மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr

Live the life you love.

Love the life you live

- Bob marley

ரா
ஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது தரிபா. சுரங்கங்களுக்குப் பெயர்போன அந்தப் பகுதியில் துத்தநாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிருக்கிறது. அங்கே பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல; அவர்கள் குடும்பத்துக்கும், சுரங்கங்களும் பூமிக்கு அடியில் செல்லும் லிஃப்ட்டுகளும் சாதாரணம். பூமிக்கு மேலேயும் கீழேயும் ஓடியாடும் சிறுவர்கள் அங்கு ஏராளம். ஒரு முறை, சிறுவன் ஒருவன் தனியே பயணம் செய்யும்போது லிஃப்ட் பழுதாகி நின்றுவிட்டது. பூமிக்கு அடியில் பல அடி ஆழத்தில் இருட்டறைக்குள் அச்சிறுவன் மட்டும். அந்தச் சிறுவனுக்குத் தெரிந்ததெல்லாம் உயரத்தில் சிறு வெளிச்சம். எந்த அச்சமுமின்றி, தான் எப்படியும் மீண்டுவிடுவோம் என நம்ப அச்சிறுவனுக்கு அந்த ஒளிக்கீற்று போதுமானதாக இருந்தது. சிறுவன் மீட்டெடுக்கப்பட்டான். அந்தச் சிறுவனின் பெயர் பிரணய் சூலே. க்விக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர்.

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr

க்விக்கர். ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ வாங்கவும் விற்கவும் நமக்கு உதவும் இணையதளம். வீட்டில் பயன்படுத்தாத பொருள்களை முன்பெல்லாம் என்ன செய்வோம்? தேவையேபடாத ஒருவருக்குக் கொடுத்துவிடுவோம். அல்லது எடைக்குப் போட்டு அந்தப் பொருளின் மதிப்பையே குறைத்துவிடுவோம். அல்லது வீட்டில் இடமிருந்தால் அங்கேயே போட்டு வைப்போம். ஒரு காரை விற்க வேண்டுமென்றால் பணம் செலவு செய்து விளம்பரம்கூடக் கொடுக்கலாம். அந்தப் பணம் நமக்குத் திரும்ப வந்துவிடும். ஆனால், ஒரு ஹெல்மெட்டுக்கு விளம்பரம் கொடுத்தால் கட்டுப்படி ஆகுமா? ஆனால், இணையம் பிரபலமானபின் அந்தப் பிரச்னை எல்லாம் கிடையாது. விளம்பரங்களை இலவசமாகக் கொடுக்கலாம். க்விக்கர் அதைத்தான் செய்கிறது. எந்தப் பொருளை விற்க வேண்டுமென்றாலும் இலவசமாக அதில் விளம்பரம் செய்யலாம். வேண்டியவர்கள் வீடு தேடி வந்து பணம் தந்துவிட்டு வாங்கிச் செல்வார்கள்.

க்விக்கர் உருவான வரலாறு தெரிந்துகொள்ளும் முன் பிரணய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிரணயின் குடும்பம் தொழில் செய்யும் குடும்பம் கிடையாது. அப்பா சுரங்கத்தில் பொது மேலாளர். அரசு வேலை. அதே பகுதியில், அந்நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில்தான் பிரணய் படித்தார். இயற்பியலுக்கு ஆசிரியரே இல்லாமல் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்தார். கல்லூரி மூலமாவது மகனுக்கு நல்லதொரு தளத்தை அமைத்துக் கொடுக்க முடிவெடுத்தார் தந்தை. ஐ.ஐ.டி.யில் சேர நுழைவுத் தேர்வு உண்டு. ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. கோச்சிங் கிளாஸ் எல்லாம் போக வேண்டும். சுரங்கங்களுக்கு மத்தியில் அப்படி எந்தப் பயிற்சியும் கிடைக்கவில்லை. தபால் மூலமே படித்து வெற்றிகரமாக ஐ.ஐ.டியில் நுழைந்தார் பிரணய். பின், ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் மேலாண்மைப் பட்டமும். கல்விதான் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் என நம்பினார் பிரணய்.

