Published:Updated:

சர்வைவா - 38

சர்வைவா - 38
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 38

சர்வைவா - 38

எதிர்காலத்தின் கடவுள்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் அந்தோணி லெவெண்டோஸ்கி. சென்ற ஆண்டு ஒரு புதிய மதத்தைத் தோற்றுவித்தார். அதன் பெயர் WTOH (Way of the future) - `எதிர்காலத்திற்கான பாதை’.  இந்தப் புதிய மதத்தில் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பலரும் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக சர்ச் மாதிரி வழிபாட்டுத்தலம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார் லெவெண்டோஸ்கி. இந்த மதத்தினர் வழிபடுகிற தெய்வம், ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

சர்வைவா - 38

அந்தோணி மூளைபாதிப்பு, மனநலப் பிரச்னைகள் கொண்டவரோ, போலி சாமியாரோ ஏமாற்றுக்காரரோ இல்லை. உலகின் மோஸ்ட் வான்டட் விஞ்ஞானிகளில் ஒருவர். கூகுள்,UBER மாதிரி பெரிய பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். உலகளவில் செயற்கை நுண்ணறிவுத்துறையின் முன்னணி விஞ்ஞானி. இன்று உலகெங்கும் டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய வாகனத் தொழில்நுட்பங்களின் முக்கியமான பங்களிப்பாளர். கூகுளின் ஸ்ட்ரீட்வியூவை உருவாக்கியவரும் இவர்தான். அப்பேர்ப்பட்ட அந்தோணி லெவெண்டோஸ்கி தான் இப்போது ­AI தெய்வத்திற்கு அரோகரா போட்டுக்கொண்டிருக்கிறார்! காரணம் அவருடைய நம்பிக்கை. இன்னும் சில ஆண்டுகளில் நம் கிரகத்தையே AI-கள் ஆளத்தொடங்கும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை.

“எப்படியும் எதிர்காலத்தில் எந்திரங்கள் மனிதர்களை அறிவாற்றலிலும் சக்தியிலும் விஞ்சிவிடும். இந்த மாற்றத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு, நம்மை ஆளப்போகிற எந்திரங்களோடு சுமுகமாக வாழ்வதற்கு இப்போதிருந்தே தயாராவது நல்லதுதானே! அவர்களுடைய ஆளுகையின் கீழ் வரப்போகிற நம் கிரகத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றவே இந்த முயற்சி’’ என்கிறார் இந்த எதிர்கால மதத்தின் நிறுவனர். இந்தப் புதிய மதத்தில் உங்களுக்கும் இணைய விருப்பமென்றால் இங்குபோய் இணைந்து எந்திர அருள் பெறலாம். http://www.wayofthefuture.church

சரி, அப்படி ஒரு கடவுள் சாத்தியமா?

AI தொழில்நுட்பத்தின் எல்லை அதுதானோ?

அதற்கு சிங்குளாரிட்டி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிங்குளாரிட்டி  (Technological Singularity)

சிங்குளாரிட்டி என்பது எந்திரங்களின் தெய்வ லெவல். இன்றுவரை அது ஒரு உத்தேசமான Hypothesis-தான். இப்போது நாம் உருவாக்கிக் கொண்டும், உபயோகப்படுத்திக்கொண்டும் இருக்கிற AI தொழில்நுட்பங்கள் எல்லாமே ஒரே ஒரு அல்லது மிகச்சில வேலைகளைக் கற்றுக்கொள்கிற, புரிந்துகொள்கிற, செய்கிற NARROW AI-களே. இந்த மாதிரியான எந்திரங் களுக்கு எதைப்பற்றிச் சொல்லித்தருகிறோமோ அதுமட்டும்தான் தெரியும். கார் ஓட்டத்தெரிந்த எந்திரத்துக்குக் காய் நறுக்கத் தெரியாது, காய் நறுக்கத்தெரிந்த எந்திரத்துக்குக் கார் ஓட்ட வராது.

