Published:Updated:

கேட்ஜெட்களுக்கு இனி டச் ஸ்க்ரீனே தேவையில்லை... வருகிறது கூகுளின் புதிய சென்ஸார்! #GoogleSoli

`புராஜெக்ட் சோலி' பயன்பாட்டுக்கு வந்தால் இப்பொழுது இருக்கும் டிஸ்ப்ளேக்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படலாம்

கேட்ஜெட்களுக்கு இனி டச் ஸ்க்ரீனே தேவையில்லை... வருகிறது கூகுளின் புதிய சென்ஸார்! #GoogleSoli
கேட்ஜெட்களுக்கு இனி டச் ஸ்க்ரீனே தேவையில்லை... வருகிறது கூகுளின் புதிய சென்ஸார்! #GoogleSoli

தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விஷயங்களைக் கையில் வைத்திருப்பதில் கூகுளுக்கு எப்போதும் தனி இடமுண்டு. டெக்னாலஜியில் புதுப் புது விஷயங்களைக் கண்டுபிடித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கூகுளிடம் ஒரு தனித் துறையே இருக்கிறது. அதில் ஒன்றுதான் Google ATAP (Advanced Technology and Projects group) கருத்து வடிவில் இருக்கும் ஒரு திட்டத்தைப் பலரும் பயன்படுத்தும் ஒரு தயாரிப்பாக மாற்றுவதுதான் இதன் வேலை. பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற முயற்சியில் தொடங்கப்படும் பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்படலாம். எடுத்துக்காட்டாக Project Ara வை எடுத்துக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களை கேமரா, பேட்டரி, ஸ்பீக்கர் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் கூகுளால் கைவிடப்பட்டது. ஆனால், சில திட்டங்கள் சிறிது காலம் கழிந்தாலும் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒன்றுதான் Project Soli.

`புராஜெக்ட் சோலி'-யைக் கடந்த 2015-ல் நடைபெற்ற Google I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இதன் மூலமாக டிஸ்ப்ளேக்களை தொடாமலேயே அதைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் செயல்திட்டம். எனவே அப்பொழுதே `சோலி' பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. ஆனால், சில வருடங்கள் ஆன போதிலும் அது பயன்பாட்டுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் `புராஜெக்ட் சோலி'-க்கு அனுமதி அளித்திருக்கிறது ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (FCC). எனவே கடந்த சில வருடங்களாகக் கிடப்பில் கிடந்த இந்தத் திட்டம் தற்பொழுது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

மின்னணு கருவிகளைப் பொறுத்தவரையில் அவற்றைப் பயன்படுத்துவதற்காக அதனுடன் தொடர்பில் இருக்க ஒரு இன்புட் வழி தேவைப்படுகிறது. அந்த இன்புட் மூலமாகக் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு அந்தச் சாதனத்தை இயக்க முடியும். அந்த இன்புட் வழிகள்தான் நம்மையும், அந்தச் சாதனத்தையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றன. இது ஒவ்வொரு சாதனத்திற்கும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம். தொடக்கத்தில் அறிமுகமான ரேடியோ, டிவி போன்றவற்றை எடுத்துக்கொண்டால் அதில் வெறும் பட்டன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. வேறு சேனலுக்கு மாற வேண்டும் என்றால் அருகில் சென்றுதான் மாற்ற வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரிமோட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதில் டிவியில் ஒரு IR ரிசீவரும், ரிமோட்டில் IR ட்ரான்ஸ் மீட்டரும் இருக்கும். ட்ரான்ஸ் மீட்டர் மூலமாகக் கொடுக்கப்படும் சிக்னல்களை, IR ரிசீவர் பெற்றுக்கொள்ளும். அதன் பின்னர் அந்த சிக்னல்கள் கட்டளைகளாக மாற்றப்படும். எடுத்துக்காட்டாக ஸ்மார்ட்போன் என்றால் அதற்கு டிஸ்ப்ளே, பவர் பட்டன், வால்யூம் பட்டன்கள் என அனைத்துமே அதற்கான ஒரு இன்புட் வழிகள்தாம். கிட்டத்தட்டச் சோலியும் ஒரு வகையான இன்புட் கருவிதான். ஆனால் இது செயல்படும் முறையானது தற்பொழுது பயன்பாட்டில் இருப்பவற்றை விடவும் முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஸ்மார்ட்போனில் ஒரு வீடியோவை ப்ளே செய்ய வேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்காக திரையைத் தொட வேண்டியிருக்கும். ஆனால் அந்த ப்ளே பட்டன் அப்படியே உங்கள் கைகளுக்கு அருகிலேயே இருந்தால், திரையைத் தொடாமலேயே அதைப் பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதைப் போன்ற ஒரு வசதியைத்தான் `சோலி' சிப் தருகிறது. சோலி சிப் அதில் பொருத்தப்பட்டிருந்தால் டிஸ்ப்ளேவைத் தொட வேண்டிய அவசியமே இருக்காது. 8 மிமீ x 10 மிமீ அளவே இருக்கிறது இந்த சோலி சிப். சென்ஸார் மற்றும் ஆன்டெனா போன்றவை அதற்குள்ளேயே இருக்கின்றன. இது ரேடாரைப் போலவே செயல்படுகிறது. இந்த சிப் மூலமாக மின்காந்த அலைகள் பரப்பப்படும் அது எதிரில் இருக்கும் கைகளில் பட்டு திரும்பி வருவதைச் சோலி சிப் உணர்ந்து கொள்ளும். அதன் மூலமாக முப்பரிமாண வடிவத்தையும் கன்ட்ரோல் செய்ய முடிகிறது. இந்த சிப்பின் அளவு சிறியது என்பதும், இதை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதும் இதன் சிறப்புகள். எனவே இது பயன்பாட்டுக்கு வரும் போது அனைத்து ஸ்மார்ட் கேட்ஜெட்களிலும் இடம் பெரும் என எதிர்பார்க்கலாம்.