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikrகல்லூரி முடிந்ததும் நல்ல வேலை. பிரணய்க்கு இப்போது அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை. வேலையும் கிடைத்தது. வாழ்க்கை மகிழ்ச்சியாய்க் கழிந்தது. பிரணய் சூலேவுக்கு சினிமாமீதும் அலாதி காதல். நியூயார்க் நகரில் வேலை செய்துகொண்டே ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றைப் படித்தார். ஸ்கிரிப்ட் ஒன்றையும் எழுதி முடித்தார். அதைப் படமாக்க வேண்டும். அதற்கு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வேண்டும். பிரணய்க்கு நியூயார்க் நகரில் யாரையும் தெரியாது. அப்போது அவருக்கு உதவியது craiglist.com. அதன்மூலம் நடிகர்களைத் தேர்வுசெய்தார். படத்தையும் எடுத்துமுடித்தார். அது ஓரளவுக்குத் திருப்தியாக வரவே, இந்தியாவில் அப்படியொரு படமெடுக்க முடிவெடுத்தார்.

இந்தியா திரும்பினார். இங்கேயும் இவருக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. இங்கே craiglist.com-ம் கிடையாது. பிரணயின் வேலை சிரமமானது. அதே சமயம் அவர் கவனமும் திசைமாறியது. இந்தியாவில் ஏன் craiglist.com போன்ற ஓர் இணையதளத்தைத் தொடங்கக்கூடாது என யோசித்தார். அப்போது அவர் வயது 34. சுந்தர் பிச்சை அளவுக்கு இல்லையென்றாலும் நிறையவே சம்பாதித்துக் கொண்டிருந்தார். அமெரிக்க வேலையையும், சினிமாக் கனவையும் ஓவர்டேக் செய்தது புதிய ஆசை. பிரணய் க்விக்கருக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்.

இப்போது க்விக்கர் வசம் 6 முக்கியமான பிரிவுகள் உண்டு. Quickr Cars, Quickr Jobs, Quickr Homes, Quickr Bazaar, Quickr Bikes, Quickr Easy. ஒவ்வொரு ஊருக்கேற்றாற் போல சேவைகளில் சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்திருக் கிறார்கள். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கே காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஆயிரக்கணக்கான கலாசாரங்கள் உண்டு. அதற்கேற்றாற்போலதான் தொழில்களும் இருக்க வேண்டும். பஞ்சாபில் ராயல் என்ஃபீல்டுடன் ஏர்க்கலப்பைகள் இணைக்கப்பட்டு அவை அதிகம் விற்பனையாகும். ஜெய்ப்பூரில் ஜீப்கள் அதிகம் விற்கும். இந்தச் சிறப்பையும் க்விக்கர் மனதில் வைத்தே சேவைகளை உருவாக்குகிறது. அதுவும் அதன் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம். 

கேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr

க்விக்கர் மற்ற ஷாப்பிங் போர்ட்டலைவிட வித்தியாசமானது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருள்களை நாம் பார்க்காமலே வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தியர்கள் எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து, வாங்க நினைப்பவர்கள். அதுவும் பயன்படுத்திய பொருள் என்றால் நிச்சயம் அதைப் பார்த்தே ஆக வேண்டும். அதை க்விக்கர் உணர்ந்திருக்கிறது. அதனால்தான் விற்க நினைப்பவரையும் வாங்க நினைப்பவரையும் ஆன்லைனில் கைகோக்க மட்டுமே உதவுகிறது. விற்பனை ஆஃப்லைனிலேயே நடக்கிறது. அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் தங்களுக்கென ஒரு சேவைக்கட்டணத்தை விற்பவரிடம் வாங்கிக் கொள்கின்றன. க்விக்கர் அதைக் கூடச் செய்வதில்லை. புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிந்து அதை அந்தந்தத் தொழில் செய்பவர்களுடன் பகிர்வதன்மூலம் லாபம் பார்க்கிறது.

உதாரணத்துக்கு, quickr jobs மூலம் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்குச் சென்னையில் வேலை கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது, அவருக்குச் சென்னையில் ஒரு வீடு வேண்டும். அதை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் பகிர்வதன்மூலம் அவர்களுக்கு ஒரு வியாபாரம் கிடைக்கும். அதற்கு க்விக்கருக்கு அவர்கள் ஒரு கட்டணத்தைக் கொடுப்பார்கள். இது மட்டுமன்றி, Paid listing மூலமும் க்விக்கருக்கு வருமானம் உண்டு. நிறைய பேர் ஒன் ப்ளஸ் மொபைலை விற்க முயற்சி செய்யலாம். அதில் உங்கள் விளம்பரம் பளிச்செனத் தெரிய வேண்டுமென்றால் Paid listing மூலம் முயலலாம்.