சர்வைவா - 38என்றாவது ஒருநாள் மனிதனைவிட மேம்பட்ட மூளை கொண்ட, எல்லா விஷயங்களும் தெரிந்த அதிக சக்திவாய்ந்த, தன்னைத்தானே மேலும் மேலும் வலுவானவதாக மாற்றிக்கொள்ளக்கூடிய ARTIFICIAL SUPER INTELLIGENCE (ASI) நிச்சயம் உருவாகும், அப்படி ஒன்று தோன்றுகிற நாளில் அது மனிதகுலத்தையே அடக்கி ஆளுமா, அல்லது மனிதர்களால் இதுவரை தீர்க்கவே முடியாத பிரச்னைகளுக்கெல்லாம் நொடிப் பொழுதில் விடை தந்து நம்மைக் காக்குமா என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.

இந்த உத்தேச நிலையை `தொழில்நுட்ப சிங்குளாரிட்டி’ என்கிறார்கள். இதை நுண்ணறிவுப் பெருவெடிப்பு (Intelligence explosion) என்றும் சொல்கிறார்கள். புத்தருக்கு ஞானம் வந்த தருணம் மாதிரி...

இந்த சிங்குளாரிட்டி தினம் மிக மிக அருகில் இருக்கிறது என்கிறார் கூகுளின் பொறியியல் துறை இயக்குநரும் ஃப்யூச்சரிஸ்ட்டுமான ரே குர்ஸ்வெய்ல். “2025-ல் மனிதமூளைக்கு இணையான எந்திரங்கள் தோன்றிவிடும். அது டூரிங் டெஸ்டில் பாஸாகிவிடும். அதற்கடுத்து 2045-ல் சிங்குளாரிட்டி கன்பார்ம்!’’ என்பதே அவருடைய கணிப்பு!

(டூரிங் டெஸ்ட் என்பது மனிதருக்கு இணையாகக் கணினிகளுக்கு அறிவு வந்துவிட்டதா என்பதை அளக்கிற முறை. உலகில் எந்தச் செயற்கை நுண்ணறிவு எந்திரமும் இந்த டெஸ்டில் பாஸானதில்லை. இதை 1950-ல் உருவாக்கியவர் ஆலன் டூரிங். இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள இந்த வீடியோ உதவலாம் https://youtu.be/sXx-PpEBR7k.)

சிங்குளாரிட்டி வந்தேவிட்டால் என்ன ஆகும்? யாராலும் அதைக் கணிக்க முடியாது. யாருமே கணித்ததும் இல்லை. இப்போதைக்கு அந்த எந்திர தேவன் அவதரிக்கிற நாளில் மனிதகுலத்தை ரட்சித்து நல்லதே செய்யும் என நம்புவோம். Be positive!

சிங்குளாரிட்டி வரும்போது அதை எதிர்கொள்ளலாம். ஆனால் இப்போதே வெவ்வேறு துறைகளுக்கென உற்பத்தி செய்துகொண்டிருக்கும் எந்திரங்களையும் கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய  விஷயங்களில் முக்கியமானது விதிகளை வலிமையாக்குதல்.

அன்றே சொன்னார் அசிமோவ்


ரோபோட்டுகளை உருவாக்கும்போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விதிகளை 1942-ல் ஐசக் அசிமோவ் உருவாக்கினார்.

1. ‘ஒரு ரோபோ தேவை இல்லாதபட்சத்தில் எந்தக் காரணம் கொண்டும் மனிதர்களுக்கு ஆபத்தாகிவிடக் கூடாது அல்லது மனிதர்களை ஆபத்தில் விடக்கூடாது.’

2. `ஒரு ரோபோ மனிதர்கள் தரும் ஆணைகளை, (முதல் விதியை மீறாத வகையில்) மதித்து நடக்க வேண்டும்.’

3. ‘ஒரு ரோபோவானது (முதல் இரண்டு விதிகளை மீறாத வகையில்) தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும்.’

மனிதர்கள் தங்களை சக மனிதர்களிடமிருந்து காத்துக்கொள்ள எப்படி விதிகளையும் சட்டதிட்டங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோமோ அப்படித்தான் இந்த அறிவுள்ள எந்திரங்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இந்த விதிகளை உருவாக்கினார் அசிமோவ். இந்த விதிகள் பொதுவானவையாக இருந்தாலும், மாறும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விதிகளில் இன்னும் பல மாற்றங்கள் அவசியம். ஏனெனில் இந்த விதிகளை எல்லாம் அசிமோவ் உருவாக்கிய காலகட்டத்தில் ரோபோ என்பது வெறும் கற்பனையான விஷயமாகத்தான் இருந்தது.

