று இருக்கிறது. அதன்படிதான் தமிழ்நாட்டுத் திரையரங்கு களில் விளம்பரங்கள் திரையிட்டு வர்றோம். மேலும், கியூப். யூ.எஃப்.ஓ போன்ற டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்தான் தியேட்டர்களுக்கு விளம்பரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெரிய மல்டிபிளக்ஸா இருந்தாலும் சரி, சின்ன குக்கிராம தியேட்டரா இருந்தாலும் சரி, 20 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்களை ஒளிபரப்ப முடியாது; கூடாது. இந்த 20 நிமிட அளவை, படத்திற்கு முன் சிறிது நேரமும், இடைவேளையில் சிறிது நேரமும்; இடைவேளையில் மொத்தமாகத் திரையிடவும் திரையரங்குகள் அவர்கள் விருப்பத்திற்கேற்பப் பிரித்துக்கொள்வார்கள்.

பண்டிகைக் காலங்களில் இந்த 20 நிமிடத்திற்கான விளம்பர நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்துவதால், சற்றே நிறைய விளம்பரங்கள் போடுவதாக உணரக்கூடுமே தவிர, அது அரசு நிர்ணயித்துள்ள 20 நிமிட விளம்பர அளவைத் தாண்டாது.”
- திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு வடக்கு மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

ஆறு மாதக் குழந்தையான என் மகளை செல்ஃபோன், டி.வி பழக்கப்படுத்தாமல் வளர்க்க என்ன செய்ய வேண்டும்? அதற்குப் பதிலாக என்ன மாதிரியான விளையாட்டுகள் விளையாடப் பழக்கலாம்?
- வித்யா விஜய், பெங்களூர்

குழந்தைகளுக்கு நாம் எதை அறிமுகப்படுத்துகிறோமோ அதைத்தான் பிற்காலத்தில் பின்பற்றுவார்கள். ஆகவே, முதலில் பெற்றோர் டி.வி, செல்ஃபோனை குழந்தைகள்முன் அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆறு மாதக் குழந்தை எனும்போது அதிக நேரம் அந்தக் குழந்தையுடன் பெற்றோர் விளையாடி நேரம் செலவழித்தால் இருவருக்குமான அந்நியோன்யம் அதிகரிக்கும். பொதுவாக, `பூவா... பப்பு, ரசம்’னு நம்ம பாட்டிமார் குழந்தைகளின் கை விரல்களைத் தொட்டு கிச்சு கிச்சு காட்டி விளையாடும் விளையாட்டை தினமும் விளையாடலாம். இதனால், குழந்தைக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல எல்லா விரல்களிலும், உள்ளங்கையிலும் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு மலச்சிக்கல் ஏற்படாமல் இந்த விளையாட்டு பாதுகாக்கும். `அம்மா காணோம்... அம்மா காணோம்’னு கையால முகத்தைப் பொத்தி `பே’ன்னு சொல்லி விளையாடுகிற விளையாட்டு குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தையைக் கைதட்டச் சொல்லி விளையாடுவது; மடியில் படுக்க வைத்துக் கதை சொல்வது, விதம்விதமாக ஒலியெழுப்பும் கிலுகிலுப்பை விளையாட்டுகள் இவற்றைப் பழக்கலாம். உயிர்ப்புள்ள மனிதர்களின் விளையாட்டு மட்டுமே, ஆறுமாதக்குழந்தைக்கு உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலப்படுத்த உதவும்.
- டாக்டர். மு.பிரீத்தா நிலா, B.A.M.S, M.SC Psychology
வாசகர்களே, தெர்ல மிஸ் பகுதிக்கு உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!