பிரணய் சூலேவுக்கு வேகம் அதிகம். ஒரு ஐடியா யோசித்த கணத்திலிருந்தே அதை நிகழ்த்தத் தொடங்கிவிடுவார். அதனால்தான் நிறுவனத்துக்குப் பெயர்கூட `க்விக்கர்’ என முடிவு செய்தார். மீட்டிங் அறைகளின் பெயர்கூட ‘வேகம்’ என்ற அர்த்தம் கொண்ட பெயர்கள்தான். உண்மையில் க்விக்கரின் வளர்ச்சியும் வேகமானதுதான். 2008-ல் தொடங்கப்பட்ட க்விக்கருக்கு ஒரே ஆண்டில் நல்ல முதலீடு கிடைத்தது. இந்த 10 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மூன்று கோடிப் பேர் க்விக்கர் தளத்துக்கு வருகிறார்கள். பொருள்களை வாங்குகிறார்கள்; விற்கிறார்கள். க்விக்கரின் கணிப்புப்படி இப்போதே அவர்கள் லாபம் பார்க்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இன்னும் இன்னும் பெரிதாக வேண்டுமென்பதால் மார்க்கெட்டிங்குக்கு அதிகமான பணத்தைச் செலவழிக்கிறது க்விக்கர். இந்தியாவின் ஸ்டார்ட் அப்களில் பில்லியன் டாலர் இலக்கைத் தொட்ட நிறுவனங்கள் மிகக் குறைவு. அதில் முக்கியமானது க்விக்கர். அதன் இன்றைய மதிப்பு 150 கோடி டாலருக்கும் மேல். இந்திய ரூபாயில் 10,000 கோடி.

க்விக்கரின் இந்த வளர்ச்சிக்கு உதவிய ஒரு ஜீபூம்பா இருக்கிறது. அது, சின்னச் சின்ன நிறுவனங்கள் பலவற்றை வாங்கியது. “இந்த உலகம் திறமையானவர்களால் சூழப்பட்டுள்ளது. தனியாக ஒருவர் செய்யும் சாதனைகளைக் கூட்டு உழைப்பு எளிதில் வென்றுவிடும். நான் என் டீமை மட்டுமல்ல; அதற்கு வெளியே இருக்கும் திறமைகளையும் நம்புகிறேன். அதனால்தான், அப்படித் திறமையானவர்கள் உருவாக்கிய தயாரிப்புகளை வாங்க முடிந்தால் வாங்கிக் கொள்கிறேன். அது நம்மை மேலும் பலமாக்கும்” என்றார் பிரணய் சூலே. அது க்விக்கர் விஷயத்தில் நடந்தது. இனியும் யாரேனும் நல்ல ஐடியாக்களுடன் ஸ்டார்ட் அப் தொடங்கியிருந்து, அதை விற்க முடிவெடுத்தால் பிரணயிடம் போகலாம்.

நன்றாகப் படிக்க வேண்டும் என நினைத்த போது அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களுக்குச் சென்றார் சூலே. பின், அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை வந்தபோது அதையும் செய்துமுடித்தார். சினிமாப் பக்கம் ஆர்வம் திரும்பியபோது, அதற்காக ஒரு கோர்ஸ் முடித்து அதையும் நிகழ்த்திப் பார்த்தார். இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என யோசித்தபோது அதையும் வெற்றிகரமாக்கினார். விஷயங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அனைத்திலும் இருக்கும் ஓர் ஒற்றுமை பிரணய் சூலே அவர் மனது சொன்னதைக் கேட்டிருக்கிறார் என்பது. அதனால்தான் வீக் எண்டைக்கூட இன்று அவர் அலுவலகத்தில் கழிக்கிறார். “வேலைதான் என் பொழுதுபோக்கு” என்கிறார் பிரணய்.

நாம் பிரணய் ஆவது எளிது. விரும்பிய வேலையைச் செய்ய வேண்டும். செய்யும் வேலையை விரும்ப வேண்டும்.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கி பவா