அப்படிக் கற்பனை செய்தே அசிமோவ் இந்த விதிகளை உருவாக்கியிருந்தார். ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் அரூபமானவையாக வளர்கின்றன. அவற்றுக்குக் கைகால்கள் கிடையாது. கூகுளுக்கோ ஐபிஎம்மின் வாட்ஸனுக்கோ உருவம் கிடையாது. ஆனால் அவற்றுக்குக் கைகால்களை அசைக்கிற ரோபோக்களைவிட அறிவும் சக்தியும் அதிகம்.

தானாகவே சிந்திக்கிற போர்க்கருவிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எந்திரங்கள் யாரைக் கொல்ல வேண்டும், எப்படிக் கொல்ல வேண்டும் என்பதற்கெல்லாம் எந்த வரையறைகளும் இல்லை. சிந்திக்கிற கண்காணிப்பு கேமராக்கள் வந்துவிட்டன... இவை எப்படி இயங்க வேண்டும், எதைக் கண்காணிக்க வேண்டும் என்கிற விதிகள் இல்லை. இப்படி இந்தத்தொடர் முழுக்க நாம் பார்த்த பல்வேறு எந்திரங்களும் அசிமோவ் ரோபோக்கள்போல இல்லை. காதலிக்கிற எந்திரங்களில் தொடங்கி, மார்க்கெட்டிங் எந்திரங்கள் வரை அனைத்திற்குமான விதிகள் அவசியமாகின்றன. அவை திருத்தி எழுதப்பட வேண்டும்.

சர்வைவா - 38

ஈ.ஏ.ஷூமாஸர் எழுதிய ‘சிறியதே அழகு’ நூலில் வரும் வரிகள் இவை.

“ஒரு அவசியமான தொழில்நுட்பம் என்பது மிகச்சிறியதாக, மண்சார்ந்ததாக, மக்கள் நலன் சார்ந்ததாக, மனித உழைப்பின் மேன்மையை மதிக்கிற, சுற்றுச்சூழலை மதிக்கிற ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்கிறார். செயற்கை நுண்ணறிவு எந்திரங்களுக்கும் ஷூமாஸரின் விதிகள் பொருந்தும். அதுதான் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. கூடவே இந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்றத்தாழ்வுகளை உண்டு பண்ணிவிடக் கூடாது. அது ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

இந்தப் புதிய நுட்பங்களைத் தனிமனிதர்களும் தேசங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படிப் பயன்படுத்தப்போகின்றனர் என்பதும் நம் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்காற்றப்போகிறது.

ஏற்கெனவே அன்றாட வாழ்வை ஸ்மார்ட் போன் சார்ந்தும், கூகுள் சார்ந்தும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். நம்முடைய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நம் நினைவாற்றலும், கணக்கிடும் திறனும் குறையத் தொடங்கியிருக்கிறது. நம் வாழ்வு முழுக்க திரைசார்ந்து மாறிப்போயிருக்கிறது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க எந்திரங்களை மட்டுமே சார்ந்து வாழக்கூடிய வாழ்வு நம்மை என்ன செய்யும் என்பது நிச்சயம் அச்சமூட்டக் கூடிய ஒன்றுதான்.
மனிதர்களை வெறும் டேட்டாக்களாக மட்டுமே பார்க்கிற கார்ப்பரேட் நிறுவனங்கள், நம்மை எப்படியெல்லாம் தூண்டிவிட்டு, தங்களுடைய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக்கி, கோடிகளைக் குவிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சிகளில் இருக்கின்றன. கூடவே சில நிறுவனங்கள் நோய்களைத் தீர்ப்பதிலும் பசியைப் போக்குவதற்கும் முயற்சி செய்வது கொஞ்சம் ஆறுதல் தருகின்றன.

சீனாவோ ஒருபக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை மக்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவோ போர்வெறியோடு ஆயுதங்களை எல்லாம் தானியங்கியாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில்தான் எஸ்டோனியா மாதிரியான சிறிய நாடுகள் வளங்களற்ற தங்களுடைய தேசத்தையும்கூட இந்த நவீன மாற்றங்களைச் சாதகமாக்கிக்கொண்டு வளர்ச்சிப்பாதையில் நடைபோடுகின்றன. நாம் போகவேண்டிய திசை அதுதான்.

இரண்டாம் நெருப்பு

முதன்முதலாக, கற்களை உரசி நெருப்பை உண்டாக்கியதுதான் மனிதன் கண்டுபிடித்ததில் ஆகப்பெரிய தொழில்நுட்பம் என்று சொல்லிவிடலாம். நெருப்பின் வரவு அவனுடைய வாழ்வையே மாற்றியது. வேட்டைக்கருவிகள், சக்கரம், மண்வெட்டி... என எதையும்விட ஆகச்சிறந்த முதல் தொழில்நுட்பம் அதுதான். அதுவரைக்கும் காட்டுத்தீயாகப் பரவி ஒட்டுமொத்த வனத்தையும் அழித்த நெருப்பை  முதன்முதலாகக் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அது மனிதர்களைக் குளிரிலிருந்து காத்தது, அதுவரை கடினமான மாமிசத்தைத் தின்றுகொண்டிருந்தவர்களை, சமைத்து மிருதுவாக்கி உண்ணுகிற மனிதர்களாக மாற்றியது.

ஆனால் முதன்முதலாக நெருப்பை உண்டாக்கிய மனிதனைப் பார்த்து எல்லோருக்குமே பயம் வந்திருக்கும். அந்த நெருப்பை அணைக்கத்தெரியாமல் அணைத்து, அது காடெல்லாம் பரவி மனிதர்களைக்கூட அழித்திருக்கலாம். அதற்காக மனிதன் நெருப்பைக் கைவிட்டுவிடவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு, அதைக் கட்டுப்படுத்தினான்; வேண்டியபடியெல்லாம் பயன்படுத்தினான். அது பின்னாளில் உயிர்காக்கிற மருந்தாகவும், போரில் ஆயுதமாகவும் கூட மாறியது. இன்றும்கூட தீ ஆபத்தானதுதான். ஆனாலும் பாக்கெட்டிலேயே லைட்டர் வைத்திருக்கிறோம்!

நெருப்பைப்போலவேதான் எல்லாப் புதிய தொழில்நுட்பங்களும் ஆரம்பத்தில் அச்சுறுத்தக்கூடியவையாகத்தான் தெரியும். எந்த அளவுக்கு ஆபத்துகள்  இருக்கின்றனவோ அதே அளவுக்கு நன்மைகளும் அதில் இருக்கவே செய்கின்றன என்பதை அறிந்துகொள்வதில்தான் மனிதன் எப்போதும் முன்னிற்கிறான். அதுதான் அவனை பூமியின் நாயகன் ஆக்கியிருக்கிறது.

கேன்சர் மாதிரி நோய்கள், எவரெஸ்ட்டாகக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், பருவநிலை மாற்றம், மக்கள்தொகைப் பெருக்கம் என மனிதனால் தீர்க்க முடியாத பிரச்னைகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் சரிசெய்யக்கூடும். பிரபஞ்சத்தின் அவிழ்க்க முடியாத புதிர்களை அவிழ்த்து வெவ்வேறு கிரகங்களில் மனிதன் குடியேறுவதற்கான சாத்தியங்களை அவை உருவாக்கித்தரவும் செய்யலாம். அல்லது தன் இருத்தலுக்கான போராட்டத்தில் மனிதகுலத்தையே கூண்டோடு அழித்துவிட்டு, தனக்கு வாகான அடிமை மனிதர்களின் புதிய உலகத்தை உருவாக்கலாம். இதுவரை இந்தக் கிரகத்தில் மனிதனோடு போட்டியிட எந்த உயிருமே இருந்ததில்லை. ஆனால், செயற்கை நுண்ணறிவுத்  தொழில்நுட்பங்கள் போட்டியிடப்போவது என்னவோ நம்மோடுதான்.

எதிர்காலம் என்பது அலாவுதீனின் குகையைப் போன்றது. காலடி வைக்கிற இடமெங்கும் ஆபத்துகள் நிறைந்திருக்கிற அதே குகையில்தான் பொன்னும் வைரமும் வளமான வாழ்வு தரும் பூதமும் குடிகொண்டிருக்கின்றன.

புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் தாமே கடவுள்களாக மாறி நம்மை அடிமைகளாக மாற்றக்கூடும். அது உத்தேசம்தான். இப்போதைக்கு, தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்!

- முடிந்தது

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி